002 சிறப்பு ஒலிம்பிக்ஸ்

Tuesday, June 20, 2006

சிறப்பு ஒலிம்பிக்ஸ் நிறுவனம் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு ஆண்டு முழுவதும் விளையாட்டுப் பயிற்சி அளித்து அவர்களுக்கு போட்டிகளும் நடத்துகின்றது. இந்த போட்டிகளில் பங்கு பெறுவோர் எடுத்துக்கொள்ளும் உறுதிமொழி:

நான் வெற்றிபெறுவேன். வெற்றிபெற முடியாவிட்டாலும் என் முயற்சியில் துணிவோடு இருப்பேன்.



இந்தப்போட்டியைப் பற்றிய செய்திப்படம் இங்கே காண்க.

specialolympics.jpg

001 அறிமுகம்: ட்ரைஸமி



ட்ரைஸமி அல்லது டௌன்-ஸின்ட்ரோம் பற்றி சிறு அறிமுகம். முதலில் குழந்தைகளைப் கவனிப்போம்.
குறும்படம் ஒன்று.
rene-moreno.jpg
மற்ற விபரங்கள் தொடரும்.

கடைசியில் நிற்கிறேன்

Monday, June 19, 2006

குறை தீர்ந்த பக்தர்கள் உன்முன்னே அலைக் கூட்டம்
குறை தீர வந்தவர் சிலர் பின்னே நான் மட்டும்
மறைவாய்க் கடைசியில் நிற்கிறென்.

மனம் மகிழ ஒரு சோதனையா - எனக்கு
தினம் நெகிழ ஒரு சாதனையா

இறக்கி வைக்க வேண்டாத இன்பச்சுமையா - இவன்
இறக்கை வாய்க்க வேண்டாத தேவப்பதுமையா

வேகங் கெடுத்தாண்ட நற்பிறவியா - என் மகன்
மேகந் துளைத்துவந்த துறவியா

ஆற்றல் அருள வேண்டி நிற்பதா - இல்லை
ஏற்றம் தரும் அன்பு போற்றி உரைப்பதா

ஒடுங்கி நின்ற குசேலன் போல - புரியாமல்
ஒதுங்கி நான் கடைசியில் நிற்கிறேன்



பி.கு:
என் மகனுக்கு டௌன்-ஸின்ட்ரோம் என்ற மரபணுவியல் கோளாறு இருக்கிறது. அது அவனுடைய மன வளர்ச்சியையும் உடல் வளர்ச்சியையும் பாதிக்கிறது. ஆனாலும் அவன் காட்டும் அன்பினால் அவையெல்லாம் ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை. இருந்தாலும் இந்த நல்ல நெஞ்சங்கள் புத்திக்கூர்மையும் கொண்டிருப்பதுதான் நியாயம் என்று அடியேனுக்குப் படுகிறது. அவனுக்கு மொட்டையடிக்க இந்த வாரம் ஊருக்குப் போகிறேன். கடவுளிடம் என்னக் கேட்பது என்ற குழப்பத்தில் எழுதப்பட்டது இது.

ஆளில்லாத ஆட்டம்



கூடைப்பந்து விளையாட்டு அரங்கம் விளக்கொளியில் மின்னியது. எல்லா இருக்கைகளும் நிரைந்திருந்தன. அனைவரும் கூச்சல் போட்டுக்கொண்டிருந்தார்கள். நானும் அமெரிக்க நண்பனும் மேல் வரிசையில் உட்கார்ந்திருக்கிறோம். கொஞ்சம் அசௌகரியமான இடம்தான். ஆனால் இந்த இடம் கிடைத்ததே பெரிய விசயம்.

நண்பன்தான் வா ஆட்டம் பார்க்க போகலாம் என்று கூப்பிட்டுக்கொண்டு வந்தான். நான் தனி ஆள், ஊருக்குப் புதிது. எனவே, உற்சாகமாக கிளம்பினேன். வாரக்கடைசி ஆனதால் நல்லக் கூட்டம். சிற்றுந்தை நிறுத்த இடமில்லை. அரங்கத்தைவிட்டு வெகு தொலைவில் நிறுத்திவிட்டு நடந்து வந்தோம். இந்தக்கூட்டத்தில் எப்படி அனுமதிச் சீட்டு கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டே அரங்கை நோக்கி நடந்தேன். நண்பன் ஒரு நபரை அணுகி பேசினான். சிறிது பணம் கைமாறியதை தூரத்திலிருந்து பார்த்தேன். பின் அனுமதிச் சீட்டுடன் வெற்றிப் புன்னகையோடு வந்தான். சரிதான் இங்கேயும் கருப்பு சந்தைதான் போல.

உள்ளே நுளைபவர்களுக்கு சட்டையில் ஒட்டிக்கொள்ள ஒர்லான்டோ மாஜிக் அணியின் சின்னம் பொறித்த படங்களைக் கொடுத்தார்கள். ஷக்கில் ஓநீலை தொலைக்காட்சியில்தான் பார்த்திருக்கிறேன். இன்றைக்கு நேரில் பார்க்கப்போகிறேன்.

அரங்கத்தின் மத்தியில் நான்குபுறமும் வைத்திருந்த மிகப் பிரம்மாண்டமான திரைகள். அதில் கீழ் வரிசையில் உட்கார்ந்திருக்கும் முக்கியப் புள்ளிகளைக் காட்டிக்காட்டினார்கள். ஜனாதிபதி கிளிண்டன் திரையில் கையசைத்தபோது கூட்டம் ஆர்ப்பரித்தது. எந்த இடத்தில் உட்கார்ந்திருக்கிறார் என்று இங்கிருந்து தெரியவில்லை.

முதலில் கரகாட்டக்காரர்கள் போல் உடுத்தியிருந்த ஆண்களும் பெண்களும் வந்தார்கள். பின்னாலேயெ விளையாட்டுச் சீருடை அணிந்த பள்ளி மாணவர்கள் வந்தார்கள். ஒவ்வொருவராக கூடையில் பந்தை சரியாக எறிந்தார்கள். கரகாட்டக்காரர்கள் வாத்திய தாளத்துடன் சாகச வித்தைகள் செய்தனர். பின்னணியில் "வீ வில் .. வீ வில் ராக் யூ!" என்ற பாட்டுடன் அரங்கிலிருந்தவர்களும் குரல் கொடுக்க அரங்கமே அதிர்ந்தது. ஆகாயத்தில் பிரகாசனமான ஒளிக்கதிர்கள் நடனமாடியது காண்ணாடிக்கூண்டு வழியே தெரிந்தது.

கொஞ்சம் அமைதியானார்கள். நான் மைதானத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். சிறிது நேரம் களித்து விளையாட்டு எப்போது ஆரம்பமாகும் என்று நண்பனிடம் கேட்டேன். அவன் அது ஆரம்பித்து பத்து நிமிடங்கள் ஆயிற்று என்றான். மைதானத்தில் யாருமே இல்லை. அப்படியானால் இங்கே திரையில் தொலைக்காட்சி மூலம் விளையாட்டைப் பார்க்கவா இத்தனை ஆர்ப்பாட்டம். விளையாட்டை நேரில் பார்ப்பவர்கள் என்ன செய்ய மாட்டார்கள்.

ஆனால் எனக்கு நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்க்கவேயில்லை.

MGRக்கும் SPBக்கும் சண்டை

Wednesday, June 14, 2006

அந்தவருடம் தீபாவளிக்கு இதயக்கனி படம் பார்த்தேன். எப்போதாவது வருடத்திற்கு ஒரு முறை சின்ன மாமாக்களுடன் பார்ப்பதுதான். பள்ளிக்கூடத்தில் நண்பர்களிடம் கதைக் கேட்பதோடு சரி. மறுநாள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, எம்ஜியார் உற்சாகமாக வந்தான். எங்களை விட இரண்டு வகுப்பு அதிகம் படிக்கிறவன். பெரும்பாலும் எம்ஜியார் படம் போட்ட உள்சட்டையும் கால் சிறாயும்தான் போட்டிருப்பான். அதனால் அவனை எங்களுக்கு எம்ஜியார் என்று கூப்பிட்டே பளக்கமாகிவிட்டது. அவன் மூன்று மாதம் முன்பே பக்கத்து ஊருக்குப் போய் இந்தப் படத்தைப் பார்த்து விட்டான். இங்கே திரும்பவும் பார்த்தான்.

"டேய் படம் எப்படிடா இருந்துச்சி", என்று ஆவலோடு கேட்டான்.
"நல்லா இருந்துச்சிடா ஆனா அந்த இதழே இதழே பாட்டு எனக்குப் பிடிக்கலடா. அசிங்கமா இருந்திச்சிடா", என்றேன்.
அவன் முகம் வாடிப் போய்விட்டது.
"ஆமாண்டா எம்ஜியாருக்கும் அந்தப் பாட்டு பிடிக்கலெடா. அதனால அவருக்கும் எஸ்பிபிக்கும் சண்டெடா", என்று கவலையோடு சொன்னான்.
எனக்கு அது சரியாகத்தான் பட்டது. எஸ்பிபி மேல் கோபம் வந்தது.

படத்தில் துப்பாக்கிச் சண்டை, நகைச்சுவை என்று ஒவ்வொரு காட்சியாக மீண்டும் மனக்கண்ணில் ஓடவிட்டு ரசித்துப் பேசிக்கொண்டிருந்தோம்.
அப்போது படத்திலிருந்த வேறு ஒருப் பாட்டைப் பற்றியும் பேச்சு வந்தது. ("இன்பமே உந்தன் பேர் ..." என்று நினைக்கிறேன்)

"டேய் அந்தப்பாட்டும் நல்லாவே இல்லடா", என்றேன்.
இதையெல்லாம் அவனும் முன்பே யோசித்திருப்பான் போல.
உடனே சொன்னான், "டேய் அது கனவுப் பாட்டுடா".
என் சந்தேகங்களை எல்லாம் தீர்த்து வைத்த அவன் மேல் மேலும் மரியாதை ஏற்பட்டது. கனவுக் காட்சிகளுக்கு எம்ஜியார் எப்படி பொருப்பாகமுடியும். எனக்கு இப்போது அந்தப்படமும் எம்ஜியாரும் இன்னும் அதிகமாகப் பிடித்து போயினர்.

என் கையில் 1மில்லியன்



என் நண்பர் வேலை விசயமாக அடிக்கடி துருக்கி செல்வது வளக்கம். அவரிடமிருந்து இந்த ஒரு மில்லியன் லிரஸி தாளை வாங்கிவந்தேன். நானும் மில்லியனர் என்று சொல்லிக்கொள்ளலாம் அல்லவா அதற்காக.
1 million lirasi CiTi-யில் வேலை செய்யும் நண்பர் இதை எடுத்துக் கொண்டுபோய் அவருடன் வேலை செய்பவர்களுக்கெல்லாம் காண்பித்தார். அவர்களுடைய மென்பொருள், துருக்கியின் நாணய மதிப்புக்கு ஈடு கொடுக்கமுடியாமல் திணறியதாம். பண மதிப்பை உள்ளிட முடியாமல் இலக்கங்களை மேலும் அதிகரிக்க வேண்டியதாயிற்றாம். எனவே, அவர்களிடம் வேலை வாங்கிய அந்த தாளைப் எல்லோரும் ஆர்வமுடன் பார்த்தார்களாம்.
மென்பொருள் வடிவமைப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள். தமிழில் பதிவிடும் என் போன்ற பெத்தப்பேர் வைத்திருப்பவர்களுக்கு ஏதுவாய், இப்போதிருக்கும் 12 ஆங்கில எழுத்துக்களிலிருந்து குறைந்த பட்ச்சம் 20க்கு மாற்றவும். என் பெயர் துண்டுபட்டால் அருவருப்பாக ஒலிக்கிறது. கவனிக்கவும்.

பல்லி விழும் பலன்



நேற்று நல்ல மழையில் மண்ணோடு சாரமும் சரிந்துவிட்டது. எல்லாம் சரி செய்து வேலை முடிந்து திரும்ப இன்று கொஞ்சம் நேரமாகிவிட்டது. சகதர்மிணி கவலைப்பட்டுக் கொண்டிருப்பாள். இந்தக்காட்டில் பேச்சுத்துணைக்கும் சரியான ஆள் இல்லை. எஞ்சினியர் வீட்டில் யாரும் பேசமாட்டார்கள். அது அவர்களுக்கு கவுரவக் குறைச்சல். ஏனென்றால் நான் வெறும் சூப்ரவைஸர், டிப்ளொமா, (L.C.E - Licentiate in Civil Engineering). என் நண்பர்களுக்கு இன்னமும் கல்யாணம் ஆகவில்லை. ஊரிலேயே விட்டு வைக்கலாம். ஆனால் என் அம்மாவின் குணமறிந்து அப்பாவே வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்துவிட்டார். அறுவடை வேலை, பசுக்கள், கடை வேலையென்று அம்மா படுத்திவிடுவாள். எனக்கும் இங்கே சாப்பாடுக்கு வழியில்லை.

மலையில் தேயிலைத்தோட்டங்கள், சுற்றிலும் சலசலக்கும் நீர் ஓடைகள் என்று அழகிய சூழல்தான். தூரத்தில் அணைக்கட்டு வேலை நடப்பதும் வீட்டிலிருந்து தெரியும். ஆனாலும் பதினெட்டு வயதுப்பெண் தனியாக இருப்பது கடினம்தான். பால்காரன் மனைவியும் மகளும் அவ்வப்போது லோயர் கேம்ப்பிலிருந்து மளிகை சாமான் வாங்கிக்கொண்டுவந்து கொடுப்பார்கள். மற்றபடி ஆளரவம் குறைவுதான்.

வண்டி வீட்டின் முன் வந்து இறக்கிவிட்டுவிட்டுப் போனது. எப்போதும் வெளியே காத்துக்கொண்டிருப்பாள். இன்று ஆளைக்காணோம். தாமதமாய் வந்ததற்கு கோபம் போல. வீடு இருட்டிக் கிடந்தது. விளக்கைப் போட்டுக்கொண்டே இரண்டு குரல் கொடுத்தேன். உள்ளறையிலிருந்து விசும்பல் சத்தம் மட்டும் கேட்டது. சரிதான் இன்றைக்கு வேதாளம் திரும்பவும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது. தவறாமல் மூன்று நாட்களுக்கு ஒருமுறை சுண்டைக்காய் பெறாத விசயத்திற்கு சண்டை வரும். இன்றென்னவோ.

கட்டிலுக்கு அருகே போனேன்.
"ஏய் குட்டி எந்திரி என் அழரெ?".
தலையைத்தூக்கிப் பார்த்த அவளின் கண்கள் அழுது சிவந்திருந்தன. முகத்தில் சாதாரணமாகத் தெரியும் கோபம் இல்லை. இது வேறு ஏதோ பிரச்சினை.
"என்ன விசயம் சொல்லு, பருப்பு கருகிருச்சா?".
தலையை ஆட்டினாள். இல்லை. இஸ்த்திரி போட்டிருப்பாளோ?.
"சட்டையில ஓட்டை விழுந்திருச்சா?"
அதுவும் இல்லை. எனக்கு இப்போது கோபம் வந்தது.
"என்னன்னு சொல்லித் தொலையேன்", என்று கத்தினேன்.
கொஞ்சம் முறைத்துவிட்டு மேஜைமேலிருந்த நாட்கட்டியை காட்டினாள்.
" நா..ன் சா..சா..கப்போ.றேன்."
ஏதொ விபரீதம் நடந்திருக்கிறது. தண்ணீர் எடுதுக்கொண்டு வந்து குடிக்க வைத்தேன்.

சற்று நேர அசுவாசத்திற்குப்பின் அவளே தொடர்ந்தாள்.
"சாயந்திரம் எம்மேல பல்லி விழுந்திருச்சு. கழுத்துல விழுந்ததுக்கு பலன் மரணம்னுப் போட்டு இருக்கு".

சொல்லி முடிக்கும் முன்பே அழுகை பீரிட்டுக்கொண்டு வந்தது. மேஜை மீது கிடந்த நாட்க்காட்டியை எடுத்துப் பார்த்தேன். உண்மைதான். இப்பொது என்னையும் பயம் தொற்றிக்கொண்டது. எனக்குப் பல்லி சொல்லிற்குப் பலன் பார்க்கும் பழக்கம் உண்டு. அப்பாவிடமிருந்து கற்றுக்கொண்டது. பல்லி சத்தமிட்டதை போலவே விரலால் தரையில் தட்டிப் பார்த்து எத்தனை முறை கூவியது என்று எண்ணிக்கையை தெரிந்து கொள்வேன். நாட்காட்டியின் பின்புறம் அந்த எண்களுக்கு என்ன பலன் என்று பட்டியல் இருக்கும். அதைவைத்துதான் இவள் பல்லி விழுந்ததிற்கு பலன் பார்த்திருக்கிறாள். இது வேறு ஏதாவது குறிப்பாக கூட இருக்கலாம்.

"சரி பல்லி கீழே விழுந்து எந்தப்பக்கம் போச்சு", என்று விசாரித்தேன்.
"அது செத்துப் போயிருந்துச்சு. நான் பெருக்கி எடுத்துட்டுப் போய் குப்பையில போட்டுடேன்", என்றாள். சொல்லி முடித்ததும் அவளுக்கும் பொரித்தட்டியது. முகம் தெளிவாயிற்று.

பலன் சரிதானே. நான் இப்போதும் பல்லி சொல்லிற்கு பலன் பார்த்துக்கொள்வதுதான். சரியாகத்தான் இருக்கிறது.


Comments


1. துளசி கோபால் - June 14, 2006

பல்லி வாயில் விழுந்தால் பயம் என்று போட்டிருக்கும்.

அதானே , நம்ம வாயிலே விழுந்தால் பயமா இருக்காதா என்ன?


2. padhu - June 14, 2006

துளசி,

இந்த சம்பவம் என் அம்மாவிற்கு உண்மையில் நடந்தது. அதை வைத்து எழுதினேன். நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இதில் நிரைய விசயம் இருக்கிறது போல. என்னிடம் குறிப்பு இல்லை. முழு பட்டியலையும் யாராவது பின்னூட்டம் இட்டால் இந்த பதிவு முழுமை பெறும்.


குசும்பர்களுக்காக: "தனியாகத்தான் வந்தேன்"

Tuesday, June 13, 2006

நண்பன் புதுமனைப் புகுவிழாவிற்கு அழைத்திருந்தான். பேருந்தில் என் சிறிய சுருக்கத்தையும் அவனுடைய பெருக்கத்தையும் ஒப்பிட்டபடி அவன் வீட்டிற்குப் பயணித்தேன்.

தன் பழைய வீட்டை இடித்து கட்டியிருக்கிறான். அவனை முதலில் பார்த்தது அந்த வீட்டில்தான். நான் சென்னையிலிருந்த வேலையை விட்டுவிட்டு கோயம்பத்தூரில் பகுதி நேரப் பொறியியல் வகுப்பில் சேர வந்திருந்தேன். நான் தனியாக அறையெடுத்து தங்கும்வரை அவன் வீட்டில் இருக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். இரண்டு அறைகள் கொண்ட ஓட்டுவீடு. அருகிலேயே மாட்டுத்தொழுவம். வீட்டுக்கு முன்னால் காலி இடத்தில் நீர்த்தொட்டி. அவன் அப்பா இழுவை வண்டி வைத்திருந்தார். அதில் கடைகளுக்கும் வீடுகளுக்கும் தண்ணீர் கொண்டுபோய் விற்பார். அம்மாவிற்கு கொஞ்சம் காது கோளாறு. மறதியும் அதிகம். (வேலைக்குப் போய்விட்டு மாலை வீட்டிற்குத்திரும்பினால், என்னை முற்றிலும் மறந்துவிட்டிருந்தார்). வயதான காலத்தில் பிறந்த ஒரே பையன். அவனுக்கு என்னைவிட ஆறேழு வயது குறைவு.

நான் வேலைக்கு சேர்ந்த நிறுவனத்தின் பங்குதாரர் முன்பு எனக்குப் பாலிடெக்னிக்கில் ஆசிரியர். அவருடைய வீடு எதிரில்தான் இருந்தது. அவருடையக் கண்காணிப்பில் டிப்ளொமா படித்தான். படித்து முடித்த சமயம் நாங்கள் தயாரித்த மானியை (ஸ்லிப்/ஸ்பீட் மீட்டர்) அஹமதாபாத்தில் விற்க அனுப்பிவைத்தனர். "நீர் இறைப்பான்" தயாரிப்பவர்களுக்குத் தேவைப்பட்ட அவை அங்கே நன்றாக விற்பனை ஆகின.

குஜராத்திகளின் இடமல்லவா. அவர்களின் சாமர்த்தியம் இவனுக்கும் கைவந்தது. அவன் அங்கே தனியாக தொழில் ஆரம்பித்து, எங்களிடம் வாங்கி விற்க ஆரம்பித்தான். கூடவே வேறு மின் உபகர்ணங்களையும் விற்றான். இரண்டு வருடங்களில் அமர்க்களமாள வளர்ச்சி. நிறுவனர்களிடம், "அண்ணா நீங்களும் பிஸினஸ் மேன், நானும் பிஸினஸ் மேன்", என்று பேசும் அளவு துணிவு. இங்கே ஒன்று சொல்லவேண்டும். என் அனுபவத்தில், இப்படி டிப்ளொமா படித்தவர்கள் எப்படியோ சின்ன வேலையில் சேர்ந்து பின் தொழில் கற்று முன்னேறிவிடுகிறார்கள். அனால் பொறியியல் பட்டம் படித்தவர்கள்கூட அலுவலக வேலை போல எதிர்பார்த்து வீணாய்ப்போகிறார்கள்.

எனக்கு மதுரை, தூத்துக்குடி, கோவை, ஹோசூர், மைசூர், சென்னை என்று எல்லாம் கலந்த தோராயமான பேச்சு நடை உருவாகியிருந்தது. பள்ளித் தமிழ் ஆசிரியர் கடை சாம்பாரை உவமையாகச் சொல்வது இதற்கும் பொருந்தும். அதாவது பலதரப்பட்டவர்கள் கடைக்கு வருவார்கள். சாம்பார், ஒருவருக்கு இனிப்பாக இருக்கவேண்டும். இன்னொருவருக்கு காரமாக, மற்றவருக்கு உப்பு புளி கொஞ்சம் தூக்கலாக இருக்க வேண்டும். எனவே கடைக்காரர் எல்லோரையும் திருப்திப் படுத்துகிறமாதிரி சமைக்கவேண்டும். தனித்துவம் இல்லாததனாலேயே நான் பேச்சு நடையில் எழுத முடிவது இல்லை. மதுரைக்கு அருகிலிருந்து முதன்முதலில் கோவைக்கு வந்து படித்தபோது மூத்த மாணவர்கள், "மெதுவாகப் போடு" என்பதை உங்கள் ஊரில் எப்படி சொல்வீர்கள் என்று சொல்லக்கேட்டு சிரிப்பார்கள். இப்போது சற்று வில்லங்கமான சொற்றொடர்களெல்லாம் பழகியிருந்தாலும், வட்டார வளக்குச் சொற்களில் சரியான பயிற்சியில்லை.

பேருந்துலிருந்து இறங்கி அவன் வீட்டை நோக்கி நடந்தேன். திருப்பத்தில் வீடு கண்ணில் பட்டது. பழைய வீட்டின் சுவடேயில்லை. காலி இடத்தையும் சேர்த்து ஆடம்பரமாக பெரிய வீடாக கட்டியிருந்தான். வாசலில் அவனுடைய அப்பாதான் இருந்தார். என்னை சரியாக அடையாளம் தெரியவில்லை. திடீரென்று, "நீங்கள் கூட்டமா?" என்று கேட்டார். நான் சுற்றுமுற்றும் பார்த்தேன். வேறு யாருமில்லை. ஏன் அப்படிக்கேட்டார் என்று புரியாமலேயே நான், "இல்லை தனியாகத்தான் வந்தேன்" என்றேன்.

குசும்பர்களுக்கு நான் சொன்னதில் என்ன தவறு என்று புரியும். உங்களுக்குப் புரிந்ததையும் பின்னூட்டம் இடுங்களேன்.



Comments


1. துளசி கோபால் - June 13, 2006

நான் குசும்பி இல்லை.


அதனால்……………….. புரியவும் இல்லை.


2. துளசி கோபால் - June 13, 2006

Hi,


I have linked your post in Desipundit.


http://www.desipundit.com/category/tamil/


3. padhu - June 13, 2006

துளசி,

நானும் புதிர் போட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். “விடை தருவார் யாரோ?” என்று நீங்களும் இப்போது இரண்டாம் முறையாக கேட்டிருக்கிறீர்கள். கண்டதையும் படித்த1 தேசிகளாவது பதில் சொல்கிறார்களா என்று பார்ப்போம்.


உங்கள் ஆதரவிற்கு நன்றி.


1. பொருள் விளக்கம்.

கண்டதையும் தின்றால் குண்டனாகலாம்,

காண்டதையும் படித்தால் பாண்டிதனாகளாம் என்ற மூதுரையிலிருன்து.

இப்படி எனக்கு நானே விளக்கம் சொல்லிக்கொள்வது யாராவது தப்பாக எடுத்துக்கொள்ளப் போகிறார்கள் என்ற கவலயினால் தான்.


4. கோயமுத்தூர் குசும்பு - June 14, 2006

//“நீங்கள் கூட்டமா?” என்று கேட்டார். நான் சுற்றுமுற்றும் பார்த்தேன். வேறு யாருமில்லை. ஏன் அப்படிக்கேட்டார் என்று புரியாமலேயே நான், “இல்லை தனியாகத்தான் வந்தேன்” என்றேன்.//


எனக்கும்தான் புரியலை. அதுக்காக நான் குசும்பு பிடிச்ச ஆசாமி இல்லைன்னு ஆகிடுமா?


5. padhu - June 14, 2006

கோயம்பத்தூர் குசும்பரே,

வாங்க வாங்க உங்கள எதிர்பார்த்துத்தான் அப்படி ஒரு தலைப்பு குடுத்தேன். உங்களுக்கே புரியலையின்னா நானே விளக்கமா சொல்லிற்றனுங்க.


படிப்பில்லாதவர்னாலும், அந்த பெரியவர் ரொம்ப தன்மையா தன்னோட _ஜாதி_யான்னு கேட்டு இருக்காருங்க. அது புரியாமத்தான் நான் பதில் சொல்லியிருக்கேங்க.


என்னெக் கேட்டா மத்தவங்க மனசு புண்படாம இப்படி பேசுரவங்கதாங்க மாவட்ட ஆட்சியரா வரணமுங்க. சில ஐயேயெஸுங்க விவரமில்லாம பிரச்சனைகள் தீவிரமாகிறதுக்கு காரணமாயிருந்திருக்காங்க. நம்ம தலைமுறயில பண்பைவிட பணத்தையும் படிப்பையும் பெருசா நினைக்கறமுங்க. அவர் மகன் கூட ஒரு உதாரணமுங்க.


விடலைக் காலத் தளைகள்

Saturday, June 10, 2006

விடலைக் காலத் தளைகளே போ போ போ

தொல்லை யிரும்பிறவிச் சூழுந்தளை நீக்கி
அல்லல்லறுத் தானந்த மாக்கியதே - எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவா சகமென்னுந்தேன்


நான் செய்த காரியங்களை நினைச்சாலே இன்னைக்கும் நெஞ்சு கூசுது. எதப்பத்தியும் அக்கறெயில்ல. என்னவோ எல்லோரும் என்னையே பாக்குறமாறி நெனப்பு.

விடுமுறையில வீட்டுக்குப்போறேன். சின்ன வயசுலேருந்து வளத்தப் பாட்டி முன்னாடி போயிட்டு இருக்காங்க. நான் அவங்களத்தாண்டி வேகமா வீட்டுக்குள்ள போயிட்டேன். அவங்களுக்கு ஒரே வருத்தம். பாட்டின்னு ஒருவாய் கூப்பிட்டா என்னன்னு.

சொந்தம்னு இல்லெ, ஒண்ணாப் படிக்கிறவங்ககிட்டயும் இப்படித்தான் நடந்துருக்கேன். கோயம்பத்தூருல பாலிடெக்னிக்ல ரெண்டாவது வருசம் படிச்சிக்கிட்டு இருக்கேன். விடுதியில என் அறையில இருந்தவங்கக்கிட்ட சண்டை. அதனால, ஃபெரோஸ் கூடத்தான் தங்கியிருந்தேன். ரெண்டுபேர் மட்டுமே இருக்கக்கூடிய அவன் அறையில எனக்கும் இடம் கொடுத்தான். ஒரு நாள் பீளமேட்டுக்குப்போய் காகிதம் எழுதுபொருட்க்கள் வாங்கினோம். பேருந்து பிடிக்காம நடந்தே வற்றோம். கல்லூரிகள் நிரைஞ்ச இடம். தண்டவாளத்துக்கு மேல போற குட்டி பாலத்த தாண்டுனதும் இடப்பக்கம் மருத்துவக்கல்லூரி, கொஞ்சம் தள்ளி வலதுபக்கம் கோவை பொறியியல் கல்லூரி. அதுக்கு அடுத்து எங்க கல்லூரி, வளாகத்திலேயே விடுதி. மருத்துவக்கல்லூரி பக்கத்துல வற்றப்ப, ஃபெரோஸ் தவறி கையிலிருந்ததைக் கீழப்போட்டுட்டான். நான் உடுக்கை இளந்தவன் கைப்போல விலகிப்போய் தலெயத் தடவிக்கிட்டு நின்னேன். பின்னென்ன மானம் போகுதே.

இன்னொரு மானம் போகிற விசயம் பெட்டி தூக்குறது. அப்பாவுக்கு வேலைமாறி தூத்துக்குடிக்கு வந்துட்டாங்க. ஊரிலேயிருந்து பெட்டி படுக்கையெல்லாம் எடுத்துட்டுப்போறோம். தம்பிதான் என்னெத்திட்டிக்கிட்டே பெரிய மெத்தையெ தூக்கிக்கிட்டுப்போறான். நான் நாகரீகமா பெட்டியை மட்டும் எடுத்துக்கிட்டேன். இதுக்காவது பின்னாளில் பிராயச்சித்தம் செய்யற மாதிரி ஆச்சு.1

ஆனால் பிராயச்சித்தம் செய்யமுடியாத சில விசயங்கள் இன்னும் உருத்திக்கிட்டே இருக்கு. எங்க அம்மாவுக்கு மருத்துவர்களால என்னன்னு புரிஞ்சுக்க முடியாம ஒரு சங்கடம். பார்க்க நல்லாத்தான் இருப்பாங்க. ஆனா இடது பக்கம் தலையிலருந்து கையெல்லாம் நீரா ஓடுதும்பாங்க. இதுக்காக கோவில் கோவிலா போய்வருவாங்க. அப்படி போறப்பத்தான், ஆத்தூருக்குத் துணையா என்னெப்போய் கூட்டிக்கிட்டுப் போனாங்க. கோவில்ல சாமி கும்பிட்டுட்டு பிரகாரத்தில உக்காந்திருக்கோம். அம்மா அங்க பளக்கமான வயசான தம்பதிகளோட பேசிக்கிட்டு இருந்தாங்க. வெளிய நல்ல வெயில். அந்தப்பெரியவர் வீட்டிலேர்ந்து கொண்டுவந்த பாத்திரத்தில சர்பத் போடுறாரு. அம்மா என்னெ கடைக்குப் போய் எலுமிச்சம்பழம் வாங்கிட்டு வரச் சொன்னாங்க. நான் நகரவேயில்ல. என்ன பையங்கறமாறி பார்த்துட்டு அவரேதான் போய் வாங்கிட்டு வந்தார். பெத்தவங்கள அண்டி வளருரப்போ அவ்வளவு திமிரு.

பின்னாடி ஒரு பைசா சம்பாதிக்க பாடாதபாடுபடுறப்ப உரெச்சி என்ன பிரயோசனம்.

அப்புறம் ஆத்துல போய் காலெ நனைச்சுட்டு வரப்போனோம். நடுவுல குட்டை மாறி கொஞ்சம்தான் தண்ணி இருக்கு. பாதி தூரத்தில ஒரு பாட்டி நெருப்பாக் கொதிக்கிற மணல் சூடு தாங்காம சேலெ முந்தானயெக் கீழப்போட்டு அதுமேல நிக்கிறாங்க. நான் செருப்புப் போட்டிருக்கேன். அதெ அவங்களுக்கு குடுத்து நான் மரத்தடிக்கி ஓடிப்போயிருக்கலாம். இப்படி செய்யாப் பிழைகளுக்கு அடிப்படைக் காரணம் என்னன்னு யோசிச்சிச்சா, நல்லப் பழக்கங்கள் தானே வராது, நாமே பழகித்தான் தெரிஞ்சிக்கணும்னு தோணுது. 2

இந்த கல்லுளித்தனத்துல உச்சக்கட்டந்தான் குற்றாலத்துக்குப் போயிட்டு அருவியிலெக் குளிக்காம வந்தது. நல்ல சீசன், அம்மா சந்தோசமா இருந்தாங்க. அவங்களுக்கு இப்படியும் மனுசங்க இருப்பாங்களான்னு விசனம். இப்பிடி முறுக்கிக்கிட்டு இருக்கிறதுனால யாருக்கு நட்டம்.

ஒவ்வொண்ணா இறுக்கிக்கிட்டிருந்த, தளைகளை முதமுதல்லப் பிரிக்க ஆரம்பிச்சது என் நண்பன் கருணாவோட3 அம்மாவின் பாசம். ஹோசூரில நாய்ப்பாடு பட்ட பின்னாடி, எங்க எல்லோருக்கும் மைசூருல நல்ல வேலைக் கிடைச்சிச்சி. கோயம்பத்தூர்ல சந்திச்சு எல்லோரும் ஒண்ணா சேர்ந்து போறதா திட்டம். எதிர்பாராதவிதமா4 நாங்க அவங்க வீட்டுல சில நாள் தங்க வேண்டியதாயிடுச்சி. ஒருநா அவன், "ஏண்டா எது கொடுத்தாலும் வேண்டாங்கற. நீ என்னோட சரியாப் பழகமாட்டியான்னு அம்மா கேக்குறங்க"னு சொன்னான். அண்ணையிலருந்து நான் நண்பர்கள் வீட்டுக்குப்போனா சங்கோஜப்படாம இருக்கப் பழகினேன். நண்பர்களோட நெருங்கிப் பழகவும், அன்பு செலுத்தறமாறி அன்பை ஏத்துக்கவும் பக்குவம் வந்துச்சு.

அடுத்தடுத்த இன்னும் இறுக்கமான தளைகளை களைய ரவிசங்கரின் யோகா பயிற்சி உதவிச்சு. பகுதி நேரக்கல்லூரி கடைசி வருடத்தில குற்றாலத்துக்குப்போய் நான்போட்ட ஆட்டத்தப்பாத்து எல்லாருக்கும் ஒரே ஆச்சரியம். இவனா இப்படின்னு. அவங்களுக்கு என்னத் தெரியும். நாங்க அங்க மொட்டமாடியில ஆனந்தக் கூத்தாடுனதப் பாத்துட்டு, ரோட்டிலப் போனவங்களும் ஆடி கொஞ்ச நேரம் போக்குவரத்தே நின்னுப்போச்சு.

மேலும் அந்தரங்கமான சுமையான தளைகளை நீக்கியது ஓஷோவின் பேச்சும் புத்தகங்களும். மற்றபடி பிரபல ஊடகங்கள் திணிக்கமுயலும் தளைகளை அகற்றுவது சமகால எழுத்தாளர்கள், பதிவுகள்.

விழிப்புடன் இருப்போம். பெற்ற உற்ற தளைகளைக் களைவோம். வேற்றுமை வேண்டோம்.
------------------------------------------------------------------
1 நவீன மானியை வடிவமச்ச நான் அதப்பத்தி விளக்கி சொல்ல போவேன். விற்பனைப் பிரதிநிதிகள் பெட்டி தூக்கினாக் கேவலம் போல நடந்துக்குவாங்க. எனக்கு குழந்தையைப் போலத் தூக்கிக்கொள்வது பெருமையாத்தான் இருந்துச்சி.
2 என் மகளிடம் நான் உபயோகிக்கும் அதிகப்படியான வசவு வார்த்தை, உன்னை திட்டிவிடுவேன் என்பது.
3 இந்த நண்பன் என் பதிவைப் படித்துவிட்டு, சில விசயங்கள் சற்று அந்தரங்கமாக இருக்கின்றன என்கிறான். எனக்கு எதை எடுப்பது என்று தெரியவில்லை.
4 இந்திராகாந்தி படுகொலை.


Comments


1. Friend - June 11, 2006

அருமையான உண்மையான பகிர்தல். உங்களுக்கு வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்.


2. roja - June 20, 2006

வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்.


பெற்றபாசமும் ஆட்டுக்கறிக்குழம்பும்

Friday, June 09, 2006

அம்மா சமைப்பது எல்லாமே அலாதி ருசிதான். அதில் இட்லிக்கு ஆட்டுக்கறிக்குழம்புதான் பிரமாதம். தூத்துக்குடியில் மின்சார வாரியக் குடியிருப்பில் நாங்கள் இருந்த அடுக்கு வீடுகளில் எல்லோரும் சாப்பிட்டிருக்கிறார்கள். மேல் வீட்டிலிருந்த அரவர் கூட சாப்பிட்டு இருக்கிறார். சமீபத்தில் அப்பாவை சந்தித்தபோது நாவை சப்புக்கொட்டியபடி நினைவுகூர்ந்தாராம்.

எப்போதும் சுடச்சுடத்தான் பரிமாறுவார்கள். அடுத்த தட்டு வேகவைத்து எடுக்கும்முன், எங்கள் தட்டுகள் காலியாக இருக்கும். தண்ணீர் எடுத்துக்கொடுத்து "இந்தா கைக்கழுவிக்கொள்" என்று நானும், குளியலறை இந்தப்பக்கம் என்று என் தம்பியும் வம்பு செய்வோம். என் தங்கையும் இதைத்தான் விரும்பி சாப்பிடுவாள் அனால் இந்த வம்பிற்கெல்லாம் வரமாட்டாள்.

தானுண்டு தன்புத்தகம் உண்டு என்று இருப்பாள். என் அம்மாவும் அவளை ஒருவேலையும் செய்யவிட்டது இல்லை. தங்கைக்கு செல்லம் கொடுக்கிறார்கள் என்று என் தம்பி அவளிடம் முரட்டுத்தனமாக நடந்துகொள்வான். கோபம் வந்தால் படார் என்று பிடரியில் அறைவான். அம்மா, என் கண் முன்னாடியே இப்படி நடத்துகிறாயே, நாங்கள் இல்லையென்றால் எப்படி நடத்துவாய் என்று கண்கலங்குவார்கள்.

என் தங்கையை அவர்கள் எப்போதும் பிரிந்ததே இல்லை. அப்பா முன்பு வேலை செய்த மலைக்காடுகளில் பள்ளிக்கூடம் சரியில்லாததால், நானும் என் தம்பியும் இரண்டாவதிலிருந்து பாட்டி வீட்டிலிருந்து படித்தோம். ஆனால் அவள் படிப்பிற்காக பணிமாற்றம் வாங்கிக்கொண்டு வந்துவிட்டார்கள். அவள் கல்லூரிக்குப் போகும் வரையிலும் வீட்டோடுதான் இருந்தாள்.

என்தங்கைக்கு தஞ்சாவூரில் பெண்கள் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்து போனாள். நான் பத்தாவது முடித்ததுமே வீட்டைவிட்டு போய்விட்டேன். அப்போது தம்பியும் மேற்படிப்புக்கு அமெரிக்கா போயிருந்தான். வீட்டில் அவர்கள் மட்டும்தான் இருந்தார்கள். அந்தவாரமும் வளக்கம் போல இட்லிக்கு கறி சமைத்து இருந்தார்கள். ஆனால் சாப்பிடாமல் அன்று முழுவதும் பட்டினியிருந்தார்கள். எதேச்சையாக என் மாமா பத்திரிக்கை குடுக்க ஊரிலிருந்து போனவர் பார்த்து சமாதானம் சொல்லியிருக்கிறார்.

இந்த சம்பவத்திலிருந்து வீட்டில் சமைத்து எடுத்துக்கொண்டுபோய் கொடுக்க ஆரம்பித்தார்கள். தூத்துக்குடியிலிருந்து போக தஞ்சாவூருக்கு பத்துமணி நேரமாவது ஆகும். தங்கையின் கல்லூரித் தோழிகளிடமும் என் அம்மாவின் புகழ் பரவியது. இங்கே உங்களிடமும் அறிமுகம் செய்திருக்கிறேன்.



Comments



It is great. I didn’t realise you have been practicing and writing so well in Tamil.

It took a while for me to read this article. For some reason Firefox browser doesn’t display well, I had to switch to IE to read it.


2. padhu - June 10, 2006

முரளி மச்சி,

எனக்கு தமிழ்தான் ஏதோ கொஞ்சம் எழுத வருது. முடிந்தால் நம்ம எல்லாரும் மைசூர்ல எடுத்த ஃபோட்டோக்களை இங்க போடலாம்னு இருக்கேன்.

Commentக்கு நன்றி.


விடியோ விடு தூது

Thursday, June 08, 2006

தீப்பெட்டி அளவேயிருந்த அந்தச் சின்னத்திரையில், எடுத்தப் படம் சரியாக வந்திருக்கிறதா என்று பார்த்தோம்.

ஊரில் எங்கள் வீட்டு மொட்டை மாடியில் கைப்பிபிடிச் சுவருக்கு அருகிலிருந்து பேசுகிறேன்.
"வணக்கம். பல்லாயிரக்கணக்கான மைல் தூரத்திலிருந்து ... "
இப்போது திரையில் காட்சி என்னைவிட்டு விலகி வானத்தில் பறவைகளை நோக்கி போகிறது -
"... பறந்து வந்திருக்கேன். ஆனா ஒரு மைல் தூரத்துக்குள்ள இருக்கும் உன்னைப் பார்க்க முடியலை. இந்த தனி மரம் போல இருக்கிற ..."
- இப்போது காட்சியில் ஒரு ஒற்றைப் பனமரம் -
"... நாம எப்போ இப்படி ..."
- காட்சியில் இப்போது உரசினார்ப் போல இரண்டு பனை மரங்கள் -
"... ஒண்ணு சேரப்போறோம். உன்னை எப்ப பாக்கமுடியும்னு சொல்லியனுப்பு. நன்றி"

திருப்தியுடன் நண்பர் ஈஸ்வரன் காமிராவை எடுத்துக்கொண்டு என் வருங்கால மனைவியைப் பார்த்துவரப் போனார். நான் வெளிநாட்டிலிருந்த போது நடந்த நிச்சயதார்த்ததில் குடும்பத்தோடு கலந்துகொண்டதால் பெண் வீட்டாருக்கு அவரை தெரிந்திருந்தது. கோடிக்கணக்கில் வியாபாரம் நடக்கும் அவருடைய அலுவக வேலைக்கிடையில் எனக்குத்துணையாக, கல்யாணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பே வந்திருந்தார்.

அவர் கொண்டுவரப்போகும் செய்திக்காக காத்திருந்தேன்.
ஒரு வருடம் முன்பு தங்கைக் கல்யாணத்திற்காக வந்தபோது பெண் பார்க்க ஏற்பாடு செய்திருந்தார்கள். சிவகாசியில் குல தெய்வம் பூலூரம்மன் கோவில், இருக்கண்குடி எல்லாம் போய்விட்டு ஊருக்கு வர சாயுங்காலமாகிவிட்டது. நான், என் பெற்றோர், பெரியம்மா பெண் என்று நான்கு பேரும் சொக்கலிங்கபுரம் சிவன் கோயிலுக்குப் போய்சேர்ந்தபோது, பெண்வீட்டுக்காரர்கள் எல்லோரும் காத்திருந்தார்கள்.

முகமன் கூறியபின், மண்டபத்தில் எல்லோரும் அமர்ந்துகொண்டோம். பெண்ணுடைய சித்தப்பாதான் பேசினார். அவர்கள் வீட்டுப்பெண்களெல்லோரும் சற்றுத் தள்ளி அமர்ந்திருந்தார்கள். மங்கலான வெளிச்சத்தில் யாரும் தெரியவில்லை. எப்படியும் சாமி கும்பிடப்போவோம் அப்போது நேருக்கு நேர் பார்த்துக்கொளலாம் என்று அவர்கள் பக்கம் திரும்பாமல், கேள்விகளுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தேன்.

வளக்கமாக எல்லோரும் கேட்க்கும் கேள்விகள். சாப்பாடுக்கு என்ன செய்கிறென், அங்கே சீதோஷ்ணம் எப்படி. நிரந்தரவேலையா. எல்லாம் பேசி முடித்து விட்டு சரி நாங்கள் வருகிறோம் என்று கிளம்பி போய்விட்டார்கள்.

என் பெற்றோர் கல்யாணம் பேசி முடித்து நாள் குறித்தப் பின்னர் நான் கேட்டுக்கொண்டபடி ஈஸ்வரனின் அம்மாவும் கோவையில் அவர்கள் வீட்டிற்குப்போய் பார்த்துவிட்டு வந்தார்கள். அவர்களிடம் தொலைபேசி எண்ணை வாங்கி சில நாட்க்கள் பேசியிருக்கிறேன். முதல் தடவைக் கூப்பிட்டபோது அவள் வீட்டில் இல்லை. இரண்டாம் முறை பேசின போதும், அவளுடைய அம்மாதான் எடுத்தார்கள். "வீட்டுல ஆம்பளெங்க இருக்கறப்ப பேசுங்க தம்பி". என்று வைத்துவிட்டார். பின்னர் சிலருடைய சிபாரிசுகளுக்கு அப்புறம்தான் பேச முடிந்தது.

ஈஸ்வரன் சீக்கிரமே வந்துவிட்டார். கேமிராவில் இருந்த திரையில், அவள் ஒரு வீட்டிற்குள் உட்கார்ந்து பேச தயாராகிக்கொண்டிருந்தாள். பின்புலத்தில் அவளுடைய சித்தி வீட்டிற்குள் நுழைய முற்ப்பட்ட சிறுவர்களை விரட்டிக்கொண்டிருந்தார். கொஞ்ச நேரத்திற்குப் பின் அவள் பேச ஆரம்பித்தாள்.
"எனக்கும், உங்களைப் பார்க்கணும்னு ஆசையாத்தான் இருக்கு. நாங்க எல்லோரும் இன்னைக்கி சினிமாவுக்குப்போறோம். முடிஞ்சா நீங்களும் வாங்க. இல்ல கண்டிப்பா வாங்க". என்று அழைப்பு விடுத்தாள்.
எப்படி தட்ட முடியும். கோமதி டாக்கீஸில் பக்கத்து சீட்டில் உட்கார்ந்து, என்னப் படமென்று தெரியவில்லை, படத்தை யார் பார்த்தார்கள், ஏதேதோ பேசினோம். அப்படி சிரமப்பட்டு எடுத்தப் படம், என்னுடைய கவனக்குறைவினால், அதன்மேலேயே டிஸ்னி லான்ட் சுற்றிப்பார்த்ததை பதிவுசெய்துவிட்டதால் அழிந்துவிட்டது. அதனால் என்ன நல்ல நினைவுகளை இங்கே எழுத்தில் பதித்துவிட்டேன்.


Comments


1. துளசி கோபால் - June 9, 2006

அட்டகாசமான நினைவா இருக்கே.


2. padhu - June 9, 2006

துளசி கோபால்,

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி


ஏனுங்.. உங்களுக்கு டைக்கட்டத் தெரியுமாங்..

Wednesday, June 07, 2006

மருதமலையடிவாரம் பெரிய கல்யாண மண்டபத்தில், நண்பர் குமாருக்குக் கல்யாணம். நானும் நண்பர் ஈஸ்வரனும் மாப்பிள்ளைக்குத் துணை. எல்லோரும் ஒன்றாகப் பகுதி நேர வகுப்பில் படிப்பவர்கள். மண்டபத்தின் எதிரில் இருந்தக் கோயிலிலிருந்து மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் போக தயாராகிக்கொண்டிருந்தார்கள். குமார் அவசரமாக எங்கள் இரண்டு பேரையும்கூப்பிட்டு டைக் கட்டத்தெரியுமா என்று கேட்டார். நான் டையை அப்போதுதான் முதல் முறையாகத் தொட்டுப் பார்க்கிறேன். ஈஸ்வரனுக்கும் தெரியாது.

யாரிடமாவது கேட்டு வருகிறோம் என்று இரண்டுபேரும் டையை எடுத்துக்கொண்டு ரகசியமாகக் வண்டியில் கிளம்பிவிட்டோம். கொஞ்ச தூரத்திலேயே பள்ளிச்சீறுடையில் இருந்த மாணவனைப் பார்த்தோம். டைக் கட்டியிருந்தான். வண்டியை நிறுத்திவிட்டு அவனை அணுகினோம்.

"தம்பி, உனக்கு டைக் கட்ட தெரியுமாப்பா?"
மண்டையை ஆட்டினான். தெரியாது.
"சரி உனக்கு யார் டைக் கட்டிவிடுவா?".
"எங்க அம்மா".
"உங்க வீடு எங்க இருக்கு?"
" ... ".
வீட்டிற்குப்போக பேருந்துக்குக் காத்திருக்கிறன். அவ்வளவு தூரம் போக முடியாது.
"சரி உன் டை எப்படிக் கட்டியிருக்குன்னு கொஞ்சம் காமிக்கிறயா?".
கழுத்துப்பட்டியை மேலே உயர்த்திப் பார்த்தால் எங்களுக்கு ஏமாற்றம். அது பெரியவர்கள் கட்டும் டையைப்போல இல்லை. சவ்வுக்கயிற்றில் டை வடிவில் ஒரே பட்டியாய் வைத்து தைத்திருந்தது.

மீண்டும் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினோம். அடுத்து கோட் போட்ட நடிகர் வசீகரமாக சிரித்தபடி இருந்த விளம்பரப்பலகை கண்ணில் பட்டது. இங்கே கோட் தைப்பார்களோ?. தையல் கடைக்குப் போய் விசாரித்தோம்.
கடைக்காரர், "இங்க யாருக்கும் தெரியாதுங்களே, பக்கத்துல வீட்டுல கேட்டுப்பாருங்க அவங்க சர்ச்சுக்குப் போரவங்க" என்றார்.

முயற்சியில் சற்றும் பின் வாங்காதவர்களாக அந்த வீட்டை அணுகினோம். வீட்டு வாசலில் ஒரு பெண் இருந்தார்.

"ஏனுங் ஃப்ரென்டுக்குக் கல்யாணங், எங்களுக்கு டைக் கட்டத்தெரியலீங். டெய்லர் உங்க வீட்டுலக் கேட்டுப்பாக்க சொன்னாருங்".
குரலில் மரியாதை கூட்ட வேண்டுமானால், க-வை விழுங் விடவேண்டும்.
"பெரியவருக்குத்தாங்க தெரியும், அவருக்கு உடம்புக்கு முடியாம இருக்காருங்க."
"ஏனுங் நீங்ளே எடுத்துட்டுப்போய் முடுச்சு மட்டும் போட்டு வாங்கிக் குடுங்".
"இல்லீங்க அவரு ரொம்பவே முடியாம இருக்காருங்க" என்று பேச்சை முடித்துக்கொண்டார்.
நேரமாகிவிட திரும்பிப் போய்விட்டோம். ரகசியமாக செய்ய நினைத்தது இப்போது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. கடைசியில் நிழற்படம் எடுப்பவரே சரியாகக் கட்டிவிட்டார்.

திருமண மண்டபத்தில் இன்னொரு சம்பவம். கல்யாணவீட்டுக்காரர்கள் பரபரப்பாக இருந்தனர். விருந்தினர்களோடு நாங்கள் இருவரும் அமர்ந்து நாதஸ்வரக் கச்சேரியைக் கேட்டுக்கொண்டிருந்தோம். வித்வான் சின்ன வயசு. சம்பிரதாயமாக முதலில் விநாயகர் பாடல் என்று ஆரம்பித்து சினிமா பாடல்களை வாசிக்க ஆரம்பித்தார். சில பாடல்களுக்குப் பின்,
பிப்பிப் பிப்பிப்பீ பிப்பிப் பிப்பிப்பீ ...
யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை. ஈஸ்வரன்தான் போய் மேளக்காரரிடம், "கல்யாண வீட்டுல என்னப் பாட்டுங்கப் பாடரீங்க" என்று கேட்டப் பிறகுதான், அதிர்ந்து போய் "மன்னிச்சுக்கங்க தம்பி. இவன் ஊதுறான்னு, நானும் தட்டிக்கிட்டிருக்கேன்" என்று சொல்லி உடனே நிறுத்தினார்.

உங்களால் அது என்னப் பாடல் என்று ஊகிக்க முடிகிறதா?


Comments


1. துளசி கோபால் - June 9, 2006

அந்தப் பாட்டு….’நலந்தானா… நலந்தானா?


2. padhu - June 9, 2006

//துளசி கோபால் Says:

அந்தப் பாட்டு….’நலந்தானா… நலந்தானா?//

நல்ல முயற்சி,

உங்களுக்கு சின்ன உதவி, அவருக்கு அடுத்த தலை முறையின் பாடல்.


கமு செரியூஸ்

Tuesday, June 06, 2006

பத்தாம் (Batam) தொழிற்பூங்கா. மெல்ல இருள் சூழும் நேரம். ஆணும் பெண்ணும் இரண்டிரண்டு பேராக குடியிருப்புகளுக்கும் கடைப்பகுதிக்குமாக பலவண்ண மேககூட்டங்களாய் மிதந்து போனார்கள். இன்று சனிக்கிழமையென்பதால் கூட்டம் அதிகம். வேலையிலிருந்து உணவு இடைவேளையில் சாப்பிட நண்பர்களோடுப் போய்க்கொண்டிருந்தோம். தோளில் யாரோ தட்டினார்கள். என்கூட வேலைசெய்யும் தோழி. உத்தேசமாக நாலரையடி உயரம், எப்போதும் சிரிக்கும் குழந்தை முகம், அரைப்பாவாடை சட்டை. அலாதியான பாசம். இப்போது பெயர்கூட நினைவில்லை. யோசித்துப்பார்த்தால், நண்பர்கள் யாரும் ஒருத்தரையும் பெயர் சொல்லிக் கூப்பிட்டதில்லை. மிக அன்னியோன்யமாக "என்னடி" தான். நான் அந்தப்பெண்களிடம் இது மரியாதையில்லை என்று சொல்லியும் வருத்தப்பட்டவர்கள் மாதிரித்தெரியவில்லை.

"கமு செரியூஸ்", என்றாள்.
"கமு" என்றால் நீ. செரியூஸ் என்றால் என்ன எனக்குப் புரியவில்லை.
"அப்பா?" - ("என்ன") என்றேன்.
"யேய், உனக்குத்தெரியும்.", மற்ற பெண்களும் சேர்ந்து சொன்னார்கள்.

பாஷா இந்தோனேசியாவில் எழுதப்படிக்க ஆங்கில எழுத்துக்களையே பயன்படுத்துகிறார்கள். ஏறக்குறைய ஸ்பானிஸ் போல. நிரைய ஆங்கில வார்த்தைகளை அப்படியே உபயோகிக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய உச்சரிப்பில். செரியூஸும் அப்படிப்பட்ட வார்த்தையாகத்தான் இருக்கவேண்டும். உச்சரிப்பில் இருந்து எழுத்தைக்கண்டு பிடித்தால் ஆங்கில வார்த்தை என்ன என்று தெரிந்துவிடும்.

'செ' - se, 'ரி' - ri, 'யு' - ?, 'ஸ்' - s. Serious என்று புரிந்து கொண்டேன்.

உண்மைதான். சோகத்திற்குக் காரணம் அவளேதான். இரண்டு மாதங்களுக்கு முன்பு, எங்கள் அணிக்கு விடுமுறைநாள். அவளை எங்கள் வீட்டிற்கு நண்பன் அழைத்து வந்திருந்தான். நானும் உபசரித்து எப்போதும் போல விளையாட்டாகப் பேசிக்கொண்டிருந்தேன். மற்றவர்கள் வேலைக்குப்போயிருந்தார்கள். அவன் அறையிலிருந்து உடைமாற்றிக்கொண்டு வந்த நண்பன், செலவு செய்து கூட்டி வருவது பேசிக்கொண்டிருக்கவா என்று சொல்லி அவளை உள்ளே அழைத்துப் போனான். நான் இதை எதிர்பார்க்கவில்லை. என் அறையில் முடங்கிக்கொண்டேன். வழிவழியாக வந்தப் பெண்குலப்பெருமையெல்லாம் கண்ணெதிரே எரிந்து போன துக்கத்தை, இதயம் பிழிந்து கொடுக்க தலயணை உறிஞ்சிக்கொண்டது. இப்போது இவர்கள் இருவரும் பேசிக்கொள்வதில்லை. அவனுக்கு கொஞ்சம் உயரமான புது நண்பி வந்துவிட்டாள்.

"ஒன்றுமில்லை என் வீட்டு ஞாபகம் வந்தது", என்றேன்.

சிலருக்குத்தான் மறந்து மன்னிக்கும் பக்குவம் இருக்கிறது. நான் இன்னும் செரியூஸ்தான்.

நான் ஒரு குரங்கு சாப்பிட்டேன்.

Monday, June 05, 2006

இந்தோனேசியாவின் பல்லாயிரக்கணக்கான தீவுகளில் ஒன்றான பத்தாமில் ஒரு வருடம் குப்பைக்கொட்டினேன். பாடல்நகரிலிருந்து1 சுமார் அரை மணி நேரம் தென் சீனக்கடலில் தெற்குநோக்கி படகுப்பயணம் செய்து போகவேண்டும். அங்கே வெளிநாட்டு வேலை என்ற மோகத்தில் இந்தியாவில் அற்ப சம்பளத்தை விட்டு சொற்ப சம்பளத்தில் அமெரிக்க நிறுவனத்தில் வேலை. இரண்டாம் கட்ட குழுவான நாங்கள் சுமார் 18பேர். எங்களுக்கு முன்பு ஒருவருடமாக அதே எண்ணிக்கையில் தமிழ்நாட்டவர்கள் அந்த இடத்தில் வேலை செய்துகோண்டிருந்தார்கள்.

வேலையென்னவோ கசாப்பு கடை வேலை மாதிரிதான். (தலைப்புக்கு கொஞ்சம் சம்பந்தப்படுகிறமாதிரி வருகிறதா.. தொடர்ந்து படியுங்கள் ..).
அதாவது கடும் திரவிகள்(hard-drives) - நன்றி இராம.கி - பழுது நீக்கும் வேலை. எப்படி வேலை செய்கிறது என்பது பற்றியெல்லாம் ஒரு பயிற்சியும் தரவில்லை. விசயமே தெரியாமல் உத்தேசமாக ஒருச்சில்லை கத்தியால் வெட்டி எடுத்து புதிய சில்லை போட்டு வேலை செய்தால் சரி இல்லையென்றால் இன்னொருச் சில்லை மாற்றிப் பார்க்க வேண்டியது, எதுவும் தேரவில்லையென்றால் கடைசியில் குப்பைத்தொட்டிக்குப் போகும். ஒன்றும் பாதகமில்லை. சிங்கையில் உற்பத்திக்கூடங்களில் சிலசமயம் ஏற்படும் தவறுகளால் சரியாக வேலை செய்யாமல் போகும். அவையெல்லாம் மொத்தமாக பத்தாமுக்கு வரும். பெரும்பாலும் சின்னக்குறைதான் இருக்கும்.

இப்படியே விட்டிருந்தால், கூட வேலை செய்யும் சுமார் 500 இளம் பெண்களில் சிலரோடு பாஷா இன்தொனேசியா வில் பேசமுடியாமல் பேசி, நண்பன் அடிக்கடி சொல்லும் மாட்டுச்சாணி என்று பொருள்படும் ஆங்கில வாசகத்தை படம்போட்டு காண்பித்து, அவர்கள் மொழியில் வார்த்தைகள் முன் பின்னாக வரும் முறையை கற்றுக்கொண்டு (உ.ம் குப்பி மை) குச்சிக்கறுவாடு வாங்கி சமைத்து சாப்பிட்டுக்கொண்டு இருந்திருக்கலாம்தான். ஆனால் அங்கிருந்த வேலை நேர அமைப்பு யாரையும் பைத்தியமாக்கிவிடும். வேலைநேரப்பட்டியலை, உளவியல் நிபுணர்களைக்கொண்டு, ஊழியர்களை தடியில்லாமல் அடக்கிவைக்க கணித்திருப்பார்களோவென்று எனக்கு சந்தேகம்.

ஊழியர்களை மொத்தம் 4 அணிகள் (A, B, C, D team), ஒரு நாளைக்கு 8 மணி நேரவீதம் 3 பிரிவுகள் (காலை, மாலை, இரவு shift). ஒவ்வொரு அணிக்கும் ஒரு நேரப்பிரிவில் வேலை. நான்காம் அணிக்கு விடுமுறை. இதுவரை ஒன்றும் தவறக தெரியவில்லை தான். ஆனால், அணிகள் நான்கும் சுழற்சி முறையில் காலை, மாலை இரவு என்று வேலைக்கு போகவேண்டும். கீழே இரண்டு வாரங்களுக்கான மாதிரி அட்டவணை3 காண்க. வாரம் ஏழு நாட்கள் வேலை செய்தால், எத்தனை நாள் காலையில் வேலைசெய்தோமோ அத்தனைநாள் விடுமுறை. உதாரணமாக A அணி 3 நாட்கள் முதல் வாரத்தில் வேலை செய்ததால் 7 நாள் வேலைக்குப்பிறகு 3 நாட்கள் திங்கள், செவ்வாய் புதன் கிழமைகள் விடுமுறை.

அப்படி வரும் விடுமுறையையும் முழுமையாக அனுபவிக்க முடியாது. ஏனென்றால், முதல் விடுமுறை நாள், இரவு வேலை முடிந்தபின் வருவதால் அன்று தூங்கியே கழியும். கடைசிநாள் விடுமுறைக்கு மறுநாள் அதிகாலையில் வேலை. சீக்கிரம் எழுந்திரிக்கவேண்டும். இதை எழுதி முடிக்கவே இத்தனை வேதனையாக இருக்கிறது. எனவே எனக்கு அங்கிருந்து ஓடிவிடவேண்டுமென்ற எண்ணமே இருந்தது. நடுச்சாலையில் வீட்டிற்கு கையைப்பிடித்து இழுக்கும் தோழியரோ, வெறு கேளிக்கை வாய்ப்புகளோ மனதில் ஒட்டவில்லை (60 வயது தாத்தா சிறுமியுடன் சுற்றுவதைக் காணலாம்).

ஒருவழியாய் வில்லங்கமான தலைப்பைக் கொடுத்து சொல்லவேண்டியதை சொல்லியாகிவிட்டது. இனி குரங்கு விசயம்.

இந்தச் சூழ்நிலையில், ஒரே ஆறுதல் அவ்வப்போது கடையில் கிடைக்கும் அயம் கொரெங். Ayam goreng 2 என்பது மறுவி I am குரங்கு.
எனவே ayam goreng சாப்பிட்டது, நான் ஒரு குரங்கு சாப்பிட்டேன் என்று விரிவடைகிறது. புதிர் அவிழ்ந்ததா?.

ஒரு தட்டு, ஒரு குவளை சாதம், ஒரு குவளையில் குழம்பு நம்மூர் குழம்பு போலவே இருக்கும், சின்ன குமிழில் மிளகாய்ப்பொடி, அப்புறம் மொறுமொறு வறுவல். எத்தனை கோழிகள் சாப்பிட்டேன் என்று கணக்கில்லை. அரைகுறை பாஷையில் கால் துண்டு வேண்டும் என்று கேட்டல் பக்கத்திலிருப்பவர்கள் சிரிப்பார்கள். தொடைப் பகுதி என்று சொல்லவேண்டும். சில சமயங்களில், நம்மூர் தாத்தா, தமிழெல்லாம் மறந்துவிட்டவர், கடையில் முட்டை பரோட்டா சாப்பிடுவேன். அவருடைய மறைவுக்குப்பின், அவர் மகன் கடையை நடத்தினார். அவர் கடையில் இன்னொறு பிடித்தமான உணவு, இரண்டு முட்டைகளை அரைவேக்காடாக போட்ட சுடுகஞ்சி.

பி.கு கல்யாணத்திற்கு பின், மனைவி சாபிபிடுவதில்லையென்பதால் நான் முட்டை சைவம். இத்தனைநாள் இதைப்பற்றி கவலைப்படவில்லை. G.ராகவனின் சங்கரன்கோவில் சாய்பு கடை பிரியாணியைப்பற்றி படித்ததும், ஒரு நாள் பிரியாணியா அல்லது பல நாள் பட்டினியா என்று போராட்டமாயிருக்கிறது?. காரணம் அடுத்த மாதம் பையனுக்கு சங்கரன் கோவிலுக்கு மொட்டைப்போடப்போகிறோம்.

1. sing ap oor = பாடல் நகரம் (ஃபிலிப்பைன்ஸ் உளவாளிகள் அறியாதபடி சங்கேத மொழி).
2. அயம் = கோழி
கொரெங் = வறுவல்.

3.











நேரம் திங்கள்செவ்வாய்புதன்வியாழன்வெள்ளிசனிஞாயிறு
வாரம் I
காலைA A A D D C C
மாலைB B B A A D D
இரவுC C C B B A A
விடுமுறைD D D C C B B
வாரம் II
காலைB B B A A D D
மாலைC C C B B A A
இரவுD D D C C B B
விடுமுறைA A A D D C C

ஜப்பானின் தாழ்த்தப்பட்ட மக்கள்

Sunday, June 04, 2006

ஜப்பானிய இனமான புரக்கு (Buraku) என்ற தாழ்த்தப்பட்ட மக்களைப்பற்றி நோபல் பரிசு பெற்ற மூலக்கருவியல் விஞ்ஞானி ஜேம்ஸ் டி. வாட்சன்-இன் டி-என்-ஏ (James D. Watson - D N A the Secret of Life) புத்தகத்தில் படித்தேன். அவர் எப்படி புத்திகூர்மைக்கு மரபணுக்கள் சிறிதளவே காரணமாகின்றன, சமூகச்சூழல்தான் ஒருவரின் உயர்வுக்கு பெரும்காரணமாகிறது என்பதை விளக்க புரக்கு இனத்தவரை உதாரணம் காட்டுகிறார்.

என்னால் இயன்ற மொழிபெயர்ப்பில் புத்தகத்தின் 380ம் பக்கத்திலிருந்து தொகுக்கப்பட்ட விபரங்களை கீழே காண்க.

இச்சந்ததியினர் சமூகத்தின் "அசுத்தமான", மிருகங்களை வெட்டுதல் போன்ற வேலைகளை செய்ய விதிக்கப்பட்டனர். ஜப்பானியர்கள் நவீனமடைந்தாலும்கூட, இப்போதும் புரக்கு இனத்தவர் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுவதாலும் முன்னேரவிடாததாலும், அறிவுத்திறன் அளவீடுகளில் சராசரியாக 10லிருந்து 15ந்து புள்ளிகள் நாட்டின் சராசரி அளவீட்டைக்காட்டிலும் குறைவாகவே பெறுகின்றனர்.

அவர்கள் மரபணுரீதியில் குறைபாடுடையவர்களா அல்லது அவர்களின் அறிவுத்திறன் அளவீடு என்பது வெறும் தாழ்த்தப்பட்ட நிலையின் பிரதிபலிப்பா என்ற கேள்விக்கு பிந்தையதுதான் காரணம் என்று புலப்படுகிறது: அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த புராக்கு இனத்தவர், எனைய ஜப்பானிய அமெரிக்கர்கள் போலவே பாகுபாடின்றி நடத்தப்படுவதால் தாய்நாட்டில் இருக்கும் அவர்களின் அறிவுத்திறன் குறைபடு அமெரிக்காவில் காணப்படுவதில்லை என்கிறார்.

ஈசாப் நீதிக்கதைகள்.

Friday, June 02, 2006

என் மகள் பாலர் வகுப்பில்(kindergarten)படித்தபோது அவளுக்கு தினமும் வீட்டுப்பாடங்கள் தரப்பட்டன. வியாழன்தோறும் ஒரு புத்தகத்தைப் படித்து அதில் முதலில், நடுவில் இறுதியில் என்ன நடந்தது என்று எழுதிக்கொண்டு போகவேண்டும். கதையிலிருந்து ஒரு படமும் வரையவேண்டும்.
இதற்கு நூலகத்தில் புத்தகங்களைத்தேடுவது பெரிய வேலையாக இருந்தது. புத்தகங்கள் ஐந்து வயதினர் படிக்கும்படி இருக்கவேண்டும், கைச்சித்திரங்கள் இருக்கவேண்டும், புகைப்படங்கள் உதவாது. பத்துப்பதினைந்து புத்தகங்களில் ஒன்றுதான் வேண்டியபடி அமையும். சிலமாதங்களிலேயே நூலகத்தில் தேடுவது வீண் என்றாகிவிட்டது.
நான் தமிழ்ப்பாடநூல்களில் படித்த கதைகளை இணையதளங்களில் தேடியபோதுதான், ஈசாப் நீதிக்கதைகளப் பற்றி தெரிந்துகொண்டேன் (Aesop's Fables). எனக்குத்தெரிந்த அத்தனை குட்டிக்கதைகளும் கி.மு 700ம் நூற்றாண்டு காலத்தைய இப்புத்தகத்தில் இருக்கின்றன. பொன் முட்டையிடும் வாத்து, காக்கையை ஏமாற்றும் நரி, குடுவை நீர் அருந்தும் காக்கை என்று பல கதைகள் படங்களுடன் ஒரே புத்தகத்திலிருந்து கிடைத்தன. காலம், இடம், மொழிகளுக்கு அப்பாற்பட்ட என்ன அருமையான கதைகள். வீட்டுப்பாடத்தில் உதவியதற்கு நன்றி ஈசாப்.

ant.JPGcar.JPGeskimo.JPG
fireman.JPGgolden_egg.JPGjar.JPGpanda.JPG
pig.JPGpumkin.JPGpuzzle.JPGrabit.JPGrainbow_fish-1.JPG

redhen.JPGsled.JPGpresent.JPGsnow.JPG

sour_grapes.JPGtaillessfox.JPGtree_house.JPG

words1.JPGwords2.JPGwords3.JPGwords4.JPG



Comments


1. ்ஜ்ஜ்Jeeva - June 4, 2006

ரொம்ப நல்லா இருக்கு எல்லா படங்களும், உங்கள் மகளுக்கு வாழ்த்துக்கள் பலப்பல.


2. padhu - June 4, 2006

//ரொம்ப நல்லா இருக்கு எல்லா படங்களும், உங்கள் மகளுக்கு வாழ்த்துக்கள் பலப்பல.//

மிக்க நன்றி ஜீவா,

மகளுடன் அடுத்து பேசும்போதுதான் இந்த புதிய பதிவுகளைப்பற்றி சொல்ல வேண்டும். சந்தோசப்படுவாள்.


3. ஜீவ்ஸ் - June 5, 2006

படங்கள் நன்று :) உங்கள் மகளுக்கு என் வாழ்த்துகளைத் தெரியப்படுத்துங்கள்.


உங்கள் வெண்பாவிற்கான பதில் என் பதிவில் இடுகிறேன்.


அன்புடன்

ஜீவ்ஸ்


4. padhu - June 5, 2006

வருகைக்கு நன்றி ஜீவ்ஸ்,

அடுத்த முறை உங்கள் பதிவில் பின்னூட்டம் இடும்போது நீங்கள் PG Woodhouse பிரியரா? என்று கேட்க்கவெண்டும்.


5. மதி கந்தசாமி - June 9, 2006

அழகான படங்கள்! உங்கள் மகளிடம் சொல்லுங்கள்.


6. padhu - June 9, 2006

பாராட்டுக்களுக்கு நன்றி மதி கந்தசாமி.


நத்தைக்கு நோபல் பரிசு



nobel prize for snailநான் விரும்பிக்கேட்கும் வானொலி நேஷனல் பப்ளிக் ரேடியோ (NPR). ஒரு நாள், 2000ம் ஆண்டிற்கான மருத்துவத்துறையில் நோபல் பரிசு பெற்ற எரிக் கேன்டல்-ஐ பேட்டி கண்டார்கள். மூளைத்திசுக்களில் (brain cells - neurons) ஞாபகங்கள் எப்படி பதிவாகின்றன என்று ஆராய்ந்து அறிந்ததற்கு இவருடையக் குழுவினருக்கு இப்பரிசு. இந்த ஆராய்ச்சிக்கு இவர் கடல் நத்தைகளை பயன்படுத்தினார். இந்நத்தைகளின் நரம்பு மண்டலம் குறைந்த அளவில் நியூரான்களைக்கொண்டு இருந்ததாலும் அந்த நியூரான்கள் வெறும் கண்ணாலேயே் பிரித்தறியும்படி அளவில் பெரிதாக இருந்ததாலும், மற்ற உயிரினங்களைக்காட்டிலும் இவை இவரது ஆய்விற்கு ஏற்றதாக இருந்தன.


அவருடைய இணையதளத்திற்கு சென்று பார்த்த போது, நோபல் பதக்கத்தை ஒரு நத்தை அணிந்திருப்பதைப்போல படம் கண்டேன். நத்தைக்கு எம் நன்றி.

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு மடிக்கணினி (OLPC-One Laptop Per Child)

Wednesday, May 31, 2006

olpc ebook
OLPC என்ற லாபநோக்கில்லாத நிறுவனம் 100 வெள்ளி (US$100) விலைக்கு சிறிய கணினி தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த முயற்சி வெற்றி பெற்றால், உலகம் முழுதும் குழந்தைகளின் கல்விப்புரட்ச்சிக்கு வழிவகுக்கும்.

இக்கணினிகள் பின்தங்கிய மற்றும் வளரும் நாடுகளின் அரசாங்க கல்வித்துறை அமைப்புகளுக்கு விற்கப்பட்டு, அவர்கள் மூலம் பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு (இலவசமாக?) விநியோகிக்கப்படும். இந்தியாவும் சீனாவும் இத்திட்டதில் முதன்மையாக இடம்பெற்றுள்ளன.

ஆராய்ச்சி இன்னும் முடிவுபெறவில்லையென்றாலும், முழுமையாக இயங்கும் மாதிரி வடிவங்கள் இம்மாதம் காட்சிக்கு வைக்கப்பட்டன. உலகின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான மாஸாச்சூஸட் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியின் ஆசிரியர்களால் வடிவமைக்கப்படும் இதன் சிறப்பு அம்சங்கள் வருமாறு:

  • சிறிய, கனம் குறைந்த (1.5 கிலோவுக்கு கீழ் கொண்டுவரும் லட்சியம்) குழந்தைகளுக்கென்று பிரத்யேகமான வடிவமைப்பு.

  • பிஞ்சுக்கைகள் நோகாதவண்ணம் தட்டச்சு செய்ய மென்மையான விசைப்பலகை.

  • திரையை வளக்கமான வகையிலும், புத்தகம் போல் பிடித்துக்கொள்ளும் வகையிலும் மடக்கிக்கொள்ளலாம். olpc ebook

  • நகரும் பாகங்கள் இல்லாததால் நீடித்து உழைக்கக்கூடியது.

  • கம்பியில்லாத தொடர்புகொள்ளும் (wireless) வசதியால் அருகருகில்் உள்ள இதே கணனிகளுடன் சேர்ந்து பெரிய கூட்டமைப்பு (network) ஏற்படுத்த முடியும்.

  • புதுமையான அகன்ற தொடுஅட்டைமூலம் சுட்டி காட்ட, எழுத மற்றும் வரையும் வசதி.

  • உள்ளடங்கிய ஒலி வாங்கி கூடவே தனி ஒலிவாங்கியை இணைக்கும் வசதி. ஒலிஅலைகளை பண்படுத்தும் பாகங்களே, அறிவியல் ஆய்விற்கு வெப்பம், மின்னழுத்தம் போல் இன்னும் பலவற்றை அளவிடும் மானியாகவும் வேலை செய்யும்.

  • உள்ளடங்கிய ஒலிபெருக்கி, வெளி இணைப்பு வசதி.

  • மூன்று USB2 இணைப்புக்கள், வெளி உபகரணங்களை பயன்படுத்த.

  • குறைவான மின்சக்தி தேவை. முழுவதும் சக்தியூட்டப்பட்ட பேட்டரியில், பள்ளிக்கூட நேரம் முழுவதும் தடையில்லாமல் இயங்கும். மின்சார இணைப்பு, வாகனங்களில் உள்ள பேட்டரி அல்லது மனித சக்தியால் கைகால்களால் டைனமோக்களை சுழலச்செய்து பேட்டரிகளுக்கு மறுபடியும் சக்தியூட்டலாம்.

  • மென்பொருட்கள் லினக்ஸை சார்ந்து வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

  • . இன்னும் பல.

வேகமாக இறுதி வடிவம் பெறும் இந்த கணினி விரைவில் மாணவர்களுக்கு சென்றடைய வாழ்த்துவோம்.

நன்றி

மேலும் விபரங்களுக்கு (wikipedia)

யாத்திரீகன் பொம்மை.



pilgrimchildயாத்திரீக சிறுமி பொம்மை (pilgrim child puppet) - என் மகள் ஒன்றாம் வகுப்பில் செய்த சில செய்முறை வீட்டுப்பாடங்களில் (projects) ஒன்று. அமெரிக்காவிற்கு 1960ல்் குடிபெயர்ந்த ஆங்கிலேயக் கிறிஸ்த்தவ குடும்பங்கள் யாத்திரீகர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு உதவி செய்த செவ்விந்தியர்கள் நினைவாக நவம்பர் மாதம் நான்காம் வியாழக்கிழமையை, நன்றி அளிக்கும் நாளாக (thanks giving day) கொண்டாடுகின்றனர். அதைப்பற்றி மாணவர்கள் ஆராய்ந்து அறிந்து கொள்ள வகுப்பு ஆசிரியைக் கொடுத்த வீட்டுப்பாடம்தான் இது.

நீ யாத்திரீக குழந்தையானால் (pilgrim child), எப்படி வாழ்ந்திருப்பாய், என்ன வேலை செய்வாய் என்றெல்லாம் எழுதிக்கொண்டு போக வேண்டும். மேலும், அட்டை குழாயையும்(tissue paper roll), துணிகளையும் பயன்படுத்தி பொம்மையும் செய்து கொண்டு போகவேண்டும். அப்படி செய்ததுதான் இந்த பொம்மை.

இதுபோல் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட மற்ற பாடங்கள்;

  • வண்டினங்கள் (bugs project)- காய், கனிகளைக் கொண்டு ஏதாவது ஒரு பூச்சியும் அதைப்பற்றிய கட்டுரையும், - எங்கள் தேர்வு எறும்பு

  • bug_ant
  • சர்கஸ் மிருகங்கள் (circus animal mobile) - எங்கள் தேர்வு குரங்கு

  • கடல்வாழ் உயிரினங்கள்(sea animal diorama) - எங்கள் தேர்வு ஆக்டபஸ்.

  • ocean diorama
  • மாற்றமும், வள்ர்ச்சியும் (things that change and grow) - மாணவர்களின் புகைப்பட தொகுப்பு. சிறந்த ஆப்ரிக்க அமெரிக்கர் (african american) - எங்கள் தேர்வு அகஸ்டா சாவேஜ் (Agusta Savage). அவர் எங்கள் ஊரில் பிறந்த பெண் சிற்பி என்பதால்.

  • நன்றி

யெஸ்-பி-யீ-ஸி-ஐ-யே-யெல் ஸ்பீஸியல்

Friday, May 26, 2006

-இது நான் ஏழாம் வகுப்பில் specialஐ வாசித்த லட்சணம்.
பத்தாம் வகுப்பில் கூட ஆங்கில புத்தகங்களில், ofக்கு மேல் -உடைய- என்றும், toக்கு மேல் -க்கு-என்றும் எழுதி வைத்துக்கொண்டுதான் புரிந்துகொள்ள முயர்ச்சித்தேன். எனக்கு படிப்பு வராது என்றில்லை. S.S.L.C 1981ம் ஆண்டுத்தேர்வில் கணக்கில் 96 வாங்கினேன். ஆங்கிலத்தில் மட்டம் என்பதாலேயே +1 படிக்க போகமாட்டேன் என்று அடம் பிடித்து polytechnicல் சேர்ந்தேன்.
பாலிடெக்னிக் டிப்பளமா (diploma) வகுப்பில் ஆங்கில வழி கல்விதான் என்றாலும்,
செயல்முறை பாடங்களும் அதிகமென்பதால் ஆர்வத்துடன் படித்தேன். 1984ம் ஆண்டு கோயம்பத்தூர் அரசினர் பாலிடெக்னிக்கில் மின்னணுவியல் (electronics) முடித்த என் நண்பர்கள் பலரும் இன்று நல்ல வேலையில் இருக்கிறார்கள்.
அதே வருடத்தில் நாங்கள் ஐந்துபேர் பெரிய வேலைகிடைத்து மைசூருக்கு வேலைக்குப்போனோம். வேலையில் நல்லபேர் எடுத்தாலும், ஆங்கிலத்தில் கதைப்புத்தகங்கள் படிப்பதும், சரளமாக பேசுவதும் இயலாத காரியமாகவே இருந்தது.
அப்போதுதான், ஜூனியர் விகடனில் James Hardley Chase ன் Hit and Run புதினத்தை தமிழில் தொடராக வெளியிட்டார்கள். அதில் சில வாரங்கள் மட்டுமே படித்திருந்தபோது, அந்த ஆங்கில புத்தகமே கையில் கிடைத்தது. பாதி கதை தெரியுமானதால்,தைரியமாக ஆங்கில அகராதியை கையில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு வரியாக படித்து புரிந்துகொண்டேன். இந்த வெற்றி தந்த உற்சாகத்தில் மீதி கதை முழுவதையும் தொடர் முடியும் முன்பே படித்துவிட்டேன். மேலும் சில Chase ன் புத்தகங்களை இப்படி படித்து, அகராதி துணையில்லாமலேயே Sidney Sheldon புத்தகங்களை படிக்கத்தொடங்கினேன். பல நண்பர்களுக்கு இந்த முறையில், பாதிக்கதை சொல்லி பின் அவர்களையும் நன்றாக படிக்க உதவியிருக்கிறேன்.
என்னதான் படித்தாலும் சரியாக உச்சரிக்க முடிவதில்லை. உ.ம் sஐ எஸ் என்று சொல்லாமல்-யெஸ் - என்பது. இதற்கு வழியிருந்தால் சொல்லுங்கள்.