விடலைக் காலத் தளைகள்

Saturday, June 10, 2006

விடலைக் காலத் தளைகளே போ போ போ

தொல்லை யிரும்பிறவிச் சூழுந்தளை நீக்கி
அல்லல்லறுத் தானந்த மாக்கியதே - எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவா சகமென்னுந்தேன்


நான் செய்த காரியங்களை நினைச்சாலே இன்னைக்கும் நெஞ்சு கூசுது. எதப்பத்தியும் அக்கறெயில்ல. என்னவோ எல்லோரும் என்னையே பாக்குறமாறி நெனப்பு.

விடுமுறையில வீட்டுக்குப்போறேன். சின்ன வயசுலேருந்து வளத்தப் பாட்டி முன்னாடி போயிட்டு இருக்காங்க. நான் அவங்களத்தாண்டி வேகமா வீட்டுக்குள்ள போயிட்டேன். அவங்களுக்கு ஒரே வருத்தம். பாட்டின்னு ஒருவாய் கூப்பிட்டா என்னன்னு.

சொந்தம்னு இல்லெ, ஒண்ணாப் படிக்கிறவங்ககிட்டயும் இப்படித்தான் நடந்துருக்கேன். கோயம்பத்தூருல பாலிடெக்னிக்ல ரெண்டாவது வருசம் படிச்சிக்கிட்டு இருக்கேன். விடுதியில என் அறையில இருந்தவங்கக்கிட்ட சண்டை. அதனால, ஃபெரோஸ் கூடத்தான் தங்கியிருந்தேன். ரெண்டுபேர் மட்டுமே இருக்கக்கூடிய அவன் அறையில எனக்கும் இடம் கொடுத்தான். ஒரு நாள் பீளமேட்டுக்குப்போய் காகிதம் எழுதுபொருட்க்கள் வாங்கினோம். பேருந்து பிடிக்காம நடந்தே வற்றோம். கல்லூரிகள் நிரைஞ்ச இடம். தண்டவாளத்துக்கு மேல போற குட்டி பாலத்த தாண்டுனதும் இடப்பக்கம் மருத்துவக்கல்லூரி, கொஞ்சம் தள்ளி வலதுபக்கம் கோவை பொறியியல் கல்லூரி. அதுக்கு அடுத்து எங்க கல்லூரி, வளாகத்திலேயே விடுதி. மருத்துவக்கல்லூரி பக்கத்துல வற்றப்ப, ஃபெரோஸ் தவறி கையிலிருந்ததைக் கீழப்போட்டுட்டான். நான் உடுக்கை இளந்தவன் கைப்போல விலகிப்போய் தலெயத் தடவிக்கிட்டு நின்னேன். பின்னென்ன மானம் போகுதே.

இன்னொரு மானம் போகிற விசயம் பெட்டி தூக்குறது. அப்பாவுக்கு வேலைமாறி தூத்துக்குடிக்கு வந்துட்டாங்க. ஊரிலேயிருந்து பெட்டி படுக்கையெல்லாம் எடுத்துட்டுப்போறோம். தம்பிதான் என்னெத்திட்டிக்கிட்டே பெரிய மெத்தையெ தூக்கிக்கிட்டுப்போறான். நான் நாகரீகமா பெட்டியை மட்டும் எடுத்துக்கிட்டேன். இதுக்காவது பின்னாளில் பிராயச்சித்தம் செய்யற மாதிரி ஆச்சு.1

ஆனால் பிராயச்சித்தம் செய்யமுடியாத சில விசயங்கள் இன்னும் உருத்திக்கிட்டே இருக்கு. எங்க அம்மாவுக்கு மருத்துவர்களால என்னன்னு புரிஞ்சுக்க முடியாம ஒரு சங்கடம். பார்க்க நல்லாத்தான் இருப்பாங்க. ஆனா இடது பக்கம் தலையிலருந்து கையெல்லாம் நீரா ஓடுதும்பாங்க. இதுக்காக கோவில் கோவிலா போய்வருவாங்க. அப்படி போறப்பத்தான், ஆத்தூருக்குத் துணையா என்னெப்போய் கூட்டிக்கிட்டுப் போனாங்க. கோவில்ல சாமி கும்பிட்டுட்டு பிரகாரத்தில உக்காந்திருக்கோம். அம்மா அங்க பளக்கமான வயசான தம்பதிகளோட பேசிக்கிட்டு இருந்தாங்க. வெளிய நல்ல வெயில். அந்தப்பெரியவர் வீட்டிலேர்ந்து கொண்டுவந்த பாத்திரத்தில சர்பத் போடுறாரு. அம்மா என்னெ கடைக்குப் போய் எலுமிச்சம்பழம் வாங்கிட்டு வரச் சொன்னாங்க. நான் நகரவேயில்ல. என்ன பையங்கறமாறி பார்த்துட்டு அவரேதான் போய் வாங்கிட்டு வந்தார். பெத்தவங்கள அண்டி வளருரப்போ அவ்வளவு திமிரு.

பின்னாடி ஒரு பைசா சம்பாதிக்க பாடாதபாடுபடுறப்ப உரெச்சி என்ன பிரயோசனம்.

அப்புறம் ஆத்துல போய் காலெ நனைச்சுட்டு வரப்போனோம். நடுவுல குட்டை மாறி கொஞ்சம்தான் தண்ணி இருக்கு. பாதி தூரத்தில ஒரு பாட்டி நெருப்பாக் கொதிக்கிற மணல் சூடு தாங்காம சேலெ முந்தானயெக் கீழப்போட்டு அதுமேல நிக்கிறாங்க. நான் செருப்புப் போட்டிருக்கேன். அதெ அவங்களுக்கு குடுத்து நான் மரத்தடிக்கி ஓடிப்போயிருக்கலாம். இப்படி செய்யாப் பிழைகளுக்கு அடிப்படைக் காரணம் என்னன்னு யோசிச்சிச்சா, நல்லப் பழக்கங்கள் தானே வராது, நாமே பழகித்தான் தெரிஞ்சிக்கணும்னு தோணுது. 2

இந்த கல்லுளித்தனத்துல உச்சக்கட்டந்தான் குற்றாலத்துக்குப் போயிட்டு அருவியிலெக் குளிக்காம வந்தது. நல்ல சீசன், அம்மா சந்தோசமா இருந்தாங்க. அவங்களுக்கு இப்படியும் மனுசங்க இருப்பாங்களான்னு விசனம். இப்பிடி முறுக்கிக்கிட்டு இருக்கிறதுனால யாருக்கு நட்டம்.

ஒவ்வொண்ணா இறுக்கிக்கிட்டிருந்த, தளைகளை முதமுதல்லப் பிரிக்க ஆரம்பிச்சது என் நண்பன் கருணாவோட3 அம்மாவின் பாசம். ஹோசூரில நாய்ப்பாடு பட்ட பின்னாடி, எங்க எல்லோருக்கும் மைசூருல நல்ல வேலைக் கிடைச்சிச்சி. கோயம்பத்தூர்ல சந்திச்சு எல்லோரும் ஒண்ணா சேர்ந்து போறதா திட்டம். எதிர்பாராதவிதமா4 நாங்க அவங்க வீட்டுல சில நாள் தங்க வேண்டியதாயிடுச்சி. ஒருநா அவன், "ஏண்டா எது கொடுத்தாலும் வேண்டாங்கற. நீ என்னோட சரியாப் பழகமாட்டியான்னு அம்மா கேக்குறங்க"னு சொன்னான். அண்ணையிலருந்து நான் நண்பர்கள் வீட்டுக்குப்போனா சங்கோஜப்படாம இருக்கப் பழகினேன். நண்பர்களோட நெருங்கிப் பழகவும், அன்பு செலுத்தறமாறி அன்பை ஏத்துக்கவும் பக்குவம் வந்துச்சு.

அடுத்தடுத்த இன்னும் இறுக்கமான தளைகளை களைய ரவிசங்கரின் யோகா பயிற்சி உதவிச்சு. பகுதி நேரக்கல்லூரி கடைசி வருடத்தில குற்றாலத்துக்குப்போய் நான்போட்ட ஆட்டத்தப்பாத்து எல்லாருக்கும் ஒரே ஆச்சரியம். இவனா இப்படின்னு. அவங்களுக்கு என்னத் தெரியும். நாங்க அங்க மொட்டமாடியில ஆனந்தக் கூத்தாடுனதப் பாத்துட்டு, ரோட்டிலப் போனவங்களும் ஆடி கொஞ்ச நேரம் போக்குவரத்தே நின்னுப்போச்சு.

மேலும் அந்தரங்கமான சுமையான தளைகளை நீக்கியது ஓஷோவின் பேச்சும் புத்தகங்களும். மற்றபடி பிரபல ஊடகங்கள் திணிக்கமுயலும் தளைகளை அகற்றுவது சமகால எழுத்தாளர்கள், பதிவுகள்.

விழிப்புடன் இருப்போம். பெற்ற உற்ற தளைகளைக் களைவோம். வேற்றுமை வேண்டோம்.
------------------------------------------------------------------
1 நவீன மானியை வடிவமச்ச நான் அதப்பத்தி விளக்கி சொல்ல போவேன். விற்பனைப் பிரதிநிதிகள் பெட்டி தூக்கினாக் கேவலம் போல நடந்துக்குவாங்க. எனக்கு குழந்தையைப் போலத் தூக்கிக்கொள்வது பெருமையாத்தான் இருந்துச்சி.
2 என் மகளிடம் நான் உபயோகிக்கும் அதிகப்படியான வசவு வார்த்தை, உன்னை திட்டிவிடுவேன் என்பது.
3 இந்த நண்பன் என் பதிவைப் படித்துவிட்டு, சில விசயங்கள் சற்று அந்தரங்கமாக இருக்கின்றன என்கிறான். எனக்கு எதை எடுப்பது என்று தெரியவில்லை.
4 இந்திராகாந்தி படுகொலை.


Comments


1. Friend - June 11, 2006

அருமையான உண்மையான பகிர்தல். உங்களுக்கு வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்.


2. roja - June 20, 2006

வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்.


0 மறுமொழிகள்:

Post a Comment