ஜெல்டா - சந்தியாகால இளவரசி

Thursday, January 25, 2007

நின்டெண்டோ (Nintendo) நிறுவனத்தின் புதிய நிகழ்பட விளையாட்டு
முனையம் (video game console) 'வி' ('Wii') விற்பனைக்குவந்த முதல் நாளே
வாங்கிவிட்டேன்.

இரண்டு ஆண்டுகளாக அதைப்பற்றி வந்த விபரங்களையெல்லாம்
ஒன்றுவிடாமல் படித்திருந்தேன். விற்பனைக்கான நாள் (நவம்பர் 19 2006)
குறிக்கப்பட்டதும், மாணவர்கள் பள்ளி ஆண்டு விடுமுறைக்கு
காத்திருப்பதைப்போல காத்திருந்தேன். நள்ளிரவிலிருந்தே கடைமுன் வரிசையில்
நின்று (நான் 36வது ஆள்) வெற்றிகரமாக ஒன்று வாங்கிக் கொண்டேன். கூடவே
ஒரு வட்டு வந்தாலும், இன்னும் மூன்று வட்டுக்கள் (game dvds) வாங்கிக்கொண்டேன். அதில்
ஒன்றுதான் ஜெல்டா (Zelda - The twilight princes).

குழந்தைத் தனமான இந்த ஆர்வத்திற்கு காரணம் இதன் நூதன வடிவமைப்புதான்.
இதற்கு முன்வந்த முனையங்களில் எல்லாம் திரையில் பொருட்களை நகர்த்த
பொருத்தான்கள் (buttons) கொடுத்திருப்பார்கள். அவற்றை சுழற்றும் திசையில்
பொருட்கள் நகரும். உதாரணமாக வலதுபுறம் வரும் பந்தை அடிக்க மட்டையை (bat)
நகர்த்த பொருத்தானை வலப்புறம் தள்ளவேண்டும். செயற்கையான இந்தவழி
முறைகளால் பெரும்பாலோனார்க்கு இந்த விளையாட்டுக்களில் ஆர்வம் இருப்பதில்லை.
ஆனால் 'வி' யில் உங்கள் கையில் கட்டுக்கோலை (controller) எடுத்து இயல்பாக மட்டையால்
விளாசுவதைப் போல ஓங்கினால் போதும். எனவே 'வி' சிறியவர் முதல் முதியவர் வரை
எல்லோரையும் கவர்ந்திருக்கிறது. சரக்கு வந்த சில நிமிடங்களில் விற்றுப்போகிறது.இந்த கட்டுக்கோலைக்கொண்டு ஜெல்டாவை விளையாடுவது நேரில் விளையாடுவது போல இருக்கிறது.
இரண்டு மாதங்களாக விளையாடுகிறேன், முழுவதும் முடிக்க இன்னும் சிலமாதங்கள் ஆகும். என்னை
கவர்ந்த ஒரு கட்டத்தை இங்கு விவரிக்கிறேன்.நாட்டில் ஒளிக்கற்றைகள் சிறை பிடிக்கப்பட்டு எப்போதும் மந்தகாசமாக இருக்கிறது. லிங்க் (Link)
என்ற கதையின் நாயகனாக நாம் விளையாட வேண்டும். கிராமத் தலைவனை சந்தித்துவிட்டு குதிரையில்
வந்து கொண்டிருக்கிறேன். அப்போது காட்டுப் பன்றி வாகனத்தில் வரும் சில அசுரர்கள் தலைவனின்
மகள் இல்லியாவைக் (Illia) கடத்திச்செல்கிறார்கள். அவளுக்குப் பதினொரு வயதிருக்கலாம். பிடிபட இருந்த மற்றொரு
சிறுவனை விலக்கிவிட்டுத் தானே சிறைபடுகிறாள்.

நான் அந்த அசுரர்களைத் துரத்திக்கொண்டு செல்கிறேன். மலையின் மேல் பரந்த வெளியில்,
ஆணவத்தோடு வாகனத்தின்மீது இருந்து பார்க்கிறான். கையில் கொடிமரம். அதில் இல்லியா
கட்டப்பட்டு மயங்கிக் கிடக்கிறாள். எனக்கு இரத்தம் கொதிக்கிறது. ஒரு கையில் கடிவாளத்தைப்
(பொருத்தான் உள்ள ஒருகோல்) பிடித்துக்கொண்டு மற்றொரு கையில் வாளை (கட்டுக்கோல்)
உறுவுகிறேன். அந்தக் கோழை போரிடாமல், கொம்பெடுத்து ஊதுகிறான். உடனே மற்றப்பொடி
அசுரர்கள் வந்து என்னை சூழ்ந்து கொள்கிறார்கள். மழை பொழிகிறது. என்மீது தொடர்ந்து
தீக்கணைகள் தொடுத்த வண்ணம் இருக்கிறார்கள். எவ்வளவுதான் போராடினாலும் அவர்கள்
மீண்டு எழுகிறார்கள். சோர்ந்து போய், கடைசியில் என்னோடு எப்போதும் நிழலாகத்
தொடரும் மித்னாவைக் (Midna) கேட்கிறேன். அவள், உன் இலக்கு அந்த சிறுமியைக் காப்பது.
அந்த அசுரன் மீது குறி வை என்கிறாள்.

இம்முறை புத்துயிர் பெற்று மற்றவர்களை வீழ்த்திக்கொண்டே அசுரனையும் துரத்துகிறேன்.
அவன் முதுகில் படும் அடி போதவில்லை. எனவே, அவனைத் தாண்டிச் சென்று, திரும்பி நேரெதிரே
சந்திக்கிறேன். ஒரே வீச்சுதான், நிலை தடுமாறி தப்பி ஓடுகிறான். மீண்டும் அவனை
பாலத்தின்மீது சந்தித்து கவனமாக அவனை மட்டும் பாதாளத்தில் தள்ளி சிறுமியைக் காப்பாற்றுகிறேன்.

கிராமத்தில் இல்லியா கண்விழித்ததும் கேட்க்கும் முதல் கேள்வி, அந்த சிறுவனைப் பார்த்து .
"உன்னைத் தள்ளிவிட்டேன் என்று உனக்கு என் மீது கோபமா?". என்னை அறியாமலே என் கண்ணில்
கண்ணீர் வடிந்தது.

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே.

2007 பொங்கல்விழா கவிதைப்போட்டி

Sunday, January 21, 2007

தமிழ்மன்றத்தின்சார்பாக நடத்தப்பட்ட கவிதைப்போட்டியில் என்னுடையப்பங்களிப்பாக கொடுக்கப்பட்ட தலைப்பிற்கு ஒன்றுவீதம் இக்கவிதைகளை அனுப்பினேன்.


கதிரவன்
------------
எங்கள் வாழ்வின் ஆதாரம்,
நம்பிக்கையின் அடையாளம்.
எங்களுக்கு உணர்வூட்டும் அமுதாய்,
இருள் போர்த்தும் எம்தாய்.

விதைப்பது எம் வயலில்,
விளைவது உன் செயலில்.
மறந்து மக்கள்,
துவள்வது கடும் வெயிலில்.
மரம் பறித்து
உளல்வது பனிப் புயலில்.

உன் இளஞ்சூடே எங்கள் உயிர்
உன் ஒளிக்கீற்றே எங்கள் உணவு.
உன் திறமே பொறியுணர்வு
உன் வரமே சுய அறிவு.

சுமைதாங்கி
----------------
பெற்றோர்சுமை, பெற்ற மக்களும் சுமை.
உடல்சுமை, உடமையும் சுமை.
செய்தன சுமை, செய்யாதனவும் சுமை.
இவற்றோடு என்னையும் சுமப்பவன் இறைவன்.


இல்லறம்
------------
நீருள்ளும் விளக்கெரித்தோம்
குளிர் நிலவும் கண்டு வந்தோம்.
ஆனால் உள்ளத்துள் ஒளியூட்டும்
இல்லறம் இழந்துவிட்டோம்.