கமு செரியூஸ்

Tuesday, June 06, 2006

பத்தாம் (Batam) தொழிற்பூங்கா. மெல்ல இருள் சூழும் நேரம். ஆணும் பெண்ணும் இரண்டிரண்டு பேராக குடியிருப்புகளுக்கும் கடைப்பகுதிக்குமாக பலவண்ண மேககூட்டங்களாய் மிதந்து போனார்கள். இன்று சனிக்கிழமையென்பதால் கூட்டம் அதிகம். வேலையிலிருந்து உணவு இடைவேளையில் சாப்பிட நண்பர்களோடுப் போய்க்கொண்டிருந்தோம். தோளில் யாரோ தட்டினார்கள். என்கூட வேலைசெய்யும் தோழி. உத்தேசமாக நாலரையடி உயரம், எப்போதும் சிரிக்கும் குழந்தை முகம், அரைப்பாவாடை சட்டை. அலாதியான பாசம். இப்போது பெயர்கூட நினைவில்லை. யோசித்துப்பார்த்தால், நண்பர்கள் யாரும் ஒருத்தரையும் பெயர் சொல்லிக் கூப்பிட்டதில்லை. மிக அன்னியோன்யமாக "என்னடி" தான். நான் அந்தப்பெண்களிடம் இது மரியாதையில்லை என்று சொல்லியும் வருத்தப்பட்டவர்கள் மாதிரித்தெரியவில்லை.

"கமு செரியூஸ்", என்றாள்.
"கமு" என்றால் நீ. செரியூஸ் என்றால் என்ன எனக்குப் புரியவில்லை.
"அப்பா?" - ("என்ன") என்றேன்.
"யேய், உனக்குத்தெரியும்.", மற்ற பெண்களும் சேர்ந்து சொன்னார்கள்.

பாஷா இந்தோனேசியாவில் எழுதப்படிக்க ஆங்கில எழுத்துக்களையே பயன்படுத்துகிறார்கள். ஏறக்குறைய ஸ்பானிஸ் போல. நிரைய ஆங்கில வார்த்தைகளை அப்படியே உபயோகிக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய உச்சரிப்பில். செரியூஸும் அப்படிப்பட்ட வார்த்தையாகத்தான் இருக்கவேண்டும். உச்சரிப்பில் இருந்து எழுத்தைக்கண்டு பிடித்தால் ஆங்கில வார்த்தை என்ன என்று தெரிந்துவிடும்.

'செ' - se, 'ரி' - ri, 'யு' - ?, 'ஸ்' - s. Serious என்று புரிந்து கொண்டேன்.

உண்மைதான். சோகத்திற்குக் காரணம் அவளேதான். இரண்டு மாதங்களுக்கு முன்பு, எங்கள் அணிக்கு விடுமுறைநாள். அவளை எங்கள் வீட்டிற்கு நண்பன் அழைத்து வந்திருந்தான். நானும் உபசரித்து எப்போதும் போல விளையாட்டாகப் பேசிக்கொண்டிருந்தேன். மற்றவர்கள் வேலைக்குப்போயிருந்தார்கள். அவன் அறையிலிருந்து உடைமாற்றிக்கொண்டு வந்த நண்பன், செலவு செய்து கூட்டி வருவது பேசிக்கொண்டிருக்கவா என்று சொல்லி அவளை உள்ளே அழைத்துப் போனான். நான் இதை எதிர்பார்க்கவில்லை. என் அறையில் முடங்கிக்கொண்டேன். வழிவழியாக வந்தப் பெண்குலப்பெருமையெல்லாம் கண்ணெதிரே எரிந்து போன துக்கத்தை, இதயம் பிழிந்து கொடுக்க தலயணை உறிஞ்சிக்கொண்டது. இப்போது இவர்கள் இருவரும் பேசிக்கொள்வதில்லை. அவனுக்கு கொஞ்சம் உயரமான புது நண்பி வந்துவிட்டாள்.

"ஒன்றுமில்லை என் வீட்டு ஞாபகம் வந்தது", என்றேன்.

சிலருக்குத்தான் மறந்து மன்னிக்கும் பக்குவம் இருக்கிறது. நான் இன்னும் செரியூஸ்தான்.

0 மறுமொழிகள்:

Post a Comment