கடைசியில் நிற்கிறேன்

Monday, June 19, 2006

குறை தீர்ந்த பக்தர்கள் உன்முன்னே அலைக் கூட்டம்
குறை தீர வந்தவர் சிலர் பின்னே நான் மட்டும்
மறைவாய்க் கடைசியில் நிற்கிறென்.

மனம் மகிழ ஒரு சோதனையா - எனக்கு
தினம் நெகிழ ஒரு சாதனையா

இறக்கி வைக்க வேண்டாத இன்பச்சுமையா - இவன்
இறக்கை வாய்க்க வேண்டாத தேவப்பதுமையா

வேகங் கெடுத்தாண்ட நற்பிறவியா - என் மகன்
மேகந் துளைத்துவந்த துறவியா

ஆற்றல் அருள வேண்டி நிற்பதா - இல்லை
ஏற்றம் தரும் அன்பு போற்றி உரைப்பதா

ஒடுங்கி நின்ற குசேலன் போல - புரியாமல்
ஒதுங்கி நான் கடைசியில் நிற்கிறேன்பி.கு:
என் மகனுக்கு டௌன்-ஸின்ட்ரோம் என்ற மரபணுவியல் கோளாறு இருக்கிறது. அது அவனுடைய மன வளர்ச்சியையும் உடல் வளர்ச்சியையும் பாதிக்கிறது. ஆனாலும் அவன் காட்டும் அன்பினால் அவையெல்லாம் ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை. இருந்தாலும் இந்த நல்ல நெஞ்சங்கள் புத்திக்கூர்மையும் கொண்டிருப்பதுதான் நியாயம் என்று அடியேனுக்குப் படுகிறது. அவனுக்கு மொட்டையடிக்க இந்த வாரம் ஊருக்குப் போகிறேன். கடவுளிடம் என்னக் கேட்பது என்ற குழப்பத்தில் எழுதப்பட்டது இது.

3 மறுமொழிகள்:

துளசி கோபால் said...

எல்லாம் நல்லபடியே நடக்கும். இங்கேயும் இதுபோன்ற மரபணு குறைபாடுள்ள குழந்தைகளுக்கு நல்ல முறையில் கல்வி அளிக்கப்படுகின்றது.

நாம் செய்ய வேண்டியதெல்லாம் இவர்கள் மீது அன்பு செலுத்துவது மட்டுமே.

குலவுசனப்பிரியன் said...

துளசி,
//நாம் செய்ய வேண்டியதெல்லாம் இவர்கள் மீது அன்பு செலுத்துவது மட்டுமே.//
உண்மைதான். 1959லேயே ட்ரைஸமி (மும்மடங்கு) 21ம் குரோமோசோம்கள் உருவாவதுதான் காரணம் என்று கண்டுபிடித்த போதிலும், கடந்த சிலவருடங்களாகத்தான் குணப்படுத்தும் முயற்சியில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போலியோவிற்கு மருந்து கண்டுபிடித்ததைப்போல், இப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கும் இந்த நூற்றாண்டுக்குள் தீர்வுகாண்படலாம்.

மருத்துவம் எவ்வளவு முன்னேறினாலும், ஏதாவது ஒருவகையில் பாதிக்கப்படவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்வதுதான் மனிதர்க்கு அழகு.

Rams said...

மனசு கனத்து விட்டது சார். துளசி மேடம் சொன்னது போல், எல்லாம் நல்ல படியா நடக்கும்.ஒரு குழப்பமும் வேண்டாம்

Post a Comment