ஆளில்லாத ஆட்டம்

Monday, June 19, 2006

கூடைப்பந்து விளையாட்டு அரங்கம் விளக்கொளியில் மின்னியது. எல்லா இருக்கைகளும் நிரைந்திருந்தன. அனைவரும் கூச்சல் போட்டுக்கொண்டிருந்தார்கள். நானும் அமெரிக்க நண்பனும் மேல் வரிசையில் உட்கார்ந்திருக்கிறோம். கொஞ்சம் அசௌகரியமான இடம்தான். ஆனால் இந்த இடம் கிடைத்ததே பெரிய விசயம்.

நண்பன்தான் வா ஆட்டம் பார்க்க போகலாம் என்று கூப்பிட்டுக்கொண்டு வந்தான். நான் தனி ஆள், ஊருக்குப் புதிது. எனவே, உற்சாகமாக கிளம்பினேன். வாரக்கடைசி ஆனதால் நல்லக் கூட்டம். சிற்றுந்தை நிறுத்த இடமில்லை. அரங்கத்தைவிட்டு வெகு தொலைவில் நிறுத்திவிட்டு நடந்து வந்தோம். இந்தக்கூட்டத்தில் எப்படி அனுமதிச் சீட்டு கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டே அரங்கை நோக்கி நடந்தேன். நண்பன் ஒரு நபரை அணுகி பேசினான். சிறிது பணம் கைமாறியதை தூரத்திலிருந்து பார்த்தேன். பின் அனுமதிச் சீட்டுடன் வெற்றிப் புன்னகையோடு வந்தான். சரிதான் இங்கேயும் கருப்பு சந்தைதான் போல.

உள்ளே நுளைபவர்களுக்கு சட்டையில் ஒட்டிக்கொள்ள ஒர்லான்டோ மாஜிக் அணியின் சின்னம் பொறித்த படங்களைக் கொடுத்தார்கள். ஷக்கில் ஓநீலை தொலைக்காட்சியில்தான் பார்த்திருக்கிறேன். இன்றைக்கு நேரில் பார்க்கப்போகிறேன்.

அரங்கத்தின் மத்தியில் நான்குபுறமும் வைத்திருந்த மிகப் பிரம்மாண்டமான திரைகள். அதில் கீழ் வரிசையில் உட்கார்ந்திருக்கும் முக்கியப் புள்ளிகளைக் காட்டிக்காட்டினார்கள். ஜனாதிபதி கிளிண்டன் திரையில் கையசைத்தபோது கூட்டம் ஆர்ப்பரித்தது. எந்த இடத்தில் உட்கார்ந்திருக்கிறார் என்று இங்கிருந்து தெரியவில்லை.

முதலில் கரகாட்டக்காரர்கள் போல் உடுத்தியிருந்த ஆண்களும் பெண்களும் வந்தார்கள். பின்னாலேயெ விளையாட்டுச் சீருடை அணிந்த பள்ளி மாணவர்கள் வந்தார்கள். ஒவ்வொருவராக கூடையில் பந்தை சரியாக எறிந்தார்கள். கரகாட்டக்காரர்கள் வாத்திய தாளத்துடன் சாகச வித்தைகள் செய்தனர். பின்னணியில் "வீ வில் .. வீ வில் ராக் யூ!" என்ற பாட்டுடன் அரங்கிலிருந்தவர்களும் குரல் கொடுக்க அரங்கமே அதிர்ந்தது. ஆகாயத்தில் பிரகாசனமான ஒளிக்கதிர்கள் நடனமாடியது காண்ணாடிக்கூண்டு வழியே தெரிந்தது.

கொஞ்சம் அமைதியானார்கள். நான் மைதானத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். சிறிது நேரம் களித்து விளையாட்டு எப்போது ஆரம்பமாகும் என்று நண்பனிடம் கேட்டேன். அவன் அது ஆரம்பித்து பத்து நிமிடங்கள் ஆயிற்று என்றான். மைதானத்தில் யாருமே இல்லை. அப்படியானால் இங்கே திரையில் தொலைக்காட்சி மூலம் விளையாட்டைப் பார்க்கவா இத்தனை ஆர்ப்பாட்டம். விளையாட்டை நேரில் பார்ப்பவர்கள் என்ன செய்ய மாட்டார்கள்.

ஆனால் எனக்கு நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்க்கவேயில்லை.

0 மறுமொழிகள்:

Post a Comment