மைன்ட்ஸ்டார்ம்ஸ் (Mindstorms) - ரோபாட் கட்டுதளம்

Monday, January 06, 2014

லெகோ (Lego) நிறுவனம்  தயாரிக்கும், ஒருபுறம் குழியும் மறுபுறம் கூம்புமாக உள்ள பிளாஸ்ட்டிக்  துணுக்குகளை வைத்து விதவிதமாக சிறுவர்கள் பொருட்கள் செய்து விளையாடுவதை பார்த்திருப்பீர்கள். அதே போல் பலவித ரோபாட்கள் செய்து இயக்க கற்றுக்கொள்ள ஏதுவாக, அவர்கள் வடிவமைத்த கட்டுதளம் (platform) தான் மைன்ட்ஸ்டார்ம்ஸ்.இந்த கட்டுதளம் ஒரு மையச்செயலியையும் அதனுடன் இணைக்க கூடிய இயக்கிகள் (மோட்டார்கள்), உணரிகள் (sensors), கட்டுமானப் பொருட்களான, சக்கரங்கள், அச்சுகள், மற்றும் பல உதிரி பாகங்களைக் கொண்டது.

சிறுவர்களுக்கு என்று உருவாக்கப்பட்டது எனினும், பொறியியல் ஆய்வாளர்களும்கூட இதை பயன்படுத்துகிறார்கள்.

லெகோ மைன்ட்ஸ்டோர்மை மாசசூசெட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து முதலில் 1998ல் வெளியிட்டது.
முதல் வடிவமைப்பை RCX என்றும் 2006ல் இரண்டாவதை NXT என்றும், 2013ல் மூன்றாம் வடிவை EV3 என்றும் அழைத்தனர். பொது விற்பனைக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் வெவ்வேறு தொகுப்புகள் கிடைக்கின்றன.

எனக்கு இதைப் பற்றி சென்ற ஆண்டு இறுதியில்தான் தெரிய வந்தது. விலை (350 அமெரிக்க வெள்ளி ) சற்று கூட என்றாலும், குழந்தைகளுக்கு அதன் பயன் கருதி வாங்கினேன். ஏறக்குறைய 600 உதிரி பாகங்களை கொண்ட தொகுப்பை வைத்து ஐந்து வித ரோபாட்கள் செய்ய அதிகாரப்பூர்வமான விளக்கங்கள் உள்ளன. சமூகப் பங்களிப்பாக மேலும் பல வடிவங்கள் செய்துகொள்ள விவரங்கள் கிடைக்கின்றன.

மாணவர்கள் இப்படி சொந்தமாக கற்றுக்கொள்வதோடு நிற்காமல், இந்த கட்டுதளத்தை அடிப்படையாக வைத்து நடக்கும் பல போட்டிகளிலும் பங்கு எடுத்துக்கொள்கிறார்கள். அப்போட்டிகளுள் முதன்மையான ஒன்று ஃபர்ஸ்ட் லெகோ லீக் (FIRST Lego League). 9 வயதிலிருந்து 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பங்கேற்கலாம். கடந்த சில மாதங்களாக ஆறு குழந்தைகள் கொண்ட குழுவிற்கு பயிற்சியாளனாக இருக்கிறேன்.
இப்போட்டியில் அறிவியலுக்கும் நுட்பியலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதைப்பற்றி விரிவாக தனி பதிவாக எழுத உள்ளேன்.