விடியோ விடு தூது

Thursday, June 08, 2006

தீப்பெட்டி அளவேயிருந்த அந்தச் சின்னத்திரையில், எடுத்தப் படம் சரியாக வந்திருக்கிறதா என்று பார்த்தோம்.

ஊரில் எங்கள் வீட்டு மொட்டை மாடியில் கைப்பிபிடிச் சுவருக்கு அருகிலிருந்து பேசுகிறேன்.
"வணக்கம். பல்லாயிரக்கணக்கான மைல் தூரத்திலிருந்து ... "
இப்போது திரையில் காட்சி என்னைவிட்டு விலகி வானத்தில் பறவைகளை நோக்கி போகிறது -
"... பறந்து வந்திருக்கேன். ஆனா ஒரு மைல் தூரத்துக்குள்ள இருக்கும் உன்னைப் பார்க்க முடியலை. இந்த தனி மரம் போல இருக்கிற ..."
- இப்போது காட்சியில் ஒரு ஒற்றைப் பனமரம் -
"... நாம எப்போ இப்படி ..."
- காட்சியில் இப்போது உரசினார்ப் போல இரண்டு பனை மரங்கள் -
"... ஒண்ணு சேரப்போறோம். உன்னை எப்ப பாக்கமுடியும்னு சொல்லியனுப்பு. நன்றி"

திருப்தியுடன் நண்பர் ஈஸ்வரன் காமிராவை எடுத்துக்கொண்டு என் வருங்கால மனைவியைப் பார்த்துவரப் போனார். நான் வெளிநாட்டிலிருந்த போது நடந்த நிச்சயதார்த்ததில் குடும்பத்தோடு கலந்துகொண்டதால் பெண் வீட்டாருக்கு அவரை தெரிந்திருந்தது. கோடிக்கணக்கில் வியாபாரம் நடக்கும் அவருடைய அலுவக வேலைக்கிடையில் எனக்குத்துணையாக, கல்யாணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பே வந்திருந்தார்.

அவர் கொண்டுவரப்போகும் செய்திக்காக காத்திருந்தேன்.
ஒரு வருடம் முன்பு தங்கைக் கல்யாணத்திற்காக வந்தபோது பெண் பார்க்க ஏற்பாடு செய்திருந்தார்கள். சிவகாசியில் குல தெய்வம் பூலூரம்மன் கோவில், இருக்கண்குடி எல்லாம் போய்விட்டு ஊருக்கு வர சாயுங்காலமாகிவிட்டது. நான், என் பெற்றோர், பெரியம்மா பெண் என்று நான்கு பேரும் சொக்கலிங்கபுரம் சிவன் கோயிலுக்குப் போய்சேர்ந்தபோது, பெண்வீட்டுக்காரர்கள் எல்லோரும் காத்திருந்தார்கள்.

முகமன் கூறியபின், மண்டபத்தில் எல்லோரும் அமர்ந்துகொண்டோம். பெண்ணுடைய சித்தப்பாதான் பேசினார். அவர்கள் வீட்டுப்பெண்களெல்லோரும் சற்றுத் தள்ளி அமர்ந்திருந்தார்கள். மங்கலான வெளிச்சத்தில் யாரும் தெரியவில்லை. எப்படியும் சாமி கும்பிடப்போவோம் அப்போது நேருக்கு நேர் பார்த்துக்கொளலாம் என்று அவர்கள் பக்கம் திரும்பாமல், கேள்விகளுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தேன்.

வளக்கமாக எல்லோரும் கேட்க்கும் கேள்விகள். சாப்பாடுக்கு என்ன செய்கிறென், அங்கே சீதோஷ்ணம் எப்படி. நிரந்தரவேலையா. எல்லாம் பேசி முடித்து விட்டு சரி நாங்கள் வருகிறோம் என்று கிளம்பி போய்விட்டார்கள்.

என் பெற்றோர் கல்யாணம் பேசி முடித்து நாள் குறித்தப் பின்னர் நான் கேட்டுக்கொண்டபடி ஈஸ்வரனின் அம்மாவும் கோவையில் அவர்கள் வீட்டிற்குப்போய் பார்த்துவிட்டு வந்தார்கள். அவர்களிடம் தொலைபேசி எண்ணை வாங்கி சில நாட்க்கள் பேசியிருக்கிறேன். முதல் தடவைக் கூப்பிட்டபோது அவள் வீட்டில் இல்லை. இரண்டாம் முறை பேசின போதும், அவளுடைய அம்மாதான் எடுத்தார்கள். "வீட்டுல ஆம்பளெங்க இருக்கறப்ப பேசுங்க தம்பி". என்று வைத்துவிட்டார். பின்னர் சிலருடைய சிபாரிசுகளுக்கு அப்புறம்தான் பேச முடிந்தது.

ஈஸ்வரன் சீக்கிரமே வந்துவிட்டார். கேமிராவில் இருந்த திரையில், அவள் ஒரு வீட்டிற்குள் உட்கார்ந்து பேச தயாராகிக்கொண்டிருந்தாள். பின்புலத்தில் அவளுடைய சித்தி வீட்டிற்குள் நுழைய முற்ப்பட்ட சிறுவர்களை விரட்டிக்கொண்டிருந்தார். கொஞ்ச நேரத்திற்குப் பின் அவள் பேச ஆரம்பித்தாள்.
"எனக்கும், உங்களைப் பார்க்கணும்னு ஆசையாத்தான் இருக்கு. நாங்க எல்லோரும் இன்னைக்கி சினிமாவுக்குப்போறோம். முடிஞ்சா நீங்களும் வாங்க. இல்ல கண்டிப்பா வாங்க". என்று அழைப்பு விடுத்தாள்.
எப்படி தட்ட முடியும். கோமதி டாக்கீஸில் பக்கத்து சீட்டில் உட்கார்ந்து, என்னப் படமென்று தெரியவில்லை, படத்தை யார் பார்த்தார்கள், ஏதேதோ பேசினோம். அப்படி சிரமப்பட்டு எடுத்தப் படம், என்னுடைய கவனக்குறைவினால், அதன்மேலேயே டிஸ்னி லான்ட் சுற்றிப்பார்த்ததை பதிவுசெய்துவிட்டதால் அழிந்துவிட்டது. அதனால் என்ன நல்ல நினைவுகளை இங்கே எழுத்தில் பதித்துவிட்டேன்.


Comments


1. துளசி கோபால் - June 9, 2006

அட்டகாசமான நினைவா இருக்கே.


2. padhu - June 9, 2006

துளசி கோபால்,

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி


0 மறுமொழிகள்:

Post a Comment