ஏனுங்.. உங்களுக்கு டைக்கட்டத் தெரியுமாங்..

Wednesday, June 07, 2006

மருதமலையடிவாரம் பெரிய கல்யாண மண்டபத்தில், நண்பர் குமாருக்குக் கல்யாணம். நானும் நண்பர் ஈஸ்வரனும் மாப்பிள்ளைக்குத் துணை. எல்லோரும் ஒன்றாகப் பகுதி நேர வகுப்பில் படிப்பவர்கள். மண்டபத்தின் எதிரில் இருந்தக் கோயிலிலிருந்து மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் போக தயாராகிக்கொண்டிருந்தார்கள். குமார் அவசரமாக எங்கள் இரண்டு பேரையும்கூப்பிட்டு டைக் கட்டத்தெரியுமா என்று கேட்டார். நான் டையை அப்போதுதான் முதல் முறையாகத் தொட்டுப் பார்க்கிறேன். ஈஸ்வரனுக்கும் தெரியாது.

யாரிடமாவது கேட்டு வருகிறோம் என்று இரண்டுபேரும் டையை எடுத்துக்கொண்டு ரகசியமாகக் வண்டியில் கிளம்பிவிட்டோம். கொஞ்ச தூரத்திலேயே பள்ளிச்சீறுடையில் இருந்த மாணவனைப் பார்த்தோம். டைக் கட்டியிருந்தான். வண்டியை நிறுத்திவிட்டு அவனை அணுகினோம்.

"தம்பி, உனக்கு டைக் கட்ட தெரியுமாப்பா?"
மண்டையை ஆட்டினான். தெரியாது.
"சரி உனக்கு யார் டைக் கட்டிவிடுவா?".
"எங்க அம்மா".
"உங்க வீடு எங்க இருக்கு?"
" ... ".
வீட்டிற்குப்போக பேருந்துக்குக் காத்திருக்கிறன். அவ்வளவு தூரம் போக முடியாது.
"சரி உன் டை எப்படிக் கட்டியிருக்குன்னு கொஞ்சம் காமிக்கிறயா?".
கழுத்துப்பட்டியை மேலே உயர்த்திப் பார்த்தால் எங்களுக்கு ஏமாற்றம். அது பெரியவர்கள் கட்டும் டையைப்போல இல்லை. சவ்வுக்கயிற்றில் டை வடிவில் ஒரே பட்டியாய் வைத்து தைத்திருந்தது.

மீண்டும் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினோம். அடுத்து கோட் போட்ட நடிகர் வசீகரமாக சிரித்தபடி இருந்த விளம்பரப்பலகை கண்ணில் பட்டது. இங்கே கோட் தைப்பார்களோ?. தையல் கடைக்குப் போய் விசாரித்தோம்.
கடைக்காரர், "இங்க யாருக்கும் தெரியாதுங்களே, பக்கத்துல வீட்டுல கேட்டுப்பாருங்க அவங்க சர்ச்சுக்குப் போரவங்க" என்றார்.

முயற்சியில் சற்றும் பின் வாங்காதவர்களாக அந்த வீட்டை அணுகினோம். வீட்டு வாசலில் ஒரு பெண் இருந்தார்.

"ஏனுங் ஃப்ரென்டுக்குக் கல்யாணங், எங்களுக்கு டைக் கட்டத்தெரியலீங். டெய்லர் உங்க வீட்டுலக் கேட்டுப்பாக்க சொன்னாருங்".
குரலில் மரியாதை கூட்ட வேண்டுமானால், க-வை விழுங் விடவேண்டும்.
"பெரியவருக்குத்தாங்க தெரியும், அவருக்கு உடம்புக்கு முடியாம இருக்காருங்க."
"ஏனுங் நீங்ளே எடுத்துட்டுப்போய் முடுச்சு மட்டும் போட்டு வாங்கிக் குடுங்".
"இல்லீங்க அவரு ரொம்பவே முடியாம இருக்காருங்க" என்று பேச்சை முடித்துக்கொண்டார்.
நேரமாகிவிட திரும்பிப் போய்விட்டோம். ரகசியமாக செய்ய நினைத்தது இப்போது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. கடைசியில் நிழற்படம் எடுப்பவரே சரியாகக் கட்டிவிட்டார்.

திருமண மண்டபத்தில் இன்னொரு சம்பவம். கல்யாணவீட்டுக்காரர்கள் பரபரப்பாக இருந்தனர். விருந்தினர்களோடு நாங்கள் இருவரும் அமர்ந்து நாதஸ்வரக் கச்சேரியைக் கேட்டுக்கொண்டிருந்தோம். வித்வான் சின்ன வயசு. சம்பிரதாயமாக முதலில் விநாயகர் பாடல் என்று ஆரம்பித்து சினிமா பாடல்களை வாசிக்க ஆரம்பித்தார். சில பாடல்களுக்குப் பின்,
பிப்பிப் பிப்பிப்பீ பிப்பிப் பிப்பிப்பீ ...
யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை. ஈஸ்வரன்தான் போய் மேளக்காரரிடம், "கல்யாண வீட்டுல என்னப் பாட்டுங்கப் பாடரீங்க" என்று கேட்டப் பிறகுதான், அதிர்ந்து போய் "மன்னிச்சுக்கங்க தம்பி. இவன் ஊதுறான்னு, நானும் தட்டிக்கிட்டிருக்கேன்" என்று சொல்லி உடனே நிறுத்தினார்.

உங்களால் அது என்னப் பாடல் என்று ஊகிக்க முடிகிறதா?


Comments


1. துளசி கோபால் - June 9, 2006

அந்தப் பாட்டு….’நலந்தானா… நலந்தானா?


2. padhu - June 9, 2006

//துளசி கோபால் Says:

அந்தப் பாட்டு….’நலந்தானா… நலந்தானா?//

நல்ல முயற்சி,

உங்களுக்கு சின்ன உதவி, அவருக்கு அடுத்த தலை முறையின் பாடல்.


0 மறுமொழிகள்:

Post a Comment