பல்லி விழும் பலன்

Wednesday, June 14, 2006

நேற்று நல்ல மழையில் மண்ணோடு சாரமும் சரிந்துவிட்டது. எல்லாம் சரி செய்து வேலை முடிந்து திரும்ப இன்று கொஞ்சம் நேரமாகிவிட்டது. சகதர்மிணி கவலைப்பட்டுக் கொண்டிருப்பாள். இந்தக்காட்டில் பேச்சுத்துணைக்கும் சரியான ஆள் இல்லை. எஞ்சினியர் வீட்டில் யாரும் பேசமாட்டார்கள். அது அவர்களுக்கு கவுரவக் குறைச்சல். ஏனென்றால் நான் வெறும் சூப்ரவைஸர், டிப்ளொமா, (L.C.E - Licentiate in Civil Engineering). என் நண்பர்களுக்கு இன்னமும் கல்யாணம் ஆகவில்லை. ஊரிலேயே விட்டு வைக்கலாம். ஆனால் என் அம்மாவின் குணமறிந்து அப்பாவே வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்துவிட்டார். அறுவடை வேலை, பசுக்கள், கடை வேலையென்று அம்மா படுத்திவிடுவாள். எனக்கும் இங்கே சாப்பாடுக்கு வழியில்லை.

மலையில் தேயிலைத்தோட்டங்கள், சுற்றிலும் சலசலக்கும் நீர் ஓடைகள் என்று அழகிய சூழல்தான். தூரத்தில் அணைக்கட்டு வேலை நடப்பதும் வீட்டிலிருந்து தெரியும். ஆனாலும் பதினெட்டு வயதுப்பெண் தனியாக இருப்பது கடினம்தான். பால்காரன் மனைவியும் மகளும் அவ்வப்போது லோயர் கேம்ப்பிலிருந்து மளிகை சாமான் வாங்கிக்கொண்டுவந்து கொடுப்பார்கள். மற்றபடி ஆளரவம் குறைவுதான்.

வண்டி வீட்டின் முன் வந்து இறக்கிவிட்டுவிட்டுப் போனது. எப்போதும் வெளியே காத்துக்கொண்டிருப்பாள். இன்று ஆளைக்காணோம். தாமதமாய் வந்ததற்கு கோபம் போல. வீடு இருட்டிக் கிடந்தது. விளக்கைப் போட்டுக்கொண்டே இரண்டு குரல் கொடுத்தேன். உள்ளறையிலிருந்து விசும்பல் சத்தம் மட்டும் கேட்டது. சரிதான் இன்றைக்கு வேதாளம் திரும்பவும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது. தவறாமல் மூன்று நாட்களுக்கு ஒருமுறை சுண்டைக்காய் பெறாத விசயத்திற்கு சண்டை வரும். இன்றென்னவோ.

கட்டிலுக்கு அருகே போனேன்.
"ஏய் குட்டி எந்திரி என் அழரெ?".
தலையைத்தூக்கிப் பார்த்த அவளின் கண்கள் அழுது சிவந்திருந்தன. முகத்தில் சாதாரணமாகத் தெரியும் கோபம் இல்லை. இது வேறு ஏதோ பிரச்சினை.
"என்ன விசயம் சொல்லு, பருப்பு கருகிருச்சா?".
தலையை ஆட்டினாள். இல்லை. இஸ்த்திரி போட்டிருப்பாளோ?.
"சட்டையில ஓட்டை விழுந்திருச்சா?"
அதுவும் இல்லை. எனக்கு இப்போது கோபம் வந்தது.
"என்னன்னு சொல்லித் தொலையேன்", என்று கத்தினேன்.
கொஞ்சம் முறைத்துவிட்டு மேஜைமேலிருந்த நாட்கட்டியை காட்டினாள்.
" நா..ன் சா..சா..கப்போ.றேன்."
ஏதொ விபரீதம் நடந்திருக்கிறது. தண்ணீர் எடுதுக்கொண்டு வந்து குடிக்க வைத்தேன்.

சற்று நேர அசுவாசத்திற்குப்பின் அவளே தொடர்ந்தாள்.
"சாயந்திரம் எம்மேல பல்லி விழுந்திருச்சு. கழுத்துல விழுந்ததுக்கு பலன் மரணம்னுப் போட்டு இருக்கு".

சொல்லி முடிக்கும் முன்பே அழுகை பீரிட்டுக்கொண்டு வந்தது. மேஜை மீது கிடந்த நாட்க்காட்டியை எடுத்துப் பார்த்தேன். உண்மைதான். இப்பொது என்னையும் பயம் தொற்றிக்கொண்டது. எனக்குப் பல்லி சொல்லிற்குப் பலன் பார்க்கும் பழக்கம் உண்டு. அப்பாவிடமிருந்து கற்றுக்கொண்டது. பல்லி சத்தமிட்டதை போலவே விரலால் தரையில் தட்டிப் பார்த்து எத்தனை முறை கூவியது என்று எண்ணிக்கையை தெரிந்து கொள்வேன். நாட்காட்டியின் பின்புறம் அந்த எண்களுக்கு என்ன பலன் என்று பட்டியல் இருக்கும். அதைவைத்துதான் இவள் பல்லி விழுந்ததிற்கு பலன் பார்த்திருக்கிறாள். இது வேறு ஏதாவது குறிப்பாக கூட இருக்கலாம்.

"சரி பல்லி கீழே விழுந்து எந்தப்பக்கம் போச்சு", என்று விசாரித்தேன்.
"அது செத்துப் போயிருந்துச்சு. நான் பெருக்கி எடுத்துட்டுப் போய் குப்பையில போட்டுடேன்", என்றாள். சொல்லி முடித்ததும் அவளுக்கும் பொரித்தட்டியது. முகம் தெளிவாயிற்று.

பலன் சரிதானே. நான் இப்போதும் பல்லி சொல்லிற்கு பலன் பார்த்துக்கொள்வதுதான். சரியாகத்தான் இருக்கிறது.


Comments


1. துளசி கோபால் - June 14, 2006

பல்லி வாயில் விழுந்தால் பயம் என்று போட்டிருக்கும்.

அதானே , நம்ம வாயிலே விழுந்தால் பயமா இருக்காதா என்ன?


2. padhu - June 14, 2006

துளசி,

இந்த சம்பவம் என் அம்மாவிற்கு உண்மையில் நடந்தது. அதை வைத்து எழுதினேன். நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இதில் நிரைய விசயம் இருக்கிறது போல. என்னிடம் குறிப்பு இல்லை. முழு பட்டியலையும் யாராவது பின்னூட்டம் இட்டால் இந்த பதிவு முழுமை பெறும்.


0 மறுமொழிகள்:

Post a Comment