யெஸ்-பி-யீ-ஸி-ஐ-யே-யெல் ஸ்பீஸியல்

Friday, May 26, 2006

-இது நான் ஏழாம் வகுப்பில் specialஐ வாசித்த லட்சணம்.
பத்தாம் வகுப்பில் கூட ஆங்கில புத்தகங்களில், ofக்கு மேல் -உடைய- என்றும், toக்கு மேல் -க்கு-என்றும் எழுதி வைத்துக்கொண்டுதான் புரிந்துகொள்ள முயர்ச்சித்தேன். எனக்கு படிப்பு வராது என்றில்லை. S.S.L.C 1981ம் ஆண்டுத்தேர்வில் கணக்கில் 96 வாங்கினேன். ஆங்கிலத்தில் மட்டம் என்பதாலேயே +1 படிக்க போகமாட்டேன் என்று அடம் பிடித்து polytechnicல் சேர்ந்தேன்.
பாலிடெக்னிக் டிப்பளமா (diploma) வகுப்பில் ஆங்கில வழி கல்விதான் என்றாலும்,
செயல்முறை பாடங்களும் அதிகமென்பதால் ஆர்வத்துடன் படித்தேன். 1984ம் ஆண்டு கோயம்பத்தூர் அரசினர் பாலிடெக்னிக்கில் மின்னணுவியல் (electronics) முடித்த என் நண்பர்கள் பலரும் இன்று நல்ல வேலையில் இருக்கிறார்கள்.
அதே வருடத்தில் நாங்கள் ஐந்துபேர் பெரிய வேலைகிடைத்து மைசூருக்கு வேலைக்குப்போனோம். வேலையில் நல்லபேர் எடுத்தாலும், ஆங்கிலத்தில் கதைப்புத்தகங்கள் படிப்பதும், சரளமாக பேசுவதும் இயலாத காரியமாகவே இருந்தது.
அப்போதுதான், ஜூனியர் விகடனில் James Hardley Chase ன் Hit and Run புதினத்தை தமிழில் தொடராக வெளியிட்டார்கள். அதில் சில வாரங்கள் மட்டுமே படித்திருந்தபோது, அந்த ஆங்கில புத்தகமே கையில் கிடைத்தது. பாதி கதை தெரியுமானதால்,தைரியமாக ஆங்கில அகராதியை கையில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு வரியாக படித்து புரிந்துகொண்டேன். இந்த வெற்றி தந்த உற்சாகத்தில் மீதி கதை முழுவதையும் தொடர் முடியும் முன்பே படித்துவிட்டேன். மேலும் சில Chase ன் புத்தகங்களை இப்படி படித்து, அகராதி துணையில்லாமலேயே Sidney Sheldon புத்தகங்களை படிக்கத்தொடங்கினேன். பல நண்பர்களுக்கு இந்த முறையில், பாதிக்கதை சொல்லி பின் அவர்களையும் நன்றாக படிக்க உதவியிருக்கிறேன்.
என்னதான் படித்தாலும் சரியாக உச்சரிக்க முடிவதில்லை. உ.ம் sஐ எஸ் என்று சொல்லாமல்-யெஸ் - என்பது. இதற்கு வழியிருந்தால் சொல்லுங்கள்.

0 மறுமொழிகள்:

Post a Comment