குசும்பர்களுக்காக: "தனியாகத்தான் வந்தேன்"

Tuesday, June 13, 2006

நண்பன் புதுமனைப் புகுவிழாவிற்கு அழைத்திருந்தான். பேருந்தில் என் சிறிய சுருக்கத்தையும் அவனுடைய பெருக்கத்தையும் ஒப்பிட்டபடி அவன் வீட்டிற்குப் பயணித்தேன்.

தன் பழைய வீட்டை இடித்து கட்டியிருக்கிறான். அவனை முதலில் பார்த்தது அந்த வீட்டில்தான். நான் சென்னையிலிருந்த வேலையை விட்டுவிட்டு கோயம்பத்தூரில் பகுதி நேரப் பொறியியல் வகுப்பில் சேர வந்திருந்தேன். நான் தனியாக அறையெடுத்து தங்கும்வரை அவன் வீட்டில் இருக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். இரண்டு அறைகள் கொண்ட ஓட்டுவீடு. அருகிலேயே மாட்டுத்தொழுவம். வீட்டுக்கு முன்னால் காலி இடத்தில் நீர்த்தொட்டி. அவன் அப்பா இழுவை வண்டி வைத்திருந்தார். அதில் கடைகளுக்கும் வீடுகளுக்கும் தண்ணீர் கொண்டுபோய் விற்பார். அம்மாவிற்கு கொஞ்சம் காது கோளாறு. மறதியும் அதிகம். (வேலைக்குப் போய்விட்டு மாலை வீட்டிற்குத்திரும்பினால், என்னை முற்றிலும் மறந்துவிட்டிருந்தார்). வயதான காலத்தில் பிறந்த ஒரே பையன். அவனுக்கு என்னைவிட ஆறேழு வயது குறைவு.

நான் வேலைக்கு சேர்ந்த நிறுவனத்தின் பங்குதாரர் முன்பு எனக்குப் பாலிடெக்னிக்கில் ஆசிரியர். அவருடைய வீடு எதிரில்தான் இருந்தது. அவருடையக் கண்காணிப்பில் டிப்ளொமா படித்தான். படித்து முடித்த சமயம் நாங்கள் தயாரித்த மானியை (ஸ்லிப்/ஸ்பீட் மீட்டர்) அஹமதாபாத்தில் விற்க அனுப்பிவைத்தனர். "நீர் இறைப்பான்" தயாரிப்பவர்களுக்குத் தேவைப்பட்ட அவை அங்கே நன்றாக விற்பனை ஆகின.

குஜராத்திகளின் இடமல்லவா. அவர்களின் சாமர்த்தியம் இவனுக்கும் கைவந்தது. அவன் அங்கே தனியாக தொழில் ஆரம்பித்து, எங்களிடம் வாங்கி விற்க ஆரம்பித்தான். கூடவே வேறு மின் உபகர்ணங்களையும் விற்றான். இரண்டு வருடங்களில் அமர்க்களமாள வளர்ச்சி. நிறுவனர்களிடம், "அண்ணா நீங்களும் பிஸினஸ் மேன், நானும் பிஸினஸ் மேன்", என்று பேசும் அளவு துணிவு. இங்கே ஒன்று சொல்லவேண்டும். என் அனுபவத்தில், இப்படி டிப்ளொமா படித்தவர்கள் எப்படியோ சின்ன வேலையில் சேர்ந்து பின் தொழில் கற்று முன்னேறிவிடுகிறார்கள். அனால் பொறியியல் பட்டம் படித்தவர்கள்கூட அலுவலக வேலை போல எதிர்பார்த்து வீணாய்ப்போகிறார்கள்.

எனக்கு மதுரை, தூத்துக்குடி, கோவை, ஹோசூர், மைசூர், சென்னை என்று எல்லாம் கலந்த தோராயமான பேச்சு நடை உருவாகியிருந்தது. பள்ளித் தமிழ் ஆசிரியர் கடை சாம்பாரை உவமையாகச் சொல்வது இதற்கும் பொருந்தும். அதாவது பலதரப்பட்டவர்கள் கடைக்கு வருவார்கள். சாம்பார், ஒருவருக்கு இனிப்பாக இருக்கவேண்டும். இன்னொருவருக்கு காரமாக, மற்றவருக்கு உப்பு புளி கொஞ்சம் தூக்கலாக இருக்க வேண்டும். எனவே கடைக்காரர் எல்லோரையும் திருப்திப் படுத்துகிறமாதிரி சமைக்கவேண்டும். தனித்துவம் இல்லாததனாலேயே நான் பேச்சு நடையில் எழுத முடிவது இல்லை. மதுரைக்கு அருகிலிருந்து முதன்முதலில் கோவைக்கு வந்து படித்தபோது மூத்த மாணவர்கள், "மெதுவாகப் போடு" என்பதை உங்கள் ஊரில் எப்படி சொல்வீர்கள் என்று சொல்லக்கேட்டு சிரிப்பார்கள். இப்போது சற்று வில்லங்கமான சொற்றொடர்களெல்லாம் பழகியிருந்தாலும், வட்டார வளக்குச் சொற்களில் சரியான பயிற்சியில்லை.

பேருந்துலிருந்து இறங்கி அவன் வீட்டை நோக்கி நடந்தேன். திருப்பத்தில் வீடு கண்ணில் பட்டது. பழைய வீட்டின் சுவடேயில்லை. காலி இடத்தையும் சேர்த்து ஆடம்பரமாக பெரிய வீடாக கட்டியிருந்தான். வாசலில் அவனுடைய அப்பாதான் இருந்தார். என்னை சரியாக அடையாளம் தெரியவில்லை. திடீரென்று, "நீங்கள் கூட்டமா?" என்று கேட்டார். நான் சுற்றுமுற்றும் பார்த்தேன். வேறு யாருமில்லை. ஏன் அப்படிக்கேட்டார் என்று புரியாமலேயே நான், "இல்லை தனியாகத்தான் வந்தேன்" என்றேன்.

குசும்பர்களுக்கு நான் சொன்னதில் என்ன தவறு என்று புரியும். உங்களுக்குப் புரிந்ததையும் பின்னூட்டம் இடுங்களேன்.



Comments


1. துளசி கோபால் - June 13, 2006

நான் குசும்பி இல்லை.


அதனால்……………….. புரியவும் இல்லை.


2. துளசி கோபால் - June 13, 2006

Hi,


I have linked your post in Desipundit.


http://www.desipundit.com/category/tamil/


3. padhu - June 13, 2006

துளசி,

நானும் புதிர் போட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். “விடை தருவார் யாரோ?” என்று நீங்களும் இப்போது இரண்டாம் முறையாக கேட்டிருக்கிறீர்கள். கண்டதையும் படித்த1 தேசிகளாவது பதில் சொல்கிறார்களா என்று பார்ப்போம்.


உங்கள் ஆதரவிற்கு நன்றி.


1. பொருள் விளக்கம்.

கண்டதையும் தின்றால் குண்டனாகலாம்,

காண்டதையும் படித்தால் பாண்டிதனாகளாம் என்ற மூதுரையிலிருன்து.

இப்படி எனக்கு நானே விளக்கம் சொல்லிக்கொள்வது யாராவது தப்பாக எடுத்துக்கொள்ளப் போகிறார்கள் என்ற கவலயினால் தான்.


4. கோயமுத்தூர் குசும்பு - June 14, 2006

//“நீங்கள் கூட்டமா?” என்று கேட்டார். நான் சுற்றுமுற்றும் பார்த்தேன். வேறு யாருமில்லை. ஏன் அப்படிக்கேட்டார் என்று புரியாமலேயே நான், “இல்லை தனியாகத்தான் வந்தேன்” என்றேன்.//


எனக்கும்தான் புரியலை. அதுக்காக நான் குசும்பு பிடிச்ச ஆசாமி இல்லைன்னு ஆகிடுமா?


5. padhu - June 14, 2006

கோயம்பத்தூர் குசும்பரே,

வாங்க வாங்க உங்கள எதிர்பார்த்துத்தான் அப்படி ஒரு தலைப்பு குடுத்தேன். உங்களுக்கே புரியலையின்னா நானே விளக்கமா சொல்லிற்றனுங்க.


படிப்பில்லாதவர்னாலும், அந்த பெரியவர் ரொம்ப தன்மையா தன்னோட _ஜாதி_யான்னு கேட்டு இருக்காருங்க. அது புரியாமத்தான் நான் பதில் சொல்லியிருக்கேங்க.


என்னெக் கேட்டா மத்தவங்க மனசு புண்படாம இப்படி பேசுரவங்கதாங்க மாவட்ட ஆட்சியரா வரணமுங்க. சில ஐயேயெஸுங்க விவரமில்லாம பிரச்சனைகள் தீவிரமாகிறதுக்கு காரணமாயிருந்திருக்காங்க. நம்ம தலைமுறயில பண்பைவிட பணத்தையும் படிப்பையும் பெருசா நினைக்கறமுங்க. அவர் மகன் கூட ஒரு உதாரணமுங்க.


4 மறுமொழிகள்:

மஞ்சூர் ராசா said...

ஓ....இப்படியும் ஒரு குசும்பு இருக்கோ?

RAMAVATAR said...

வ.வா.ச-1ம் ஆண்டு-நகைச்சுவை போட்டி
முதல் பரிசு நீங்கள் அனுப்பிய ப்ளோக் தான்
வாழ்த்துக்கள் !!

குலவுசனப்பிரியன் said...

இராம்,

உங்கள் வாக்கு பலிக்கட்டும். போட்டி முடிய இன்னும் இரண்டு நாட்கள் இருக்கின்றனவே?

உங்கள் ஊக்கத்திற்கு நன்றி.

பின்னூட்டம் இடுபவர்களுக்கு நான் சில நேரங்களில் நன்றி தெரிவிக்கக் கூட முடிவதில்லை. வெட்கப்படுகிறேன். மன்னிக்கவும்.

Vijay said...

என்ன கு(லவு)சனப்பிரியரே..

//“நீங்கள் கூட்டமா?” என்று கேட்டார்.//

யாராவது கண்டுபிடிசாங்களா?

Post a Comment