MGRக்கும் SPBக்கும் சண்டை

Wednesday, June 14, 2006

அந்தவருடம் தீபாவளிக்கு இதயக்கனி படம் பார்த்தேன். எப்போதாவது வருடத்திற்கு ஒரு முறை சின்ன மாமாக்களுடன் பார்ப்பதுதான். பள்ளிக்கூடத்தில் நண்பர்களிடம் கதைக் கேட்பதோடு சரி. மறுநாள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, எம்ஜியார் உற்சாகமாக வந்தான். எங்களை விட இரண்டு வகுப்பு அதிகம் படிக்கிறவன். பெரும்பாலும் எம்ஜியார் படம் போட்ட உள்சட்டையும் கால் சிறாயும்தான் போட்டிருப்பான். அதனால் அவனை எங்களுக்கு எம்ஜியார் என்று கூப்பிட்டே பளக்கமாகிவிட்டது. அவன் மூன்று மாதம் முன்பே பக்கத்து ஊருக்குப் போய் இந்தப் படத்தைப் பார்த்து விட்டான். இங்கே திரும்பவும் பார்த்தான்.

"டேய் படம் எப்படிடா இருந்துச்சி", என்று ஆவலோடு கேட்டான்.
"நல்லா இருந்துச்சிடா ஆனா அந்த இதழே இதழே பாட்டு எனக்குப் பிடிக்கலடா. அசிங்கமா இருந்திச்சிடா", என்றேன்.
அவன் முகம் வாடிப் போய்விட்டது.
"ஆமாண்டா எம்ஜியாருக்கும் அந்தப் பாட்டு பிடிக்கலெடா. அதனால அவருக்கும் எஸ்பிபிக்கும் சண்டெடா", என்று கவலையோடு சொன்னான்.
எனக்கு அது சரியாகத்தான் பட்டது. எஸ்பிபி மேல் கோபம் வந்தது.

படத்தில் துப்பாக்கிச் சண்டை, நகைச்சுவை என்று ஒவ்வொரு காட்சியாக மீண்டும் மனக்கண்ணில் ஓடவிட்டு ரசித்துப் பேசிக்கொண்டிருந்தோம்.
அப்போது படத்திலிருந்த வேறு ஒருப் பாட்டைப் பற்றியும் பேச்சு வந்தது. ("இன்பமே உந்தன் பேர் ..." என்று நினைக்கிறேன்)

"டேய் அந்தப்பாட்டும் நல்லாவே இல்லடா", என்றேன்.
இதையெல்லாம் அவனும் முன்பே யோசித்திருப்பான் போல.
உடனே சொன்னான், "டேய் அது கனவுப் பாட்டுடா".
என் சந்தேகங்களை எல்லாம் தீர்த்து வைத்த அவன் மேல் மேலும் மரியாதை ஏற்பட்டது. கனவுக் காட்சிகளுக்கு எம்ஜியார் எப்படி பொருப்பாகமுடியும். எனக்கு இப்போது அந்தப்படமும் எம்ஜியாரும் இன்னும் அதிகமாகப் பிடித்து போயினர்.

0 மறுமொழிகள்:

Post a Comment