இந்தோனேசியாவின் பல்லாயிரக்கணக்கான தீவுகளில் ஒன்றான பத்தாமில் ஒரு வருடம் குப்பைக்கொட்டினேன். பாடல்நகரிலிருந்து
1 சுமார் அரை மணி நேரம் தென் சீனக்கடலில் தெற்குநோக்கி படகுப்பயணம் செய்து போகவேண்டும். அங்கே வெளிநாட்டு வேலை என்ற மோகத்தில் இந்தியாவில் அற்ப சம்பளத்தை விட்டு சொற்ப சம்பளத்தில் அமெரிக்க நிறுவனத்தில் வேலை. இரண்டாம் கட்ட குழுவான நாங்கள் சுமார் 18பேர். எங்களுக்கு முன்பு ஒருவருடமாக அதே எண்ணிக்கையில் தமிழ்நாட்டவர்கள் அந்த இடத்தில் வேலை செய்துகோண்டிருந்தார்கள்.
வேலையென்னவோ கசாப்பு கடை வேலை மாதிரிதான். (தலைப்புக்கு கொஞ்சம் சம்பந்தப்படுகிறமாதிரி வருகிறதா.. தொடர்ந்து படியுங்கள் ..).
அதாவது கடும் திரவிகள்(hard-drives) - நன்றி இராம.கி - பழுது நீக்கும் வேலை. எப்படி வேலை செய்கிறது என்பது பற்றியெல்லாம் ஒரு பயிற்சியும் தரவில்லை. விசயமே தெரியாமல் உத்தேசமாக ஒருச்சில்லை கத்தியால் வெட்டி எடுத்து புதிய சில்லை போட்டு வேலை செய்தால் சரி இல்லையென்றால் இன்னொருச் சில்லை மாற்றிப் பார்க்க வேண்டியது, எதுவும் தேரவில்லையென்றால் கடைசியில் குப்பைத்தொட்டிக்குப் போகும். ஒன்றும் பாதகமில்லை. சிங்கையில் உற்பத்திக்கூடங்களில் சிலசமயம் ஏற்படும் தவறுகளால் சரியாக வேலை செய்யாமல் போகும். அவையெல்லாம் மொத்தமாக பத்தாமுக்கு வரும். பெரும்பாலும் சின்னக்குறைதான் இருக்கும்.
இப்படியே விட்டிருந்தால், கூட வேலை செய்யும் சுமார் 500 இளம் பெண்களில் சிலரோடு பாஷா இன்தொனேசியா வில் பேசமுடியாமல் பேசி, நண்பன் அடிக்கடி சொல்லும் மாட்டுச்சாணி என்று பொருள்படும் ஆங்கில வாசகத்தை படம்போட்டு காண்பித்து, அவர்கள் மொழியில் வார்த்தைகள் முன் பின்னாக வரும் முறையை கற்றுக்கொண்டு (உ.ம் குப்பி மை) குச்சிக்கறுவாடு வாங்கி சமைத்து சாப்பிட்டுக்கொண்டு இருந்திருக்கலாம்தான். ஆனால் அங்கிருந்த வேலை நேர அமைப்பு யாரையும் பைத்தியமாக்கிவிடும். வேலைநேரப்பட்டியலை, உளவியல் நிபுணர்களைக்கொண்டு, ஊழியர்களை தடியில்லாமல் அடக்கிவைக்க கணித்திருப்பார்களோவென்று எனக்கு சந்தேகம்.
ஊழியர்களை மொத்தம் 4 அணிகள் (A, B, C, D team), ஒரு நாளைக்கு 8 மணி நேரவீதம் 3 பிரிவுகள் (காலை, மாலை, இரவு shift). ஒவ்வொரு அணிக்கும் ஒரு நேரப்பிரிவில் வேலை. நான்காம் அணிக்கு விடுமுறை. இதுவரை ஒன்றும் தவறக தெரியவில்லை தான். ஆனால், அணிகள் நான்கும் சுழற்சி முறையில் காலை, மாலை இரவு என்று வேலைக்கு போகவேண்டும். கீழே இரண்டு வாரங்களுக்கான மாதிரி அட்டவணை
3 காண்க. வாரம் ஏழு நாட்கள் வேலை செய்தால், எத்தனை நாள் காலையில் வேலைசெய்தோமோ அத்தனைநாள் விடுமுறை. உதாரணமாக A அணி 3 நாட்கள் முதல் வாரத்தில் வேலை செய்ததால் 7 நாள் வேலைக்குப்பிறகு 3 நாட்கள் திங்கள், செவ்வாய் புதன் கிழமைகள் விடுமுறை.
அப்படி வரும் விடுமுறையையும் முழுமையாக அனுபவிக்க முடியாது. ஏனென்றால், முதல் விடுமுறை நாள், இரவு வேலை முடிந்தபின் வருவதால் அன்று தூங்கியே கழியும். கடைசிநாள் விடுமுறைக்கு மறுநாள் அதிகாலையில் வேலை. சீக்கிரம் எழுந்திரிக்கவேண்டும். இதை எழுதி முடிக்கவே இத்தனை வேதனையாக இருக்கிறது. எனவே எனக்கு அங்கிருந்து ஓடிவிடவேண்டுமென்ற எண்ணமே இருந்தது. நடுச்சாலையில் வீட்டிற்கு கையைப்பிடித்து இழுக்கும் தோழியரோ, வெறு கேளிக்கை வாய்ப்புகளோ மனதில் ஒட்டவில்லை (60 வயது தாத்தா சிறுமியுடன் சுற்றுவதைக் காணலாம்).
ஒருவழியாய் வில்லங்கமான தலைப்பைக் கொடுத்து சொல்லவேண்டியதை சொல்லியாகிவிட்டது. இனி குரங்கு விசயம்.
இந்தச் சூழ்நிலையில், ஒரே ஆறுதல் அவ்வப்போது கடையில் கிடைக்கும் அயம் கொரெங். Ayam goreng
2 என்பது மறுவி I am குரங்கு.
எனவே ayam goreng சாப்பிட்டது, நான் ஒரு குரங்கு சாப்பிட்டேன் என்று விரிவடைகிறது. புதிர் அவிழ்ந்ததா?.
ஒரு தட்டு, ஒரு குவளை சாதம், ஒரு குவளையில் குழம்பு நம்மூர் குழம்பு போலவே இருக்கும், சின்ன குமிழில் மிளகாய்ப்பொடி, அப்புறம் மொறுமொறு வறுவல். எத்தனை கோழிகள் சாப்பிட்டேன் என்று கணக்கில்லை. அரைகுறை பாஷையில் கால் துண்டு வேண்டும் என்று கேட்டல் பக்கத்திலிருப்பவர்கள் சிரிப்பார்கள். தொடைப் பகுதி என்று சொல்லவேண்டும். சில சமயங்களில், நம்மூர் தாத்தா, தமிழெல்லாம் மறந்துவிட்டவர், கடையில் முட்டை பரோட்டா சாப்பிடுவேன். அவருடைய மறைவுக்குப்பின், அவர் மகன் கடையை நடத்தினார். அவர் கடையில் இன்னொறு பிடித்தமான உணவு, இரண்டு முட்டைகளை அரைவேக்காடாக போட்ட சுடுகஞ்சி.
பி.கு கல்யாணத்திற்கு பின், மனைவி சாபிபிடுவதில்லையென்பதால் நான் முட்டை சைவம். இத்தனைநாள் இதைப்பற்றி கவலைப்படவில்லை. G.ராகவனின் சங்கரன்கோவில் சாய்பு கடை பிரியாணியைப்பற்றி படித்ததும், ஒரு நாள் பிரியாணியா அல்லது பல நாள் பட்டினியா என்று போராட்டமாயிருக்கிறது?. காரணம் அடுத்த மாதம் பையனுக்கு சங்கரன் கோவிலுக்கு மொட்டைப்போடப்போகிறோம்.
1. sing ap oor = பாடல் நகரம் (ஃபிலிப்பைன்ஸ் உளவாளிகள் அறியாதபடி சங்கேத மொழி).
2. அயம் = கோழி
கொரெங் = வறுவல்.
3.
நேரம் | திங்கள் | செவ்வாய் | புதன் | வியாழன் | வெள்ளி | சனி | ஞாயிறு |
---|
வாரம் I |
காலை | A | A | A | D | D | C | C |
மாலை | B | B | B | A | A | D | D |
இரவு | C | C | C | B | B | A | A |
விடுமுறை | D | D | D | C | C | B | B |
வாரம் II |
காலை | B | B | B | A | A | D | D |
மாலை | C | C | C | B | B | A | A |
இரவு | D | D | D | C | C | B | B |
விடுமுறை | A | A | A | D | D | C | C |
Comments
1. துளசி கோபால் - June 14, 2006
பல்லி வாயில் விழுந்தால் பயம் என்று போட்டிருக்கும்.
அதானே , நம்ம வாயிலே விழுந்தால் பயமா இருக்காதா என்ன?
2. padhu - June 14, 2006
துளசி,
இந்த சம்பவம் என் அம்மாவிற்கு உண்மையில் நடந்தது. அதை வைத்து எழுதினேன். நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இதில் நிரைய விசயம் இருக்கிறது போல. என்னிடம் குறிப்பு இல்லை. முழு பட்டியலையும் யாராவது பின்னூட்டம் இட்டால் இந்த பதிவு முழுமை பெறும்.