ஆஸ்டரிக்‌ஸ் Asterix - கேலி சித்திரங்களில் அசகாய சூரன்

Sunday, March 28, 2010

சிறுவயதில் பெட்டிக்கடைகளில் முத்துக் காமிக்ஸ் லயன் காமிக்ஸ் என்று படக்கதைப் புத்தகங்கள் வாடகைக்கு கிடைக்கும். விடுறை காலங்களில் அவற்றைப் படிப்பது முக்கிய பொழுது போக்காக இருந்தது. இரும்புக்கை மாயாவி, வேதாளர், மந்திரவாதி மான்ட்ரேக், லாரன்ஸ்-டேவிட் என்று
நாசகார சக்திகளை அழிக்கும் நாயகர்கள் அப்போது மிகவும் பிரசித்தமானவர்கள். காட்சிகளுக்கு தகுந்த உணர்ச்சி பொங்கும் படங்கள், பலவிதமான கோணங்களில் தத்ரூபமாக இருக்கும். பத்திரிக்கைகளில் தொடர்கதைகள் படிப்பதற்கு இந்தப் புத்தகங்கள் தூண்டுகோலாக இருந்தன.

வேலைக்குப் போய் ஆங்கிலப் புத்தகங்கள் படிக்க கற்றுக் கொண்ட பின்தான் உலகப் பிரசித்தி பெற்ற Asterix படக்கதைகள் எனக்கு அறிமுகமாயிற்று. அதன் கதைக்களம், பழகிப்போன மோசக்காரர்களின் குற்றங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. கேலி சித்திர வடிவில் கண்ணைக் கவரும் வண்ணங்களில், விசித்திரமான பாத்திரங்கள் கொண்ட முழுநீள நகைச்சுவைக் கதைக்களம். ஒரு புத்தகத்தை படித்ததுமே எல்லாவற்றையும் படிக்கத் தூண்டியது. ஒரே படத்தை சித்திரம்போல மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்கக் கூடியதாக இருக்கும்.


பிரஞ்ச் மொழியில் எழுதப்பட்ட இப்புத்தகங்கள் ஆங்கிலத்திலும் இன்ன பிற மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியாகின்றன. ஆனால் மொழிபெயர்க்கப் பட்ட எழுத்து என்று தெரிவதில்லை. உதாரணமாக சில இடங்களில் ஆங்கில மொழியின் உச்சரிப்பை/எழுத்துபிழைகளை பகடி செய்திருப்பார்கள். மூலக்கதையில் பிரஞ்சு மொழியை அதே போல கலாய்த்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். மேலும் பாத்திரங்களின் பெயர்கள் பலவும் காரணப் பெயர்கள் ஆகும். அவற்றையும் ஆங்கிலத்திற்கென்று மாற்றி இருக்கிறார்கள்.

தளம் இதுதான்:
கடலோர கிராமத்தில் வசிக்கும் குடியானவர்கள் (Gauls), ஜூலியஸ் சீசரின் ரோமன் அரசுக்கு பெரும் சரவலாக இருக்கிறார்கள். உலகத்தையே வென்றவர்களால் அந்த குட்டி கிராமத்தை கைப்பற்ற முடியவில்லை. ஏனென்றால் அந்தக் குடியானவர்களுக்கு அசாத்தியமான வலிமை இருந்தது. எதற்கும் பயப்பட மாட்டார்கள், வானம் இடிந்து விழப் போவதைத் தவிற.

அவர்களின் வலிமைக்குக் காரணம் கிராமத்து வைத்தியருக்கு (Getafix) மட்டுமே தெரிந்த மாய பாசாணம் (magic potion). இரண்டு சொட்டு சாப்பிட்டால் போதும் யானை பலம் கிடைத்துவிடும். அப்போது ரோமானிய வீரர்கள் மாட்டினால் அவ்வளவுதான் தீர்ந்தார்கள். பெரும்பாலும் அவர்களுக்குள்ளேயே அடித்துக் கொள்வார்கள். ஆனால் அவர்களின் நாயகன் ஆஸ்டரிக்ஸ் புத்திசாலி, அவன் வழிகாட்டுதலோடு எதிரிகளை எப்போதும் எட்டவே வைத்திருக்கிறார்கள். அவனுடைய இணை பிரியாத நண்பன் ஓபிலிக்ஸ் (Obelix). அவன் குழந்தையாக இருக்கும்போது மருந்து குண்டாவில் விழுந்துவிட்டதால் எப்போதுமே பலசாலி, மருந்தே வேண்டியதில்லை. அவனுடைய செல்ல நாய் டாக்மெடிக்ஸ் (Dogmatix - dogma-tix என்று பிரித்துப் பொருள் கொள்ளவும்). அவர்களுக்குப் பிடித்த உணவு காட்டுப்பன்றி. அவைகளை வேட்டையாடுவது, கை துறுதுறுத்தால் ரோமானிய வீரர்களைப் பந்தாடுவது என்று தன்நிறைவாக வாழ்கிறார்கள்.

சீசருக்கோ இத்துனூண்டு கிராமத்தை பிடிக்க முடியவில்லையே என்ற தன்மானப் பிரச்சனை. கதைக்குக் கதை சூழ்ச்சியாக, அதிரடியாக என்று பல வகைகளில் கிராமத்தவர்களோடு மோதிப் பார்க்கிறான். அவற்றை ஆஸ்டரிக்ஸ் தலைமையில் குடியானவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதுதான் பெரும்பாலான கதைகள். சில புத்தகங்களில் ஆஸ்டரிக்ஸ்-ம் ஓபிலிக்ஸ்-ம் தூர தேசங்களுக்கு சாகசப் பயணம் போய் வருகிறார்கள். எல்லாக் கதைகளிலும் கடைசியில் கிராமத்தில் குடியும் கும்மாளமுமாக பெரிய விருந்து நடக்கும். கூடவே பாணன் பாடிவிடாமல் இருக்க கட்டி வைக்கப்பட்டிருப்பான். எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க சுபம்.

கிராமத்து மாந்தர்கள் சிலர்:


மீன் வியாபாரி: அன்ஹைஜீனிக்ஸ் (Unhygenix), அவன் மனைவி பாக்டீரியா
கொல்லன்: ‘புல்லிஆட்டோமேடிக்ஸ் (Fulliautomatix)

தாத்தா: 'கெரியாட்ரிக்ஸ்(Geriatrix)


பாணன்: Cacofonix


விலை அதிகம்தான். 1990 வாக்கிலேயே ஒரு புத்தகம் 80 ரூபாய் ஆயிற்று. ஆனால் தனியார் நூலகங்களில் கண்டிப்பாக கிடைக்கும். படித்து மகிழுங்கள்.

சில புத்தகங்களின் நிழற்படத் தொகுப்புகள் இங்கே தரவிறக்கிக்கொள்ள கிடைக்கின்றன http://codingfreak.blogspot.com/search/label/Asterix

8 மறுமொழிகள்:

அக்பர் said...

சித்திரக்கதைகளின் ரசிகன் நான்.இதை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். அருமையாக விவரித்துள்ளீர்கள் சார்.

ராஜ நடராஜன் said...

நம்ம ஊரு சிந்துபாத் கதைகள்ன்னு சொல்லுங்க:)சுட்டி குழந்தைகளுக்கு பயன்படும்.நன்றி.

குலவுசனப்பிரியன் said...

வருகைக்கு நன்றி அக்பர்.

குலவுசனப்பிரியன் said...

ராஜா,
சிந்துபாத் கதையில் சிரிக்க விசயங்கள் இருக்குமா? சந்தேகம்தான். சுட்டிகளுக்கு மட்டுமில்லைங்க நமக்கும் ஆஸ்டரிக்ஸ் புத்தகங்கள் கண்டிப்பாக பிடிக்கும். சில இடங்களில் அவர்களுக்கு புரியாமல் போக வாய்பு இருக்கிறது. நாம் சொல்லிக் கொடுக்க வேண்டி வரும். ஒரு புத்தகம் படித்துப் பாருங்கள்.

வருகைக்கு நன்றி.

செல்வராஜ் (R.Selvaraj) said...

அறிமுகம் நன்றாக இருக்கிறது. ஈரோடு ஜேசீஸ் கிளப் நடத்திய சுழல் நூலகம் ஒன்றில் இந்தப் புத்தகங்கள் கிடைத்தன என்பதற்காகவே அங்கு உறுப்பினராகிப் படித்த பள்ளிக் காலங்கள் நினைவுக்கு வருகின்றன. இன்னும் அந்நூலகம் இருக்கிறதா எனத் தெரியவில்லை.

துபாய் ராஜா said...

இந்த கதை ஐந்தாறு வருடம் முன்னாடி ஆங்கிலத்தில் படமாகவே வந்ததை பற்றி ஒன்றும் சொல்லவேயில்லை. நல்ல நகைச்சுவைப்படம். நான் பார்த்திருக்கிறேன். பெயர் மறந்துவிட்டது.

குலவுசனப்பிரியன் said...

உண்மைதான் செல்வராஜ். இந்தப் புத்தகங்கள் நல்ல வாசிப்பு அனுபவம் தருபவை.

குலவுசனப்பிரியன் said...

வருகைக்கு நன்றி ராஜா. ஒருமுறை சென்னை ரயில் நிலையத்தில் இரைச்சல்களுக்கு மத்தியில் சில நிமிடங்கள் மட்டும் பார்த்திருக்கிறேன். மேல் விபரங்கள் தெரியவில்லை. மேலும் இந்த புத்தகளைப் படிப்பதில் கிடைக்கும் அனுபவம் திரையில் கிடைக்காது என்று நம்புகிறேன். உதாரணமாக பாத்திரங்கள் வெவ்வேறு மொழிகள் பேசுவதை எழுத்துரு மாற்றங்களால் உணர்த்தி இருப்பார்கள். மற்றும் நான் முன்பே சொன்னது போல நுணுக்கமான சித்திரங்கள் நீண்ட நேரம் பார்த்து ரசிக்கக் கூடியதாக இருக்கின்றன.

Post a Comment