கோழி குருமா; ஆந்திரா முறையில்

Saturday, March 13, 2010


அண்மை காலங்களில் காரிக்கிழமையானால் வீட்டில் என் சமையல்தான். தங்கமணி அன்றைக்கு மட்டும் குமான் வகுப்பில் தாள் திருத்தும் வேலைக்கு போகிறாள். மகளும் அங்கே படிக்கப் போய்விடுவாள்.

பல மாதங்கள் இடைவிடாது அலுவல் வேலை செய்த அயற்சிக்கு மாறாக ஒரு நாள் சமையல் செய்ய ஆரம்பித்தேன். அது வழமையாகிவிட்டது.

மீன் என்றால் எனக்கு சாப்பாடு வேண்டாம் என்று சொன்ன மகள், அடுத்து எப்போது மீன் குழம்பு வைப்பாய் என்றும், தங்கமணி எனக்கு முட்டை பிரியாணி செய்து கொடு என்றும் படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

பட்டறிவு இல்லாத காரணத்தால், இணையத்தில் உள்ள சமையல்குறிப்புகளில் எவற்றிற்கு, "செய்து பார்த்தேன் நன்றாக இருந்தது" என்று பின்னூட்டங்கள் வந்த பதார்த்தங்களை மட்டும் செய்கிறேன்.

இன்று செய்தது ஆந்திரா வகை கோழி குருமா

தேவையானவை


கோழிக்கறி         - 1 கிலோ
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 5
தக்காளி - 4
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
கருவேப்பிலை சிறிதளவு


அரைக்க


துருவின தேங்காய் - 1/2 கிண்ணம்
இஞ்சி - 1 அங்குலம்
பூண்டு - 7 பல்
பட்டை - 1 அங்குலம் இரண்டு துண்டுகள்
கிராம்பு - 6
ஏலக்காய் - 2
கசகசா - 1 தேக்கரண்டி
கொத்தமல்லித்தூள் - 1 தேக்கரண்டி
முந்திரி - 12

செய்முறை



  1. முந்திரி பருப்பையும் கசகசாவையும் சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைத்தபின் மேலே உள்ள பொருட்களுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.

  2. வெங்காயத்தை பொடியாக நறுக்கவும், பச்சை மிளகாய்களை சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

  3. தக்காளிகளை சிறிதாக வெட்டவும்.


  4. கோழிக்கறியை நடு அளவில் வெட்டி நன்றாக கழுவி தனியே வைக்கவும்.


  5. பாத்திரத்தில எண்ணெயை சூடாக்கி, வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு பொன் நிறமாக வதக்கவும். பின் தக்காளி, கருவேப்பிலையையும் போட்டு குழையும் வரை வதக்கவும். பின்னர் கறியைப் போட்டு, மிளகாய் பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மிதமான தீயில் 15 நிமிடங்கள் வேகவிடவும். (தண்ணீர் சேர்க்க வேண்டாம்)


  6. பின் அரைத்த விழுதை ஊற்றி ஒரு கிண்ணம் நீர் சேர்த்து நன்கு கலக்கிவிட்டு கறி மிருதுவாகும்வரை வேக வைக்கவும். இதற்கு மேலும் 15 - 20 நிமிடங்களாகும். தீயை ஏற்றி வைத்து நடுநடுவே கிளறிவிட்டு கெட்டியான பதத்தில் இறக்கவும்.

  7. அடுப்பை அணைத்துவிட்டு கறியில் மல்லித்தளை தூவி பரிமாறவும்.

3 மறுமொழிகள்:

ராஜ நடராஜன் said...

கோழி குருமாவுக்கு நன்றி.முன்பெல்லாம் அடிப்படியே கதி.இப்ப சமையல் சோம்பேறித்தனம் அதிகமாகிப் போச்சு.

Karthick ( biopen) said...

கோழி குருமாவுக்கு நன்றி.தொடருங்கள்.
இப்போது ஒரு தொடர் ஆரம்பித்துள்ளேன். படித்துவிட்டு சொல்லுங்கள்.
http://eluthuvathukarthick.wordpress.com/

ராஜ நடராஜன் said...

நீங்கதான் அந்த கோழி குருமாவா:)

சில நேரங்களில் கடையோட பெயரைப் படிக்காமலே சாப்பாடு ரெடி கரும்பலகையை பார்த்தவுடன் கடைக்குள்ள புகுந்த அனுபவம் முந்தைய பின்னூட்டம்!

Post a Comment