மின் சுரிப்பறனை - ஒரு நுட்பியல் அற்புதம்

Sunday, March 14, 2010

குறிப்பு நேரம் இல்லாதவர்கள் கடைசியில் இருக்கும் படத்தை மட்டும் பார்த்தால் போதும்.

நண்பரின் வீட்டில் கையடக்க சுரிப்பறனை (helicopter) ஒன்றை பார்த்ததிலிருந்து அதைப்பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் பற்றிக்கொண்டது.

அவர் வைத்திருந்தது, பெல்ஜியம் நாட்டு பொறியாளர் அலெக்ஸான்டர் வான் ட ரொஸ்டைன் வடிவமைத்த மாதிரி பிகூ-சி (Picoo-Z). இந்த வடிவமைப்பு 2006ல் உலகிலேயே சிறிய மாதிரி சுரிப்பறனை என்று கின்னஸில் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது. 10 கிராம் எடை, 170mm (நுல்லி மாத்திரி) நீளம் கொண்ட பறனை, கட்டுக்கோல் என்று எல்லாவற்றிக்கும் சேர்த்து விலை 20 லிருந்து 40 வெள்ளி (US$)வரை.இந்த மாதிரியில் சில அசௌகரியங்கள் இருந்தன. மின்கலம் தீர்ந்து போனால் மீண்டும் நிரப்பிக்கொள்ள 10 - 15 நிமிடங்கள் வரை ஆயிற்று. மற்றும் தொலைக்கட்டு இரண்டு அலைவரிசைகள் மட்டுமே கொண்டதால், ஊர்தியின் நகர்வை முழுமையாக கட்டுப்படுத்த இயலாது. ஒரு அலை வரிசையில் மேல்கீழாக செலுத்தும் கட்டளைகளும், மற்றொன்றில் இடவலமாக திருப்பும் கட்டளைகளையும் மட்டுமே அனுப்ப முடியும். முன் பின்னாக போக வைக்க முடியாது. அதற்கான மோதுஅலை உண்டாக்கும் பாகங்களும் (swashplate assembly) பறனையில் இல்லை.

எனவே வேறு நல்ல மாதிரிகள் உள்ளனவா என்று தேடினேன். பல நிறுவனங்கள் நூற்றுக் கணக்கான மாதிரிகளை விற்பனைக்கு வைத்துள்ளதைக் கண்டேன். நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு, அலென் என்ற தைவான் நிறுவனத்தின் டி-ரெக்ஸ் 250 (T-Rex 250) மாதிரிதான் ஆகச் சிறந்ததாக பட்டது. இதுபோன்ற முப்பரிமான வகைகள் தலைகீழாகக்கூட பறக்கும். இணைய குழுமங்களில் எல்லோரும் எதை எடுத்தாலும், இந்த நிறுவனத்தின் மாதிரிகளோடு ஒப்பிட்டு பார்க்கிறார்கள். முப்பரிமான மாதிரிகளைக் கட்டுப்படுத்த மற்ற எளிய மாதிரிகளைப் சில ஆண்டுகள் பயன்படுத்திய முன் அனுபவம் வேண்டும் என்பதை நான் நம்பவில்லை. அது என் பெரும் தவறு.

டி-ரெக்ஸ் வெறும் உதிரி பாகங்களாகத்தான் கிடைக்கிறது. ஒரு பறனைக்கு வேண்டிய பாகங்களுக்கு விலை US$299.99 மட்டும். இதில் மின்னணுவியல் பாகங்கள் சேர்த்தி இல்லை. அதற்கு மேலும் 150 வெள்ளி ஆகலாம். ரேடியோ அலைபரப்பி (radio transmitter)க்கு மேலும் நூற்றுக்கணக்கான வெள்ளிகள். திருப்புளி, இதர உபகரணங்கள் தனி.நாமேதான் பாகங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். பொருத்தமான மின்னோடி (motor), நகர்த்திகள் (servos), வானலை ஏற்பிடம் (radio receiver), மின்கலம் ஆகியவற்றை தேடி வாங்கிக் கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் படித்து விட்டு இது நமக்கு கட்டுபடியாகாது என்று ஒதுங்கிக்கொண்டேன். சில முக்கியமான பாகங்களைக் கீழே காண்க.


அலை பரப்பி - பொருத்தான்களின் நகர்வுக்கேற்றபடி சமிக்சைகளை அனுப்புகிறது
அலை ஏற்பி - சமிக்சைகளை வாங்கி தன்னோடு இணைந்துள்ள நகர்த்திகளையும் மின்னோடியையும் கட்டுப்படுத்துகிறது
நகர்த்திகள் - மோதுஅலை தட்டோடு இணைக்கப்படுகின்றன
மின்னோடியும், மின்னணு வேகக் கட்டுப்பாட்டகமும்
மோதுஅலை தட்டு


இவ்வளவு சிரமப்பட்டு செய்துவிட்டு செலுத்தத் தெரியாமல் மோதி நொறுங்கிவிட்டால் காசுக்கும் நேரத்திற்கும் கேடல்லவா? இடையில், குறைந்த செலவில் நுரைஅட்டைகளில் நாமே பறனை செய்து கொள்ள உதவி செய்யும் இணைய தளங்களைப் பார்த்து ஆசைத் துளிர்விட மேலும் கொஞ்சம் ஆராய்ச்சியைத் தொடர்ந்தேன். இந்தப் பறனைகளை செய்ய பட்டம் செய்வதை விடக் கொஞ்சம் அதிகம் மெனக்கெட வேண்டியிருக்கிறது. அதிகப்படியாக மின்னணு சாதனங்கள் பொருத்த வேண்டும் அவ்வளவே. உதாரணத்திற்கு கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.ஆனால், விமானங்களுக்கு பறக்க பெரிய வெட்டவெளி வேண்டும். (எங்கள் ஊரில் இதற்கென்றே இரண்டு ஓடுதளங்கள் இருக்கின்றன) மேலும் சரியாக செலுத்த பழகவேண்டும். இல்லை என்றால் நம்மை விட்டு எங்கோ கண்காணாமல் போய்விடும் வாய்ப்பு உள்ளது. குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு காடுமேடெல்லாம் போகவும் முடியாது. எனவே அந்தத் திட்டமும் கைவிடப்பட்டது. வீட்டிற்குள்ளேயே கற்றுக்கொள்ள வேண்டுமானால் சுரிப்பறனைதான் சரி என்று தீர்மானம் ஆகியது.

அப்போதுதான் முப்பரிமான மாதிரி ஒன்று பறக்க தயார் நிலையில் கட்டுக்கோலுடன் விலை US$ 170க்கு என்ற விளம்பரத்தைப் பிரபலமான ஒரு இணைய தளத்தில் பார்த்ததும் அவக்கர கதியில் வாங்க ஆணை அனுப்பிவிட்டேன். அது ஒரு குப்பை என்று அடுத்த நாள்தான் தெரிந்தது. அந்த நிறுவனம், கொடுத்த ஆணையைத் திரும்பப் பெற அனேக கட்டுப்பாடுகளை வைத்திருந்தது. வேலைப் பழுவில், அதை திரும்பப் பெற இயலவில்லை.

சுரிப்பறனை எதிர்பார்த்ததைப் போலவே தரக்குறைவாக செய்யப்பட்டிருந்தது. நான் நினைத்ததை விட பெரிய அளவு. ஒரு அடி நீளம் இருந்தது. வீட்டிற்குள்ளே ஓட்ட முடியாது. என்ன குறை சொல்லி திருப்பித் அனுப்பலாம் என்று பார்த்துக் கொண்டிருந்தேன். வார இறுதிநாள் ஒன்றில் சகல முன்னேற்பாடுகளுடன் வெறுமனே சோதிக்க ஆரம்பித்தேன். பறனை எழும்பிவிடாமல் இருக்க தரையோடு சேர்த்து பற்றுக்குறடு இன்னும் சிலவற்றை பாரமாக அதன் கால்பகுதியில் வைத்து அழுத்தி பிடித்துக்கொண்டேன். முதலில் மின்கலத்தை இணைத்தேன். கட்டுக்கோலில் ஒரு குச்சியை நகர்த்த, மோது அலைத்தட்டு அதே திசையில் சரியாக நகர்ந்தது.

சுரிப்பறனை என்பது அடிப்படையில் காற்றாடி பொருத்தப்பட்ட கல் போன்றதுதான். கல்லைப் பறக்கச் செய்யும் சூட்சுமங்கள் யாவும் காற்றாடியின் தகடுகள் சுற்றும்போது அவற்றின் பரிமானத்தை திருகுவதில் உள்ளன. கீழே உள்ள படம் மோதுதட்டு அதற்கு எவ்வாறு உதவுகிறது என்பதைக் காட்டுகிறது.என் மகனும் அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தான். காரிக்கிழமையில் மனையாளும், மகளும் வழக்கம்போல வகுப்பிற்கு சென்றிருந்தார்கள். என் மகன் இமைப்பொழுதில் மற்றொரு குச்சியை தட்டிவிட, பறனையின் மின்னோடி அசுரவேகத்தில் சுழலத் தொடங்கியது. என்ன ஏதென்று எத்தனிப்பதற்குள் என் இடக்கையில் பலத்த அடி. இறக்கைகள் உடைந்து தூரேபோய் விழுந்தன. கையில் நல்ல சிறாய்பு, இரண்டு விரல்களில் நகக்கண்கள் கொஞ்சம் பெயர்ந்துபோய் இருந்தது. அதிட்டவசமாக என் மகனுக்கு ஒன்றும் ஆகவில்லை.

அப்படியும் என் முயற்சியில் சற்றும் தளரவில்லை. வீட்டிற்குள்ளே உபயோகிக்கும்படி எது சரியான மாதிரி என்று ஆராய்ந்து நான் அறிந்தது இ-ஃபிளைட் நிறுவனத்தின் Blade mCX (micro co-axial என்பதின் சுருக்கம்). இந்த மாதிரியை ஒரு நுட்பியல் அற்புதம் எனலாம். பறக்க தயார் நிலையில், கட்டுக்கோலுடன் US$120 க்கு கிடைக்கிறது. உதிரி பாகங்கள் உள்ளூர்க் கடைகளிலேயே தாராளமாகக் கிடைக்கின்றன. ஆரம்பகாலப் பயிற்சியாளர்களுக்கு மிகவும் பொருத்தமான மாதிரி. கட்டுக்கோல் நான்கு அலைவரிசைகளைக் கொண்டிருக்கிறது. மேல்/கீழ், இட/வல திருப்பம், முன்/பின், இட/வல சாய்மானம் என்று நான்கு தளங்களில் கட்டுப்படுத்தலாம். கட்டுப்பாட்டை விட்டு கைகளை எடுத்துவிட்டால் நின்ற இடத்திலேயே பறக்கும். மின்கலங்களுக்கு தனி நிரப்பி இருக்கிறது. 5 மின்னணுவியல் பகுதிகள் மற்றும் நகர்த்திகளை ஒன்றாக சேர்த்ததால் பாகங்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. நாமே எளிதாக செப்பனிட்டுக் கொள்ளலாம். தேவையான ஒரே ஒரு திருப்புளியும் சேர்த்தே தருகிறார்கள்.ஆனாலும் மீண்டும் பணத்தை விரயமாக்காமல், இம்முறை குழுமத்தில் பயன்படுத்திய சுரிப்பறனையை குறைந்த விலையில் (அஞ்சல் செலவு, கூடுதலாக இரண்டு மின்கலங்களும் சேர்ந்து US$68) வாங்கினேன்.

இந்த மாதிரியில் ஒரே குறை ஒரு பாகம் (inner shaft - $6.00) மட்டும் எளிதாக உடைந்து போகிறது. இரண்டுமுறை மாற்றி விட்டேன். அதை பலப்படுத்த பார்த்துக் கொண்டிண்டிருக்கிறேன். எங்கேயும் மோதாமல் ஓட்டிப் பழகிக் கொள்ள வேண்டும்.

இது நீங்களோ உங்கள் குழந்தைகளோ தொலைக்காட்சிக்கு நேரம் செலவழிப்பதை கணிசமாகக் குறைக்கும் என்று உறுதி கூறுவேன். வரும் கோடை விடுமுறையில் உங்கள் பிள்ளைகளுக்கு அறிவுப்பூர்வமான பொழுதுபோக்காக அமையலாம். E-Flite வேறு புது சுரிப்பறனை மாதிரிகளை (mSR) அறிமுகப்படுத்தி உள்ளது. எனக்கு அதைப்பற்றி நேரடி அனுபவம் இல்லை. ஆனால் நான் கேள்விப்பட்ட வரையில் அது முதல்முறையாக பயில்பவர்களுக்கு ஏற்றதல்ல என்று அறிகிறேன்.உசாத்துணைகள்:

நுரை அட்டை மாதிரிகள்: Foamies (Scratchbuilt)

விற்பனைக்கு: Aircraft - Electric - Helis (FS/W)

மின் பறனைகள் பற்றிய இணையக் குழுமம்: http://www.rcgroups.com/forums/index.php

புதிய Blade mCX கிடைக்கும் இடம்: http://www.horizonhobby.com/

மறுத்தல்:
எனக்கும் இங்கே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

4 மறுமொழிகள்:

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

அற்புதம்.
மிகவும் ரசித்தேன்..:)

ராஜ நடராஜன் said...

தமிழும் அறிவியலும் மனதை கவர்கின்றன.மீண்டும் அசை போட திரும்ப வருகிறேன்.

ராஜ நடராஜன் said...

ஒரு முறை சொன்னா மறுபடியும் வருகிற மாதிரி!

குலவுசனப்பிரியன் said...

வருகைக்கு மீண்டும் நன்றி ராஜ நடராஜன். என் கடை கொஞ்சம் களைக்கட்ட ஆரம்பித்திருக்கிறது. எந்த இடுகைக்கு வந்த பின்னூட்டம் என்று தெரியாமல் பதில் இருக்கத் திண்டாடுகிறேன். பதிவை பராமரிக்க கற்றுக் கொள்ளவேண்டியதிருக்கிறது.

Post a Comment