கொடை வள்ளல்

Tuesday, April 17, 2007

வள்ளல்களின் ஒருகை செய்வது இன்னொரு கை அறியாது என்பர். என் எதிர்வீட்டில் இருக்கும், வயதில் அல்ல, கில்லாடித் தனத்தில் மூத்த அண்ணனின் குணமும் அஃதே. பதிவெல்லாம் போட மாட்டார். எனவே, அவர் புகழ் பரப்ப அடியேன் செய்யும் சிறு தொண்டு, அவருடைய லீலைகளை எடுத்துச் சொல்வது.

ஒரு முறை தன் துணைவி கோப்பெருந்தேவிவடிவின் (உண்மையானப் பெயர்), அமெரிக்காவில் உதவிக்கு யாரும் இல்லை என்ற பிக்கல் தாங்க முடியாமல், சமைத்துத் தருகிறேன் என்று சொல்லி முட்டைப் பொரியல் செய்து கொடுத்தார். அதை சாப்பிட்ட தேவி சிறிது நேரத்தில் மூர்ச்சை அடைந்தார். மருத்துவமனையில் உணவு விசமாகிவிட்டதற்காக (food poison) சிகிச்சை கொடுக்க வேண்டியதாயிற்று. அதற்கப்புறமும் அவருக்கு யாராவது வேலை சொல்வார்களா?

மனிதர்களின் செல்லப் பிராணிக்கும் அவருக்கும் அப்படி ஒரு பொருத்தம். அவைகளுக்கு அவர்மேல் கொள்ளைப் பிரியம். ஆனால் அவருக்கு பயமெல்லாம் ஒன்றுமில்லை, சற்று பாதுகாப்பு உணர்வு அதிகம். ஒருநாள் குடியிருப்பின் பொதுக் குப்பைத் தொட்டியில் குப்பைப் பையை போட்டுவிட்டுத் திரும்பினால், நாலுகால் நண்பன் ஒன்று துரைசாணியிடமிருந்து கட்டை அவிழ்த்துக்கொண்டு ஓடிவந்து அவரை நட்போடு பார்த்தது. ஆபத்தான நேரங்களில் மூளை துரிதமாக வேலை செய்யும் இல்லையா? கண நேரம்தான், சட்டென்று அருகில் இருந்த மகிழுந்தில் ஏறி கதவை சாத்திக்கொண்டார். வண்டி அங்கே குப்பைக் கொட்ட வந்த மற்றொரு பெண்ணுடையது. எந்திரத்தை (engine) நிறுத்தாமல் விட்டிருந்ததால் வண்டியை யாரோ களவாடிப் போவதாக நினைத்துக் கூச்சல் போட்டாள். செல்லப் பிராணியை அதன் அம்மா பிடித்துக்கொள்ள மெதுவாக கீழே இறங்கி எல்லோருக்கும் தன்னிலை விளக்கம் சொல்லித் தப்பி வந்தார்.

வள்ளல் பெருமானும் சிலரும் ஒரே வண்டியில் கருப்பு வெள்ளிக்கிழமை விற்பனைக்குச் (day after thanks giving sale) சென்று கொண்டிருந்தோம்.அவர் திடீரென்று "ஆ.. கை. கை" என்று அலறினார். வண்டி சாளரத்தின் வெளியே அவருடைய ஒருகை நீட்டிக் கொண்டிருந்தபோதே சாளரக் கண்ணாடிக்கதவு மேலெழும்பி மூடிக்கொண்டிருந்தது. கை கண்ணாடிக்கும் மேல்விளிம்புக்கும் இடையில் அகப்பட்டுக் கொண்டதுதான் அலறலுக்குக் காரணம். கதவை மூடிக்கொண்டிருந்தது வேறு யாருமல்ல. அது அவருடைய இன்னொரு கை.

ஆகா, என்னே வள்ளல் குணம்.

வ.வா.ச-1ம் ஆண்டு-நகைச்சுவை போட்டிக்காக.

உனக்கும் எனக்கும்



என் தோழியின் தம்பிக்கு சரியாக காது கேட்காது. ஒருத்தருக்கு ஒருத்தர் நன்கு அன்பு செலுத்துவார்கள். இணை பிரியாத நண்பர்கள் போல கிண்டலும் கேலியுமாக பேசிக் கொள்வார்கள்.

ஒருமுறை நாங்கள் எல்லோரும் ஒரு திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தபோது, ஏதோ கோளாறினால் ஒலிபெருக்கியில் தடையேற்பட்டது. அதை சரி செய்தபின், தடைபட்ட இடத்திலிருந்து படத்தை மீண்டும் திரையிட்டார்கள்.

தம்பிக்குப் புரியவில்லை. அக்காவிடம் ஏன் படத்தை மீண்டும் போடுகிறர்கள் என்று கேட்டதற்கு அக்காள் சொன்னபதில், "முதலில் போட்டது உனக்கு, இரண்டாவது போட்டது எங்களுக்கு".

இது என் நண்பன் சொல்லக் கேட்டது.

இப்படி பல வகைகளில் பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்து உச்சுக் கொட்டுவதைவிட அவர்களோடு இயல்பாக பழகுவதையே அவர்கள் விரும்புகிறார்கள்.

பொடி நடையாப் போறவரே



எப்பவும் அமைதியை விரும்பும் நம்ம தல, எந்த வம்புக்கும் போகலைன்னாலும் அதுவே அவரைத் தேடி வருது இல்லையா? அந்த ராசிக்கு என் மேலேயும் ரொம்ப பாசம். அவ்...

ஒருவாட்டி, சென்னையில, அண்ணா சாலைக்கிப் பக்கமா சிவனேண்ணு நடைபாதயில போய்கிட்டு இருக்கேன். திடீர்னு பொம்பளப் பசங்க எல்லாம் எதிர்ல ஓட்டமா ஓடியாராங்க. பின்னாடி ஒரு பய, காலு ரெண்டும் முடமா இருக்கான், அவன் பலகயில உக்காந்து ரொம்ப வேகமா உருட்டிக்கிட்டுத் துரத்திக்கிட்டு வற்றான்.

ரவுடிப் பய, நம்மூரா இருந்தா விட்டுருவமா? புது இடம். கூட்டாளிங்களும் ஒருத்தனும் கூட இல்ல. சரி நம்ம வீரத்த இவங்கிட்ட காட்டுனா நமக்குத்தான் அசிங்கம். நமக்கெதுக்குப்பா வம்புன்னு அவசரமா கீழ எறங்கி சாலையோரமா நடக்கிறேன். ரெண்டடிதான் வச்சிருப்பேன். எதிர்ல அலங்கோலமா ஒரு பொண்ணு. கை ரெண்டையும் விரிச்சிக்கிட்டு "பொடி நடையாப் போறவரே" ன்னு, பாடிக்கிடே கட்டிப்பிடிக்க வந்துட்டாயா. நான் சட்டுன்னு குனிஞ்சி கையில சிக்காம தப்பிச்சேன். அதெ நெனச்சா இன்னும் குலெ நடுங்குதுடா ஆத்தி. இவ துரத்தித்தான் அந்தப் பய ஓடியிருக்கான்.

பாவம் இப்பிடியா பொம்பளப் புள்ளெய தனியா விடுவாங்க? நம்ம தலதான் ஏதும் நிதி ஒதுக்கி, சட்டம் போடணும்.

வ.வா.ச-1ம் ஆண்டு-நகைச்சுவை போட்டிக்காக.

ஊதுவத்திப் பேய்

Monday, April 16, 2007

கோவை விடுதியில் தங்கி பட்டயப் படிப்பு படித்துக் கொண்டிருந்த காலம். அரசினர் கல்லூரி விடுதியாதலால், மிதமிஞ்சியக் கட்டுப்பாடுகள் இருக்காது. எப்போதும் ஆரவாரமாயிருக்கும் இடத்தில் தேர்வுக் காலங்களில் மயான அமைதி நிலவும். சில மாணவர்கள் சரியாக சாப்பிடாமல் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டு, இரவில் மோகினிப் பிசாசு அமுக்குவதாக எண்ணி அலறிக்கொண்டு ஓடுவது அடிக்கடி நடக்கும். மற்ற மாணவர்களும் அதைப் பார்த்து பயந்துபோய் இருப்பார்கள்.

அதில் வீரம் பேசிய ஒரு அறை நண்பனை அச்சுருத்த வந்ததுதான் ஊதுவத்திப் பேய். நள்ளிரவு, அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தவனை, இரும்புக் கட்டிலின் கிடுகிடு ஆட்டமும், சத்தமும் திடுக்கிட்டு எழ வைத்தன. கண்ணெதிரே பயங்கர நிழல் உருவம் அகோரப் பற்களுடன் வாயில் அனல் கக்கிக் கொண்டிருந்தது. ஆ.. ஆ.. என்று கத்தி அப்படியே உறைந்து போய்விட்டான். சந்திரமுகியில் நம்ம தலெக்கி, கோவாலுவைத் தேடிப்போய், நேர்ந்த கதியிலும் அது கொடுமை.

கொள்ளி வாய் செய்முறை:
ஊதுவத்தி கங்கு நாக்கில் படாமல் பல்லால் கடித்துக் கொண்டு, வாய் மட்டும் தெரியும்படி கருப்புப் போர்வையால் போர்த்திக் கொள்ளவும். அதிகப்படியான தாக்குதலுக்கு, பல்லைக் கடித்தபடியே ஊதவும்.

இதில் ஊதுபத்தி உபயம் மட்டும்தான் அடியேன்.
வ.வா.ச-1ம் ஆண்டு-நகைச்சுவை போட்டிக்காக.

பெரில் இடைமுகப்பு

Wednesday, April 11, 2007


மு.மயூரனின் விஸ்தா என்ன விஸ்தா? - Beryl on Linux பதிவிற்கு பின்னூட்டாக படம் இணைக்கமுடியாததால் என் பதிவில் இடுகிறேன்.

வண்டிச் சக்கரம் வட்டமிடும்.

Monday, April 09, 2007

வண்டிச் சக்கரம் வட்டமிடும்.
வட்டமிடும்.
வட்டமிடும்.
வண்டிச் சக்கரம் வட்டமிட்டு,
ஊரையெல்லாம் சுத்தி வரும்!

வண்டிக் குள்ளே பயணிகளை தூக்கிப் போடும்.
தூக்கிப் போடும்.
தூக்கிப் போடும்.
வண்டிக் குள்ளே தூக்கிப் போட்டு,
ஊரையெல்லாம் சுத்தி வரும்!

வண்டிப் பீப்பி சத்தம் போடும், பீப் - பீப் - பீப்.
பீப் - பீப் - பீப்.
பீப் - பீப் - பீப்.
வண்டிப் பீப்பி சத்தமிட்டு, பீப் - பீப் - பீப்
ஊரையெல்லாம் சுத்தி வரும்!

வண்டி ஆடியை துடைத்து வரும், சரக்- சரக்- சரக்.
சரக்- சரக்- சரக்.
சரக்- சரக்- சரக்.
வண்டி ஆடியை துடைத்தபடி, சரக்- சரக்- சரக்.
ஊரையெல்லாம் சுத்தி வரும்!

வண்டியில் பாப்பா கத்துக் கத்தும் வே - வே - வே.
வே - வே - வே.
வே - வே - வே.
வண்டி பாப்பாவும் கத்தி வர, வே - வே - வே
ஊரையெல்லாம் சுத்தி வரும்!

வண்டியில் மாமா வாய் அடக்கும் உம் - உம் - உம்
உம் - உம் - உம்.
உம் - உம் - உம்.
வண்டி மாமாவும் அடக்கிவர உம் - உம் - உம்
ஊரையெல்லாம் சுத்தி வரும்!

வண்டியில் அம்மா செல்லம் கொஞ்சும் என் கண்ணே.
என் கண்ணே.
என் கண்ணே.
வண்டி அப்பாவும் கொஞ்சிவர என் கண்ணே.
ஊரையெல்லாம் சுத்தி வரும்!

தழுவல்: "Wheels on the bus goes round and round"

எங்கத் தாத்தா பண்ணையிலே



எங்கத் தாத்தா பண்ணையிலே, ஈ-ஐ, ஈ-ஐ ஓ
வாத்து ஒன்று வளர்த்து வந்தார், ஈ-ஐ, ஈ-ஐ ஓ
இங்கொரு குவாக் குவாக், அங்கொரு குவாக் குவாக்
இங்க குவாக், அங்க குவாக்
எங்கையும் குவாக், குவாக்
எங்கத் தாத்தா பண்ணையிலே, ஈ-ஐ, ஈ-ஐ ஓ

எங்கத் தாத்தா பண்ணையிலே, ஈ-ஐ, ஈ-ஐ ஓ
மாடு ஒன்று வளர்த்து வந்தார், ஈ-ஐ, ஈ-ஐ ஓ
இங்கொரு மூ மூ , அங்கொரு மூ மூ
இங்க மூ, அங்க மூ
எங்கையும் மூ மூ
இங்கொரு குவாக் குவாக், அங்கொரு குவாக் குவாக்
இங்க குவாக், அங்க குவாக்
எங்கையும் குவாக், குவாக்
எங்கத் தாத்தா பண்ணையிலே, ஈ-ஐ, ஈ-ஐ ஓ

எங்கத் தாத்தா பண்ணையிலே, ஈ-ஐ, ஈ-ஐ ஓ
நாய் ஒன்று வளர்த்து வந்தார், ஈ-ஐ, ஈ-ஐ ஓ
இங்கொரு ஊவ் ஊவ் , அங்கொரு ஊவ் ஊவ்
இங்க ஊவ், அங்க ஊவ்
எங்கையும் ஊவ் ஊவ்
இங்கொரு மூ மூ , அங்கொரு மூ மூ
இங்க மூ, அங்க மூ
எங்கையும் மூ மூ
இங்கொரு குவாக் குவாக், அங்கொரு குவாக் குவாக்
இங்க குவாக், அங்க குவாக்
எங்கையும் குவாக், குவாக்
எங்கத் தாத்தா பண்ணையிலே, ஈ-ஐ, ஈ-ஐ ஓ

எங்கத் தாத்தா பண்ணையிலே, ஈ-ஐ, ஈ-ஐ ஓ
பன்றி ஒன்று வளர்த்து வந்தார், ஈ-ஐ, ஈ-ஐ ஓ
இங்கொரு ஒய்ங்க் ஒய்ங்க் , அங்கொரு ஒய்ங்க் ஒய்ங்க்
இங்க ஒய்ங்க், அங்க ஒய்ங்க்
எங்கையும் ஒய்ங்க் ஒய்ங்க்
இங்கொரு ஊவ் ஊவ் , அங்கொரு ஊவ் ஊவ்
இங்க ஊவ், அங்க ஊவ்
எங்கையும் ஊவ் ஊவ்
இங்கொரு மூ மூ , அங்கொரு மூ மூ
இங்க மூ, அங்க மூ
எங்கையும் மூ மூ
இங்கொரு குவாக் குவாக், அங்கொரு குவாக் குவாக்
இங்க குவாக், அங்க குவாக்
எங்கையும் குவாக், குவாக்
எங்கத் தாத்தா பண்ணையிலே, ஈ-ஐ, ஈ-ஐ ஓ

மூலம்: http://www.learnenglish.org.uk/kids/songs/docs/oldmac.pdf