கொடை வள்ளல்

Tuesday, April 17, 2007

வள்ளல்களின் ஒருகை செய்வது இன்னொரு கை அறியாது என்பர். என் எதிர்வீட்டில் இருக்கும், வயதில் அல்ல, கில்லாடித் தனத்தில் மூத்த அண்ணனின் குணமும் அஃதே. பதிவெல்லாம் போட மாட்டார். எனவே, அவர் புகழ் பரப்ப அடியேன் செய்யும் சிறு தொண்டு, அவருடைய லீலைகளை எடுத்துச் சொல்வது.

ஒரு முறை தன் துணைவி கோப்பெருந்தேவிவடிவின் (உண்மையானப் பெயர்), அமெரிக்காவில் உதவிக்கு யாரும் இல்லை என்ற பிக்கல் தாங்க முடியாமல், சமைத்துத் தருகிறேன் என்று சொல்லி முட்டைப் பொரியல் செய்து கொடுத்தார். அதை சாப்பிட்ட தேவி சிறிது நேரத்தில் மூர்ச்சை அடைந்தார். மருத்துவமனையில் உணவு விசமாகிவிட்டதற்காக (food poison) சிகிச்சை கொடுக்க வேண்டியதாயிற்று. அதற்கப்புறமும் அவருக்கு யாராவது வேலை சொல்வார்களா?

மனிதர்களின் செல்லப் பிராணிக்கும் அவருக்கும் அப்படி ஒரு பொருத்தம். அவைகளுக்கு அவர்மேல் கொள்ளைப் பிரியம். ஆனால் அவருக்கு பயமெல்லாம் ஒன்றுமில்லை, சற்று பாதுகாப்பு உணர்வு அதிகம். ஒருநாள் குடியிருப்பின் பொதுக் குப்பைத் தொட்டியில் குப்பைப் பையை போட்டுவிட்டுத் திரும்பினால், நாலுகால் நண்பன் ஒன்று துரைசாணியிடமிருந்து கட்டை அவிழ்த்துக்கொண்டு ஓடிவந்து அவரை நட்போடு பார்த்தது. ஆபத்தான நேரங்களில் மூளை துரிதமாக வேலை செய்யும் இல்லையா? கண நேரம்தான், சட்டென்று அருகில் இருந்த மகிழுந்தில் ஏறி கதவை சாத்திக்கொண்டார். வண்டி அங்கே குப்பைக் கொட்ட வந்த மற்றொரு பெண்ணுடையது. எந்திரத்தை (engine) நிறுத்தாமல் விட்டிருந்ததால் வண்டியை யாரோ களவாடிப் போவதாக நினைத்துக் கூச்சல் போட்டாள். செல்லப் பிராணியை அதன் அம்மா பிடித்துக்கொள்ள மெதுவாக கீழே இறங்கி எல்லோருக்கும் தன்னிலை விளக்கம் சொல்லித் தப்பி வந்தார்.

வள்ளல் பெருமானும் சிலரும் ஒரே வண்டியில் கருப்பு வெள்ளிக்கிழமை விற்பனைக்குச் (day after thanks giving sale) சென்று கொண்டிருந்தோம்.அவர் திடீரென்று "ஆ.. கை. கை" என்று அலறினார். வண்டி சாளரத்தின் வெளியே அவருடைய ஒருகை நீட்டிக் கொண்டிருந்தபோதே சாளரக் கண்ணாடிக்கதவு மேலெழும்பி மூடிக்கொண்டிருந்தது. கை கண்ணாடிக்கும் மேல்விளிம்புக்கும் இடையில் அகப்பட்டுக் கொண்டதுதான் அலறலுக்குக் காரணம். கதவை மூடிக்கொண்டிருந்தது வேறு யாருமல்ல. அது அவருடைய இன்னொரு கை.

ஆகா, என்னே வள்ளல் குணம்.

வ.வா.ச-1ம் ஆண்டு-நகைச்சுவை போட்டிக்காக.

0 மறுமொழிகள்:

Post a Comment