எங்களுக்கு ஏன் இந்த கதி: வாழ்வின் விமரிசனங்கள் - ஜே.கிருஷ்ணமூர்த்தி

Monday, April 05, 2010

எங்களுக்கு ஏன் இந்த கதி


ஏதோ ஒன்று வெடித்து அதிர்ந்தது. அதிகாலை நான்கரை மணி, இன்னும் மிகவும் இருளாக இருந்தது. பொழுதுப் புலர மேலும் அரைமணி நேரம் ஆகலாம். மரங்களில் பறவைகள் இன்னும் தூங்கிக்கிடந்தன, அந்த பயங்கர சத்தம் அவற்றை உசுப்பியதாகத் தெரியவில்லை, ஆனால் இருள் விலகியதும் அவை இரைச்சலோடு வழக்காடத் தொடங்கிவிடும். நிலத்தின்மீது மெல்லிய மூடுபனி படர்ந்திருந்தது, ஆனால் விண்மீன்கள் மிகத்தெளிவாகத் தெரிந்தன. முதல் வெடிஅதிர்வை தொடர்ந்து, மேலும் சில தூரே எழுந்தன; சிறிது அவகாசத்திற்குப் பிறகு பட்டாசுகள் சுற்றுமுற்றும் வெடிக்க ஆரம்பித்தன. பண்டிகை நாள் ஆரம்பித்தாயிற்று. அன்று காலை, பறவைகள் தங்கள் சச்சரவுகளை நீட்டிமுழக்காமல், அந்த மூர்க்கமான ஓசைகள் அச்சமூட்டவே சுருக்கமாக முடித்துக்கொண்டு விரைந்து விலகிப்போயின. ஆனால் மாலை நெருங்கினால் அவை மீண்டும் அதே மரங்களில் கூடி, தங்கள் அன்றாட செயல்களை ஒருவருக்கொருவர் உரத்து சொல்லிக்கொள்ளும். ஆதவன் கதிர்கள் இப்போது மரங்களின் உச்சியை தீண்ட, அவை சன்னமான வெளிச்சத்தில் ஒளிர்ந்தன; சலனமற்ற அழகோடு ஆகாயத்திற்கு வடிவம் கொடுத்தன. தோட்டத்தில் பூத்திருந்த ஒற்றை ரோஜா பனித்துளிகளில் ஊறி கனத்திருந்தது. பட்டாசு ஓசை சூழ்ந்தபோதும், ஊர் தன்போக்கில் மெதுவாக நிதானமாக விழிக்க, அந்த ஆண்டின் தலையாயப் பண்டிகை நாள் தொடங்கியது; அன்று விருந்தும் கொண்டாட்டமுமாக இருக்கும், செல்வந்தரும் வரியவரும் தமக்குள் பண்டங்களை பரிமாரிக்கொள்வர்.

மாலை இருள் சூழும் நேரம், மக்கள் ஆற்றங்கரையில் குழுமத் தொடங்கினர். அவர்கள் சிறு களிமண் கிண்ணத்தில் எண்ணெய் நிரப்பி, திரி ஏற்றி, அதை நீரில் மிதக்கச் செய்தார்கள். பிரார்த்தனைக்குப் பிறகு அந்த விளக்குகளை ஆற்றோடு மிதந்து போக விட்டார்கள். விரைவில் பல்லாயிரக்கணக்கான ஒளி வட்டங்கள் நீரில் மினுமினுத்தன. அந்தக் காட்சி மெய்மறக்கச் செய்தது, எதிர்பார்ப்புக் கூடிய முகங்கள் சிறு தீபங்களால் ஒளிர, நதி அதிசய ஒளியாக ஓடியது. அண்டமே தன் நட்சத்திரங்கள் புடை சூழ ஒளி ஓடும் நதியைப் பார்த்துக்கொண்டிருக்க, பூமி தன் அன்பு மக்களோடு அமைதி பூண்டிருந்தது.

அந்த சூரிய ஒளி வீசும் அறையில் நாங்கள் ஐந்து பேர் இருந்தோம்: கணவன், மனைவி, மேலும் இரண்டு ஆடவர். எல்லோருமே இளைஞர்கள். அந்த மனைவி சோகம் ததும்ப, விரக்தியோடு காணப்பட்டாள். கணவனும் உயிரற்று இறுகிய முகத்தோடு இருந்தான். மற்ற இரு ஆடவர்களும்
கூச்சத்தோடு அமைதியாக அமர்ந்து, மற்றவர்கள் பேசட்டும் என்று இருந்தனர். தக்கத்தருணத்தில் கூச்சம் விலகிய பின் நிச்சயமாக பேசுவார்களாயிருக்கும்.

"எங்களுக்கு ஏன் இந்த கதி?" என்று ஆரம்பித்தாள். குரலில் வெறுப்பும் கோபமும் கலந்திருந்தது, கண்ணீர் முட்டிக்கொண்டு வந்து கன்னங்களில் வழிந்தது. "எங்கள் மகனை பாசத்தோடு வளர்த்தோம்; அவன் வெகு சூட்டிகையான பையன், படு சுட்டி, எப்போதும் சிரித்த முகம். நாங்கள் அவனை வெகுவாக நேசித்தோம். அவனை மிகவும் செல்லமாக வளர்த்தோம். அவனுடைய வளமான வாழ்விற்காகத் திட்டமிட்டோம்..." தொடர்ந்துப் பேச முடியவில்லை, நிறுத்தி கொஞ்சம் அசுவாசப்படுத்திக்கொண்டாள். "உங்கள் முன்னால் மனமுடைந்து போவதற்கு மன்னித்துக்கொள்ளுங்கள்", என்று தொடர்ந்தாள், "என்னால் தாங்க முடியவில்லை. ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருந்தவன், சில நாட்களில் எப்போதும் திரும்பி வரமுடியாத இடத்திற்குப் போய்விட்டான். இது என்ன கொடுமை, எங்களுக்கு ஏன் இந்த கதி? நாங்கள் கண்ணியமாக வாழ்ந்து வந்தோம்; ஒருவரோடு ஒருவர் அன்போடு இருக்கிறோம், எங்கள் மகன் மீது அதைவிட பாசமாக இருந்தோம். இப்போது எங்களை விட்டுப்போய்விட்டான், எங்கள் வாழ்ககை சூனியமாகிவிட்டது - கணவர் அலுவலகத்திலும், நான் வீட்டிலுமாக முடங்கி கிடக்கிறோம். எல்லாம் வெறுத்துவிட்டது, அர்த்தமற்றதாகிவிட்டது." அவள் மேலும் மேலும் தன் மன கசப்பைக் கொட்டியிருப்பாள். அவள் கணவன் மென்மையாகத் தடுத்துவிட்டான். அடக்கமாட்டாமல் தேம்பிக்கொண்டிருந்தவள் இப்போது அமைதியானாள்.

இது எல்லோருக்கும் நடப்பதுதானே அம்மா, இல்லையா? இது ஏன் எங்களுக்கு நேர்ந்தது என்று கேட்கும்போது, அது மற்றவர்களுக்குத்தானே நேரவேண்டும் எனக்கில்லையே என்று நினைக்கவில்லைதானே. மற்றவர்களும் உன் துயரத்தை பகிர்ந்து கொள்கிறார்களே.

"ஆனால் நாங்கள் என்ன தவறு செய்தோம் இந்த தண்டனை கிடைக்க? நாங்கள் என்ன பாவம் செய்தோம்? என் மகன் ஏன் சாகவேண்டும்? அவனுக்காக என் உயிரையும் தருவேனே."

எந்த விளக்கமோ, எந்த சூதுமிக்க வாதங்களோ, அறிவுபூர்வமான பக்தியோ இந்த பிய்த்தெடுக்கும் வெற்றிடத்தை நிரப்ப முடியுமா?

"நான் நிம்மதி தேடுவது இயல்புதானே, ஆனால் வெறும் வார்த்தைகள் மூலமோ நாளை பற்றிய நம்பிக்கைகள் மூலமோ அல்ல. அதனாலேயே எனக்கு நிம்மதி கிடைக்கமாட்டேன் என்கிறது. என் கணவர் மறுபிறப்பை பற்றி சொல்லி சமாதானப்படுத்த முயன்றார், முடியவில்லை. அவருக்கும்
துக்கம்தானே. என்னதான் மறுபிறவி மீது நம்பிக்கை இருந்தாலும், துக்கம் தீரவில்லையே. நாங்கள் இருவருமே துயரத்தில் சிக்கித்தவிக்கிறோம். ஏதோ ஒரு பயங்கர கனவு போல இருக்கிறது." மறுபடியும் அவள் கணவன் இடைமறித்து அசுவாசப்படுத்துகிறான்.

"நான் இனி அமைதியாக யோசித்துப் பேசுகிறேன், மன்னியுங்கள்."

"ஐயா, நாங்கள் வாழ்வு என்றால் என்ன, சாவென்றால் என்ன, எங்கள் துக்கம்தான் என்ன என்று புரியாமல் தவிக்கிறோம்," என்றான் கணவன். "இந்த சம்பவத்துக்குப் பின், நான் திடீரென முதிர்ச்சி அடைந்தது போல உணர்கிறேன், இப்போது என்னிடம் தீவிரமான கேள்விகள் உள்ளன. முன்பு வாழ்க்கை என்பது விளையாட்டைப் போல, எப்போதும் சிரிப்பாக கழிந்தது; முன்பு மகிழ்ச்சியைக் கொடுத்த விடயங்கள் இப்போது மூடத்தனமாகவும், சில்லரைத்தனமாகவும் தெரிகிறது. பெரும் சூறாவழி வீசி மரங்கள் எல்லாம் வேரோடு பிடுங்கி எறியப்பட்டு உணவில் மண் விழுந்தது போல்
இருக்கிறது. எல்லாமே மாறிப் போய்விட்டது. திடீரென்று நான் மிகவும் சோகமாக உணர்கிறேன், இதெல்லாம் ஏன் என்று புரிந்து கொள்ளும் முயற்சியில் எங்கள் மகன் இறந்து போனதிலிருந்து, நிரைய மத நூல்களையும் தத்துவங்களையும் படிக்க ஆரம்பித்தேன், என் வாழ்க்கையில் இதற்கு முன் இவற்றை இவ்வளவு படித்ததில்லை; வலியில் துவழும்போது வெற்று வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. பக்தி எப்படி மெல்லக்கொல்லும் விசமாக மாறுகிறது என்று புரிகிறது. பக்தி புத்தியை மழுங்கச் செய்கிறது, கூடவே வலியையும் மட்டுப்படுத்துகிறது. அந்த நம்பிக்கையும் இல்லை என்றால் மனம் ஆறாத புண்ணாக வேதனை தருகிறதே. நேற்று மாலை உங்கள் சொற்பொழிவைக் கேட்க வந்தோம். நீங்கள் எங்களுக்கு ஆறுதல் கூறவில்லை, அதுவும் சரிதான்; ஆனாலும் எங்கள் காயம் ஆற வேண்டும் என்று விரும்புகிறோம். எங்களுக்கு உதவுவீர்களா?"

"எங்களுக்கும் வேதனையாகத்தான் இருக்கிறது," ஆடவரில் ஒருவர் சொன்னார், "வார்த்தைகளாலும், ஆறுதல் மொழிகளாலும் அதைத் தீர்க்க இயலாது. நாங்கள் இங்கே வந்தது, மேலும் சில நம்பிக்கைகளை சேர்த்துக் கொள்ள அல்ல, நாங்கள் துக்கப்பட என்ன காரணம் என்று தெரிந்து
கொள்ளவே வந்தோம்."

காரணம் என்ன என்று தெரிந்துவிட்டால் கட்டம் தீரும் என்று நினைக்கிறீர்களா?

"உள்ளூர இருக்கும் வலியின் காரணம் தெரிந்ததும், அதைத் தடுக்க முடியும். ஒன்று உடலுக்கு ஆகாதென்று தெரிந்தால் அதை உணவில் சேர்ப்பதில்லையே."

உள்ளத்தில் ஏற்பட்ட ரணத்தை துடைத்தெரிவது அவ்வளவு எளிது என்று நினைக்கிறீர்களா? கொஞ்சம் பொருமையாகவும் கவனமாகவும் பேசலாமே. இப்போது பிரச்சனை என்ன?

"என் பிரச்சனை," மனைவி ஆரம்பித்தாள் "வேறொன்றுமில்லை. என்னைவிட்டு என் மகன் ஏன் பிரிந்தான்? என்னக் காரணம்?"

இந்த தருணத்தில் எவ்வளவுதான் ஆறுதலாக இருப்பினும் எந்த விளக்கமும் நிம்மதி தருமா? நீங்கள்தானே இதற்கு விடை தேடிக் கொள்ள வேண்டும்?

"நான் எப்படி தேடுவது?" என்று கேட்டாள்.

"எனக்கும் அதுஒரு பிரச்சனைதான்," ஆடவரில் மற்றொருவர் சொன்னார். "நானே குழம்பிப்போய் இருக்கும்போது எனக்கு எது சரி என்று எப்படித்தெரியும்?" "நாங்கள் செய்த பாவம்தான், எங்கள் அன்பு மகனை இழக்கக் காரணமா?" கணவன் கேட்டான்.

"எங்கள் மகன் எங்களை விட்டுப் பிரியக் காரணம் என்ன என்று தெரிந்துகொண்டால் ஒருவேளை என் மகன் இறந்த துக்கத்தை என்னால் தாங்கிக்கொள்ள முடியலாம்." மனைவி சேர்ந்துகொண்டாள்.

நிம்மதி என்பது வேறு; உண்மை வேறு; இரண்டும் ஒன்றிலிருந்துஒன்று விலகிப்போகின்றன. நீங்கள் நிம்மதியைத் தேடினால், ஒரு விளக்கமோ, மருந்தோ அல்லது நம்பிக்கையோ அதைத் தரக்கூடும்; ஆனால் அது தற்காலிகமானதே, இன்றோ நாளையோ மீண்டும் முதலில் இருந்து நீங்கள்
தேடவேண்டும். நிம்மதி என்று ஒன்று உண்டா? நீங்கள் முதலில் உணர்ந்து கொள்ளவேண்டியது இந்த நிதரிசனமாக இருக்கலாம்: நிம்மதியை, பாதுகாப்பை நாடும் மனது கட்டாயம் துக்கத்தில்தான் உளல வேண்டும். மனதுக்குப் பிடித்த ஒரு விளக்கம், ஆறுதல் தரும் நம்பிக்கை, உங்களை நிம்மதியாக உறக்கத்தில் ஆழ்த்தலாம்; உங்களுக்கு அதுதான் தேவையா? அது உங்கள் துயரத்தைப் போக்குமா? துக்கத்தை உறங்கச்செய்வதால் களைய முடியுமா?

"நான் என்னுடைய பழைய மகிழ்ச்சியான நாட்களுக்கு செல்லவேண்டும் என்று விரும்புகிறேன் போலும் - மீண்டும் அந்த மகிழ்வை அந்த இன்பத்தை அனுபவிக்க. அது முடியாததாகையால், நான் துக்கத்தில் நைந்து போகிறேன் அதனால் நிம்மதியை நாடுகிறேன்."

உங்கள் துயரத்தின் காரணம் என்ன என்று நீங்கள் நினைக்கும் விசயத்தை எதிர்கொள்ள மனமில்லாமல், அதிலிருந்து தப்பிச்செல்லப் பார்க்கிறேன் என்கிறீர்களா?

"நான் ஏன் நிம்மதி பெறக்கூடாது?"

உங்களால் நிரந்தரமான தீர்வு காண இயலுமா? அப்படி ஒன்று இல்லாமல் இருக்ககூடும். நாம் நிம்மதியை நாடும் போது, மனதிற்கு எந்தத் தொல்லையும் இல்லாத நிலையை வேண்டுகிறோம். அப்படி ஒரு நிலை உள்ளதா? பல வகைகளில் அப்படி ஒரு சூழலை உருவாக்கிக் கொண்டாலும், விரைவிலேயே வாழ்க்கை அதில் குறுக்கிடுகிறதே. அந்த குறுக்கீடுதான் இந்த துக்கம் என்ற அதிர்ச்சி.

"நீங்கள் சுட்டிக்காட்டுவது போலத்தான் என் நிலைமை இருக்கிறது. ஆனால் நான் என்ன செய்யட்டும்?", வற்புறுத்திக் கேட்டாள்.

இதில் செய்யவேண்டியது என்று எதுவும் இல்லை. ஆறுதலும் பாதுகாப்பும் நாடும் மனம் துன்பத்திற்கு உள்ளாகும் என்பதை உணரவேண்டும். இந்த தெளிவு பெறுவதுதான் செய்யவேண்டிய செயல். மனிதன் தான் சிறைபட்டுள்ளதை உணர்ந்துவிட்டால், என்ன செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருப்பதில்லை, செயல்களோ, செய்யாமையோ அப்போது தாமே தொடர்கின்றன. உணர்ந்து கொள்வதிலேயே செயலும் அடங்குகிறது.

"ஐயா, ஆனால் எங்கள் காயங்கள் உண்மைதானே அதை குணப்படுத்த முடியாதா? அதற்கு சிகிச்சை முறை இல்லையா, விடிவே இல்லை என்று வெறுத்துப்போய்க் கிடப்பதுதான் முடிவா?"

மனம் தான் விரும்பும் எந்த தோற்றத்தையும் எடுத்துக்கொள்கிறது. அதன் போக்கை முழுமையாக அறிந்து கொள்வது என்பது வேறு விடயம். நீங்கள் வேண்டுவது என்ன?

"புத்தி உள்ள யாரும் வெறுப்பை வளர்த்துக்கொள்ள விரும்பமாட்டார்கள். கதியே இல்லை என்கிற தத்துவமார்க்கம் இருக்கிறதுதான், அந்த வழியில் எனக்கு நாட்டமில்லை. ஆனால் நாங்கள் செய்த பாவம் என்ன என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன்."

நீங்கள் இருவரும்கூட இதைப்பற்றி பேச விரும்புகிறீர்களா?

"நிச்சயமாக ஐயா. எங்களுக்கும் முன் வினைகளை ஒட்டிய விசாரணைகள் உள்ளன. நீங்கள் எங்கள் கேள்விகளையும் ஒன்றாக எடுத்துக்கொண்டால் உதவியாக இருக்கும்."

கர்மா என்ற வார்த்தையின் உள்ளார்ந்த அர்த்தம் என்ன?

அதன் பொருள் ’செய்’ என்பதாகும், கணவன் பதிலிருத்தான், மற்றவர்களும் ஆமோதித்தனர். "கர்மா என்பது, பொதுவாக - நான் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக நினைக்கிறேன், காரணியின் செயல்பாடு. நாளை என்பது நேற்றைய செய்கைகளால் நிர்ணயிக்கப்படுகிறது; விதைத்ததை அறுவடை செய்கிறோம். நான் செய்த சில காரியங்களுக்கு விலை கொடுத்தாகவேண்டும் அல்லது பலன் பெறவேண்டும். என் மகன் சிறு அகவையில் இறந்தான் என்றால், அதற்கு முன் ஜன்மத்தில் ஏதேனும் காரணங்கள் இருக்கும். இந்த பொதுவான வரையரைக்கு மேற்பட்டு பலவித புரிதல்கள் உள்ளன."

எல்லா பிறப்பும் அவற்றின் இருப்பும் காரண காரியத் தொடர்களுக்கு உட்பட்டவை இல்லையா?

"அதுவே பட்டவர்த்தமாக தோன்றுகிறது," இருவரில் ஒருவர் சொன்னார். "நான் இந்த உலகில் இருப்பது என் தாய், தந்தை மற்றும் முன்வினைகளால். எண்ணற்ற முன் ஜன்ம பலன்களின் மொத்தம்தான் நான். எண்ணமும் செயலும் பல காரணிகளால் முடிவு செய்யப்படுகின்றன."

காரியம் காரணத்திலிருந்து தனித்திருக்கிறதா? அவற்றுக்கிடையே இடைவெளி உள்ளதா, சிறிதோ பெரிதோ, கால இடைவெளி உண்டா? காரணமோ காரியமோ மாற்றமற்றதா? காரண காரியம் எப்போதும் ஒரே மாதிரி செயல்பட்டால், நாளை என்பது முன்பே நிறுவப்பட்டதாகும்; அது அப்படியானால், மனிதருக்கு விடுதலை என்பதே கிடையாது, எப்போதும் வரையறுக்கப்பட்டக் கோட்டில் அகப்பட்டு கிடக்க வேண்டியதுதான். ஆனால் அது அப்படி இல்லையே, அன்றாட நிகழ்வுகளில் பார்க்கிறோமே, அங்கே சுற்றுசூழல் தொடர்ந்து செயல்பாட்டில் மாற்றம் நிகழ்த்தியபடி உள்ளனவே. உடனடியாகவோ அல்லது மெதுவாகவோ எப்போதும் மாற்றம் நிகழ்ந்தபடி உள்ளது.

"ஆம் ஐயா, அப்படித்தான் இருக்கிறது; இன்ன செயலுக்கு இன்ன பலன் என்ற புத்திமதியோடு வளர்க்கப்பட்ட எனக்கு, நமக்கு எல்லாமே விதிப்படி நடக்க வேண்டியதில்லை என்று அறியும்போது பெரிய சுமை குறைந்த மாதிரி இருக்கிறது."

மனம் புத்திமதியால் பீடிக்கப்பட்டு கிடக்க வேண்டியதில்லை. ஒரு காரணியின் காரியம் அந்த காரணியின் போக்கில் போவதில்லை, அது முற்றிலுமாக அழிக்கப்படலாம். அழிவில்லாத நரகம் என்று ஒன்று கிடையாது. காரண காரியங்கள் மாற்றமற்றதோ, எப்போதும் ஒரேமாதிரி செயல்பாடோ கொண்டதல்ல; காரியமாக இருக்கும் ஒன்று மற்றொரு காரியத்திற்கு காரணியாகிறது. இன்று என்பது நேற்றிலிருந்து மாறுபட்டது, நாளை இன்றிலிருந்து. அது உண்மைதானே? எனவே காரணியும் காரியமும் வெவ்வேறன்று, அவை ஒருமித்த செயலாகும். தவறான வழி சரியான முடிவிற்கு உதவாது, ஏனெனில் வழிதான் முடிவுமாகும்; ஒன்று மற்றொன்றை உள்ளடக்கியுள்ளது. விதை முழு மரத்தையும் கொண்டிருக்கிறது. ஒருவர் இதை சரியாக உணர்ந்துகொண்டால், எண்ணமே வாழ்வுமாகும், அவர்களிடம் முதலில் எண்ணம் அதை பின்தொடர்ந்து செயல்கள் எனறு கிடையாது, அப்படி இருந்தால் இரண்டையும் எப்படி இணைப்பது என்ற தவிர்க்கமுடியாத கேள்வி எழும். காரணியும் காரியமும் பிரிக்கமுடியாதவை என்று முழுமையாக உணர்ந்தால் செயல் செய்கிற, சதாகாலமும் எந்த முறையிலோ எதோ ஒன்றாக உருவெடுக்கும், அந்த "தான்" மறைகிறது.

"நீங்கள் முன்வினைக்கு புது அர்த்தம் கற்பிக்கிறீர்களா?", என்றான் கணவன்.

ஒன்று அது உண்மையாக இருக்கவேண்டும் அல்லது பொய்யாக இருக்கவேண்டும். எது உண்மையோ அதற்கு வியாக்கியானங்கள் தேவை இல்லை, வியாக்கியானமே உண்மையாகிவிடாது. விளக்கம் கொடுப்பவரே கேடுவிளைவிக்கிறார், ஏனெனில் அவருடைய விளக்கம் அவருடைய தனிக் கருத்து
மட்டுமே, தனிக்கருத்து உண்மையாகாது.

"சாத்திரங்கள் ஒவ்வொருவரும் கொஞ்சம் தலைவிதிகளை சேர்த்துக்கொண்டு பிறக்கிறோம் அவற்றை அனுபவித்து ஆகவேண்டும் என்கின்றன.", கணவன் தொடங்கினான். "ஒருவர் இந்த விதிப் பலன்களை, ஒரு பிறவியிலோ, பல பிறவிகளிலோ, எப்படி அனுபவிப்பது என்பது மட்டும்தான்
அவரவர் கையில் உள்ளது என்று சொல்லப்படுகிறது. இது சரியா?"

சாத்திரங்கள் சொல்வது இருக்கட்டும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

"என்னால் இதை சீர்தூக்கிப் பார்க்க முடியும் என்று தோன்றவில்லை."

ஒன்றாக சேர்ந்தே ஆராய்வோம். ஒருவர் இந்தப் பிறவியில் சில வரைமுறைகளுக்கு (தலைவிதி நம்பிக்கை) இடையில், பிறக்கிறார்; ஒவ்வொரு குழந்தையும் சில அமைப்புக்குள் சிந்திக்கும்படி சூழ்நிலை தூண்டுகிறது, அவனுடைய எதிர்காலத்தின் போக்கு அந்த அமைப்புகளால்
தீர்மானிக்கப்படுகிறது. அவன் ஒன்று அமைப்பின் கட்டுதிட்டங்களுக்குள், சில ஏற்றத்தாழ்வுவோடு அடங்கி நடக்கிறான் அல்லது எல்லாவற்றையும் உடைத்து வெளியேறுகிறான். பிந்தையதில், அப்படித் தடைகளை உடைக்க முயற்சிக்கும் மனமும் வரைமுறைகளால் (தலைவிதி நம்பிக்கை)
பீடிக்கப்பட்டதுதான்; எனவே ஒரு அமைப்பை உடைத்த மனம் மற்றொன்றை உருவாக்கி அதில் சிக்கிக்கொள்கிறது.

"அப்படியானால், எப்படி மனம் விடுதலையாகும்? எனக்குத் தெளிவாக தெரிகிறது, மனதின் ஒருபகுதி அந்த அமைப்பை விட்டு வெளியேற விரும்புகிறது, மற்றொரு பகுதி இன்னும் சிக்கிக்கிடக்கிறது. ஆனால் இரண்டும் இன்னும் அதே கட்டமைப்புக்குள்தான் இருக்கின்றன. முந்தையது தான் பிந்தையதிலிருந்து வேறுபட்டதாக நினைத்தாலும், இரண்டின் குணமும் ஒன்றுதான் இன்னமும் முழுதாக விடுதலை ஆகவில்லை. அப்படியானால் விடுதலை என்பது என்ன?

"பெரும்பாலோர், " ஒரு இளைஞன் தொடர்கிறான், "ஆத்மாவானது பக்தி, தொண்டு செய்தல் மற்றும் உயர்சக்தியின் மேல் இடையறாத சிந்தனையால் இந்த வரைமுறைகளை நீக்கமுடியும் என்று நிறுவுகிறார்கள்."

ஆனால் பக்தி கொண்ட மனம், தொண்டு செய்யும் மனம் ஆகியவையும் வரைமுறைகளுக்கு உட்பட்டதுதானே; மேலும் அவன் மனதை ஒருநிலைப்படுத்தும் அந்த உயர்சக்தியும் வரைமுறை கொடுத்த உருவம்தானே, இல்லையா?

"ஆமாம்." கணவன் ஆர்வத்தோடு சொன்னான். "எங்கள் கடவுள், எங்கள் மதக் கருத்துக்கள், எங்கள் குறிக்கோள்கள் என எல்லாமே வரைமுறையின் அமைப்புக்குள் இருப்பவைதான். நீங்கள் சுட்டிக்காட்டிய பிறகு, பட்டவர்த்தமாக அப்படித்தான் என்று தெரிகிறது. அப்படியானால் மனிதனுக்கு விடிவே இல்லையே."

ஒரு முடிபை எடுத்துக்கொண்டு, அந்த முடிபிலிருந்து எண்ணத்தலைப்படுவது புரிதலையும் தேடலையும் தடுத்துவிடுகிறது.

முழுமனமும் தான் ஒரு அமைப்புக்குள் கட்டுண்டு கிடப்பதை உணர்ந்துகொண்டால் என்ன நடக்கிறது?

"எனக்கு நீங்கள் கேட்பது அவ்வளவாகப் புரியவில்லை, ஐயா."

நீங்கள் உங்கள் முழுமனதும், வரைமுறைகளுக்கு உட்பட்டிருக்கிறது என்று உணருகிறீர்களா, உள்மனம் என்று சொல்லப்படும் ஆத்மாவும் சேர்ந்து?

நீங்கள் உணர்கிறீர்களா, பட்டவர்த்தமாகத் தெரிகிறதா அல்லது வெறுமே சொல்வதை ஏற்றுக்கொள்கிறீர்களா? உள்ளபடி என்ன நடக்கிறது?

"என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை. நான் இதைப்பற்றி முடிவுவரை சிந்தித்தது இல்லை."

மனம் தான் வரைமுறைகளுக்குள் சிறைபட்டிருப்பதை முழுமையாக உணர்ந்தால் - வெரும் நிம்மதியை மட்டும் தேடிக்கொண்டிருக்கும் வரையிலும், சோம்பலில் எளிய பாதையை எடுக்கும்போதும் அதனால் முடியாது - அதனுடைய எல்லா ஓட்டங்களும் முடிவுக்கு வருகிறது; எந்த ஆசையும் இன்றி, எந்த கட்டாயமும் இன்றி, எந்தக் குறிக்கோளும் இன்றி அது நிலைகுத்தி நிற்கிறது. அப்பொழுதுதான் விடிவு பிறக்கிறது.

"ஆனால் நாம் இந்த உலகில் வாழ்ந்தாக வேண்டுமே, பொருளீட்டுவது முதல் மனதின் நுட்பமான ஆய்வுகள் வரை நாம் என்ன செய்தாலும் அதில் சிலக் குறிக்கோள்கள் இருக்கின்றன. குறிக்கோள் இல்லாமல் ஒரு செயல் இருக்கமுடியுமா?"

நீங்கள் இருக்கிறது என்று கருதவில்லையா? அன்பு செலுத்துவதில் குறிக்கோள் எதுவும் இல்லை, மற்ற எல்லாவற்றிலும் உண்டு.

மூலம்

COMMENTARIES ON LIVING SERIES III CHAPTER 13 "WHY SHOULD IT HAPPEN TO US?"

8 மறுமொழிகள்:

கபீஷ் said...

நல்லாருக்கு.
நீங்கள் மொழிபெயர்த்ததா?

குலவுசனப்பிரியன் said...

நன்றி கபீஷ். என்னுடைய மொழிபெயர்ப்புதான்.

Paleo God said...

முழுவதும் பொறுமையாய் படித்து பிறகு வருகிறேன் நண்பரே.

குலவுசனப்பிரியன் said...

வருகைக்கு நன்றி ஷங்கர். ஜே.கிருஷ்ணமூர்த்தி மண்டையைக் குடைய வைப்பார். எனக்கு அவருடைய பேச்சுக்களில் ஒருவித நிரைவில்லாத தன்மை தொனிக்கும். வாழ்வின் விமரிசனங்கள்தான் கொஞ்சமாவது உயிரோட்டத்தோடு இருக்கும். இந்த இடுகைக்கு மாற்று மருந்தாக ஓஷோவின் பேச்சு ஒன்றை எழுதலாம் என்று இருக்கிறேன். எனவே அவசரம் இல்லை மீண்டும் வாருங்கள்.

pichaikaaran said...

நண்பரே ..அருமையான மொழி பெயர்ப்பு...

எந்த முடிவையும் நம் மீது திணிக்காமல், உண்மை நிலையை நாமே பார்க்க உதவும் ஜே கே யையும், ஆன்மீக வியாபாரியான ஓஷோவையும் தாங்கள் ஒப்பிட்டு இருப்பது மனதை புண் படுத்தியது... இருப்பினும், தங்கள் மொழி பெயர்ப்பும், பதிவும் புண் பட்ட மனதிற்கு மருந்து போட்டது போல்இருந்தது

குலவுசனப்பிரியன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பார்வையாளன்.

ஜே.கேயை இருபது ஆண்டுகளுக்கு முன் படிக்க ஆரம்பித்தேன். ஆனாலும் வாழ்வின் சில அந்தரங்கமான கேள்விகளுக்கு எனக்கு ஓஷோவிடம்தான் விடை கிடைத்தது. அவரின் வாழ்வுமுறையை வைத்து நானும் அவரைப் பற்றி தவறாகத்தான் எண்ணி இருந்தேன்.

pichaikaaran said...

ஓஷோவின் வாழ்வு முறையை வைத்து அவரை கோரை காணவில்லை சார்..
அவர் அணுகுமுறையே தவறு, நம் கேள்விகளுக்கு நாம் தான் பதில் கண்டு பிடிக்க வேண்டும்...
ஒரு "குரு" சொல்வது எப்படி சரியாக இருக்க முடியும்... நமக்கு ஏதுவான பதிலை சொல்பவரை நாம் நேசிக்க ஆரம்பிக்கிறோம்...
ஒரு குரு சரியான பதில் சொல்கிறார் என புரியும் திறன் நமக்கு இருந்தால், அந்த குருவே தேவை இல்லையே ??

அந்த திறன் நமக்கு இல்லாத பட்சத்தில், குருவை நம்பாமல் இருப்பதுதானே நல்லது..அப்படி நம்பித்தானே , நித்ய முதல் பிரேமனத வரை பெருகி கொண்டே இருக்கிறார்கள்..

ஜே கே யை பொறுத்தவரை, அவர தன்னை குரு என்று சொல்லி கொண்டது கிடையாது.... அறிவுரைகள் , தியான முறைகள் போதித்தும் இல்லை...

குலவுசனப்பிரியன் said...

நம்முடைய எல்லாத் தீர்வுகளும் நம்மிடமிருந்துதான் வருகின்றன. ஜே கே மூலம் சிலத் தெளிவுகள் ஏற்பட்டால், ஓஷோ மூலமும் சிலத் தெளிவுகள் ஏற்படுகின்றன.

ஓஷோவைப் புரிந்துகொண்டால் (உ.ம் காமத்திலிருந்து கடவுளுக்கு) நித்யா, பிரேமானந்தா, சங்கராச்சாரி போன்றவர்கள் பித்தலாட்டக்காரர்கள் என்று தெளிவாகத் தெரியும். சில பதிவர்கள் அதென்ன "டைனமிக் மெடிடேஷன்" பெயரே சரி இல்லையே என்று எழுதக் கண்டிருக்கிறேன். அவர் புத்தகங்களை படிக்காமல் அப்படி தவறான முன்தீர்மானத்துடன் விலக்குவது நமக்குத்தான் இழப்பு.

Post a Comment