ராகு கிரகத்துக்கு ராக்கெட் விட்ட அமெரிக்கா

Wednesday, February 20, 2008

சென்ற ஆண்டு எங்கள் ஊரில் புதுக்கோவில் திறப்புவிழா. சாப்பாட்டிற்கு நல்லக் கூட்டம், வரிசை மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. நின்றிருந்தவர்களிடம் ஹரே-ராமா ஹரே-கிருஷ்ணா இயக்கத்தைச் சேர்ந்த இளைஞன் பகவத்கீதை விற்றுக் கொண்டிருந்தான். அவர்களின் நகைச்சுவை உணர்வைப் பற்றி எனக்கு ஓரளவு தெரியும். எனவே பொழுது போக பேச்சுக் கொடுத்தேன்.

"உங்கள் குரு பிரபுலபாதா அமெரிக்கர்கள் நிலவுக்கு போகவில்லை என்று சொன்னாராமே உண்மைதானா?”, என்றேன்.
இப்போதுதான் செவ்வாய் கிரகத்திற்கே ரோபாட் அனுப்பி இருக்கிறார்களே, எனவே ஏதாவது மாற்றி யோசித்து புது விளக்கம் கொடுப்பார்கள் என்று நினைத்தேன்.

அவன் "உண்மைதான். விண்வெளி வீரர்கள் சென்றது நிலவுக்கு அல்ல ராகுவிற்கு!" என்றான்.

இந்த விடயம் எனக்கு புதிது. இதைப் பற்றி எழுதலாம் என்றால், அவன் சொன்ன விடயங்களுக்கு மேல் விபரம் தேடினால் அப்போது கிடைக்கவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்தான் கிடைத்தது. உங்கள் பார்வைக்கு.

http://www.salagram.net/MoonLandingHoax.htm இந்த சுட்டியில் உள்ள சில பகுதிகளை முடிந்த அளவில் மொழி பெயர்த்து இருக்கிறேன்.

உசாத்துணைகள்: ஷ்ரீமத் பாகவதம்.
சத்வரூப தாஸ கோஸ்வாமியின் கட்டுரை


தேவரருள் சிரீல A.C.பக்திவேதாந்த சுவாமி நிலவில் காலடி எடுத்து வைத்ததை பற்றி என்ன சொல்லி இருக்கிறார்:

சில முத்துக்கள்:

20 வருசத்துக்கு முன்னாடியே சொன்னன், நான்சென்ஸ் - நிலாவுக்கு போறதாவது. இப்பத்தான் "ஆ. இது ஏமாத்து வேலைங்கறான்". அதான் வித்தியாசம். இருவது வருசத்துக்கு முன்னாடியே சொன்னன், "சின்னப் பிள்ளத் தனமால்ல இருக்கு, இதெல்லாம் வீண் செலவு. இந்த ராஸ்கல்ஸ் நிலாவுக்கு போகவே முடியாதுன்னுட்டு.” இப்பத்தான் நம்மாண்ட வற்றான். அதான் வித்தியாசம். நான் வெறும் பொது புத்தியை வெச்சே சொன்னன்.
நக்சத்ரானாம் அஹம் ஸாஸி.
சந்திர கிரகத்திற்கு போகணும்னா யஜ்னங்களும் கர்ம-காண்டங்களும் செய்யணும்னுட்டு பாகவதத்தில வாஸிச்சிருக்கம். சாஸ்த்ரத்திலயே எல்லாம் இருக்கு. இந்த ராஸ்கல்ஸ் எப்படி மெஷின வெச்சிண்டு போக முடியும். கொஞ்சமாவது காமன் சென்ஸ் வேணாமா? அவா சாஸ்த்திரம் சொல்றத கேக்கறதில்ல. ராஸ்கல்ஸ், வாய்க்கு வந்த படி எவனோ சொல்றத நம்பறாள்.

சாஸ்த்ர-சக்ஸுஸ்(சாத்திரங்களின் படி காண்கிறவன்). அதாவது நீ சாஸ்த்ரங்களின் கண்கொண்டு பார்க்கணும். ய- சாஸ்த்த்ரா-விதிம் உத்ஸ்ருஜ்ய வர்த்ததே காம ,,, ந சித்திம் ச (சாஸ்த்ரங்களை மறுத்து தன் வழியே போகிறவன் பக்குவம் அடைய மாட்டான்).


ஆனா நாம சாஸ்த்ரத்த நம்பறம். அதான் என்னால 20 வருசத்துக்கு முன்னாடியே சொல்ல முடிஞ்சுத்து. அதான் வித்யாசம். நாம சாஸ்த்ரம் சொல்றதயும், அல்ட்டிமேட் கிருஷ்ணன் சொன்னதயும் கேக்கறோம். அவ்ளோதான். நமக்கு எந்த பிரச்னையும் இல்ல. அவா சாஸ்த்ரத்த நம்ப மாட்டேங்கிறா, கிருஷ்ணனையும் நம்ப மாட்டேங்கிறா. அதான் ஏமாந்து போறா.
..
(ஜூலை 1 1977.)

ஸ்வரூப தாமோதரா: அவா நம்மோட ஆர்க்யூ பண்ண முடியல.
பிரபுபாதா: (சிரிப்பு) எப்ப சண்ட வரும்? நான்சென்ஸ், எப்பிடி ஆர்க்யூ பண்ண முடியும்? நீ ஒரு ராஸ்கல். அதெல்லாம் செய்யப் படாது.

அசிந்த்யா கலு யே பாவா ந தாம்ஸ் தர்கேண யோஜயேது.

“உனக்கு புறியலன்னா வாய வச்சுண்டு சும்மா இரு ராஸ்கல்". முட்டாள் மாறி விவாதம் பண்ணா ராஸ்கல்னுதான் பேரெடுப்ப. பேசாம பெரியவா பேச்சக் கேளு. உன் மூளைக்கு இதெல்லாம் ஏறாது ராஸ்கல். ஏன் வீணா காலத்த போக்கற? நான் என்ன சொறேன்னா, அவாளெல்லாம் ராஸ்கல்ஸ், தப்பான பாய்ண்ட்டச் சொல்லி சும்மா நேரத்த விரயம் பண்றா. ஏமாத்துப் பேர்வழிகள். கம்பெனி வச்சிருக்கா தெரியுமோல்யோ? எல்லாரும் போட்டோ ஸ்டூடியோ வெச்சிருக்கா. அங்க நிலாவுக்குப் போன மாறி பித்தலாட்டமா படம் பண்ணி இருக்கா. உனக்கு என்ன வேணும்னாலும் செய்வா. நீ ஐடியா சொன்னா போதும். சந்திர கிரகத்துப் போலாம், செவ்வாய் கிரகத்துக்கும் போலாம். இந்த ராஸ்கல்ஸ் எங்கயும் போலை. ஒருத்தனுக்கும் புத்தி கிடையாது. எப்பிடி போவா? சுள்ளானுங்க, அரை வேக்காடு.
...
(ஜூன் 1977)

ஹரி-சௌரி: அவா மொதல்ல சந்திரனுக்கு ஸ்புட்னிக் அனுப்புனப்போ ஒழுங்கா இறங்கக்கூட முடியலை. போய் மோதுனாளாம். அனுப்புன ஆகாய ஓடம் சந்திரன்ல முட்டி நொறுங்கி விழுந்துத்தாம்.
பிரபுபாதா: நொறுங்கித்தா?
ஹரி-சௌரி: நொறுங்கி விழுந்துத்து. ஆகாய ஓடம் போய் சந்திரன் மேல மோதுமாம்.
பிரபுபாதா: அவா எப்ப போனா? சும்மா பேத்தல். அப்பிடியே போயிருந்தான்னாலும் என்ன ஆயுத்து? அங்கே ஜீவனம் பண்ண முடியாதுன்னு ஒரு அறிக்கை விட்டா அவ்வளவுதான்.

(ஜூலை 1976)

பிரபுபாதா: வெய்யக் காலமாச்சே? சுக்ரன்ல ரொம்ப குளிரா இருக்குமே? இப்ப ஏன் போறா? (சிரிப்பு) சந்திரனுக்கே போலை, சுக்ரன் சந்திரனுக்கு மேல எங்கியோ இருக்கான். எப்பிடி போவா?
பலி-மர்தன: அவா சுக்ரனுக்கா போரா இல்லியே?
பிரபுபாதா:செவ்வாய்க்கா போறா?
பலி-மர்தன: சும்மா பூமியைச் சுத்தி வற்றா, அப்டித்தானே?
அம்பாரிசா: ஆமாம், ஆகாசத்தில ஒண்ணு சேரறா.
சிஷ்ய கோடி 3: நல்லா புழுகறா இல்லியா?
பிரபுபாதா: ஆமாம்.
(ஜூன் 1975)

சிஷ்ய கோடி 2: அவா சந்திரனில் நிஜமாவே கால்பதிச்சாளா, சிரில பிரபுபாதா?
பிரபுபாதா: இல்லை, அவாளால் அங்கேல்லாம் போவே முடியாது அப்புறம் எப்டி கால் வைப்பா? அங்கெல்லாம் போவே முடியாது. அது ரொம்ப தூரம். ஒன் கணக்கு என்ன? 1,600,000 மைலுக்கு அந்தாண்டை சூர்ய கிரகத்துக்கு மேல. 1,600,000 மைல் உயரம் சூரியனுக்கு மேலால. ஒன் கணக்குப் பிரகாரம் சூர்யன் பூமியில் இருந்து 93,000,000 மைலுக்கு அந்தாண்டை இருக்கான். அதுக்கும் மேல 1, 600,000 மைல் போனா சந்திரன். அதெப்டி முடியும்?

குரு க்ருபா: சந்திரன் எப்படி சூரியனுக்கு பின்னாடி இருக்கும்?

பிரபுபாதா: பின்னாடி இல்லை. மேல.

(மே 1975)

மதுவிசா: அரக்கர் கூட்டம் உயர உயரக் கட்டிடங்கள் கட்டி சுவர்க கிரகங்களுக்கு போக பாக்கிறதுகள்.
பிரபுபாதா: ராவணனுவள், ராவணன் சுவர்கத்துக்கு போக ஏணிப் படிக் கட்டினானாம். "தவம் இருந்து என்ன பயன்? நான் சுவர்கத்துக்கு ஏணிப்படி கட்டப் போறேன்" னானாம். அந்த ஏணி கட்டினாப்பலதான் இப்ப சந்திர கிரகத்துக்கு கிளம்பறதும். அவாளால் போவே முடியாது. போக முடியும்னு கனா காண்றா. ராவணன் செஞ்ச வேல மாதிரிதான். எத்தன வருஷமா போயிண்டுருக்காள்?. 1950 லேர்ந்து?

சிஷ்ய கோடி: சந்திரனை சுத்திப் பாக்கவா?
பிரபுபாதா: ஆமாம், அதுக்குத்தான்..
சிஷ்ய கோடி: 1955லேர்ந்து இருக்கும்.
மதுவிசா: 1955.
சிஷ்ய கோடி: மொதமொதல்ல சந்திரனுக்கு போனது 1961ல்.
பிரபுபாதா: அதுதான் ஆரம்பக் கட்டம். மொதல்ல நாயை அனுப்பினா. (சிரிப்பு)
மதுவிசா: ஆகாச நாய், ஆகாச எலி.
பிரபுபாதா: ஹா? ஆகாச எலியா.
சிஷ்ய கோடி: ஆகாச எலியும்தான்.
பிரபுபாதா: அப்ப 1955லேர்ந்து இருவதுவருஷமா என்ன பண்ணிட்டாள்?
சிஷ்ய கோடி: கோடிக் கணக்கில செலவழிச்சா.
பிரபுபாதா: ஆமாம், கொஞ்சூண்டு புழுதியை எடுத்துண்டு வந்தா, அவ்வளோதான்.
மதுவிசா: இப்ப பூமியிலயும் அதே புழுதியை கண்டுபிடிச்சிருக்கா.
பிரபுபாதா: ஆமாம். சும்மா ப்ராபகண்டா. அவா எப்ப போனா. இப்ப ரஷ்ய விஞ்ஞானியும் அமெரிக்க விஞ்ஞானியும் ஒண்ணு சேர்ந்துண்ட்டா. ரெண்டு பேரும் திருடனுங்க. ஒருத்தனுக்கு ஒருத்தன், "நீ என்னை காட்டிக் கொடுக்காதே. நானும் உன்னைக் காட்டிக் கொடுக்கலை. ஒண்ணா சேந்து இந்த ராஸ்கல்களை ஏமாத்தலாம்" ன்னு திட்டம் போட்டிருக்கா.
சிஷ்ய கோடி: அவா கூட்டு சேர்ந்துட்டா.
பிரபுபாதா: ஆமாம். கூட்டுக் களவாணிகள்.
(மே 1975)



கீழ் வருவது சதபுத தாஸின் "Vedic Cosmography and Astronomy" புத்தகத்தில் நிலவுக்கு பயணம் (Moon Flight) அத்தியாயத்தின் உள்ளடக்கத்தின் சுருக்கம் என்று ஆரம்பித்து எழுதப்பட்டது:

சிரில பிரபுபாதா விண்வெளி வீரர்கள் நிலாவுக்கு போகவில்லை என்று பலமுறைசொல்லி இருக்கிறார்.
அவர் சொன்ன காரணங்கள்:
  • 1)தேவ கணங்கள் மனிதப் பிறவிகளை உயர்ந்த கிரகங்களுக்குள் நுளைய அனுமதிக்க மாட்டார்கள். ஏனெனில் அதற்கு மனிதர்களுக்கு தகுதி இல்லை.
  • 2)சந்திரனில் நிரைந்திருக்கும் சுவர்க மண்டலத்தை விண்வெளி வீரர்கள் உணரவில்லை. அதனால் அவர்கள் சந்திரனுக்கு சென்றிருக்க வாய்ப்பு இல்லை.

சிரில பிரபுபாதா விஞானிகள் சந்திரனை அணுக முற்பட்டது ராகு கிரகம் சந்திரனை தாக்க முயன்றது போல அரக்கத் தனமானது (சிரிமத்.பாகவதம் -சி.ப- 5. 24. 3) மேலும் இந்திரன் அந்த பயணத்தை தடுத்திருப்பான் என்று விளக்கி இருக்கிறார். (அவர் விளக்க உரையுடன் எழுதிய) சிரிமத் பாகவதத்தில், காண்டம் 6, அத்தியாயம் 4, பா 6 மற்றும் காண்டம் 8, அத்தியாயம் 5, பா 34 க்கு அவர் குறிபிட்டுள்ளபடி சந்திரன் தாவரங்களுக்கு கடவுளாவான். ஆனாலும் விஞ்ஞானிகள் நிலவு பாலைவனமாக இருக்கிறது என்கிறார்கள்.

சந்திரனுக்கு செல்ல உயர் பரிமானத்தில் பயணிக்கவேண்டும் என்றும் சிரில பிரபுபாதா சொல்லியிருக்கிறார். எந்திர விண்வெளி ஓடங்களினால் சந்திரனை அடைய இயலாது என்பதையும் குறிப்பிட்டுள்ளார். கடைசியாக சந்திரனை அடைய மானச ஏரியையும் சுமேரு மலையையும் கடக்க வேண்டியது அவசியம் என்றும் சொல்லி உள்ளார்.

எனவே இஸ்கான் பக்தர்களான நமக்கு உள்ள சில முடிபுகள்:

  • 1)விண்வெளி வீரர்கள் உண்மையிலேயே நிலவில் காலடி எடுத்து வைத்தார்கள். ஆனால் தேவர்களின் உலகை (சந்திரலோகம்) அவர்களின் ஊன உடலால் உணர முடியவில்லை.
  • 2)விண்வெளிவீரர்களை அவர்களின் பயணத்தின் ஒரு கட்டத்தில் தேவர்கள் மதிமயக்கி ராகு கிரகத்துக்கு திசை திருப்பி விட்டிருக்ககூடும். (சி.பா 4. 29. 69ப)
  • 3)மனிதன் சந்திரனுக்கு சென்றது என்பது கோடிக் கணக்கான மக்களை 30 வருடங்களுக்கும் மேலாக முட்டாளாக்கிய பெரும் சூழ்ச்சி.

இது கருப்பினத்தவர் வரலாற்று மாதம்

Wednesday, February 13, 2008

ஆப்ரிக்கர்கள் தங்கள் நாட்டை விட்டு குடிபெயர்ந்து எதிர்கொண்ட வாழ்க்கைப் போராட்டங்களையும், அவர்களில் சிறப்பு வாய்ந்த மனிதர்களையும் நினைவு கூறும் வண்ணம் பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் கருப்பினத்தவரின் வரலாற்று சிறப்பு மாதமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

இம்மாதத்தில் என் மகளுக்கு புறத்திட்டாக, ஏதேனும் ஒரு கருப்பினத்தவரைத் தெரிவு செய்து அவரைப்பற்றி சேகரித்த விபரங்களுடன் கூடிய உருவபொம்மை செய்துவரச் சொல்வார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன், முதல் வகுப்பில் அகஸ்தா சாவேஜ் என்ற பெண் சிற்பியைப் பற்றி எழுதினோம். அவர் செய்த சிறிய களிமண் சிற்பத்தின் படத்தை இணைத்திருந்தோம். ஒருநாள் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் (PBSன் Antique roadshow) அதே சிற்பத்தை பார்த்தோம். அது 30,000 வெள்ளிகளுக்கு மதிப்பிடப்பட்டதில் உரிமையாளர்கள் போல நாங்களும் மகிழ்ந்தோம்.



இம்முறை பெட்ரீசியா பாத் என்ற கண் மருத்துவ வல்லுனரும் லேசர் விஞ்ஞானியுமான பெண்மணியைப் பற்றி எழுதியிருக்கிறோம். இவர் லேசர்பேக்கோ என்னும் கண்டுபிடிப்பிற்கு காப்புரிமை பெற்றுள்ளார். பூ விழுந்த விழி ஆடியை லேசர்மூலம் எளிதாக நீக்க உதவும் என்று தெரிகிறது. இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.



தெரிவு செய்ய வேண்டி மேலும் பல சிறந்த மனிதர்களைப்பற்றி படித்து தெரிந்து கொள்ள முடிந்தது. PBSலும் சென்ற வாரம், நாகரீகமாக வாழ்ந்த அப்துல் ரஹ்மான் என்ற ஆப்ரிக்க இளவரசன் அடிமையாக பிடிபட்டு அன்றைய (1788-1828) அமெரிக்காவின் கேவலமான சூழலில் இருந்து 40 ஆண்டுகளுக்குப் பின் தன் நாட்டிற்கு திரும்பிய உண்மைக் கதையை (Prince Among Slaves) மிகவும் சிறப்பான முறையில் ஆவணப் படமாக வெளியிட்டார்கள்.

அடிமைகளாக அழைத்து வரப்பட்டவர்கள் இன்று மீண்டு வந்துவிட்டார்கள். எல்லாரும் சமம் என்று உணர்ந்ததால், ஏதாவது ஒருவகையில் (பள்ளி தேர்ச்சி, வருமானம்) ஒரு சமூகத்தின் பங்கீடு சரியான விகிதத்தில் இல்லை என்றால் திட்டத்தில் என்ன கோளாறு என்றுதான் அலசுகிறார்கள். எல்லா குடியிருப்புகளிலும், பணிஇடங்களிலும் யாரையும் நாடு, மொழி, நிற பேதம்பார்க்ககூடாது என்று சட்டம் இருக்கிறது.

ஆனாலும் சமயவழிபாட்டில் அரசு குறுக்கிடக்கூடாது என்றக் கட்டுப்பாட்டினால், இந்துக் கோவில்கள் பலவற்றில் தமிழ் தெய்வம் முருகனுக்கும்,தென்னிந்தியர்களுக்கும் எதிராக மறைமுகத் தீண்டாமை நிலவுகிறது. சில சமயங்களில் வாடகை வண்டிஓட்டும், உணவு விடுதி நடத்தும் இந்தியர்கள் வாடிக்கையாளர்களிடம் பாரபட்சம் காட்டி பிடிபட்டு கடுமையான கண்டனத்திற்கும் தண்டனைக்கும் உள்ளாகிறார்கள். ஆனால் கோவில் கூடாரங்கள் இன்னும் மாட்டவில்லை.

ரவிக்கை மறைக்கும் நாராயண தரிசனம்

Monday, February 11, 2008

சென்ற ஆண்டு வெளிவந்த திருவின் இடுகையில் சேரலப்பெண்டிர் ரவிக்கை அணியக் கட்டுப்பாடு இருந்தைப் படித்து அதிர்ந்து போகாதவர்கள் இருக்கமுடியாது். கொஞ்ச நாள் முன்பு சில மலையாள நண்பர்களை சந்திக்க நேர்ந்தது. அப்போது அவர்கள் ஒரு முப்பது ஆண்டு முன்பு வரை இந்தக் கொடுமை நடைமுறையில் இருந்ததாக சொல்லி வருத்தப்பட்டார்கள்.

மற்றொருவரின் தந்தையும் நாங்கள் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தார். எனக்கு முன்பே பழக்கமானவர். வேத துதி வகுப்புக்கு ஒரு முறை அழைத்து போயிருக்கிறேன். அங்கே நாராயணீயத்தின் மகிமை பற்றி சொல்லி சில பாக்களையும் பாடினார். அவர், "இதை என்ன பெரிய விடயமாக பேசுகிறீர்கள். அவர்கள் கோபியர் வழித்தோன்றல்கள். கோபியப் பெண்கள் உடையில்லாமல் யமுனையில் குளித்து அதை மாசுபடுத்தினார்கள். அதற்கு தண்டனையாகத்தான் கண்ணன் அவர்களுடைய உடைகளை எடுத்துக்கொண்டான். அதனால்தான் அவர்கள் ரவிக்கை அணிவதில்லை" என்றார். நல்ல வேளையாக மேலும் உளறும் முன் அவர் மகன் அவரை அழைத்துக்கொண்டு போய்விட்டார்.

ஆக நம் பெண்கள் ரவிக்கை அணியாமல் இருந்தது தலைமுறை தலைமுறையாக நேர்த்திக்கடனுக்காக வேண்டிதான். இவர்களும் அவர்களைப் பார்த்து பக்தி பரவசமடைந்து வந்தார்கள். இப்போது எல்லாம் கெட்டுவிட்டது.

நாளை என்பதில்லை நாரணனுக்கே, கூப்பிட்ட நொடியில் பக்தர்களைக் காப்பான் என்று அளக்கும் இவர்கள் ஏன், கதையில் பல யுகங்களுக்கு முன் அவன் களவாணித்தனமாக ஒரு முறை கடிந்தக் குற்றத்தைக் காரணம் காட்டி கால காலமாக ஒரு வம்சத்தையே தண்டிக்க வேண்டும்.

நேரில் நடக்கும் கொடுமைகளைக் கண்டு குத்துக்கல்லாக உட்கார்ந்திருந்தாலும் பரவாயில்லை. வக்காலத்து வாங்காமல் இருக்கலாமே.

திருத்தந்தை கத்தோலிக்கர்களின் 2000 ஆண்டுகாலத் தவறுகளுக்கு மன்னிப்புக் கோரியது போல கோவில்களும் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் மக்களிடம் மன்னிப்புக் கேட்கும் நிலை வரும்.

ரெய்கி என்ற மாய்மாலம் - நிரூபித்த 9 வயது எமிலி ரோசா.

Monday, February 04, 2008



ரெய்கி, நலமளிக்கும் பரிசம் (Therapeutic Touch) என்று சிலர் அவ்வப்போது பேசக் கேட்டிருக்கிறேன். மெய்ப்பொருள் தெரிந்து கொள்ளாமல் சிறுமை படுத்தக் கூடாதென்றாலும், இவற்றை சிகிச்சை முறை என்று கதைப்பவர்கள் மற்ற சமூகப் பிரச்சினைகளிலோ, அறிவியல் துறைகளிலோ அவர்கள் எடுக்கும் பிற்போக்கு நிலைப்பாட்டால் இத்தகைய விடயங்கள் மீது இயல்பாகவே வெறுப்பு ஏற்படுகிறது.

விருப்பு வெறுப்பு நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு இவ்விடயங்களில் உண்மை இல்லை என்பதை 1996லேயே எமிலி ரோசா தன் ஒன்பது வயதில் நிரூபித்திருக்கிறாள் என்று சென்ற மாதம் PBSன் Scientific American Frontiers தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பார்த்தேன்.

இந்த சிகிச்சை முறைகளில் பயிற்சி பெற்றவர், நோயாளியின் உடலில் சம சீரற்ற ஆற்றல் புலத்தை (energy field) அவர்களை தொடாமலேயே ஒருசில அங்குலம் தள்ளி தங்கள் கைகளாலேயே உணர்ந்து, சமன்படுத்தி விடுவதாக பாவனை செய்வார்கள். சிலர் பிரபஞ்சத்தில் நிரைந்திருக்கும் நலமளிக்கும் சக்தியைப் பெற்று நோயாளிகளுக்கு அளித்து குணமாக்குவதாக சொல்வார்கள். இந்த சிகிச்சை மூலம் உடல் மனநோய்களையும் குணப்படுத்துவதாக சொல்கிறார்கள். மருத்துவர்கள் உடலுக்கு ஆற்றல் புலம் இருப்பதாக நிரூபணம் இல்லை என்பதால் இவைகளை சிகிச்சையாக ஏற்றுக் கொள்வதில்லை.

எமிலி TT-க்காரர்களின் நிகழ் படத்தைப் பார்த்தபோது அவர்களின் சிகிச்சை முறை பற்றி சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. அதில் உண்மையைக் கண்டறிந்து தன் நான்காவது வகுப்பு அறிவியல் புறத்திட்டிற்காக அறிக்கையாக சமர்பிக்கலாம் என்று நினைத்திருக்கிறாள்.

ஒரு அட்டையில் தடுப்பு செய்து தன்னையும் எதிரில் இருக்கும் பயிற்சியாளரையும் மறைத்து, அதில் அவர்கள் கைகள் நுழைய இரண்டு துளைகளிட்டு வைத்தாள். பயிற்சியாளர் மேசைமீது தடுப்புக்கு இந்தப் பக்கம் துளைகள் வழியே நீட்டி உள்ளங் கைகளை மேல்நோக்கி வைத்திருப்பார். எமிலி ஒரு நாணயத்தை சுண்டிவிட்டு, தலையா பூவா பார்த்து அதன்படி தன் ஒரு கையை அவர்களுடைய வலது கை மேலோ இடதுகை மேலோ படாத வண்ணம் வைப்பாள். உடலின் ஆற்றல் புலத்தை உணர்வதாகக் கூறும் பயிற்சியாளர் எமிலியின் கை வலதுபுறம் உள்ளதா இடதுபுறம் உள்ளதா என்று சொல்ல வேண்டும்.

எமிலி ஒன்றிலிருந்து 27 வருடங்கள் வரை அனுபவம் உள்ள 21 பயிற்சியாளர்களை வைத்து 128 பரிசோதனைகள் செய்தாள். ஒவ்வொருவரும் பத்து முறை சோதனைக்கு உட்பட்டார்கள். அவர்கள் சரியாக கணித்த சமயங்கள் 50 சதவிதத்திற்கும் குறைவு. அவர்கள் குருட்டாம் போக்கில் சொல்லியிருந்தால் கூட குறைந்தபட்சம் 50 சதவீதம் சரியாக கணித்திருப்பார்கள்.

11 வயதில் எமிலியின் ஆய்வை பிரசித்தி பெற்ற The Journal of the American Medical Association வெளியிட்டது சாதனையாகக் கருதப்படுகிறது.

தொடர்புடைய மற்றொரு சுட்டி

10 வருடங்களுக்கு முன்பே நிரூபிக்கப்பட்ட வாய்பந்தலில் இன்னமும் சிலபேர் தோரணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

பயபக்தியும் செத்தக் கடவுளும்

Sunday, February 03, 2008

அப்பாவின் முதல் பிரசவம்

Tuesday, January 29, 2008

பத்து ஆண்டுகளுக்கு முன், என் மனைவி கருவுற்றிருக்கலாம் என்ற அனுமானத்தில் மருத்துவரிடம் பரிசோதிக்கப் போனோம். மருத்துவர் இந்தியப் பெண். எங்கள் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட விதிகளின்படி முதலில் அவரைத்தான் அணுக வேண்டும். பின் அவருடைய சிபாரிசின் பேரில்தான் மற்ற துறை வல்லுனர்களைப் போய் பார்க்க முடியும்.

முதலில் மனைவியிடம் தனியாக பேச வேண்டும் என்று அழைத்துப் போனார்கள். சிகிச்சைக்கு வருபவர்களிடம் அவர்கள் வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டத்தின் காரணமாகத்தான் தனியாக பேச அழைத்தார்கள் என்று பின்னர் தெரிந்து கொண்டேன். சிறுநீர் பரி சோதனையில் கருவுற்றிருப்பதை உறுதி செய்தபின் அனைவரும் எங்களுக்கு வாழ்த்து சொன்னார்கள். நாங்கள் gynecologistக்கு சிபாரிசு கடிதம் கேட்டோம். “ஏன் உங்களுக்கு குழந்தை வேண்டாமா?” என்று கேட்டார்கள். நாங்கள் ஒன்றும் புரியாமல் முழித்தோம். எங்கள் குழப்பத்தை பார்த்து அவர்களே, குழந்தைப் பிறப்பிற்கு மகப்பேறு நிபுணரைப்(Obstetrician) பார்க்க வேண்டும் என்று எழுதிக் கொடுத்தார்கள்.

அந்த மகப்பேறு நிபுணர் அமெரிக்கர். நண்பர் வட்டாரம் "ஆண் மருத்துவரா?” என்று சந்தேகம் எழுப்பினாலும் அவர் நல்ல பண்பாளர். முதல் முறை போகும் போதே, அது எத்தனை வார கர்பம், குழந்தை முழுவளர்ச்சி அடைந்து பிறக்கக்கூடிய நாற்பதாவது வாரம் எப்போது, தினசரி மருந்துகள் என்ன என்ற விபரங்களை கொடுத்தார்கள். ஆரம்பத்தில் சில மாதங்களுக்கு ஒருமுறையும், பின் சில வாரங்களுக்கு ஒரு முறை யென்றும் அவரை சந்திக்க மருந்தகம் செல்லும் போது நானும் கூட போய் வந்தேன். என் மனைவி இடைவிடாது தினமும் மாலை இரண்டு மூன்று மைல்கள் வேண்டுதல் போல நடக்க ஆரம்பித்தாள்.

முதல் முறை சென்றபோது வயிற்றிலிருக்கும் குழந்தையின் இதய துடிப்பை ஒலிக்க செய்தார்கள். தொலைபேசியில் இரைச்சலான பின்புல சத்தத்தின் ஊடே மறுமுனையில் ஒலிக்கும் மணி போல இதயத் துடிப்பைக் கேட்டது ஒரு சிலிர்ப்பான அனுபவம். சில மாதங்கள் சென்ற பின், ஒலியலை நிகழ் படம் (sonogram) மூலம் கருப்பு வெள்ளை படமாக குழந்தையின் அசைவைப் பார்த்தோம். முக அமைப்பு தெரிந்தது. கொஞ்சம் உப்பிய கன்னம். பெண் என்று சொன்னார்கள். எங்களுக்கு அவர்கள் எப்படி சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. கை, கால் நீளம், தலை சுற்றளவு போன்றவற்றைக் குறித்து சின்ன நிழல்படம் அச்சடித்துக் கொடுத்தார்கள். அளவு பார்க்கும் போது எங்கள் மகள் சில குட்டிக்கரணங்கள் போடுவதைப் பார்த்தோம். மீன் துள்ளி விளையாடுவது போன்ற இயக்கம். குழந்தை வளர வளர, நெளியக்கூட இடம் இருக்காது. ஆடட்டும்.

இடையில் மகப்பேறு மருத்துவமனைக்கு அறிமுகப் படலமாக போய் வந்தோம். எங்கே வந்து இறங்க வேண்டும், இரவில் வந்தால் அழைக்க வேண்டிய தொலைபேசி எங்குள்ளது, அறைகளில் உள்ள வசதிகள், எடுத்து வர வேண்டிய பொருள்கள் (எச்சில் முழுங்க உதவும் குச்சிமிட்டாய், பிடித்த இசை, இன்ன பிற). பல தம்பதிகள், பிரசவிக்கும்போது கடைபிடிக்க வேண்டிய மூச்சுப் பயிற்சியைப் பழக என்று வகுப்புகளுக்கு சென்று வருவார்கள். நாங்கள் போகவில்லை.

நாற்பதாவது வாரம் நெருங்கும் போது, இந்தியாவிலிருந்து துணைக்கு வந்த அவள் சித்தி, முழு அளவுக்கு எரிபொருள் நிரப்பிய வண்டி, என் விடுமுறையை உத்தேசித்த அலுவலகம், வெள்ளிக் கிழமை தோறும் கூடும் சக வேத பாராயண வகுப்பினர், என்று எல்லோரும் தயாராக இருந்தோம். ஆனால் என் மனைவிக்கு பிரசவ வலி வரவேயில்லை. இயற்கை பிரசவத்திற்காக மேலும் ஒரு வாரம் காத்திருப்போம் என்று மருத்துவர் சொன்னார். வாரம் ஓடியது, வலி ஏற்படவில்லை. அதற்குமேல் காத்திருந்தால் ஆபத்து என்றார்கள். அந்த வாரம் வியாழக்கிழமை மருத்துவமனையில் சேர்ந்துவிட சொன்னார்கள்.

மருத்துவமனைக்கு சென்ற பிறகும் வலி என்பது கொஞ்சமும் இல்லை, உடல் நெகிழ்ந்துக் கொடுக்கவும் இல்லை. சாதாரணமாக குறைந்தது ஆறு அங்குலத்திற்காவது வெளிச்சுற்றளவு நெகிழ்ந்திராவிட்டால் (dilation) என்னதான் வலி என்றாலும் பனிக்குடம் உடையவில்லை என்றால் வீட்டிற்கு திரும்ப அனுப்பி விடுவார்கள். என்னோடு வேலை பார்த்த அமெரிக்கப் பெண் பிரசவத்துக்கு முந்தின நாள் வரை வேலைக்கு வந்தாள். குழந்தை பிறந்து ஒரு வாரத்திற்குள் திரும்ப வேலைக்கு வந்து அவள் கதையைச் சொன்னாள். "காலையில் எழுந்தபோது பனிக்குடம் உடைந்துவிட்டது. தூங்கி எழுந்த முகத்தோடு வெளியே போவது எப்படி? அதனால் குளித்துவிட்டு மருத்துவமனையில் போய் சேர்ந்தேன்" என்றாள். இதைக் கேட்கவே அதிர்ச்சியாக இருந்தது. அப்போது பார்த்து அவளுடைய கணவன் வேறு ஊரில் இல்லை. வேறு சொந்தங்களும் அவள்கூட இல்லை. எனவே யாரையும் துணைக்கு அழைக்காமல் தானே வண்டி ஓட்டிக் கொண்டு மருத்துவமனைக்கு போய் இருக்கிறாள் என்று தெரிந்து மிரண்டு போனேன்.

பனிக் குடத்தை உடைத்து விட்டால் வலி உண்டாகும் என்று ஊசியால் குத்தி உடைத்து விட்டு அறையிலேயே உலாவச் சொனார்கள். என்னிடம் இதோ பார் தண்ணீர் போல் இருக்க வேண்டிய திரவம் பச்சை நிறம் ஏறி இருக்கிறது, அதனால்தான் காலம் தாழ்த்துவது ஆபத்து என்கிறோம் என்றார்கள். வாயில் மிட்டாய் சூப்பிக் கொண்டு அவள் சுற்றி வந்ததைப் பார்த்தால் திருவிழாக் கடைகளை வேடிக்கைப் பார்க்கும் சின்னப் பிள்ளை போலத் தெரிந்தாள்.

ஒருமணி நேரத்திற்குப் பின்னும் வலி இல்லை. பின்னர் செயற்கையாக வலிக்க செய்து சதையை நெகிழ்த்திக் கொடுக்க அரிசி அளவிலிருந்த மாத்திரையை வைத்தார்கள். படுத்த நிலையில் மயக்க மருந்தும் நரம்பில் ஏறிக் கொண்டிருந்தது. இப்போது வலி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. "எனக்கு வேணாங்க, எனக்கு வேணாங்க" என்று உளற ஆரம்பித்தாள். ஆனால் சதை இன்னும் நெகிழ்ந்து கொடுக்கவில்லை. அதற்கு பல மணி நேரம் ஆகும்.

சாதாரணமாக தலை வலியே பொருக்க மாட்டாள். பெரும்பாலும் யாரும் தலைவலி காய்ச்சல் என்றால் முடங்கி போவார்கள். ஆனால் இவள் அட்டகாசம் செய்ய ஆரம்பித்துவிடுவாள். சாப்பிட ஏதாவது செய்து கொடு என்று கத்துவாள். நானும் பாசிப்பயறு போட்டு கஞ்சிபோல குழைய சாதம் வைத்து, துவரம் பருப்பு துவையல் செய்து தருவேன். உடம்பு சுகமில்லாத சமயம் சாப்பிட இதமாக இருக்கும். "எனக்கு நாக்கு ருசிக்கவில்லை" என்று அழுவாள்.

மருத்துவருக்கு அவள் அனத்தலை வைத்து வலியின் அளவை எடை போட முடிய வில்லை. எனவே வலியின் தன்மை அறிய ஒரு மானியை பொருத்தினார்கள். அது நூறில் ஒரு பங்கு உயர்ந்தாலே அவள் அதீத வலியில் முனகினாள். இந்த நிலையில் மணிக்கணக்காக தாங்கமாட்டாள் என்று முடிவு செய்தோம்.

அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுக்க முடிவு செய்து என்னிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள். (ஆண் குழந்தையானால் முன்தோல் நீக்க வேண்டுமா? இல்லை. குழந்தையை சுத்தப்படுத்து முன் பார்க்க விரும்புகிறீர்களா? இல்லை. மயக்க மருந்தின் பின் விழைவுகள் பற்றி முன் எச்சரிக்கை, அனுமதி கையொப்பம், இன்ன பிற.)

ஒரு பெண் வந்து சவரம் செய்து விட்டாள். பின்னர் வேறு அறைக்கு மாற்றி கூட்டி சென்றார்கள். அரை மயக்கத்தில் உடை விலகுவது தெரியாமல் நடக்க ஆரம்பிக்க மற்றொரு செவிலியப் பெண் வேகமாக ஓடிப்போய் இன்னொரு அங்கியை பின்புறமாக கட்டிவிட்டாள்.

என்னை வெளியில் காத்திருக்க சொல்லிவிட்டு அறுவை சிகிச்சைக்கு அழைத்து போனார்கள். ஒரு கால் மணி நேரத்திற்கு பின் உள்ளே அழைத்தார்கள். இங்கே கணவனுக்குத்தான் மனைவியின் அருகில் இருக்க முன்னுரிமை. தாயாரானாலும் தேவையின்றி அனுமதிக்க மாட்டார்கள். எனக்கும் மருத்துவர்கள் போட்டிருந்தது போல மேலங்கியும் முகத்திரையும் கொடுத்தார்கள்.
என் கையில் camera வைத்திருந்தேன். என் மனைவி நினைவோடுதான் இருந்தாள். படுத்த நிலையில் தன் கழுத்துக்குக் கீழே பார்க்க முடியாதபடி திரை இருந்தது. திரைக்கு அந்தப் பக்கம் சுமார் பத்து பேர் இருந்தார்கள். நான் போன சில நொடியில் வயிற்றிலிருந்து குழந்தையை எடுத்தார்கள். "தொப்பூள் கொடியை வெட்டுகிறாயா?” என்று கேட்க இல்லை என்றேன். குழந்தையை சுத்தம்செய்து அழகாக துவாலையில் சுற்றி என் கையில் கொடுத்தார்கள். அதே உப்பிய கன்னம். எனக்கு குழந்தையின் உடம்பை வெறும் கையில் தொடவும், முத்தமிடலாமா கூடாதா என்றும் அச்சமாக இருந்தது. நல்ல வேளை வாங்கிக்கொண்டு போய்விட்டார்கள்.

இப்போது வயிற்றிலிருந்து எடுத்திருந்த ஒவ்வொரு பாகமாக நீரும் காற்றும் பீய்ச்சி அடித்து சுத்தம் செய்து வயிற்றில் திரும்பவும் திணித்தார்கள். சிலவற்றை படம் பிடித்தேன். என் மனைவி குமட்டல் எடுத்தாள். இது இயல்புதான் என்று சொல்லி அவளருகே வைத்திருந்த குவளையைக் கொடுத்தார்கள். நான் வாகாக பிடித்துக் கொண்டேன். சில நிமிடங்களில் தூங்கி விட்டாள். பின் என்னை போய் குழந்தையை பார்த்துக் கொள்ளச் சொன்னார்கள். அம்மா விழித்ததும் குழந்தையை கொண்டு போய் காட்டலாம் என்றார்கள். வெளியில் சித்தி நின்றிருந்தார்கள். என்ன குழந்தை என்று கேட்டார்கள். சொன்னேன். அவர்களுக்கு ஏமாற்றம்தான். தெரிந்ததுதானே. அதனாலேயே ஊரில் யாருக்கும் முன்பே சொல்லவில்லை.

என் மகள் இப்போது மற்ற குழந்தைகளோடு ஒரு தொட்டில் அறையில் இருந்தாள். அங்கே எடை, உயரம் அளவு பார்த்து குறித்துக் கொண்டார்கள். காலில் மை தடவி வாழ்த்து அட்டையில் கால் தடத்தை பதிவு செய்தார்கள். அதில் பிறந்த நேரம் ( எடை: 7 பவுன்டு 10 அவுன்சு. உயரம்/நீளம்: 21 அங்குலம்), எங்கள் பெயர் எல்லாம் எழுதி கொடுத்ததை பத்திரமாக வைத்திருக்கிறோம்.

அங்கிருந்த செவிலியரிடம் கேட்டு தொடலாம் பாதகமில்லை என்று உறுதிப் படுத்திக் கொண்டு தொட்டுப் பார்த்தேன். நகங்கள் பட்டுத் துணி போலவும், தலை முடி இலவம்பஞ்சு போலவும் அத்தனை மிருதுவாக இருந்தன.

மனைவி மயக்கம் தெளிந்து எழுந்த போது குழந்தையை எடுத்துக் கொண்டு போய் அறிமுகப் படுத்திவிட்டு, அசதியோடு இருந்ததால் திரும்பவும் தொட்டில் அறைக்கே எடுத்து வந்துவிட்டேன். அம்மா குழந்தைக்குப் பாலூட்டவில்லை என்று அசரீரிமாதிரி ஆளாளுக்கு பேசினார்கள்.

பின்னர் தனி அறையில் பாலூட்ட பயிற்சி கொடுத்தார்கள். இரவு உணவோடு தாய்க்கு குச்சி ஐஸ் கிடைத்தது. நான் மருத்துவமனை வளாகத்திலேயே சீன உணவு (முட்டை வறுத்த சாதம்) வாங்கி சாப்பிட்டேன். எவ்வளவு கேட்டும் ஒரு வாய் கூட தரவில்லை என்று அவளுக்கு கோபம். அந்த கோபம் சுமார் ஒராண்டு காலம் கடந்து அதே கடையில் அதே சாப்பாடு வாங்கித் தரும் வரை ஓயவில்லை.

அவர்களோடு இணை பிரியாதிருந்த காரணமோ என்னவோ, என் குழந்தைகளுக்கு அம்மாவை விட என்னிடம் ஒட்டுதல் அதிகம். அதில் அவர்கள் அம்மாவிற்கு வருத்தம்தான். அவர்களுக்கு காய்ச்சல் என்றால் அவர்களை தொட்டு பார்த்த வண்ணம் அருகிலேயே படுத்துக் கொள்வேன். அப்போதுதான் சூடு அதிகமானால் உடனே கவனிக்க முடியும். சில நண்பர்களின் குழந்தைகளுக்கு காய்ச்சல் அதிகமாகி வலிப்பு வந்ததை அடுத்து கவனமாக இருக்கத் தொடங்கினேன்.

அவர்களை சுத்தம் செய்வது, குளிப்பாட்டுவது, ஊட்டிவிடுவது, உடை மாற்றுவது, முடி வெட்டி விடுவது என்று இயன்ற வகைகளில் நன்றியோடு இருக்கிறேன். அவர்களும் என் மீது மாறா அன்புடன் இருந்து உதவுகிறார்கள். நான் இதற்குமேல் எதையும் எதிர் பார்க்கவில்லை.

என் இரண்டாம் பிரசவத்தைப் பற்றியும் எழுதினால்தான் செவிலியர்களுக்கும் மருத்துவர்களுக்கும் நான் செய்யக்கூடிய கடன் ஒரு துளியேனும் முழுமை பெறும்.

ஆமிரின் அரைவேக்காடுத்தனம் - taare zameen par

Thursday, January 17, 2008


ஆசீப் மீரான் இப்படத்தைப் பற்றி உணர்ச்சி வசப்பட்டு விமர்சித்திருந்தார். அப்போதே பின்னூட்டம் இட முடியவில்லை. பொறுக்கியின் இடுகைக்கு பின்னூட்டமாய் இடவேண்டியடது இங்கே தனிப் பதிவாய்:

என்னைப் பொருத்த வரை பல இந்தியப் திரைப் படங்களைப் போல இந்தப் படத்திலும் பிரச்சினைகளை அதன் உண்மையான புரிதல் இல்லாமல் பேச முனைந்திருக்கும் அரை வேக்காட்டுத்தனம் தான் தெரிகிறது.

முந்தைய ஆண்டு தொழில் கல்வி படித்து முடித்துவிட்டு பட்டறிவு எதுவும் இல்லாமலேயே மறு ஆண்டு ஆசிரியராக பாடம் எடுக்கிறார்களே, அது போல்தான் இருந்த்து.

முதலில் Dyslexia என்ற புத்தகங்களைப் படிக்க சிரமப்படும் குறை, ஒரு பெரும் பிரச்சினை இல்லை. படத்தில் உதாரணம் காண்பிப்பது போல் சிறு வயதில் இந்தப் பிரச்சினையால் பாதிக்கப் பட்டவர்கள் பின்னாளில் பெரும் விஞ்ஞானிகளாக ஆகியுள்ளனர்.

அதிலும் தெளிவாக வாய்ப் பேச்சால் தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு சிறுவனுக்கு உள்ள பிரச்சனை என்ன என்று பெற்றோர்கள் புரிந்துகொள்ள வில்லை என்று தொடர்ந்து காட்சிப்படுத்தி இருப்பது இயல்பிற்கும் இயற்கைக்கும் மாறானது**. ஆனால் படத்தில் கெட்டவர்கள் பெற்றோர்கள்தான். கண்டிப்பான சூழல்தான் அவன் வளர்ச்சிக்கு நல்லது என்று தொலை தூரத்தில் உள்ள ஊரில் விடுதியில் சேர்க்கிறார்கள். அப்பா தன் பையனுக்கு மன வளர்ச்சி குறைந்தவனா என்று,
மேல் நாடுகளில் கெட்ட சொல்லாக அறியப்படும் சொல்லை ( r-word) சொல்லி பல முறை கேட்கிறார். "Dyslexia பற்றி இணைய தளத்தில் படித்துப் பார்த்தோம், நாங்களும் எங்கள் பையன் மேல் அக்கறையுடன்தான் இருக்கிறோம்" என்று சொல்லி விட்டு விடுதிக்கு வந்த இடத்தில் பையனை பார்க்ககூட பிடிக்காமல் திரும்பிப் போகிறார். அந்தப் பையன் இன்னும் அதிகம் பாதிக்க கூடிய குறையுள்ளவனாக இருந்தால் இயக்குனர் பெற்றோர்களை
எப்படி கற்பனை செய்திருப்பாரோ?.

நல்ல வேளையாக உண்மை அவருடைய கற்பனை போல அவ்வளவு கேவலமாக இல்லை. படத்தில் சில இடங்களில் பின்னணியில் வளர்ச்சி
குன்றிய குழந்தைகளும் குடும்பத்தார்களும் தெரிகிறார்கள். அவர்கள் நடிக்கும் பெற்றவர்களைப் போலல்லாமல், மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதை பார்க்கலாம்.


**
மன வளர்ச்சி பாதிக்கப்பட்ட (Autism) தன் மகன் - டிட்டோ முகாபத்யாய் -க்கு ஒரு இந்தியத் தாய் எப்படி கல்வி புகட்டி, மருத்துவ உலகத்தை வியக்க வைத்திருக்கிறார் என்று அறிய கீழே உள்ள சுட்டிகளில் காண்க.

National Geographic
PBS.org

வெள்ளை மலை ரகசியம் - உதவாக்கரைகள்

Sunday, January 13, 2008



சென்ற வருடம் சித்திரை மாதம் (April 2007) கோவைக்கு அருகில் உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல வாய்த்தது. புதுமணத் தம்பதிகள் (மாப்பிள்ளை என் மனைவியின் தம்பி) மற்றும் சொந்த பந்தங்களுடன் ஒரு வண்டி பிடித்து வெள்ளியங்கிரி கோவிலுக்கும் அதன் அருகில் உள்ள ஈசா யோகா மையத்தின் தியான லிங்கத்தையும் பார்த்து வரப் போனோம்.

அப்போது வெள்ளியங்கிரியில் திருவிழாக் கூட்டம். பக்தர்கள் மலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தனர். வனத்துறையினர் விரிவான அபாய அறிவிப்பு வைத்திருந்தார்கள். அறிவிப்பில் ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்கள், பெண்கள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாக நினைவு. ஒருபுறம் வித்தியாசமாக துறவிகள் அன்னதானம் வழங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களே சமைப்பதும் பரிமாறுவதுமாக இருபது முப்பது பேர் இருந்தார்கள். எனக்கு சுவையான மரக்கறி பிரியாணி கிடைத்தது. சாமி இது யார் உபயம் என்று கேட்ட போது அடியவர்கள்தான் என்றனர்.

எனக்கு இடம் புதிது ஆனால் இந்த சூழல் பழக்கமானதுதான். எங்கள் தந்தை, நாங்கள் சிறுவர்களாய் இருந்தபோது ஆண்டிபட்டி மாவூற்று வேலப்பர் கோவிலுக்கு மூன்றாண்டுகள் காவடி எடுத்தவர். அதன் பின்னும் தவறாமல் சித்திரை முதல் நாளன்று அங்கே போகிறவர். சில சமயங்களில் நானும் என் தம்பியும் போயிருக்கிறோம். திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழாவுக்கும் அவருடன் போயிருக்கிறேன்.

இத்தனை பக்தர்களின் ஆரவாரத்தால், எனக்கும் அப்போதே மலை ஏறிவிட்டு வர வேண்டுமென்று ஆசை எழுந்தது. இந்த வாய்ப்பை விட்டால் அடுத்து எப்போது கிடைக்கும் என்று தெரியாது. எனவே தியானலிங்கத்தைப் பார்த்துவிட்டு திரும்பும் வழியில் என்னை மறுபடியும் வெள்ளியங்கிரியில் இறக்கிவிடச் சொன்னேன்.

"ஏழுமலைகள் ஏற மிகவும் சிரமம், காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி இருக்கிறது. மழை பெய்தால் மேலே விடமாட்டார்கள்" என்று உறவினர்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கொண்ட கொள்கையில் உறுதியுடன் மனைவி குழந்தைகளிடமிருந்து விடைபெற்றேன்.

முதலில் பந்தலில் உட்கார்ந்து இருந்தவர்களிடம் அவர்களோடு நானும் சேர்ந்து போகலாம் என்று விசாரித்த போது, பலரும் ஏறி இறங்கி விட்டோம் என்றார்கள். மேலும் இப்போதே கிளம்பினால் இருட்டும் முன்னர் மலை ஏறிவிடலாம் என்று சொன்னார்கள். மாற்றுத் துணிகூட இல்லை. மஞ்சள் பையில் தண்ணீர் குடுவைகள், சட்டை பையில் கைபேசி, முழுக்கால் சிராய் (jeans) சகிதம், வெறும் காலுடன் பரவசத்துடன் மாலை 3:00 மணிக்கு கையில் தடியுடன் மலை ஏறத் துவங்கினேன்.

ஆரம்பத்தில்தான் ஒழுங்கான படிகள் தென்பட்டன. சில நிமிடங்களிலேயே வெடி வைத்து தகர்க்கப்பட்ட பாறைகளை அடுக்கிவைத்தால் போல உத்தேசமான படி அமைப்புகளைத் தான் பார்க்க முடிந்தது. பத்து நிமிட நடையிலேயே வேர்த்து சட்டை முவதுமாக நனைந்து விட்டது. மூச்சு வாங்கியது. எதிரில் வந்தவர்கள் ஏன் தனியாய் போகிறீர்கள் என்று விசாரித்தார்கள். சட்டையைக் களற்றிக் கொள்ள சொன்னார்கள். மலையில் வீசும் மூலிகைக் காற்று உடலில் பட்டால் நல்லது என்றார்கள். சட்டையைக் களற்றி பையில் திணித்துக் கொண்டே ன். ஒருவகை மரத்திலிருந்து இழை இழையாக கோந்து போல பொழிந்த திரவம் உடலில் பட குளுமையாக இருந்தது.

முதலில் இரண்டு பாட்டிமார்களையும், பின்னர் இரு இளைஞர்களையும் கடந்து மேலே சென்றேன். அதில் ஒருவருக்கு கால் விரலில் காயம் பட்டிருந்தது. இரவில் இறங்கும் போது துணைக்கு இருப்பார்கள் எண்று எண்ணிக் கொண்டு மேலே நடந்தேன்.

சில பக்தர்கள் என்னைத் தாண்டி மிக வேகமாக ஏறினார்கள். இன்னும் கொஞ்ச தூரம் தான். இதே வேகத்தில் ஏறினால் இன்னும் ஒரு மணி நேரத்தில் உச்சிக்கு போய்விடலாம் என்றார்கள். கடந்து போகும் நபர்கள் எல்லோரும் இதையே சொன்னார்கள். மஞ்சள் பையின் கைப்பிடி கையைக் கிழித்தது. கால் சிராய் முழங்கால் பகுதியில் இறுக்கியது. ஆனால் மலைவாசிகள் தலையில் மூட்டையுடன் இலகுவாக ஏறி சென்றார்கள். அவர்கள் காலில் செருப்பு இருந்தது காரணமாக இருக்கலாம்.

ஒரு வழுவழுப்பான கல்லில் ஊர்ந்து ஏறிய போது கையில் இருந்த தடி கிழே உருண்டது. ஏறும் போது கைத்தடிக்கு வேலை இல்லை. ஆனால் இறங்குகையில் அவசியம் என்று பட்டது. ஒரு இரண்டு மணி நேரம் செல்ல ஒரு மெல்லிய நீரோடை அருகில் என்னை தாண்டி சென்ற சிலர் இளைப்பாறிக் கொண்டு இருந்தனர். குடுவைகளில் உள்ள நீரைக் கொட்டி விட்டு அந்த ஓடையில் இருந்து பிடித்துக் கொள்ள சொன்னபடி செய்தேன். இன்னும் ஒரு மணி நேரம்தான். அடர்ந்த காடுகள் என்றால் பயமாய் இருந்திருக்கும். ஆனால் வழியில் புதர்கள் கூட இல்லை. இடதுபுறம் மலைச் சரிவின் கீழே உள்ள சமவெளியும் கண்ணைவிட்டு மறைவதில்லை.

ஒவ்வொரு மலையைத் தாண்டியதும் சின்ன பொட்டிக் கடை. உயரம் ஆக ஆக பொருளின் விலையும் ஏறும். ஒரு கடையில் இருந்த பெண்ணிடம் ரொட்டி வாங்கிக் கொண்டேன். மலைப்பாதையில் ஓரிடத்தில் மட்டும் சில குடியிருப்புகள் இருந்தன. மற்றபடி வேறு ஆள் அரவம் இல்லை. சில தூரம் ஏறியபிறகு எதிரில் வந்த இருவர் தண்ணீரை வாங்கி அருந்திவிட்டு அவர்களிடம் இருந்த திராட்சைகள் கொடுத்து உதவினார்கள். இன்னும் ஒரு மணி நேரம்தான்.

தொடர்ந்து தனி ஆளாகத்தான் நடந்தேன். ஓரிடத்தில் மட்டும் பாதை இரண்டாகப் பிரிந்து இடது பக்கவாட்டில் ஒன்றும் மேல் நோக்கி ஒன்றும் பிரிந்ததில், குப்பைக் காகித வழிகாட்டுதலோடு அதற்கு இணையாகச் சென்ற மேல் நோக்கி செல்லும் வழியே நடந்தேன்.

ஆறாம் மலையில் சுனை இருந்தது. அதில் நீராடிவிட்டு போகவேண்டும் என்று யாரோ சொன்னார்கள். அதன்படி குளித்து விட்டு அங்கே இருந்த சிறு சிலைகளை வணங்கிவிட்டு மேலே நடந்தேன். அந்த ஐந்தங்குல உயரச் சிலைகளின் மேல் தகரத் துண்டில் கூரை போல் நிறுவி இன்னார் உபயம் என்று மதுரைக்காரார் யாரோ எழுதி இருந்தார்.

கொஞ்சமாக இருள் சூழ்ந்து கொண்டிருந்தது. கடந்து சென்றவர்கள் எல்லாம் அப்போதே திரும்பி விட்டார்கள். சமவெளிகளின் விளக்குகள் ஒளிர்ந்தன. உச்சிக் கோவில் ஒருநிமிடத் தொலைவுக்கு அருகாமையில் வரும்வரை புலப்படவில்லை. ஓரடி உயர சிவலிங்கத்தின் முன்னே சூடன்கள் தீப்பந்தம் போல எரிந்து கொண்டிருந்தன. மனம் ஏனோ விம்மி வெடித்தது. நாலடி தள்ளி கல் குகையில் நிரைய பூக்கள் சாத்தப்பட்டு சில படங்களுடன் மற்றொரு லிங்கம் இருந்தது. பூசாரியும் இருந்தார். பக்கத்தில் பூசனைப் பொருட்கள் விற்க ஒரு சின்ன கடையும் இருந்தது. அந்த சாமியையும் கும்பிட்டுவிட்டு, படிகளில் கொஞ்சநேரம் கண் அயர்ந்தேன். யாரேனும் வந்தால் அவர்களுடன் சேர்ந்துதான் கீழே இறங்க வேண்டும். இருளில் தனியே போவது உசிதம் இல்லை. யாரும் வரவில்லை என்றால் காலையில் தான் போக வேண்டும்.

நல்ல வேளையாக சிறிது நேரத்திற்கு பிறகு திருச்சியில் இருந்து வந்த உழவர் பெருமக்களை சந்தித்தேன். சித்திரை மாத வாக்கில் மாலை போட்டுக்கொண்டு பல கோயில்களுக்கு போய் வருபவர்கள். கையில் பிரகாசமான மின்பந்தம் வைத்திருந்தார்கள். அவர்கள்தான் முதலில் பார்த்த சிலை மேல் இயற்கையாய் கூரை போல அமைந்த பாறையை விளக்கு வெளிச்சத்தில் காண்பித்தார்கள்.

அவர்களுடன் சேர்ந்து மளமளவென்று அரைமணி நேரத்தில் மூன்று மலைகள் இறங்கினேன். ஒவ்வொரு பாறையும் அவர்களுக்கு அத்துபடியாய் இருந்தது. இல்லையெனில் இருளில் என்னதான் கையில் விளக்கு இருந்தாலும் செங்குத்தான பாதையில் நடக்க முடியாது. எனக்கு முன்னே சென்று நான் அடுத்து கால் வைக்க வேண்டிய இடத்தில் ஒளிகாட்டி வழி காட்டினார்கள். வழியில் சில இடங்களில் விபூதி-மண், குங்கும-மண் என்று தோண்டி துண்டுகளில் கட்டி எடுத்துக் கொண்டார்கள். அம்மண்ணை தங்கள் வயல்களில் தூவி விடுவார்களாம்.

அவர்கள் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாததால், ஒருகடையில் அமர்ந்து இளைப்பாறியதும் தங்கள் வழியே போய்விட்டார்கள். இரண்டு மணி நேரத்தில் மலை உச்சிக்கு வந்திருக்கிறார்கள். எனக்கு நான்கு மணிநேரம் பிடித்தது. இப்போது இருட்டில் காலைத் துளாவி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து சமநிலையை பரிசோதித்து இறங்கினேன். எதிரே இப்போது மக்கள் சாரிசாரியாக வந்தார்கள். வெள்ளிக் கிழமை இரவு. சித்திரையில் முழு நிலவன்றும், வார இறுதியிலும் நிரைய கூட்டம் இருக்கும். ஒருவர் பின் ஒருவராகத்தான் செல்ல முடியும் என்று கேள்வி பட்டேன். கூரான கற்களின் ஓரங்கள் பாதங்களை பதம் பார்த்தன. இறங்கி வரும்போது இரவு 2:00 மணி. தனியாக இறங்க சுமார் ஆறு மணிநேரம் ஆயிற்று.


கீழே கோயிலுக்கு அருகில் தொட்டி நீரில் குளித்து விட்டு, தூங்க இடமில்லாமல் கோயில் சுற்றம்பலத்திலேயே படுத்து தூங்கிவிட்டேன். கொஞ்ச நேரத்தில் பெருங் கூக்குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன். கோவில் முன் இருந்த பந்தல் பகுதியில் இருந்துதான் அப்படிப்பட்ட ஓலம் கேட்டது. பெண்கள் தங்கள் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு தலை தெறிக்க ஓடி கோவிலுக்குள் வந்தார்கள். நான்கைந்து ஆட்களிடையே பெரிய மோதல் கைகலப்பு ஏற்பட்டுக் கொண்டிருந்தது. அந்தப் பெண்ணும், மற்றொரு ஆணும் ஒருவரை ஒருவர் ஏய், ஏய் என்று வெறி பிடித்தவர்கள் மாதிரி கத்திக்கொண்டிருந்தனர். எல்லோரும் திகைத்துபோய் நிற்கிறார்கள். காவலர்கள் ஒருத்தர் கூட இல்லை. சண்டையை விலக்கவும் ஆள் இல்லை. நான் ஒருவரிடம் காவல்துறையின் அவசர தேவை எண்ணைக் கேட்டு என் கைபேசியில் காவல்துறையினரை தொடர்புகொண்டேன். வெள்ளியங்கிரி கோவிலில் கைகலப்பு நடப்பதையும், வெட்டு குத்து ஆகும் போல் இருப்பதையும் சொன்னேன். மறுமுனையில் ஆட்களை அனுப்புகிறோம் என்று சொன்னார்கள்.

அவர்கள் வந்த பாடில்லை. கைகலப்பு முற்றி இப்போது ஒருவன் தடியைக்கொண்டு தாக்கியதில் ஒரு ஆள் மயங்கி விழுந்துவிட்டார். அப்போதுதான் ஒருவர் கைபேசியில் பேசிக்கொண்டே, அங்கிருந்த அப்பாவிகளை விரட்டிக் கொண்டிருந்தார். பேசுவது காவல்துறையிடம் என்பதாகப் பட்டது. அவரை அணுகி "பேசுவது காவல் துறையினரா? எப்போது வருகிறார்கள்?” என்று கேட்டேன். அவர்,

"நீங்கள்தான் அவர்களோடு பேசினீர்களா?”.
"முதலில் இந்த சாமியார்களை சோறு போடுவதை நிறுத்த சொல்ல வேண்டும். அதை சாப்பிட்டு கொழுத்துப் போய், பொழுது போகாமல் சீட்டாட வேண்டியது, சண்டை போடுவது என்று இருக்கிறார்கள். பாருங்கள், விழா முடிய இன்னும் ஐந்து நாட்கள் இருக்கின்றன. இவர்களை எப்படி நான் சமாளிப்பேன்?" என்றார். கோவில் தர்மகர்த்தா போலும்.

மயங்கி விழுந்த ஆளை யாரோ மருத்துவமனைக்கு தூக்கி போனார்கள். அனால். காவல்துறையினர் நான் காலையில் வண்டி பிடித்து வீடுக்கு கிளம்பும் நேரம்வரை வரவில்லை. அவர்கள் வந்தால் கோவிலின் மரியாதை என்னாவது?

இப்படி கண் முன் நடக்கும் அநியாயங்களை கேளாமல், துறவிகள் கண்மூடி முன்வினை தீர்க்க முனைவதில் என்ன பயன்?

அமெரிக்காவில் மத்தாப்பு கொளுத்தினால் கூட புகார் என்றால் காவல்துறையினர் ஐந்து நிமிடங்களில் சம்பவ இடத்துக்கு வந்துவிடுகிறார்கள். மன வளர்ச்சி குன்றியவர்களை தத்து எடுத்துக் கொள்ள விரும்பி பல பேர் காத்திருப்போர் பட்டியலில் இருக்கிறார்கள். இப்படி இருப்பது ஒரே வாழ்க்கை, அதை முடிந்த மட்டும் சிறப்போடு வாழுவோம் என்று பொறுப்புணர்வோடு வாழ்பவர்கள், ஏன் நல்லதுக்கும் கெட்டதுக்கும் வரட்டு தத்துவம் பேசி, விளம்பரம் தேடும் குருக்களின் பின்னால் அலைகிறார்கள் என்பது புதிர்தான்.

படம் உதவி: http://coimbatoremapley.blogspot.com/2006/04/2.html
direct source :www.Southkailash.com

இலா பவானா விந்தி நோத்தே!

Friday, January 11, 2008




அமெரிக்காவில் பள்ளிகளுக்கு பனிக்காலத்தின் போது மூன்று வார தொடர் விடுமுறை விடுகிறார்கள்.
கிறித்துமசுக்கு முந்தைய வாரத்திலிருந்து ஆங்கிலப் புத்தாண்டுவரையும் குழந்தைகளுக்கு கொண்டாட்டம்தான்.

என் மகளுக்கு சென்ற ஆண்டு இறுதியில் விடுமுறைக்கு சற்று முன்னதாக ஒரு புறத்திட்டு கொடுத்தார்கள். மாணவர்கள் அவர்கள் சார்ந்திராத ஏதேனும் ஒரு நாட்டைப் பற்றி படித்து அந்த நாடுகளில் விடுமுறை விழாக்கள் (Holiday Celebrations) எப்படி கொண்டாடுகிறார்கள் என்று விபரங்களை சேகரித்து வகுப்பில் உரையாற்ற வேண்டும். (Christmas celebrations என்று சொல்வதில்லை. அரசுப் பள்ளிகளில் மதம்சார்ந்த விடயங்கள் புகுந்து விடாமலிருக்க மிகவும் மெனக் கெடுகிறார்கள் என்பது நம் கவனத்தில் கொள்ளத் தக்கது.)

பல நாடுகளைப் பற்றி தேடி கடைசியில் நாங்கள் இத்தாலியை தெரிவு செய்தோம். ஏனெனில் இத்தாலியின் விழாக்கள் பற்றி சொல்ல நிரைய விடையங்கள் கிடைத்தன.

எழுதிய படிமத்தின் தமிழாக்கம் இதோ.

இத்தாலியில் விடுமுறை நாட்களில் கடைத்தெருக்களை அலங்கரித்தும், விழாக்கோலம் பூண்டும், தீப்பந்தம் ஏந்தி ஊர்வலம் சென்றும் கொண்டாடுகிறார்கள். இவை வெறும் மத சம்பிரதாயங்கள் அல்ல, வாகைகொள்ள முடியாத சூரியனுக்கு மரியாதை செலத்தும் முறையுமாகும். பண்டைய உரோமானிய பேரரசு பனி முடங்கல் (winter solstice) நாள் விருந்து கொடாடியதும் இதே காலக்கட்டங்களில்தான். இந்நாட்களில் இத்தாலியர்கள் விரிவான கலை அம்சத்துடன் தூளிகை காட்சிகளை வடிவமைக்கின்றனர். ஊரில் மிகச்சிறந்த காட்சியமைப்புக்கு போட்டிகளும் நடப்பது உண்டு. மக்கள் இவற்றை ஒப்பு நோக்கும் முகமாக ஒவ்வொரு இடத்திற்கும் செல்வர்.

மரத்துண்டை எரிப்பது மற்றொரு வழமையாகும். புத்தாண்டு தினம் வரை அணையாமல் இருக்க வேண்டும். இது முந்தைய ஆண்டின் பிரச்சினைகள் அழிந்து போவதை குறிக்கும். இவ்விடுமுறை நாட்களில்
பல இனிப்பு வகைகளை செய்வார்கள். பானத்தோனே-யும் (கட்டிப் பழங்கள் நிரைந்த இனியப்பம்)
பானவோர்தே-யும் (தேன், பாதாம், காசில் பருப்பு கொண்டு செய்த இஞ்சி ரொட்டி) முதன்மையானவை.

சனவரி 6ம் நாள் விசுவரூபம் (The Epiphany) என்னும் விழாவைக் கொண்டாடுகிறார்கள். அன்று குழந்தைகள் தங்கள் காலணிகளை வீட்டிற்கு வெளியே வைக்கின்றனர். பெண் சான்டா கிளாசு-வான "இலா பவானா" அவற்றினுள் பரிசுப் பொருட்களை இடுவதா அவர்கள் நம்பிக்கை. இலா பவானா கையில் பரிசு மூட்டையுடன் துடைப்பத்தை வாகனமாகக் கொண்டு வானத்தினூடே பறந்து வருபவராம். நல்ல குழந்தைகளுக்கு பரிசும் மிட்டாயும் கிடைக்கும். சேட்டை செய்பவர்களாக இருந்தால், தங்கள் காலணியில் கரித்துண்டு (charcoal) இருக்க காண்பர்.

குழந்தைகள் இலா பவானாவை வாழ்த்திப் பாடும் பாடல்:

இலா பவானா வருவார் இரவோடு .
நைந்து உடைந்த காலணிகளோடு
உரோமேனிய ஆடை அணியோடு
வாழ்க வாழ்க இலா பவானா.




Holiday Celebrations in Italy

The holidays in Italy are celebrated with fairs, joyful festivities and torch processions. These are not only religious activities but they also honor the birth of the "Unconquered Sun". This is also the period of the greatest feast of the Ancient Roman Empire, "saturnlia", (a winter solstice celebration). Italians create artistic and elaborate manger displays during this time. Often, there is a competition for the best display in the same town. People go from place to place to view and compare the displays.

Another tradition is the burning of the Yule Log, which must stay lit until the New Year's Day. This symbolizes that the old year and its problems are destroyed. In the holidays, they make a lot of sweets. The sweets include panatone, (cake filled with candied fruits) and panforte (gingerbread made with hazel nuts, honey and almonds).

On January 6th there is also a festival called "The Epiphany" celebrated. That day, children put their shoes outside for the lady Santa Claus called La Befana to put presents in. She is an old lady who rides broomstick through the air. She carries bag of candies and gifts. If the children are good, they will get presents and candies. If they are bad they will find "coal" in those shoes.

Childrens sing a poem to praise La Befana:

La Befana vein di notte
Con le scarpe tutte rotte
Col vestito alla romana
Viva,Viva La Befana!


The English translations:

La Befana comes by night
With her shoes old and broken
She comes dressed in the Roman Way
Long life to the La Befana!












தமிழ் கணினி பதிப்பகம் - free Tamil DTP

Saturday, January 05, 2008

இந்த ஆண்டு பொங்கல் விழாவிற்கு தாளிகைகள் (flyers) தயாரிக்க முனைந்ததில், Inkscape எனும் பரி மென்கலத்தைக் கொண்டு தமிழிலும் அழகான தாளிகைகளை வடிவமைக்க முடியும் என்று தெரிந்துகொண்டேன்.

உதாரணத்திற்கு கீழே உள்ள படிமத்தைப் பாருங்கள். இதில் அப்படி ஒன்றும் சிறப்பு இல்லை என்றாலும், தேர்ந்த கலைஞர்கள்
மேலும் அழகிய ஆக்கங்களைத் தர முடியும்.

நான் முயற்சித்த மென்கலன்களுள் Inkscape மட்டுமே என் தேவைகளை நிரைவு செய்தது. Microsoft Word, Open Office writer, kwrite, Scribus என்று எதுவும் சரி வரவில்லை. Inkscape-ல் கூட (Linux)லினக்சில்தான் தமிழ் எழுத்துக்களைப் பாவிக்க இயலுகிறது.


பலர் இதனை ஓவர்களும் (icons), சித்திரங்களும் வரைய ஏற்கனவே பயன் படுத்துகிறார்கள்தான். ஆனால் உதாரணத்திற்கு தமிழில் எந்த பயனீட்டையும் பார்க்கமுடியவில்லை. எனவே என் அரைகுறை படிமத்தை பொருத்துக் கொள்க.