இது கருப்பினத்தவர் வரலாற்று மாதம்

Wednesday, February 13, 2008

ஆப்ரிக்கர்கள் தங்கள் நாட்டை விட்டு குடிபெயர்ந்து எதிர்கொண்ட வாழ்க்கைப் போராட்டங்களையும், அவர்களில் சிறப்பு வாய்ந்த மனிதர்களையும் நினைவு கூறும் வண்ணம் பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் கருப்பினத்தவரின் வரலாற்று சிறப்பு மாதமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

இம்மாதத்தில் என் மகளுக்கு புறத்திட்டாக, ஏதேனும் ஒரு கருப்பினத்தவரைத் தெரிவு செய்து அவரைப்பற்றி சேகரித்த விபரங்களுடன் கூடிய உருவபொம்மை செய்துவரச் சொல்வார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன், முதல் வகுப்பில் அகஸ்தா சாவேஜ் என்ற பெண் சிற்பியைப் பற்றி எழுதினோம். அவர் செய்த சிறிய களிமண் சிற்பத்தின் படத்தை இணைத்திருந்தோம். ஒருநாள் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் (PBSன் Antique roadshow) அதே சிற்பத்தை பார்த்தோம். அது 30,000 வெள்ளிகளுக்கு மதிப்பிடப்பட்டதில் உரிமையாளர்கள் போல நாங்களும் மகிழ்ந்தோம்.



இம்முறை பெட்ரீசியா பாத் என்ற கண் மருத்துவ வல்லுனரும் லேசர் விஞ்ஞானியுமான பெண்மணியைப் பற்றி எழுதியிருக்கிறோம். இவர் லேசர்பேக்கோ என்னும் கண்டுபிடிப்பிற்கு காப்புரிமை பெற்றுள்ளார். பூ விழுந்த விழி ஆடியை லேசர்மூலம் எளிதாக நீக்க உதவும் என்று தெரிகிறது. இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.



தெரிவு செய்ய வேண்டி மேலும் பல சிறந்த மனிதர்களைப்பற்றி படித்து தெரிந்து கொள்ள முடிந்தது. PBSலும் சென்ற வாரம், நாகரீகமாக வாழ்ந்த அப்துல் ரஹ்மான் என்ற ஆப்ரிக்க இளவரசன் அடிமையாக பிடிபட்டு அன்றைய (1788-1828) அமெரிக்காவின் கேவலமான சூழலில் இருந்து 40 ஆண்டுகளுக்குப் பின் தன் நாட்டிற்கு திரும்பிய உண்மைக் கதையை (Prince Among Slaves) மிகவும் சிறப்பான முறையில் ஆவணப் படமாக வெளியிட்டார்கள்.

அடிமைகளாக அழைத்து வரப்பட்டவர்கள் இன்று மீண்டு வந்துவிட்டார்கள். எல்லாரும் சமம் என்று உணர்ந்ததால், ஏதாவது ஒருவகையில் (பள்ளி தேர்ச்சி, வருமானம்) ஒரு சமூகத்தின் பங்கீடு சரியான விகிதத்தில் இல்லை என்றால் திட்டத்தில் என்ன கோளாறு என்றுதான் அலசுகிறார்கள். எல்லா குடியிருப்புகளிலும், பணிஇடங்களிலும் யாரையும் நாடு, மொழி, நிற பேதம்பார்க்ககூடாது என்று சட்டம் இருக்கிறது.

ஆனாலும் சமயவழிபாட்டில் அரசு குறுக்கிடக்கூடாது என்றக் கட்டுப்பாட்டினால், இந்துக் கோவில்கள் பலவற்றில் தமிழ் தெய்வம் முருகனுக்கும்,தென்னிந்தியர்களுக்கும் எதிராக மறைமுகத் தீண்டாமை நிலவுகிறது. சில சமயங்களில் வாடகை வண்டிஓட்டும், உணவு விடுதி நடத்தும் இந்தியர்கள் வாடிக்கையாளர்களிடம் பாரபட்சம் காட்டி பிடிபட்டு கடுமையான கண்டனத்திற்கும் தண்டனைக்கும் உள்ளாகிறார்கள். ஆனால் கோவில் கூடாரங்கள் இன்னும் மாட்டவில்லை.

0 மறுமொழிகள்:

Post a Comment