ரவிக்கை மறைக்கும் நாராயண தரிசனம்

Monday, February 11, 2008

சென்ற ஆண்டு வெளிவந்த திருவின் இடுகையில் சேரலப்பெண்டிர் ரவிக்கை அணியக் கட்டுப்பாடு இருந்தைப் படித்து அதிர்ந்து போகாதவர்கள் இருக்கமுடியாது். கொஞ்ச நாள் முன்பு சில மலையாள நண்பர்களை சந்திக்க நேர்ந்தது. அப்போது அவர்கள் ஒரு முப்பது ஆண்டு முன்பு வரை இந்தக் கொடுமை நடைமுறையில் இருந்ததாக சொல்லி வருத்தப்பட்டார்கள்.

மற்றொருவரின் தந்தையும் நாங்கள் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தார். எனக்கு முன்பே பழக்கமானவர். வேத துதி வகுப்புக்கு ஒரு முறை அழைத்து போயிருக்கிறேன். அங்கே நாராயணீயத்தின் மகிமை பற்றி சொல்லி சில பாக்களையும் பாடினார். அவர், "இதை என்ன பெரிய விடயமாக பேசுகிறீர்கள். அவர்கள் கோபியர் வழித்தோன்றல்கள். கோபியப் பெண்கள் உடையில்லாமல் யமுனையில் குளித்து அதை மாசுபடுத்தினார்கள். அதற்கு தண்டனையாகத்தான் கண்ணன் அவர்களுடைய உடைகளை எடுத்துக்கொண்டான். அதனால்தான் அவர்கள் ரவிக்கை அணிவதில்லை" என்றார். நல்ல வேளையாக மேலும் உளறும் முன் அவர் மகன் அவரை அழைத்துக்கொண்டு போய்விட்டார்.

ஆக நம் பெண்கள் ரவிக்கை அணியாமல் இருந்தது தலைமுறை தலைமுறையாக நேர்த்திக்கடனுக்காக வேண்டிதான். இவர்களும் அவர்களைப் பார்த்து பக்தி பரவசமடைந்து வந்தார்கள். இப்போது எல்லாம் கெட்டுவிட்டது.

நாளை என்பதில்லை நாரணனுக்கே, கூப்பிட்ட நொடியில் பக்தர்களைக் காப்பான் என்று அளக்கும் இவர்கள் ஏன், கதையில் பல யுகங்களுக்கு முன் அவன் களவாணித்தனமாக ஒரு முறை கடிந்தக் குற்றத்தைக் காரணம் காட்டி கால காலமாக ஒரு வம்சத்தையே தண்டிக்க வேண்டும்.

நேரில் நடக்கும் கொடுமைகளைக் கண்டு குத்துக்கல்லாக உட்கார்ந்திருந்தாலும் பரவாயில்லை. வக்காலத்து வாங்காமல் இருக்கலாமே.

திருத்தந்தை கத்தோலிக்கர்களின் 2000 ஆண்டுகாலத் தவறுகளுக்கு மன்னிப்புக் கோரியது போல கோவில்களும் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் மக்களிடம் மன்னிப்புக் கேட்கும் நிலை வரும்.

0 மறுமொழிகள்:

Post a Comment