அமெரிக்காவில் சுவிசேசக் கொள்ளைகள்

Monday, January 30, 2012

பீட்டர் பாப்பாஃப் - அமெரிக்கவில் சுவிசேசக்கூட்டங்கள் நடத்துபவன். கடவுளுடனான அவனுடைய நெருக்கம் ஆபாரமானதாக இருந்தது. கடவுள் அவனுக்கு மட்டும் அசரீரியாக ஒலிக்க, கூட்டத்தில் ஒருவரின் பெயரைச் சொல்லி அழைத்து, கதவு எண் உட்பட அவருடைய வீட்டுமுகவரி, அவர்களுக்கு என்னப் பிரச்சனை என்று புட்டுப்புட்டு வைப்பவன். கடவுளருளின் வடிகாலாகி தன் பரிசத்தால், தன் பேச்சால் பக்தர்களின் குறைகளை உடனடியாக தீர்த்து வைத்தான். கடவுளின் கருணையை வேண்டி அவன் நடத்தியக் கூட்டங்களுக்கு ஏராளாமான மக்கள் வந்தனர். வந்த வருமானத்தில் பெரும் செல்வமும் புகழும் பெறலானான்.

ஜேம்ஸ் ரான்டிக்கு இப்படிப் பட்டவர்களின் மேல் எப்போதுமே ஒரு சந்தேகக் கண். பார்வையாலேயே கரண்டிகளை நெழித்த யூரி கெல்லர், அதேபோல் புத்தகத்தைத் தொடமலேயே பக்கங்களை புரட்டிய ஜேம்ஸ் ஹைட்ரிக் பொன்றோரின் திருட்டுத்தனங்களை தொலைக்காட்சி நேரிடை நிகழ்ச்சிகளில் அம்பலப்படுத்தியவர். யாரேனும் தமக்கு தெய்வீக சக்தி இருப்பதாக சொல்வதை நிரூபித்தால் அவர்களுக்கு $1,000 காசோலை வழங்குவதாக 1964லேயே பகிரங்கமாக பந்தயம் வைத்தவர். அந்த பரிசுத்தொகை இப்போது $1,000,000 (1 மில்லியன் டாலர்). ஆனால் இதுவரை யாரும் வெல்லவில்லை. நம் நாட்டு மக்களுக்கோர் அறிய வாய்ப்பு. போட்டியில் யார்வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். எல்லா பொன்னும் உங்களுக்குத்தான். மேல் விவரங்களுக்கு சொடுக்கவும்

அவருக்காக பீட்டரை கண்காணிக்க கூட்டத்தோடு கூட்டமாக போனவர்கள் கவனித்த ஒரு விசயம் அவன் ஏதோ திருட்டுத்தனம் செய்கிறான் என்ற சந்தேகத்தைக் கூட்டியது. வரும் பக்தர்களில் முடமானவர்களை நடக்கவும், குருடர்களை கண் பார்க்கவும் வைத்த அவனது காதுகளில் காதுகேட்கும் கருவி இருந்தது. அவன்மூலம் எல்லோருக்கும் உதவிய தெய்வம் அவனுக்கு உதவவில்லையா? அல்லது இது ஏதேனும் தந்திரமா? என்று அறிய திட்டமிட்டார்கள். கால் ஊனமடைந்தவர் போல ஒருவரை சக்கர நாற்காலியில் அமர்த்தி அதில் வானொலி ஏற்பியையும் அதனுடன் ஒலிப்பதிவு செய்யும் சாதனங்களையும் மறைத்துவைத்து அனுப்பினார்கள். ஆச்சரியம் என்னவென்றால் இப்போது பீட்டருக்குக் கேட்ட குரல் வானொலியிலும் கேட்டது. ஆனால் அந்த குரல் தெய்வத்தினுடையது அல்ல, பீட்டரின் மனைவி எலிசபெத்தினுடையது. எலிசபெத் அருகில் இருந்த அறையிலிருந்துகொண்டு பக்தர்கள் நிரப்பியிருந்த படிவங்களிலிருந்த விசயத்தை தந்தியில்லா ஒலிபரப்பு செய்ய, பீட்டர் தன் காதுகேட்கும் கருவியில் கேட்டு, எதோ தெய்வத்திடம் இருந்து செய்தி வந்தது போல நடிக்கிறான் என்று கண்டார்கள். அந்த ஒலிபரப்பை பதிவு செய்துகொண்டார்கள்.

ஒரு தொலைக்காட்சியில் பீட்டரின் நிகழ்ச்சியை ஒளிபரப்பி கூடவே அவன் மனைவி சொல்வதையும் ஒலிபரப்பினார்கள். பீட்டரின் தகிடுதத்தங்கள் உலகுக்கு அம்பலமாகின. பீட்டரின் தொழில் நசிந்து திவாலானது. இது நடந்தது சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னால். அப்போது அவனுடைய வருமானம் ஆண்டுக்கு 4 மில்லியன் டாலர்கள். இது அமெரிக்கா, அத்தோடு அவன் காலி என்று நினைத்தால் அதுதான் இல்லை. இப்போது மீண்டுவந்து அதே ஏமாற்று வேலையில் வருடத்திற்கு 23 மில்லியன் வருமானமாம். என்ன சட்டத்தின் பிடியில் சிக்காமல் சாதுரியமாக கொள்ளை அடிக்கிறான்.

ஜேம்ஸ் எப்போதும் போல யாராவது திருந்தமாட்டார்களா என்று தன் பணியை செய்துகொண்டு இருக்கிறார். இணையத்தில் James Randi என்று தேடிப் பாருங்கள்.

4 மறுமொழிகள்:

சுவடுகள் said...

வணக்கம்.
புதுத்தகவல்.
அனைத்து நாடுகளிலும் இவ்வாறானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.ஆனால்,மக்களும் இவ்வாறானவர்கலிடம் ஏமாந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.என்ன செய்வது?

ஏமாறுபவன் இருக்கும்வரை ஏமாற்றுபவன் வளரத்தானே செய்வான்.

குலவுசனப்பிரியன் said...

//ஏமாறுபவன் இருக்கும்வரை ஏமாற்றுபவன் வளரத்தானே செய்வான்.// கேட்டால், ஏமாற்றுகிறோம் என்று சொல்லித்தான் ஏமாற்றுகிறோம் என்கிறார்கள். சட்டப்படி ஒன்றும் செய்ய முடிவதில்லை. பக்தி பரவசத்தில் மக்களுக்கு தாம் என்ன செய்கிறோம் என்பதே புரிவதில்லை. உள்ளதையும் தொலைத்து நிற்கிறார்கள்.

ஜேம்ஸ் தனக்கு அளிக்கப்பட்ட பரிசுத்தொகைகளை, திருடர்கள் தம்மீது போட்ட அவதூறு வழக்குகளை எதிர்த்துப்போராட செலவிடவேண்டியதாயிற்று. இவர்கள் முன் சாமானியர்கள் எம்மாத்திரம்?

Anonymous said...

ஐயோ அமெரிக்கா போல மதவாதிகள் கோடியில் அள்ளும் நாடுகள் இல்லை எனலாம் ( இந்தியா, சௌதி எல்லாம் விதி விலக்கு ஹிஹி )

அங்கு எண்ணற்ற சுவிசேசிகள் பிரசங்கம் பண்ணி கோடி கோடியாக அள்ளுகின்றார்கள், ஜோச் மேயர், பில்லி கிரஹம், பென்னி ஹின் ( இவரு நம்மாளு இந்தியர் ), ஓரல் ராபர்ட்ஸ், என எண்ணிக்கை ஆயிரத்தையும் தாண்டும் ... இவர்கள் செய்யுள் அலப்பறைகள், பறிப்புக்கள், பேயோட்டங்கள், மருந்துகள், சுகப்படுத்துதல்கள், புத்தகம், சிடி விற்பனைகள், காணிக்கைக் கொள்ளைகள்.. ஐயகோ.. முடியாதுங்க .. மக்களாப் பார்த்து திருந்தாவிட்டால், பகல் கொள்ளையைத் தடுக்க முடியாதுங்கோ !

குலவுசனப்பிரியன் said...


//ஐயோ அமெரிக்கா போல மதவாதிகள் கோடியில் அள்ளும் நாடுகள் இல்லை எனலாம்//
உண்மைதான் இக்பால். இங்கே அற்ப குற்றம் செய்பவர்களுக்கே எதிர்காலம் கேள்விக்குறியாகும்போது, எசகுபிசகாக மாட்டிக்கொண்ட பாப்பாஃப் திரும்பவும் தலையெடுக்க முடிவது, மக்களின் கண்மூத்தனமான பக்தி பெருக்கெடுத்து ஓடுவதால்தான்.

Post a Comment