விடியல்
Friday, January 20, 2012Labels: மானுடம்
சனிக்கிழமை இரவு, என் மனைவியின் அனத்தல் அதிகமாகி இருந்தது. ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை வலித்தால் மருத்துவமனையை அழைக்கச் சொல்லி இருந்தார்கள். கர்பகாலம் நாற்பது வாரம் முடிய இன்னும் மூன்று வாரங்கள் இருந்தன. சென்றமுறை குறித்த நாள் கடந்து மேலும் பத்து நாட்கள் ஆனபின்னும் வலி ஏற்படவில்லை. அறுவை சிகிச்சையில்தான் மகள் பிறந்தாள். பொதுவாக அடுத்தக்குழந்தையும் அதேபோல அறுவை சிகிச்சையில்தான் பிறக்கும் என்பது பலருடைய அனுமானம். எனவே மருத்துவமனைக்கு வீணாகப் போய் வரவேண்டுமே என்று முனகலை சட்டை செய்யாமல் இருந்தேன். அவள் சித்தியை அழைத்து புகார் செய்தாள். அவர் கேட்டுக்கொண்டதாலும், இப்போது வலி ஏற்படும் இடைவெளி மிகவும் குறைந்திருந்ததாலும், மருத்துவமனையை அழைத்தேன். விசாரித்துவிட்டு உடனே வரச்சொன்னார்கள். இம்முறை அவளுடையப் பெற்றோர்கள் வரப் பயண ஏற்பாடு செய்து இருந்தோம். இன்னும் இரண்டு வாரங்கள் கழித்துத்தான் வருவார்கள். எனவே உதவிக்கு வேறு யாரும் இல்லை. மகள் நண்பர் வீட்டில் தோழிகளோடு வார இறுதி நாட்களைக் கழிக்கச் சென்றிருந்தாள்.
அவள் பிறந்த அதே மருத்துவமனைதான். அதனால்தானோ என்னவோ, வண்டியை மருத்துவமனை வளாகத்துள் செலுத்தும்போது பிரமை போல இருந்தது. அந்த இரவிலும் செவிலியர்கள் சுறுசுறுப்பாக இயங்கினார்கள். சந்தேகமில்லை அது பிரசவ வலிதான் என்று உறுதிசெய்தார்கள். எந்தவகை மயக்க மருந்து வேண்டும் என்று கேட்டு குறித்துக்கொண்டார்கள். உடனே படுக்கை தயாரானது. பரிசோதித்ததில் ஏற்கனவே ஆறு அங்குலத்திற்கு தசை தளர்ந்து இருந்தது தெரிந்தது. இயற்கை பிரசவத்திற்குத்தான் வாய்ப்பு. மூன்று நான்கு செவிலியர்கள் இருந்தனர், எல்லோரும் பெண்கள். நான் வலப்புறம் நின்று தலையைக் கோதிக் கொடுத்துக்கொண்டு இருந்தேன். இரண்டுபேர் உதவியாக கால்களை மடக்கி பிடித்துக்கொள்ள, மற்றொருவர் அவளுக்கு உந்தித்தள்ள கட்டளை செய்துகொண்டிருந்தார். சென்றமுறை சிறிய அழுத்தத்திற்கே ஆர்ப்பாட்டம் செய்தவள் முழு வலியை எப்படி பொருத்துக்கொள்ளப்போகிறாள் என்று எனக்கு பெரும் கவலை ஆயிற்று. எந்தவித மயக்க மருந்தும் கொடுக்க இயலாது, அதற்கான காலம் கடந்துவிட்டது என்றார்கள். வேறு வழி இல்லை, பொருத்துத்தான் ஆகவேண்டும். மூச்சுப் பயிற்சிபோல ”எங்கே மூச்சை இழு - 1,2,3 - இப்போது தள்ளு” - என்று தாளகதியில் சொல்ல, பல்லைக் கடித்துக்கொண்டு முக்கினாள். சிறிது சிறிதாக குழந்தையின் உச்சந்தலை தென்படத்தொடங்கியது. இறுதியாக ஒருமுறை சக்தியை எல்லாம் திரட்டி முக்கியபோது நடுவில் உட்கார்ந்திருந்தவரின் முகத்தின் மேல் நீர் பீய்ச்சி அடித்தது. வாயையும், கண்களையும் அனிச்சையாக சட்டென்று மூடி முகத்தைத் திருப்பிக்கொண்டார். ஆனாலும் கால்களைப் பிடித்திருந்த பிடியை விடவில்லை. முகம் முழுதும் தொப்பலாக நனைந்துவிட்டது. மற்றொருவர் தயாராக இருந்த துவாலையை வைத்து சுத்தமாக துடைத்துவிட்டார். இது சர்வசாதாரணமாக நடக்கும் போலும். அருவெறுப்போ, கோவமோ இல்லாமல், நன்றாக முக்கினாய் (தட் வாஸ் அ குட் புஷ்) என்று மட்டும் சொன்னார். இந்த இறுதி முயற்சியில் என் மனைவி அயர்ந்துவிட்டாள். மருத்துவரைக்கூட்டி வந்தார்கள். நாங்கள் இம்முறை தெரிவு செய்திருந்த பெண் மகப்பேறு மருத்துவர் அவர். தசைக்கருகில் மந்த ஊசி போட்டுவிட்டு நெடுவாக்கில் ஒரு அங்குலம் கொய்துவிட்டார். அடுத்த நிமிடத்தில் மற்றொரு உந்தலில் குழந்தை பிறந்தது. மருத்துவமனைக்கு வந்து அரைமணி நேரத்திற்குள், யாருக்கும் பெரிய துன்பம் தராமல் எங்கள் செல்ல மகன் பிறந்தான். அவன் அழவேயில்லை.
தொப்புள் கொடியை கத்தரித்து பிரித்தபின் அந்த அறையிலேயே இருந்த குழந்தை நல மருத்துவர் அவனை சோதனை செய்ய ஆரம்பித்தார். நான் என் மனைவிமேல் கண்ணாய் இருந்தேன். மகப்பேறு மருத்துவர், கருக்குடையைக் கொக்கிவைத்து இழுத்து அகற்றினார். என்னை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு கொய்துவிட்ட பகுதியில் தையல் போட்டார். குழந்தை நல மருத்துவர், என்மகனிடம் ஏதேனும் வித்தியாசம் தெரிகிறதா என்று கேட்டார். எனக்கு எதுவும் தெரியவில்லை என்றேன். ”இங்கே பார். கையை இழுத்து விட்டால், இயல்பாக திரும்ப மடக்கிக் கொள்ள மாட்டேன் என்கிறான். கழுத்துப்பகுதியில் நீர் தேங்கினார்ப் போல தளர்ந்து இருக்கிறது. கால் கட்டை விரலுக்கும் மற்ற விரல்களுக்கும் இடையில் அதிக இடைவெளி இருக்கிறது.” என்றார். ”என் மகளை விடவும் உயரமும், எடையும் சிறிது குறைவு. மற்றபடி முகம் அவள் குழந்தை முகம்போலவே இருக்கிறது. எனக்கு வேறெதுவும் தெரியவில்லை. மூன்று வாரங்கள் முன்பே பிறந்ததால், வளர்ச்சியில் சிறிய வித்தியாசம் தெரிவது இயற்கை அல்லவா”, என்றேன். சிறிது நேரப் பரிசோதனைக்குப் பிறகு ”அவனைப் பற்றிக் கவலையாய் இருக்கிறது” என்றார். உடல் வெப்பம் குறைவாக உள்ளது என்று சொல்லி பாதுகாப்பு அறைக்கு எடுத்துப்போனார்கள். நாங்கள் வேறு அறைக்குச் சென்றோம்.
என் மகளைப்பற்றி அறிந்தவர்கள், நீங்கள் புண்ணியம் செய்தவர்கள் என்பார்கள். நாங்கள் வேத வகுப்புகளில் செய்யும் பாராயணங்கள்தான் அத்துணை அமைதியும், அறிவும் கூடிய குழந்தையை தந்துள்ளன என்று சொல்வார்கள். அப்போதும் வெள்ளிக்கிழமைதோறும் நடக்கும் வகுப்புக்கு போய்க்கொண்டிருந்தோம். மேலும், அனுதினமும் காலை குளித்து, சாமிப்படங்கள் முன் விளக்கேற்றி, நானும் மகளும் ஒரு சில சுலோகங்களும் சொல்லிக்கொண்டிருந்தோம். மகள் பிறந்தபின் இந்த மூன்று ஆண்டுகளில் நாம் என்ன தவறு செய்தோம். என் மகனுக்கு ஒன்றும் நேர வாய்ப்பில்லை. நான் புலால் உண்பதை திருமணமான முதலே மனைவிக்காக நிறுத்திவிட்டேன். மது, புகைப் பழக்கம் இல்லை. இருவரும் காப்பி, டீ கூட அருந்துவது இல்லை. அதனால் பெரிய பாதிப்பு எதுவும் இருக்கமுடியாது என்று நினைத்துக்கொண்டேன்.
முதலில் யாரோ ஒருவர் உங்கள் மகனுக்கு டௌன்-சின்ட்ரோம் இருக்கிறது என்றார்கள். அப்படியென்றால் எனக்கு என்னவென்று தெரியவில்லை. மனம் ஊக்கமில்லாமல் இருப்பது என்று நினைத்துக்கொண்டேன். காலையில் மகப்பேறு மருத்துவர் வந்து, முன்கூட்டியே இந்த குறையைக் கண்டறிய முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்தார். நான் ”அதனால் என்ன, இது என்ன குணப்படுத்த முடியாதக் குறையா?” என்றேன். குணப்படுத்துவது இருக்கட்டும் அவன் நல்லபடியாக வீட்டிற்குப் போவதைப் பார்ப்போம் என்றார். அன்று காலை நான்மட்டும் வீட்டிற்குப்போய் இணைய தளங்களில் தகவல் திரட்டும்போதுதான் இந்தக்குறையின் தாக்கம் புரிந்தது.
திரும்பவும் மருத்துவமனைக்குப் போனபோது, மனைவியிடம் முழுவிவரமும் சொல்லவில்லை. குழந்தை இன்னும் பாதுகாப்பு அறையில்தான் இருந்தான். உடல் வெப்பம் எப்போதும் போல் 96 பாகைகள்தான் (ஃபாரன்ஹீட்) இருந்தன. குழந்தையால் அம்மாவிடம் பால்குடிக்க முடியவில்லை. உதடுகள் கவ்வி உறிஞ்சிகுடிக்கத் தசைகளில் வலு இருக்கவில்லை. குப்பியில் பிடித்து புட்டிப்பாலாக ஊட்டினாலும் குடிக்கவில்லை. அருகில் இருந்த செவிலியர் சிலர் தங்களுக்குள், ”இப்படிப்பட்ட குழந்தை எனக்கு இருந்தால், நான் வைத்துக் கொள்ளமாட்டேன். எங்காவது ஒப்படைத்துவிடுவேன்” என்று எங்கள் காது பட பேசிக்கொண்டார்கள். அன்று மாலை மரபணு சிறப்பு மருத்துவரை மருத்துவமனையிலேயே சந்தித்தோம். அவரிடம் நான் அறிந்த விசயங்களை பூடகமாக சொன்னேன். ”அறிவுத்திறன் குறைவாக இருக்கும், இன விருத்தி அணு செயலற்று இருக்கும்.” என்றேன். “ஆம், அவனால் பிள்ளை உண்டாக்கமுடியாது”, என்று தெளிவாக்கினார். என் மனைவி அழுதாள். நான் தனிமையில் அழுததைவிடவும் குறைவுதான்.
திரும்பி எங்கள் அறைக்கு செல்லும் வழியில்தான் எங்கள் மகனை கண்ணாடிக்கூண்டில் வைத்திருந்தார்கள். அவனைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் என் மனைவி வெளியேறினாள். அவளுக்கு மருத்துவமனையின் கண்காணிப்பு தேவையில்லாததால் அன்று இரவே வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள். குழந்தை மட்டும் மருத்துவமனையிலேயேதான் இருந்தான். உடல் வெப்பம் இன்னும் குறைவாகவே இருந்தன. வீட்டில் நாங்கள் தனிமையில் இருந்தபோது மனம் உடைந்துபோய்க் கிடந்தோம். ஆனாலும் நான்கு மணிக்கு ஒருமுறை குழந்தைக்குப் பாலூட்ட வேண்டுமாதலால், குப்பிகளில் எந்திரத்தை வைத்து பால் சேகரித்து எடுத்துக்கொண்டு மறுநாள் அதிகாலையில் மருத்துவமனைக்குப் போனோம். நேற்று காலையில் இருந்த அதே தாதிப்பெண்தான் இருந்தாள். ”ஏனோ தெரியவில்லை எதுவுமே சாப்பிடமாட்டேன் என்கிறான்”, என்று கைவிரித்தாள். நானும் முயன்று பார்த்தேன். புட்டிக்காம்பின் முனையை வாயில் திணிக்கவேண்டி இருந்தது. என்ன செய்தாலும் பால் சொட்டுச் சொட்டாக கீழே வழிந்ததேஅன்றி அவன் வயிற்றுக்குள் போகவில்லை. இயல்பாகவே தளர்ந்த உடல், சாப்பிடவும் இல்லை என்றால் எப்படி தேறும். குழந்தைகள் தம் மீது அன்பு செலுத்த யாரும் இருக்கமாட்டார்கள் என்று உணர்ந்தால் வயிற்றிலேயே தன்னை மாய்த்துக்கொள்ளும் என்று கேட்டிருக்கிறேன். சில குழந்தைகள் பிறந்த பின் தாய்பாசம் கிட்டாமல் போனால் மரித்துப்போவதும் உண்டாம். சில மாதங்கள் முன்புதான் நண்பர் ஒருவரின் கைக்குழந்தை ஒன்று காப்பகத்தில் எந்தக்காரணமும் தெரியாமல் உறக்கத்திலேயே இறந்துபோனது. எங்கள் மகனை எப்படி வளர்க்கப்போகிறோம் என்கிற எங்களைப்பற்றிய சுயநலம்தான் அதுவரை மேலோங்கி இருந்தது. ஆனால் இப்போதுதான் எனக்கு அவனைப்பற்றிய கவலை என்னை முழுமையாக சூழ்ந்தது.
அன்று மாலை மறுபடியும் மருத்துவமனைக்கு போனபோதுதான் என் நம்பிக்கை துளிர்விட்டது. குழந்தை வேறு ஒரு தாதிப்பெண்ணின் கைகளில் மலர்ச்சியாக இருந்தான். என்னிடம் இப்படி அவன் முகத்தைக் கீழ்நோக்கி இருப்பது போல முதுகை நம்மோடு ஒட்டி அணைத்துக்கொண்டு பாலூட்டினால் குடிக்கிறான் என்று காண்பித்தாள். பொதுவாக குழந்தைக்கும் நமக்கும் இயல்பில் அசவுகரியமான நிலை. ஆனால் இவனுக்கு அதுதான் பிடித்திருந்தது. புட்டிப்பால் மளமளவென்று என் துயரம்போன்று காலியாயிற்று.
”உங்கள் பெயர் என்ன?”, வென்றேன். “விடியல்”, என்றாள்.
(குறிப்பு: ஆங்கிலப் பெயர் ’டான்’ - Dawn. குடும்பப் பெயர் தெரியவில்லை)
Subscribe to:
Post Comments (Atom)
3 மறுமொழிகள்:
மனம் நெகிழ்ச்சியாக இருக்கிறது. குழந்தை நல்லா இருக்கட்டும் என இறைவனிடம் மன்றாடுகின்றேன்.
பத்மா விவரணை அருமை
துளசி,
நாங்கள் நினைத்தது போல் இல்லாமல் அவனால் யாருக்கும் எந்தக்குறையும் இல்லை. எப்போதும் விளையாட்டுத்தனமாகவே இருக்கிறான். கலிஃபோர்னியா யுவதிபோல இதுபோல இன்னொருக் குழந்தையை தத்தெடுத்துக் கொண்டால் இன்னும் நன்றாக இருக்கும்.
பழமை,
இருவருக்கும் என் நன்றி.
Post a Comment