சாடிஸ் - செலவில்லாமல் நீர் சுத்திகரிக்கும் முறை
Monday, January 30, 2012Labels: கல்வி, நுட்பியல்
SODIS - Solar Disinfection (சூரியஒளி சுத்திகரிப்பு) என்பதின் சுருக்கம். சுவிட்சர்லாந்து நாட்டு ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய எளிய நீர் சுத்திகரிக்கும் முறை. அவர்கள் வளரும் நாடுகளில் உள்ள மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீர் கிடைக்க 10 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்து வருகிறார்கள். நம்நாட்டு மக்களுக்கும் இம்முறை பெரிதும் உதவும்.
தேவையானது தண்ணீர் புட்டிகளும் சூரிய ஒளியும்தாம். நிறமற்ற PET (Polyethylene terephthalate) வகை பிளாஸ்டிக் பாட்டில்களை உபயோகிப்பது நல்லது. பயப்பட வேண்டாம், நம்மூரில் இப்போது சர்வசாதாரணமாக கிடைக்கும் 1 அல்லது 2 லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் அந்த வகைதாம். அந்த புட்டிகளில் குடிநீரை பிடித்து சூரிய வெளிச்சத்தில் 6 மணிநேரம் வைத்து எடுத்தால் போதும். வெயில் அதிகம் இருக்கவேண்டுமென்பதில்லை. வெளிச்சம் இருந்தால் போதும். சூரிய ஒளியிலுள்ள புறஊதாக்கதிர்கள் நீரில் இருக்கும் பாக்டீரியா, வைரஸ் மற்றும் ஒட்டுண்ணிகளை அழித்துவிடுகின்றன. உடனே உட்கொள்ள ஆரம்பிக்கலாம்.
இம்முறையின் எந்த அளவு செயல்படுகிறது என்று அறிவதுதான் இந்த ஆண்டு பள்ளியில் மகள் எடுத்துக்கொண்ட அறிவியல் புறத்திட்டு. கொதித்து ஆறிய, சுத்திகரிக்கப்பட்ட, மற்றும் சுத்திகரிக்காத நீரின் மாதிரிகளை - பெத்திரிகிண்ணங்களில் சோதனை செய்தோம்.
எதிர்பார்த்தது போல கொதிக்கவைக்கப்பட்ட நீரில் எந்த கிருமிகளும் இல்லை. சுத்திகரிக்கப்பட்ட நீரில், வெறும் தண்ணீரைவிட பாக்ட்டீரியா எண்ணிக்கை குறைவாக இருந்தது. நாங்கள் சோதித்தது குடிநீருக்கு பதில் வீட்டின் பின் இருக்கும் நீர்குட்டையிலிருந்து மாதிரிகளை சேகரித்ததால், சுத்திகரிப்பு அவ்வளவாக செயல்படவில்லை. பாதுகாக்கப்பட்ட நீர் கிடைக்காத தருணங்களில், நீரை கொதிக்கவைக்கவும் இயலவில்லை எனில் குறைந்தபட்சம் சாடிஸ் முறையை பயன்படுத்தி நீரை சுத்திகரித்து உட்கொள்ளல் நலம்.
அமெரிக்காவில் சுவிசேசக் கொள்ளைகள்
Labels: பக்தி, மானுடம்
பீட்டர் பாப்பாஃப் - அமெரிக்கவில் சுவிசேசக்கூட்டங்கள் நடத்துபவன். கடவுளுடனான அவனுடைய நெருக்கம் ஆபாரமானதாக இருந்தது. கடவுள் அவனுக்கு மட்டும் அசரீரியாக ஒலிக்க, கூட்டத்தில் ஒருவரின் பெயரைச் சொல்லி அழைத்து, கதவு எண் உட்பட அவருடைய வீட்டுமுகவரி, அவர்களுக்கு என்னப் பிரச்சனை என்று புட்டுப்புட்டு வைப்பவன். கடவுளருளின் வடிகாலாகி தன் பரிசத்தால், தன் பேச்சால் பக்தர்களின் குறைகளை உடனடியாக தீர்த்து வைத்தான். கடவுளின் கருணையை வேண்டி அவன் நடத்தியக் கூட்டங்களுக்கு ஏராளாமான மக்கள் வந்தனர். வந்த வருமானத்தில் பெரும் செல்வமும் புகழும் பெறலானான்.
ஜேம்ஸ் ரான்டிக்கு இப்படிப் பட்டவர்களின் மேல் எப்போதுமே ஒரு சந்தேகக் கண். பார்வையாலேயே கரண்டிகளை நெழித்த யூரி கெல்லர், அதேபோல் புத்தகத்தைத் தொடமலேயே பக்கங்களை புரட்டிய ஜேம்ஸ் ஹைட்ரிக் பொன்றோரின் திருட்டுத்தனங்களை தொலைக்காட்சி நேரிடை நிகழ்ச்சிகளில் அம்பலப்படுத்தியவர். யாரேனும் தமக்கு தெய்வீக சக்தி இருப்பதாக சொல்வதை நிரூபித்தால் அவர்களுக்கு $1,000 காசோலை வழங்குவதாக 1964லேயே பகிரங்கமாக பந்தயம் வைத்தவர். அந்த பரிசுத்தொகை இப்போது $1,000,000 (1 மில்லியன் டாலர்). ஆனால் இதுவரை யாரும் வெல்லவில்லை. நம் நாட்டு மக்களுக்கோர் அறிய வாய்ப்பு. போட்டியில் யார்வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். எல்லா பொன்னும் உங்களுக்குத்தான். மேல் விவரங்களுக்கு சொடுக்கவும்
அவருக்காக பீட்டரை கண்காணிக்க கூட்டத்தோடு கூட்டமாக போனவர்கள் கவனித்த ஒரு விசயம் அவன் ஏதோ திருட்டுத்தனம் செய்கிறான் என்ற சந்தேகத்தைக் கூட்டியது. வரும் பக்தர்களில் முடமானவர்களை நடக்கவும், குருடர்களை கண் பார்க்கவும் வைத்த அவனது காதுகளில் காதுகேட்கும் கருவி இருந்தது. அவன்மூலம் எல்லோருக்கும் உதவிய தெய்வம் அவனுக்கு உதவவில்லையா? அல்லது இது ஏதேனும் தந்திரமா? என்று அறிய திட்டமிட்டார்கள். கால் ஊனமடைந்தவர் போல ஒருவரை சக்கர நாற்காலியில் அமர்த்தி அதில் வானொலி ஏற்பியையும் அதனுடன் ஒலிப்பதிவு செய்யும் சாதனங்களையும் மறைத்துவைத்து அனுப்பினார்கள். ஆச்சரியம் என்னவென்றால் இப்போது பீட்டருக்குக் கேட்ட குரல் வானொலியிலும் கேட்டது. ஆனால் அந்த குரல் தெய்வத்தினுடையது அல்ல, பீட்டரின் மனைவி எலிசபெத்தினுடையது. எலிசபெத் அருகில் இருந்த அறையிலிருந்துகொண்டு பக்தர்கள் நிரப்பியிருந்த படிவங்களிலிருந்த விசயத்தை தந்தியில்லா ஒலிபரப்பு செய்ய, பீட்டர் தன் காதுகேட்கும் கருவியில் கேட்டு, எதோ தெய்வத்திடம் இருந்து செய்தி வந்தது போல நடிக்கிறான் என்று கண்டார்கள். அந்த ஒலிபரப்பை பதிவு செய்துகொண்டார்கள்.
ஒரு தொலைக்காட்சியில் பீட்டரின் நிகழ்ச்சியை ஒளிபரப்பி கூடவே அவன் மனைவி சொல்வதையும் ஒலிபரப்பினார்கள். பீட்டரின் தகிடுதத்தங்கள் உலகுக்கு அம்பலமாகின. பீட்டரின் தொழில் நசிந்து திவாலானது. இது நடந்தது சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னால். அப்போது அவனுடைய வருமானம் ஆண்டுக்கு 4 மில்லியன் டாலர்கள். இது அமெரிக்கா, அத்தோடு அவன் காலி என்று நினைத்தால் அதுதான் இல்லை. இப்போது மீண்டுவந்து அதே ஏமாற்று வேலையில் வருடத்திற்கு 23 மில்லியன் வருமானமாம். என்ன சட்டத்தின் பிடியில் சிக்காமல் சாதுரியமாக கொள்ளை அடிக்கிறான்.
ஜேம்ஸ் எப்போதும் போல யாராவது திருந்தமாட்டார்களா என்று தன் பணியை செய்துகொண்டு இருக்கிறார். இணையத்தில் James Randi என்று தேடிப் பாருங்கள்.
விடியல்
Friday, January 20, 2012Labels: மானுடம்
சனிக்கிழமை இரவு, என் மனைவியின் அனத்தல் அதிகமாகி இருந்தது. ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை வலித்தால் மருத்துவமனையை அழைக்கச் சொல்லி இருந்தார்கள். கர்பகாலம் நாற்பது வாரம் முடிய இன்னும் மூன்று வாரங்கள் இருந்தன. சென்றமுறை குறித்த நாள் கடந்து மேலும் பத்து நாட்கள் ஆனபின்னும் வலி ஏற்படவில்லை. அறுவை சிகிச்சையில்தான் மகள் பிறந்தாள். பொதுவாக அடுத்தக்குழந்தையும் அதேபோல அறுவை சிகிச்சையில்தான் பிறக்கும் என்பது பலருடைய அனுமானம். எனவே மருத்துவமனைக்கு வீணாகப் போய் வரவேண்டுமே என்று முனகலை சட்டை செய்யாமல் இருந்தேன். அவள் சித்தியை அழைத்து புகார் செய்தாள். அவர் கேட்டுக்கொண்டதாலும், இப்போது வலி ஏற்படும் இடைவெளி மிகவும் குறைந்திருந்ததாலும், மருத்துவமனையை அழைத்தேன். விசாரித்துவிட்டு உடனே வரச்சொன்னார்கள். இம்முறை அவளுடையப் பெற்றோர்கள் வரப் பயண ஏற்பாடு செய்து இருந்தோம். இன்னும் இரண்டு வாரங்கள் கழித்துத்தான் வருவார்கள். எனவே உதவிக்கு வேறு யாரும் இல்லை. மகள் நண்பர் வீட்டில் தோழிகளோடு வார இறுதி நாட்களைக் கழிக்கச் சென்றிருந்தாள்.
அவள் பிறந்த அதே மருத்துவமனைதான். அதனால்தானோ என்னவோ, வண்டியை மருத்துவமனை வளாகத்துள் செலுத்தும்போது பிரமை போல இருந்தது. அந்த இரவிலும் செவிலியர்கள் சுறுசுறுப்பாக இயங்கினார்கள். சந்தேகமில்லை அது பிரசவ வலிதான் என்று உறுதிசெய்தார்கள். எந்தவகை மயக்க மருந்து வேண்டும் என்று கேட்டு குறித்துக்கொண்டார்கள். உடனே படுக்கை தயாரானது. பரிசோதித்ததில் ஏற்கனவே ஆறு அங்குலத்திற்கு தசை தளர்ந்து இருந்தது தெரிந்தது. இயற்கை பிரசவத்திற்குத்தான் வாய்ப்பு. மூன்று நான்கு செவிலியர்கள் இருந்தனர், எல்லோரும் பெண்கள். நான் வலப்புறம் நின்று தலையைக் கோதிக் கொடுத்துக்கொண்டு இருந்தேன். இரண்டுபேர் உதவியாக கால்களை மடக்கி பிடித்துக்கொள்ள, மற்றொருவர் அவளுக்கு உந்தித்தள்ள கட்டளை செய்துகொண்டிருந்தார். சென்றமுறை சிறிய அழுத்தத்திற்கே ஆர்ப்பாட்டம் செய்தவள் முழு வலியை எப்படி பொருத்துக்கொள்ளப்போகிறாள் என்று எனக்கு பெரும் கவலை ஆயிற்று. எந்தவித மயக்க மருந்தும் கொடுக்க இயலாது, அதற்கான காலம் கடந்துவிட்டது என்றார்கள். வேறு வழி இல்லை, பொருத்துத்தான் ஆகவேண்டும். மூச்சுப் பயிற்சிபோல ”எங்கே மூச்சை இழு - 1,2,3 - இப்போது தள்ளு” - என்று தாளகதியில் சொல்ல, பல்லைக் கடித்துக்கொண்டு முக்கினாள். சிறிது சிறிதாக குழந்தையின் உச்சந்தலை தென்படத்தொடங்கியது. இறுதியாக ஒருமுறை சக்தியை எல்லாம் திரட்டி முக்கியபோது நடுவில் உட்கார்ந்திருந்தவரின் முகத்தின் மேல் நீர் பீய்ச்சி அடித்தது. வாயையும், கண்களையும் அனிச்சையாக சட்டென்று மூடி முகத்தைத் திருப்பிக்கொண்டார். ஆனாலும் கால்களைப் பிடித்திருந்த பிடியை விடவில்லை. முகம் முழுதும் தொப்பலாக நனைந்துவிட்டது. மற்றொருவர் தயாராக இருந்த துவாலையை வைத்து சுத்தமாக துடைத்துவிட்டார். இது சர்வசாதாரணமாக நடக்கும் போலும். அருவெறுப்போ, கோவமோ இல்லாமல், நன்றாக முக்கினாய் (தட் வாஸ் அ குட் புஷ்) என்று மட்டும் சொன்னார். இந்த இறுதி முயற்சியில் என் மனைவி அயர்ந்துவிட்டாள். மருத்துவரைக்கூட்டி வந்தார்கள். நாங்கள் இம்முறை தெரிவு செய்திருந்த பெண் மகப்பேறு மருத்துவர் அவர். தசைக்கருகில் மந்த ஊசி போட்டுவிட்டு நெடுவாக்கில் ஒரு அங்குலம் கொய்துவிட்டார். அடுத்த நிமிடத்தில் மற்றொரு உந்தலில் குழந்தை பிறந்தது. மருத்துவமனைக்கு வந்து அரைமணி நேரத்திற்குள், யாருக்கும் பெரிய துன்பம் தராமல் எங்கள் செல்ல மகன் பிறந்தான். அவன் அழவேயில்லை.
தொப்புள் கொடியை கத்தரித்து பிரித்தபின் அந்த அறையிலேயே இருந்த குழந்தை நல மருத்துவர் அவனை சோதனை செய்ய ஆரம்பித்தார். நான் என் மனைவிமேல் கண்ணாய் இருந்தேன். மகப்பேறு மருத்துவர், கருக்குடையைக் கொக்கிவைத்து இழுத்து அகற்றினார். என்னை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு கொய்துவிட்ட பகுதியில் தையல் போட்டார். குழந்தை நல மருத்துவர், என்மகனிடம் ஏதேனும் வித்தியாசம் தெரிகிறதா என்று கேட்டார். எனக்கு எதுவும் தெரியவில்லை என்றேன். ”இங்கே பார். கையை இழுத்து விட்டால், இயல்பாக திரும்ப மடக்கிக் கொள்ள மாட்டேன் என்கிறான். கழுத்துப்பகுதியில் நீர் தேங்கினார்ப் போல தளர்ந்து இருக்கிறது. கால் கட்டை விரலுக்கும் மற்ற விரல்களுக்கும் இடையில் அதிக இடைவெளி இருக்கிறது.” என்றார். ”என் மகளை விடவும் உயரமும், எடையும் சிறிது குறைவு. மற்றபடி முகம் அவள் குழந்தை முகம்போலவே இருக்கிறது. எனக்கு வேறெதுவும் தெரியவில்லை. மூன்று வாரங்கள் முன்பே பிறந்ததால், வளர்ச்சியில் சிறிய வித்தியாசம் தெரிவது இயற்கை அல்லவா”, என்றேன். சிறிது நேரப் பரிசோதனைக்குப் பிறகு ”அவனைப் பற்றிக் கவலையாய் இருக்கிறது” என்றார். உடல் வெப்பம் குறைவாக உள்ளது என்று சொல்லி பாதுகாப்பு அறைக்கு எடுத்துப்போனார்கள். நாங்கள் வேறு அறைக்குச் சென்றோம்.
என் மகளைப்பற்றி அறிந்தவர்கள், நீங்கள் புண்ணியம் செய்தவர்கள் என்பார்கள். நாங்கள் வேத வகுப்புகளில் செய்யும் பாராயணங்கள்தான் அத்துணை அமைதியும், அறிவும் கூடிய குழந்தையை தந்துள்ளன என்று சொல்வார்கள். அப்போதும் வெள்ளிக்கிழமைதோறும் நடக்கும் வகுப்புக்கு போய்க்கொண்டிருந்தோம். மேலும், அனுதினமும் காலை குளித்து, சாமிப்படங்கள் முன் விளக்கேற்றி, நானும் மகளும் ஒரு சில சுலோகங்களும் சொல்லிக்கொண்டிருந்தோம். மகள் பிறந்தபின் இந்த மூன்று ஆண்டுகளில் நாம் என்ன தவறு செய்தோம். என் மகனுக்கு ஒன்றும் நேர வாய்ப்பில்லை. நான் புலால் உண்பதை திருமணமான முதலே மனைவிக்காக நிறுத்திவிட்டேன். மது, புகைப் பழக்கம் இல்லை. இருவரும் காப்பி, டீ கூட அருந்துவது இல்லை. அதனால் பெரிய பாதிப்பு எதுவும் இருக்கமுடியாது என்று நினைத்துக்கொண்டேன்.
முதலில் யாரோ ஒருவர் உங்கள் மகனுக்கு டௌன்-சின்ட்ரோம் இருக்கிறது என்றார்கள். அப்படியென்றால் எனக்கு என்னவென்று தெரியவில்லை. மனம் ஊக்கமில்லாமல் இருப்பது என்று நினைத்துக்கொண்டேன். காலையில் மகப்பேறு மருத்துவர் வந்து, முன்கூட்டியே இந்த குறையைக் கண்டறிய முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்தார். நான் ”அதனால் என்ன, இது என்ன குணப்படுத்த முடியாதக் குறையா?” என்றேன். குணப்படுத்துவது இருக்கட்டும் அவன் நல்லபடியாக வீட்டிற்குப் போவதைப் பார்ப்போம் என்றார். அன்று காலை நான்மட்டும் வீட்டிற்குப்போய் இணைய தளங்களில் தகவல் திரட்டும்போதுதான் இந்தக்குறையின் தாக்கம் புரிந்தது.
திரும்பவும் மருத்துவமனைக்குப் போனபோது, மனைவியிடம் முழுவிவரமும் சொல்லவில்லை. குழந்தை இன்னும் பாதுகாப்பு அறையில்தான் இருந்தான். உடல் வெப்பம் எப்போதும் போல் 96 பாகைகள்தான் (ஃபாரன்ஹீட்) இருந்தன. குழந்தையால் அம்மாவிடம் பால்குடிக்க முடியவில்லை. உதடுகள் கவ்வி உறிஞ்சிகுடிக்கத் தசைகளில் வலு இருக்கவில்லை. குப்பியில் பிடித்து புட்டிப்பாலாக ஊட்டினாலும் குடிக்கவில்லை. அருகில் இருந்த செவிலியர் சிலர் தங்களுக்குள், ”இப்படிப்பட்ட குழந்தை எனக்கு இருந்தால், நான் வைத்துக் கொள்ளமாட்டேன். எங்காவது ஒப்படைத்துவிடுவேன்” என்று எங்கள் காது பட பேசிக்கொண்டார்கள். அன்று மாலை மரபணு சிறப்பு மருத்துவரை மருத்துவமனையிலேயே சந்தித்தோம். அவரிடம் நான் அறிந்த விசயங்களை பூடகமாக சொன்னேன். ”அறிவுத்திறன் குறைவாக இருக்கும், இன விருத்தி அணு செயலற்று இருக்கும்.” என்றேன். “ஆம், அவனால் பிள்ளை உண்டாக்கமுடியாது”, என்று தெளிவாக்கினார். என் மனைவி அழுதாள். நான் தனிமையில் அழுததைவிடவும் குறைவுதான்.
திரும்பி எங்கள் அறைக்கு செல்லும் வழியில்தான் எங்கள் மகனை கண்ணாடிக்கூண்டில் வைத்திருந்தார்கள். அவனைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் என் மனைவி வெளியேறினாள். அவளுக்கு மருத்துவமனையின் கண்காணிப்பு தேவையில்லாததால் அன்று இரவே வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள். குழந்தை மட்டும் மருத்துவமனையிலேயேதான் இருந்தான். உடல் வெப்பம் இன்னும் குறைவாகவே இருந்தன. வீட்டில் நாங்கள் தனிமையில் இருந்தபோது மனம் உடைந்துபோய்க் கிடந்தோம். ஆனாலும் நான்கு மணிக்கு ஒருமுறை குழந்தைக்குப் பாலூட்ட வேண்டுமாதலால், குப்பிகளில் எந்திரத்தை வைத்து பால் சேகரித்து எடுத்துக்கொண்டு மறுநாள் அதிகாலையில் மருத்துவமனைக்குப் போனோம். நேற்று காலையில் இருந்த அதே தாதிப்பெண்தான் இருந்தாள். ”ஏனோ தெரியவில்லை எதுவுமே சாப்பிடமாட்டேன் என்கிறான்”, என்று கைவிரித்தாள். நானும் முயன்று பார்த்தேன். புட்டிக்காம்பின் முனையை வாயில் திணிக்கவேண்டி இருந்தது. என்ன செய்தாலும் பால் சொட்டுச் சொட்டாக கீழே வழிந்ததேஅன்றி அவன் வயிற்றுக்குள் போகவில்லை. இயல்பாகவே தளர்ந்த உடல், சாப்பிடவும் இல்லை என்றால் எப்படி தேறும். குழந்தைகள் தம் மீது அன்பு செலுத்த யாரும் இருக்கமாட்டார்கள் என்று உணர்ந்தால் வயிற்றிலேயே தன்னை மாய்த்துக்கொள்ளும் என்று கேட்டிருக்கிறேன். சில குழந்தைகள் பிறந்த பின் தாய்பாசம் கிட்டாமல் போனால் மரித்துப்போவதும் உண்டாம். சில மாதங்கள் முன்புதான் நண்பர் ஒருவரின் கைக்குழந்தை ஒன்று காப்பகத்தில் எந்தக்காரணமும் தெரியாமல் உறக்கத்திலேயே இறந்துபோனது. எங்கள் மகனை எப்படி வளர்க்கப்போகிறோம் என்கிற எங்களைப்பற்றிய சுயநலம்தான் அதுவரை மேலோங்கி இருந்தது. ஆனால் இப்போதுதான் எனக்கு அவனைப்பற்றிய கவலை என்னை முழுமையாக சூழ்ந்தது.
அன்று மாலை மறுபடியும் மருத்துவமனைக்கு போனபோதுதான் என் நம்பிக்கை துளிர்விட்டது. குழந்தை வேறு ஒரு தாதிப்பெண்ணின் கைகளில் மலர்ச்சியாக இருந்தான். என்னிடம் இப்படி அவன் முகத்தைக் கீழ்நோக்கி இருப்பது போல முதுகை நம்மோடு ஒட்டி அணைத்துக்கொண்டு பாலூட்டினால் குடிக்கிறான் என்று காண்பித்தாள். பொதுவாக குழந்தைக்கும் நமக்கும் இயல்பில் அசவுகரியமான நிலை. ஆனால் இவனுக்கு அதுதான் பிடித்திருந்தது. புட்டிப்பால் மளமளவென்று என் துயரம்போன்று காலியாயிற்று.
”உங்கள் பெயர் என்ன?”, வென்றேன். “விடியல்”, என்றாள்.
(குறிப்பு: ஆங்கிலப் பெயர் ’டான்’ - Dawn. குடும்பப் பெயர் தெரியவில்லை)
தூக்கு - ஜார்ஜ் ஆர்வெல்லின் ‘எ ஹேங்கிங்’
Thursday, January 05, 2012Labels: george orwell
தூக்கு
ஜார்ஜ் ஆர்வெல்
இது நடந்தது பர்மாவில், தொடர் மழையில் ஊறிய ஒரு காலை வேளை. சீக்குப்பிடித்த வெளிச்சம், மஞ்சள் நிறத் தகரக்காகிதம் போல, சிறையின் உயர்ந்த மதில்களின் மேல் சாய்ந்திருந்தது. நாங்கள் சிறைக்கூடங்களின் வெளியேக் காத்திருந்தோம், அவை ஒரு வரிசையில் இரட்டைக் கம்பிக்கதவுகள் போட்ட தடுப்புகளாய், சிறு மிருகங்கள் அடைக்கும் கூண்டுகளைப் போலிருந்தன. ஒவ்வொன்றும் சுமார் பத்தடிக்குப் பத்தடி அறை, ஒரு பலகைக் கட்டிலும் தண்ணீர்ப் பானையும் தவிர உள்ளே வெறிச்சோடிக் கிடந்தது. சிலவற்றில் பழுப்பு நிற மனிதர்கள் மௌனமாக கம்பிக்கதவுகளின் பின் போர்த்தியபடி குத்துக்காலிட்டு உட்கார்ந்து இருந்தனர். அவர்கள் யாவரும் தண்டனைப் பெற்றவர்கள், இன்னும் ஓரிரு வாரங்களில் தூக்கிலிடப்பட இருப்பவர்கள்.
ஒரு கைதியை அறையிலிருந்து வெளியேக் கொண்டுவந்திருந்தனர். அவன் ஒரு இந்து, ஒல்லி நோஞ்சான் உடம்பு, மொட்டைத் தலை, நீர்த்தக் கண்கள். தடித்த நீண்ட மீசை வைத்திருந்தான், ஆளுக்கு பொருத்தமில்லாத மிகப் பெரிய மீசை, சினிமாக் கோமாளி போல. உயரமான ஆறு சிறைக் காவலர்கள் அவனைக் கண்காணித்து தூக்குமேடைக்குத் தயார் செய்துகொண்டிருந்தார்கள். அதில் இருவர் கத்தி பொருத்திய துப்பாக்கிகளுடன் நின்றிருக்க, மற்றவர்கள் விலங்கை மாட்டி, அதில் சங்கிலியைக் கோர்த்துத் தங்கள் இடுப்புப் பட்டையில் இணைத்தார்கள், அவனுடையக் கைகளைப் பக்கவாட்டில் இருகக் கட்டினார்கள். அவனை மிகவும் நெறுங்கி இருந்து, எப்போதும் கை விலகாமல் கவனமாக, அணுக்கமான பிடியில், அவன் இருப்பதை உணர்ந்து உறுதிப்படுத்திக்கொள்வது போல சூழ்ந்திருந்தனர். அது உயிரோடு பிடித்த மீன் நழுவி தப்பித்துப் போய்விடாமல் பார்த்துக்கொள்வதைப் போல இருந்தது. ஆனால் அவன் துளி எதிர்ப்பும் காட்டது, தளர்வுடன் கைகளை பிணைக்கயிறு கட்டக் கொடுத்து, அங்கே நடப்பது எதுவும் பார்க்காதது போல இருந்தான்.
மணி எட்டு அடித்தது, அழைப்பு முழக்கம், அனாதரவாக சன்ன ஒலியாக ஈரக் காற்றில் தூரத்தில் இருந்த இராணுவ கூட்டத்திலிருந்து மிதந்து வந்தது. சிறைக் கண்காணிப்பாளர், எங்களைவிட்டுத் தள்ளி நின்றிருந்தவர், எண்ண ஓட்டத்தில் சரளைக் கற்களை தன் தடிக்குச்சியால் நிரடிக்கொண்டிருந்தவர், அந்த சத்தத்தைக் கேட்டுத் தலையை உயர்த்தினார். அவர் இராணுவ மருத்துவர், அவரின் பல்தூரி மீசை நரைத்து குரல் தடித்து இருந்தது. “கடவுளே சீக்கிரம் ஆகட்டும், ஃபிரான்சிஸ்“, என்றார் கடுகடுப்புடன். ”அவன் இந்நேரம் பிணமாகி இருக்க வேண்டும். நீ இன்னும் தயாராகவில்லையா?”.
ஃபிரான்சிஸ், தலைமை சிறை அலுவலர், குண்டு திராவிடன், வெள்ளைச் சீறுடையும் தங்கக் கண்ணாடியும் அணிந்தவன், தன் கருப்புக் கையை ஆட்டினான். “யெஸ் சார், யெஸ் சார்,” என்று பொங்கினான். “எல்லாம் நிறைவாக ஆயத்தமாயுள்ளன. தூக்கிலிடுபவன் காத்திருக்கிறான். நாம் ஆரம்பிக்கலாம்.”
“அப்படியானால், விரைந்து அணிவகுத்து நடவுங்கள். கைதிகளுக்கு இந்த வேலை முடியும் வரை காலை உணவு கிடைக்காது.” நாங்கள் எல்லோரும் தூக்குமேடைக்குக் கிளம்பினோம். இரண்டு சிறைக்காவலர்கள் கைதியின் இருபுறமும் அணிவகுத்து, துப்பாக்கிகளை சாய்த்து நடக்க; மற்ற இருவர் அவனுக்கு மிக அருகில் அணிவகுத்து, கையையும் தோளையும் பற்றிக்கொண்டு, ஒருசேரத் தள்ளவும் தூக்கவுமாக சென்றனர். ஏனைய நாங்கள், நீதிபதி மற்றும் சேர்ந்தாட்கள் பின் தொடர்ந்தோம். திடீரென, பத்து கஜம்தான் நடந்திருப்போம், அந்த பேரணி எந்தக் கட்டளையும், முன்னறிவிப்பும் இன்றி நின்று போனது. ஒரு மட்டமான செயல் நடந்தது - ஒரு நாய், எந்த சமயம் பார்த்து வந்ததோ, முற்றத்தில் முகம் காட்டியது. அது எங்களை நோக்கி துள்ளி வந்தது, சரமாரியாக உரக்க குரைத்துக்கொண்டு, எங்கள் மேல் தாவித் தன் உடல் முழுதும் நாட்டியமாட, பல மனிதர்களை ஒரு சேர பார்த்தக் கொள்ளை மகிழ்ச்சியில் சுற்றிச்சுற்றி வந்தது. அதன் உடம்பெல்லாம் முடி, பாதி ஏர்டேல் வகை கலப்பின நாய். எங்களை சுற்றி சற்று நேரம் தாவி குதித்துவிட்டு, யாரும் தடுப்பதற்கு முன், அந்த கைதியின் மேல் பாய்ந்தது, மேலே ஏறி அவன் முகத்தை நக்கிக்கொடுக்க முயன்றது. எல்லோரும் பயத்தில் உறைந்திருந்தனர், அதைப் பிடிக்க எத்தனிக்கக்கூட இயலாமல் பின்வாங்கி இருந்தனர்.
“யார் அந்த வெறிபிடித்த மிருகத்தை உள்ளே விட்டது?” கண்காணிப்பாளர் கோபமாகக் கத்தினார். “அதை யாராவது பிடியுங்கள்!”
ஒரு சிறைக் காவலர், அணிவகுப்பிலிருந்து பிரிந்து, அந்த நாயைத் தட்டுத்தடுமாறி பிடிக்கப்போனார், ஆனால் அது போக்குக் காட்டி பிடிகொடுக்காமல் கூத்தாடியது, எல்லோரும் தன்னோடு விளையாடுகிறார்கள் என்று நினைத்தது. ஒரு ஐரோப்பா-ஆசியக் கலப்பினக் காவலன், கைநிறையக் கற்களை எடுத்து வீசி நாயை அடித்து விரட்ட முயன்றான், ஆனால் அது கற்கள் மேலே படாமல் விலகி எங்களை நோக்கி வந்தது. அது குரைக்கும் சத்தம் சிறை மதில்களில் எதிரொலித்தது. அந்தக் கைதி, இன்னும் இரண்டு காவலர்களின் பிடியில் இருந்தவன், ஆர்வமில்லாது இதுவும் தூக்கிடுவதில் மற்றொரு சடங்கு என்பதுபோலப் பார்த்தான். யாரோ ஒருவர் அந்த நாயைக் கட்டுப்படுத்துவதற்குள் சில நிமிடங்கள் ஆயிற்று. என் கைக்குட்டையை அதன் கழுத்து பட்டியில் சுற்றி பிடித்துக்கொள்ள எங்கள் பேரணி மீண்டும் தொடங்கியது, நாய் முனகலுடன் திமிறியபடி வந்தது.
தூக்கு மேடைக்கு இன்னும் நாற்பது கஜம் இருந்தது. நான் எனக்கு முன்னே சென்ற கைதியின் வெற்று முதுகை பார்வையிட்டேன். அவன் கட்டப்பட்ட கைகளுடன் தள்ளாடி நடந்தான் ஆனால் மிக நிதானமான, ஒருபோதும் முழங்கால்களை விரைப்பாக்காத இந்தியர்களின் நடை பாணியில். ஒவ்வொரு அடியிலும் இறுகிய சதைகள் சரிந்து மீண்டும் அதன் இயல்பிற்கு வந்தன, பின்னந்தலைக் குடுமி மேலும் கீழும் நர்த்தனமாடியது, அவன் கால்த்தடங்கள் ஈரத்தரையில் அச்சு பதித்தன. ஒரு சந்தர்ப்பத்தில், இரண்டுபேர் அவனுடைய தோள்களை இருக்கிப் பிடித்திருந்ததையும் மீறி, தேங்கியிருந்த நீர்க்குட்டையில் கால் வைக்காமல் சற்றே விலகி நடந்தான்.
ஆச்சரியம் என்னவென்றால், அந்தக்கணம் வரையிலும் நான் ஒரு ஆரோக்கியமான, சிந்தையுள்ள மனிதனை தகர்க்கப்போகிறோம் என்பதை உணரவில்லை. அவன் நீர்க்குட்டையிலிருந்து விலகி நடப்பதை பார்த்தபோதுதான், அந்த மர்மம் புலப்பட்டது, அந்த சொல்லவியலாதத் தப்பிதமான, வாழ்க்கை அதன் முழு வீச்சில் இருக்கையில் வெட்டி வீழ்த்தும் செயல். அந்த மனிதன் சாகக்கிடக்கவில்லை, உயிரோட்டத்தோடுதான் இருக்கிறான் நாங்கள் இருப்பதற்குச் சமமாக. எல்லா உறுப்புகளும் வேலை செய்கின்றன - வயிறு செரிக்கிறது, தோல் புதுப்பித்துக் கொள்கிறது, நகம் வளர்கிறது, திசு உருவாகிறது - உறுப்புகள் எல்லாம் வேறு சிந்தனை இல்லாமல் தன் போக்கில் உழல்கின்றன. அவனுடைய நகங்கள் வளர்ந்துகொண்டுதான் இருக்கும், தூக்குமேடையில் நிற்கும்போதும் சரி, அந்தரத்தில் விழும் கடைசி நொடிகளின் போதும் சரி. அவன் கண்கள் மஞ்சள் நிறத் தரையைப் பார்க்கின்றன, சாம்பல் நிறச் சுவற்றையும் காண்கின்றன, மூளை இன்னமும் நினைவு கூர்கிறது, முன்னுணர்வு கொள்கிறது, சீர்தூக்கச் செய்கிறது - நீர்க்குட்டையைப் பற்றிக்கூட. அவனும் நாங்களும் கூட்டாகத்தான் நடக்கிறோம், பார்க்கிறோம், கேட்கிறோம், உணர்கிறோம், அதே உலகத்தை புரிந்துகொள்கிறோம்; ஆனால் இன்னும் இரண்டு நிமிடங்களில், ஒரு சொடுக்கில், எங்களில் ஒருவர் இருக்கப்போவதில்லை - ஒரு மனது குறையும், ஒரு உலகம் மறையும்.
தூக்குமேடை சிறிய முற்றத்தில், சிறையின் இதர முக்கியப் பகுதிகளிலிருந்து தனித்து இருந்தது, சுற்றிலும் முள்ச்செடிகள் மண்டிக்கிடந்தன. மூன்று பக்கமும் கற்களால் எழுப்பிய மேடை, அதன் மேல் பலகைகள், அவற்றுக்கும் மேல் இரண்டு தூண்கள், குறுக்குச்சட்டம், அதில் ஊசலாடிய கயிறு. தூக்கிலிடுபவன், ஒரு முடி நரைத்த குற்றவாளி, சிறைக்கூட வெள்ளைச் சீறுடையில், எந்திரத்திற்கு அருகில் காத்துக்கொண்டிருந்தான். எங்களைப் பார்த்துக் கூழைக்கும்பிடு போட்டான். ஃப்ரான்சிஸ் சொல்ல இரு காவலர்கள் கைதியை இன்னும் இருக்கமாகப்பிடித்து, பாதி நடையும், பாதி தள்ளுமாக தூக்குமேடைக்குச் செலுத்தி தட்டுத்தடுமாறி ஏணிப்படியில் ஏற உதவினர். அதன் பின் தூக்கிலிடுபவன் மேலே போய், சுறுக்குக்கயிற்றைக் கைதியின் கழுத்தில் மாட்டினான்.
நாங்கள் ஐந்து கஜம் தள்ளி காத்து நின்றோம். காவலாளிகள் உத்தேசமான வட்டவடிவில் தூக்குமேடையைச் சுற்றி நின்றுகொண்டார்கள். சுறுக்கு கழுத்தில் இறுகியதும், அந்த கைதி தன் கடவுளை வேண்ட ஆரம்பித்தான். உச்சத்தொனியில், திரும்பத் திரும்பச் சொன்னான், “ராம்! ராம்! ராம்! ராம்!”, அவசரகதியில் பய நடுக்கத்தில் ஜபிப்பது போலோ உதவிக்கு கூப்பாடு போடுவது போலில்லாமல், நிதானமாக, தாளரீதியில், கோவில் மணி அடிப்பதற்கு ஒப்பாக இருந்தது. நாய் பதிலுக்கு ஈனமாக அழுகை ஒலி எழுப்பியது. தூக்கிலிடுபவன் இன்னும் மேடைமேல் இருந்தான், சின்ன பருத்தித் துணிப்பையை எடுத்து, மாவு சாக்கு போலிருந்த அந்தப் பையைக் கைதியின் தலை மேல் கவிழ்த்து முகத்தை மூடினான். ஆனால் அந்த சத்தம், துணியால் மட்டுப்பட்டாலும், இன்னும் தொடர்ந்தது, மீண்டும் மீண்டும்:“ராம்! ராம்! ராம்! ராம்!”
அந்தத் தூக்கிலிடுபவன் கீழே இறங்கி இயந்திரத்தின் நெம்புகோலை பிடித்து தயாராக நின்றான். கைதியிடமிருந்து நிலையாக, மட்டுப்பட்ட வேண்டுதல் கேட்டுக்கொண்டே இருந்தது, “ராம்! ராம்! ராம்! ராம்!” ஒரு கணமேனும் பிசிறில்லை. கண்காணிப்பாளர், தலைக் குனிந்து தன் தடிக்குச்சியால் தரையை நோண்டிக்கொண்டிருந்தார்; எத்தனை முறை கூப்பிடுகிறான் என்று எண்ணிக்கை எடுத்தாரோ ஏதோ, கைதிக்கு குறிப்பாக இத்தனை தடவையென்று அனுமதி தரும் நோக்கில் - ஒரு ஐம்பது அல்லது ஒரு நூறு. எல்லோரும் நிறம் மாறிப்போயிருந்தனர். இந்தியர்கள் திரிந்த காப்பி போல வெளிறிப்போனார்கள் - ஒன்றிரண்டு துப்பாக்கிகள் அல்லாடின. நாங்கள் கட்டப்பட்டு முகத்திரை இட்டு தூக்குமேடையில் இருந்த மனிதனைப் பார்த்தவண்ணம், அவனுடைய வேண்டுதலைக் கேட்டோம் - ஒவ்வொரு அழைப்பும் மற்றொரு விநாடிநேர வாழ்க்கை; எல்லோர் மனதிலும் அதே எண்ணம்: ஓ, அவனை சடுதியில் கொல்லுங்கள், கதை முடுயட்டும், அந்த வெறுப்பான இரைச்சலை நிறுத்துங்கள்.
சட்டென்று கண்காணிப்பாளர் முடிவுக்கு வந்தார். தலையை நிமிர்த்திக்கொண்டு தடிக்குச்சியை விசிறினார். “சலோ!” என்று கொஞ்சம் ஆங்காரமாக கத்தினார்.
இயந்திரம் உராயும் சத்தம் கேட்டது, அதன் பின் மயான அமைதி. அந்த கைதி போய்விட்டான், கயிறு தன்னைத்தானே முறுக்கிக்கொண்டது. நான் பிடியைத்தளர்த்தி நாயை விடுவித்தேன், அது உடனே தூக்குமேடையை நோக்கிப் பாய்ந்து ஓடியது; ஆனால் சற்று அருகே சென்றதும், குரைத்து விட்டு, பின்வாங்கி முற்றத்தின் மூலைக்கு ஒடுங்கி, அங்கே முட்புதர்களுக்கு இடையே நின்று, எங்களை நடுக்கத்துடன் பார்த்தது. நாங்கள் தூக்குமேடையைச் சுற்றிச்சென்று கைதியின் உடலைப் பரிசோதிக்கப் போனோம். ஊசலாடியபடி, அவன் கால்விரல்கள் செங்குத்தாக தரையை நோக்கி இருக்க, மிக மெதுவாக சுழன்றுகொண்டிருந்தான், கல் போல செத்திருந்தான்.
கண்காணிப்பாளர் தன் தடிக்குச்சியை வைத்து அந்த வெற்றுடம்பை குத்திப் பார்த்தார்; அது சற்றே அல்லாடியது. “அவன் சரியாகத்தான் இருக்கிறான்,” என்றார். அவர் தூக்குமேடைக்கடியிலிருந்து வெளிப்பட்டு, பெருமூச்செறிந்தார். சிந்தனை வயப்பட்டமுகம் இப்போது காணாமல் போயிருந்தது. கைக்கடிகாரத்தை பார்வையிட்டார். “எட்டு மணி எட்டு நிமிடம்”, நல்லது, இன்றைய காலை வேலைகள் முடிந்தன. நன்றி கடவுளே.” என்றார்.
காவலர்கள் துப்பாக்கிகளிலிருந்து கத்திகளை பிரித்து எடுத்து அணிவகுத்துப் போய்விட்டனர். அந்த நாய், தெளிந்து தான் செய்த சேட்டையை உணர்ந்து, அவர்களுக்குப் பின் ஓடிப்போய்விட்டது. நாங்கள் தூக்குமேடை முற்றத்தை விட்டு வெளியேறி, கைதிகள் காத்திருந்த குற்றவாளிகள் சிறைக்கூடத்தைத் தாண்டி, சிறையின் பெரிய நடு முத்தைவெளிக்கு வந்தோம். குற்றவாளிகள், லத்தி சகிதம் இருந்த காவலர்களின் ஆணைப்படி காலை உணவு பெற்றுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் நீள்வரிசையில் உட்கார்ந்து, ஒவ்வொருவரும் தகரத்தட்டு ஏந்தியிருக்க, இரண்டு காவலர்கள் அவர்களுக்கு அரிசி சோறு பரிமாரினார்கள்; அது வீட்டு நிகழ்ச்சி மாதிரி இருந்தது, தூக்கு நிரைவேறியபின் மகிழ்ச்சியான தருணம். எங்களுக்கு ஒரு பெரிய பாரம் குறைந்தது போல இருந்தது, வேலை முடிந்தது அல்லவா. உணர்ச்சி பொங்கியது, பாடவும், விட்டு ஓடவும், எக்காளமாய் சிரிக்கவும் என்று. ஒரே நேரத்தில் எல்லோரும் அளவளாவத் துவங்கினார்கள்.
ஐரோப்பிய-ஆசிய கலப்பினப் பையன் என்னோடு நடந்து வந்து நாங்கள் வந்த பாதையை நோக்கி தலையாட்டி, அறிந்துகொள்ளக்கூடிய புன்னகையுடன்: “உங்களுக்குத் தெரியுமா, சார், நம் நண்பன் (இறந்த மனிதனைச் சொல்கிறான்), அவனுடைய மறுபரிசீலனை மனு நிராகரிக்கப்பட்டதைக் கேட்டதும், அவன் கூண்டில் தரையிலேயே பயத்தில் மூத்திரம் போய்விட்டான். அருள்கூர்ந்து என்னுடை ஒரு சிகரெட் எடுத்துக்கொள்ளுங்கள், சார். என்னுடைய புதிய வெள்ளி பெட்டி பிரமாதம் இல்லையா? தச்சர்கள் செய்தது, இரண்டு ரூபாய் - எட்டு அணா. மேன்மையான ஐரோப்பிய பாணி.”
பலர் சிரித்தார்கள் - எதைப் பார்த்து, ஒருவருக்கும் உறுதியாகத் தெரியாது.
ஃபிரான்சிஸ் கண்காணிப்பாளருடன் வளவளவென்று பேசிக்கொண்டு வந்தான். “நல்லது, சார், எல்லாம் மிக நிறைவாக நடந்தேறியுள்ளன. எல்லாம் முடிந்தது - இப்படி - ஒரு சொடக்கில்! எப்போதுமே இப்படியா என்றால் இல்லை - ஓ, நோ! நான் கேள்விப்பட்ட சில சம்பவங்களில், மருத்துவர்கள் தூக்கு மேடைக்குக் கீழேப் போய் கைதியின் கால்களைப் பிடித்திழுத்து சாகடிக்கவேண்டி இருந்தது. கொடுமை!”
“உடம்பு இன்னும் நெழிந்து கொண்டிருக்கும்போதா? அது மோசம்.”, என்றார் கண்காணிப்பாளர்.
”ஆமா சார், இதைவிட மோசம் என்னவென்றால், கைதிகள் ஒத்துழைக்காததுதான்! ஒரு ஆள், எனக்குத் தெரிந்து, அவனை அறையிலிருந்து கூட்டிவரப்போனபோது, கம்பிக்கதவை தொற்றிக்கொண்டான். சொன்னால் நம்பமாட்டீர்கள், சார், ஆறு காவலர்கள் தேவைப்பட்டனர் அவனைத் தூக்கிவர. இரண்டு பக்கமும் மூன்று பேர் சேர்ந்து காலை இழுத்து எடுக்கவேண்டி இருந்தது. நாங்கள் எவ்வளவோ எடுத்துச் சொன்னோம். “இப்படி எங்களை தொந்தரவு செய்கிறாயே, எங்களுக்கு எத்தனை சிரமங்கள் என்று கொஞ்சம் நினைத்துப்பார்” என்று. அவன் கேட்பதாயில்லை. அவனால் ரொம்பவே கஷ்ட்டப்பட்டோம்.!”
என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. எல்லோரும் சிரித்தார்கள். கண்காணிப்பாளர் கூட சகிக்ககூடிய வகையில் புன்முறுவல் செய்தார். “நீங்கள் எல்லோரும் வந்து கொஞ்சம் மது அருந்தினால் நன்றாயிருக்கும்,” என்று மிகப் பெருந்தன்மையுடன் அழைத்தார். ”என் காரில் ஒரு பாட்டில் விஸ்கி இருக்கிறது. நமக்கு உபயோகப்படும்.”
நாங்கள் சிறையின் இரட்டைக் கதவுகளைத் திறந்து சென்று சாலைக்கு வந்தோம். “காலை இழுக்கிறேன்!” என்று சொல்லிவிட்டு பர்மிய நீதிபதி திடீரென்று சத்தமாக எக்களித்தார். நாங்கள் எல்லோரும் சிரித்தோம். அந்த நேரத்தில் ஃபிரான்சிஸ் சொன்ன சம்பவம் மிகவும் கேலிக்கூத்தாக இருந்தது. எல்லோரும் சேர்ந்து மது அருந்தினோம், பர்மியர்கள், ஐரோப்பியர்கள் உட்பட மிகுந்த நட்புரிமையோடு. செத்தவன் ஒரு நூறு கஜ தொலைவில் கிடந்தான்.
மேல் விவரங்களுக்கு: விமலாதித்த மாமல்லனின் சுஜாதா குறிப்பிட்ட குறும்படம் - ஜார்ஜ் ஆர்வெல்லின் ‘எ ஹேங்கிங்’ ஆக இருக்கலாமோ - இடுகை.
என்னால் ஆன முயற்சி செய்து தமிழில் தந்துள்ளேன். தவறு பிழைகள் இருந்தால் தெரிவிக்கவும்.
Subscribe to:
Posts (Atom)