ராகு கிரகத்துக்கு ராக்கெட் விட்ட அமெரிக்கா

Wednesday, February 20, 2008

சென்ற ஆண்டு எங்கள் ஊரில் புதுக்கோவில் திறப்புவிழா. சாப்பாட்டிற்கு நல்லக் கூட்டம், வரிசை மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. நின்றிருந்தவர்களிடம் ஹரே-ராமா ஹரே-கிருஷ்ணா இயக்கத்தைச் சேர்ந்த இளைஞன் பகவத்கீதை விற்றுக் கொண்டிருந்தான். அவர்களின் நகைச்சுவை உணர்வைப் பற்றி எனக்கு ஓரளவு தெரியும். எனவே பொழுது போக பேச்சுக் கொடுத்தேன்.

"உங்கள் குரு பிரபுலபாதா அமெரிக்கர்கள் நிலவுக்கு போகவில்லை என்று சொன்னாராமே உண்மைதானா?”, என்றேன்.
இப்போதுதான் செவ்வாய் கிரகத்திற்கே ரோபாட் அனுப்பி இருக்கிறார்களே, எனவே ஏதாவது மாற்றி யோசித்து புது விளக்கம் கொடுப்பார்கள் என்று நினைத்தேன்.

அவன் "உண்மைதான். விண்வெளி வீரர்கள் சென்றது நிலவுக்கு அல்ல ராகுவிற்கு!" என்றான்.

இந்த விடயம் எனக்கு புதிது. இதைப் பற்றி எழுதலாம் என்றால், அவன் சொன்ன விடயங்களுக்கு மேல் விபரம் தேடினால் அப்போது கிடைக்கவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்தான் கிடைத்தது. உங்கள் பார்வைக்கு.

http://www.salagram.net/MoonLandingHoax.htm இந்த சுட்டியில் உள்ள சில பகுதிகளை முடிந்த அளவில் மொழி பெயர்த்து இருக்கிறேன்.

உசாத்துணைகள்: ஷ்ரீமத் பாகவதம்.
சத்வரூப தாஸ கோஸ்வாமியின் கட்டுரை


தேவரருள் சிரீல A.C.பக்திவேதாந்த சுவாமி நிலவில் காலடி எடுத்து வைத்ததை பற்றி என்ன சொல்லி இருக்கிறார்:

சில முத்துக்கள்:

20 வருசத்துக்கு முன்னாடியே சொன்னன், நான்சென்ஸ் - நிலாவுக்கு போறதாவது. இப்பத்தான் "ஆ. இது ஏமாத்து வேலைங்கறான்". அதான் வித்தியாசம். இருவது வருசத்துக்கு முன்னாடியே சொன்னன், "சின்னப் பிள்ளத் தனமால்ல இருக்கு, இதெல்லாம் வீண் செலவு. இந்த ராஸ்கல்ஸ் நிலாவுக்கு போகவே முடியாதுன்னுட்டு.” இப்பத்தான் நம்மாண்ட வற்றான். அதான் வித்தியாசம். நான் வெறும் பொது புத்தியை வெச்சே சொன்னன்.
நக்சத்ரானாம் அஹம் ஸாஸி.
சந்திர கிரகத்திற்கு போகணும்னா யஜ்னங்களும் கர்ம-காண்டங்களும் செய்யணும்னுட்டு பாகவதத்தில வாஸிச்சிருக்கம். சாஸ்த்ரத்திலயே எல்லாம் இருக்கு. இந்த ராஸ்கல்ஸ் எப்படி மெஷின வெச்சிண்டு போக முடியும். கொஞ்சமாவது காமன் சென்ஸ் வேணாமா? அவா சாஸ்த்திரம் சொல்றத கேக்கறதில்ல. ராஸ்கல்ஸ், வாய்க்கு வந்த படி எவனோ சொல்றத நம்பறாள்.

சாஸ்த்ர-சக்ஸுஸ்(சாத்திரங்களின் படி காண்கிறவன்). அதாவது நீ சாஸ்த்ரங்களின் கண்கொண்டு பார்க்கணும். ய- சாஸ்த்த்ரா-விதிம் உத்ஸ்ருஜ்ய வர்த்ததே காம ,,, ந சித்திம் ச (சாஸ்த்ரங்களை மறுத்து தன் வழியே போகிறவன் பக்குவம் அடைய மாட்டான்).


ஆனா நாம சாஸ்த்ரத்த நம்பறம். அதான் என்னால 20 வருசத்துக்கு முன்னாடியே சொல்ல முடிஞ்சுத்து. அதான் வித்யாசம். நாம சாஸ்த்ரம் சொல்றதயும், அல்ட்டிமேட் கிருஷ்ணன் சொன்னதயும் கேக்கறோம். அவ்ளோதான். நமக்கு எந்த பிரச்னையும் இல்ல. அவா சாஸ்த்ரத்த நம்ப மாட்டேங்கிறா, கிருஷ்ணனையும் நம்ப மாட்டேங்கிறா. அதான் ஏமாந்து போறா.
..
(ஜூலை 1 1977.)

ஸ்வரூப தாமோதரா: அவா நம்மோட ஆர்க்யூ பண்ண முடியல.
பிரபுபாதா: (சிரிப்பு) எப்ப சண்ட வரும்? நான்சென்ஸ், எப்பிடி ஆர்க்யூ பண்ண முடியும்? நீ ஒரு ராஸ்கல். அதெல்லாம் செய்யப் படாது.

அசிந்த்யா கலு யே பாவா ந தாம்ஸ் தர்கேண யோஜயேது.

“உனக்கு புறியலன்னா வாய வச்சுண்டு சும்மா இரு ராஸ்கல்". முட்டாள் மாறி விவாதம் பண்ணா ராஸ்கல்னுதான் பேரெடுப்ப. பேசாம பெரியவா பேச்சக் கேளு. உன் மூளைக்கு இதெல்லாம் ஏறாது ராஸ்கல். ஏன் வீணா காலத்த போக்கற? நான் என்ன சொறேன்னா, அவாளெல்லாம் ராஸ்கல்ஸ், தப்பான பாய்ண்ட்டச் சொல்லி சும்மா நேரத்த விரயம் பண்றா. ஏமாத்துப் பேர்வழிகள். கம்பெனி வச்சிருக்கா தெரியுமோல்யோ? எல்லாரும் போட்டோ ஸ்டூடியோ வெச்சிருக்கா. அங்க நிலாவுக்குப் போன மாறி பித்தலாட்டமா படம் பண்ணி இருக்கா. உனக்கு என்ன வேணும்னாலும் செய்வா. நீ ஐடியா சொன்னா போதும். சந்திர கிரகத்துப் போலாம், செவ்வாய் கிரகத்துக்கும் போலாம். இந்த ராஸ்கல்ஸ் எங்கயும் போலை. ஒருத்தனுக்கும் புத்தி கிடையாது. எப்பிடி போவா? சுள்ளானுங்க, அரை வேக்காடு.
...
(ஜூன் 1977)

ஹரி-சௌரி: அவா மொதல்ல சந்திரனுக்கு ஸ்புட்னிக் அனுப்புனப்போ ஒழுங்கா இறங்கக்கூட முடியலை. போய் மோதுனாளாம். அனுப்புன ஆகாய ஓடம் சந்திரன்ல முட்டி நொறுங்கி விழுந்துத்தாம்.
பிரபுபாதா: நொறுங்கித்தா?
ஹரி-சௌரி: நொறுங்கி விழுந்துத்து. ஆகாய ஓடம் போய் சந்திரன் மேல மோதுமாம்.
பிரபுபாதா: அவா எப்ப போனா? சும்மா பேத்தல். அப்பிடியே போயிருந்தான்னாலும் என்ன ஆயுத்து? அங்கே ஜீவனம் பண்ண முடியாதுன்னு ஒரு அறிக்கை விட்டா அவ்வளவுதான்.

(ஜூலை 1976)

பிரபுபாதா: வெய்யக் காலமாச்சே? சுக்ரன்ல ரொம்ப குளிரா இருக்குமே? இப்ப ஏன் போறா? (சிரிப்பு) சந்திரனுக்கே போலை, சுக்ரன் சந்திரனுக்கு மேல எங்கியோ இருக்கான். எப்பிடி போவா?
பலி-மர்தன: அவா சுக்ரனுக்கா போரா இல்லியே?
பிரபுபாதா:செவ்வாய்க்கா போறா?
பலி-மர்தன: சும்மா பூமியைச் சுத்தி வற்றா, அப்டித்தானே?
அம்பாரிசா: ஆமாம், ஆகாசத்தில ஒண்ணு சேரறா.
சிஷ்ய கோடி 3: நல்லா புழுகறா இல்லியா?
பிரபுபாதா: ஆமாம்.
(ஜூன் 1975)

சிஷ்ய கோடி 2: அவா சந்திரனில் நிஜமாவே கால்பதிச்சாளா, சிரில பிரபுபாதா?
பிரபுபாதா: இல்லை, அவாளால் அங்கேல்லாம் போவே முடியாது அப்புறம் எப்டி கால் வைப்பா? அங்கெல்லாம் போவே முடியாது. அது ரொம்ப தூரம். ஒன் கணக்கு என்ன? 1,600,000 மைலுக்கு அந்தாண்டை சூர்ய கிரகத்துக்கு மேல. 1,600,000 மைல் உயரம் சூரியனுக்கு மேலால. ஒன் கணக்குப் பிரகாரம் சூர்யன் பூமியில் இருந்து 93,000,000 மைலுக்கு அந்தாண்டை இருக்கான். அதுக்கும் மேல 1, 600,000 மைல் போனா சந்திரன். அதெப்டி முடியும்?

குரு க்ருபா: சந்திரன் எப்படி சூரியனுக்கு பின்னாடி இருக்கும்?

பிரபுபாதா: பின்னாடி இல்லை. மேல.

(மே 1975)

மதுவிசா: அரக்கர் கூட்டம் உயர உயரக் கட்டிடங்கள் கட்டி சுவர்க கிரகங்களுக்கு போக பாக்கிறதுகள்.
பிரபுபாதா: ராவணனுவள், ராவணன் சுவர்கத்துக்கு போக ஏணிப் படிக் கட்டினானாம். "தவம் இருந்து என்ன பயன்? நான் சுவர்கத்துக்கு ஏணிப்படி கட்டப் போறேன்" னானாம். அந்த ஏணி கட்டினாப்பலதான் இப்ப சந்திர கிரகத்துக்கு கிளம்பறதும். அவாளால் போவே முடியாது. போக முடியும்னு கனா காண்றா. ராவணன் செஞ்ச வேல மாதிரிதான். எத்தன வருஷமா போயிண்டுருக்காள்?. 1950 லேர்ந்து?

சிஷ்ய கோடி: சந்திரனை சுத்திப் பாக்கவா?
பிரபுபாதா: ஆமாம், அதுக்குத்தான்..
சிஷ்ய கோடி: 1955லேர்ந்து இருக்கும்.
மதுவிசா: 1955.
சிஷ்ய கோடி: மொதமொதல்ல சந்திரனுக்கு போனது 1961ல்.
பிரபுபாதா: அதுதான் ஆரம்பக் கட்டம். மொதல்ல நாயை அனுப்பினா. (சிரிப்பு)
மதுவிசா: ஆகாச நாய், ஆகாச எலி.
பிரபுபாதா: ஹா? ஆகாச எலியா.
சிஷ்ய கோடி: ஆகாச எலியும்தான்.
பிரபுபாதா: அப்ப 1955லேர்ந்து இருவதுவருஷமா என்ன பண்ணிட்டாள்?
சிஷ்ய கோடி: கோடிக் கணக்கில செலவழிச்சா.
பிரபுபாதா: ஆமாம், கொஞ்சூண்டு புழுதியை எடுத்துண்டு வந்தா, அவ்வளோதான்.
மதுவிசா: இப்ப பூமியிலயும் அதே புழுதியை கண்டுபிடிச்சிருக்கா.
பிரபுபாதா: ஆமாம். சும்மா ப்ராபகண்டா. அவா எப்ப போனா. இப்ப ரஷ்ய விஞ்ஞானியும் அமெரிக்க விஞ்ஞானியும் ஒண்ணு சேர்ந்துண்ட்டா. ரெண்டு பேரும் திருடனுங்க. ஒருத்தனுக்கு ஒருத்தன், "நீ என்னை காட்டிக் கொடுக்காதே. நானும் உன்னைக் காட்டிக் கொடுக்கலை. ஒண்ணா சேந்து இந்த ராஸ்கல்களை ஏமாத்தலாம்" ன்னு திட்டம் போட்டிருக்கா.
சிஷ்ய கோடி: அவா கூட்டு சேர்ந்துட்டா.
பிரபுபாதா: ஆமாம். கூட்டுக் களவாணிகள்.
(மே 1975)



கீழ் வருவது சதபுத தாஸின் "Vedic Cosmography and Astronomy" புத்தகத்தில் நிலவுக்கு பயணம் (Moon Flight) அத்தியாயத்தின் உள்ளடக்கத்தின் சுருக்கம் என்று ஆரம்பித்து எழுதப்பட்டது:

சிரில பிரபுபாதா விண்வெளி வீரர்கள் நிலாவுக்கு போகவில்லை என்று பலமுறைசொல்லி இருக்கிறார்.
அவர் சொன்ன காரணங்கள்:
  • 1)தேவ கணங்கள் மனிதப் பிறவிகளை உயர்ந்த கிரகங்களுக்குள் நுளைய அனுமதிக்க மாட்டார்கள். ஏனெனில் அதற்கு மனிதர்களுக்கு தகுதி இல்லை.
  • 2)சந்திரனில் நிரைந்திருக்கும் சுவர்க மண்டலத்தை விண்வெளி வீரர்கள் உணரவில்லை. அதனால் அவர்கள் சந்திரனுக்கு சென்றிருக்க வாய்ப்பு இல்லை.

சிரில பிரபுபாதா விஞானிகள் சந்திரனை அணுக முற்பட்டது ராகு கிரகம் சந்திரனை தாக்க முயன்றது போல அரக்கத் தனமானது (சிரிமத்.பாகவதம் -சி.ப- 5. 24. 3) மேலும் இந்திரன் அந்த பயணத்தை தடுத்திருப்பான் என்று விளக்கி இருக்கிறார். (அவர் விளக்க உரையுடன் எழுதிய) சிரிமத் பாகவதத்தில், காண்டம் 6, அத்தியாயம் 4, பா 6 மற்றும் காண்டம் 8, அத்தியாயம் 5, பா 34 க்கு அவர் குறிபிட்டுள்ளபடி சந்திரன் தாவரங்களுக்கு கடவுளாவான். ஆனாலும் விஞ்ஞானிகள் நிலவு பாலைவனமாக இருக்கிறது என்கிறார்கள்.

சந்திரனுக்கு செல்ல உயர் பரிமானத்தில் பயணிக்கவேண்டும் என்றும் சிரில பிரபுபாதா சொல்லியிருக்கிறார். எந்திர விண்வெளி ஓடங்களினால் சந்திரனை அடைய இயலாது என்பதையும் குறிப்பிட்டுள்ளார். கடைசியாக சந்திரனை அடைய மானச ஏரியையும் சுமேரு மலையையும் கடக்க வேண்டியது அவசியம் என்றும் சொல்லி உள்ளார்.

எனவே இஸ்கான் பக்தர்களான நமக்கு உள்ள சில முடிபுகள்:

  • 1)விண்வெளி வீரர்கள் உண்மையிலேயே நிலவில் காலடி எடுத்து வைத்தார்கள். ஆனால் தேவர்களின் உலகை (சந்திரலோகம்) அவர்களின் ஊன உடலால் உணர முடியவில்லை.
  • 2)விண்வெளிவீரர்களை அவர்களின் பயணத்தின் ஒரு கட்டத்தில் தேவர்கள் மதிமயக்கி ராகு கிரகத்துக்கு திசை திருப்பி விட்டிருக்ககூடும். (சி.பா 4. 29. 69ப)
  • 3)மனிதன் சந்திரனுக்கு சென்றது என்பது கோடிக் கணக்கான மக்களை 30 வருடங்களுக்கும் மேலாக முட்டாளாக்கிய பெரும் சூழ்ச்சி.

1 மறுமொழிகள்:

அகரம் அமுதா said...

திரு குலவுசனப் பிரியன் அவர்களுக்கு தங்களின் வெண்பா எழுதும் ஆற்றலை இயன்றவரையில் இனிய தமிழ் வலையின் மூலம் அறிந்தேன். எனது வெண்பா எழுதலாம் வாங்க வலைத்தளத்தில் ஈற்றடிக்கு வெண்பா எழுதும் விளையாட்டை நடத்திவருகிறேன். அதில் கலந்து கொள்ள தங்களை அழைக்கிறேன். நன்றி http://venbaaeluthalaamvaanga.blogspot.com/

Post a Comment