அப்பாவின் முதல் பிரசவம்

Tuesday, January 29, 2008

பத்து ஆண்டுகளுக்கு முன், என் மனைவி கருவுற்றிருக்கலாம் என்ற அனுமானத்தில் மருத்துவரிடம் பரிசோதிக்கப் போனோம். மருத்துவர் இந்தியப் பெண். எங்கள் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட விதிகளின்படி முதலில் அவரைத்தான் அணுக வேண்டும். பின் அவருடைய சிபாரிசின் பேரில்தான் மற்ற துறை வல்லுனர்களைப் போய் பார்க்க முடியும்.

முதலில் மனைவியிடம் தனியாக பேச வேண்டும் என்று அழைத்துப் போனார்கள். சிகிச்சைக்கு வருபவர்களிடம் அவர்கள் வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டத்தின் காரணமாகத்தான் தனியாக பேச அழைத்தார்கள் என்று பின்னர் தெரிந்து கொண்டேன். சிறுநீர் பரி சோதனையில் கருவுற்றிருப்பதை உறுதி செய்தபின் அனைவரும் எங்களுக்கு வாழ்த்து சொன்னார்கள். நாங்கள் gynecologistக்கு சிபாரிசு கடிதம் கேட்டோம். “ஏன் உங்களுக்கு குழந்தை வேண்டாமா?” என்று கேட்டார்கள். நாங்கள் ஒன்றும் புரியாமல் முழித்தோம். எங்கள் குழப்பத்தை பார்த்து அவர்களே, குழந்தைப் பிறப்பிற்கு மகப்பேறு நிபுணரைப்(Obstetrician) பார்க்க வேண்டும் என்று எழுதிக் கொடுத்தார்கள்.

அந்த மகப்பேறு நிபுணர் அமெரிக்கர். நண்பர் வட்டாரம் "ஆண் மருத்துவரா?” என்று சந்தேகம் எழுப்பினாலும் அவர் நல்ல பண்பாளர். முதல் முறை போகும் போதே, அது எத்தனை வார கர்பம், குழந்தை முழுவளர்ச்சி அடைந்து பிறக்கக்கூடிய நாற்பதாவது வாரம் எப்போது, தினசரி மருந்துகள் என்ன என்ற விபரங்களை கொடுத்தார்கள். ஆரம்பத்தில் சில மாதங்களுக்கு ஒருமுறையும், பின் சில வாரங்களுக்கு ஒரு முறை யென்றும் அவரை சந்திக்க மருந்தகம் செல்லும் போது நானும் கூட போய் வந்தேன். என் மனைவி இடைவிடாது தினமும் மாலை இரண்டு மூன்று மைல்கள் வேண்டுதல் போல நடக்க ஆரம்பித்தாள்.

முதல் முறை சென்றபோது வயிற்றிலிருக்கும் குழந்தையின் இதய துடிப்பை ஒலிக்க செய்தார்கள். தொலைபேசியில் இரைச்சலான பின்புல சத்தத்தின் ஊடே மறுமுனையில் ஒலிக்கும் மணி போல இதயத் துடிப்பைக் கேட்டது ஒரு சிலிர்ப்பான அனுபவம். சில மாதங்கள் சென்ற பின், ஒலியலை நிகழ் படம் (sonogram) மூலம் கருப்பு வெள்ளை படமாக குழந்தையின் அசைவைப் பார்த்தோம். முக அமைப்பு தெரிந்தது. கொஞ்சம் உப்பிய கன்னம். பெண் என்று சொன்னார்கள். எங்களுக்கு அவர்கள் எப்படி சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. கை, கால் நீளம், தலை சுற்றளவு போன்றவற்றைக் குறித்து சின்ன நிழல்படம் அச்சடித்துக் கொடுத்தார்கள். அளவு பார்க்கும் போது எங்கள் மகள் சில குட்டிக்கரணங்கள் போடுவதைப் பார்த்தோம். மீன் துள்ளி விளையாடுவது போன்ற இயக்கம். குழந்தை வளர வளர, நெளியக்கூட இடம் இருக்காது. ஆடட்டும்.

இடையில் மகப்பேறு மருத்துவமனைக்கு அறிமுகப் படலமாக போய் வந்தோம். எங்கே வந்து இறங்க வேண்டும், இரவில் வந்தால் அழைக்க வேண்டிய தொலைபேசி எங்குள்ளது, அறைகளில் உள்ள வசதிகள், எடுத்து வர வேண்டிய பொருள்கள் (எச்சில் முழுங்க உதவும் குச்சிமிட்டாய், பிடித்த இசை, இன்ன பிற). பல தம்பதிகள், பிரசவிக்கும்போது கடைபிடிக்க வேண்டிய மூச்சுப் பயிற்சியைப் பழக என்று வகுப்புகளுக்கு சென்று வருவார்கள். நாங்கள் போகவில்லை.

நாற்பதாவது வாரம் நெருங்கும் போது, இந்தியாவிலிருந்து துணைக்கு வந்த அவள் சித்தி, முழு அளவுக்கு எரிபொருள் நிரப்பிய வண்டி, என் விடுமுறையை உத்தேசித்த அலுவலகம், வெள்ளிக் கிழமை தோறும் கூடும் சக வேத பாராயண வகுப்பினர், என்று எல்லோரும் தயாராக இருந்தோம். ஆனால் என் மனைவிக்கு பிரசவ வலி வரவேயில்லை. இயற்கை பிரசவத்திற்காக மேலும் ஒரு வாரம் காத்திருப்போம் என்று மருத்துவர் சொன்னார். வாரம் ஓடியது, வலி ஏற்படவில்லை. அதற்குமேல் காத்திருந்தால் ஆபத்து என்றார்கள். அந்த வாரம் வியாழக்கிழமை மருத்துவமனையில் சேர்ந்துவிட சொன்னார்கள்.

மருத்துவமனைக்கு சென்ற பிறகும் வலி என்பது கொஞ்சமும் இல்லை, உடல் நெகிழ்ந்துக் கொடுக்கவும் இல்லை. சாதாரணமாக குறைந்தது ஆறு அங்குலத்திற்காவது வெளிச்சுற்றளவு நெகிழ்ந்திராவிட்டால் (dilation) என்னதான் வலி என்றாலும் பனிக்குடம் உடையவில்லை என்றால் வீட்டிற்கு திரும்ப அனுப்பி விடுவார்கள். என்னோடு வேலை பார்த்த அமெரிக்கப் பெண் பிரசவத்துக்கு முந்தின நாள் வரை வேலைக்கு வந்தாள். குழந்தை பிறந்து ஒரு வாரத்திற்குள் திரும்ப வேலைக்கு வந்து அவள் கதையைச் சொன்னாள். "காலையில் எழுந்தபோது பனிக்குடம் உடைந்துவிட்டது. தூங்கி எழுந்த முகத்தோடு வெளியே போவது எப்படி? அதனால் குளித்துவிட்டு மருத்துவமனையில் போய் சேர்ந்தேன்" என்றாள். இதைக் கேட்கவே அதிர்ச்சியாக இருந்தது. அப்போது பார்த்து அவளுடைய கணவன் வேறு ஊரில் இல்லை. வேறு சொந்தங்களும் அவள்கூட இல்லை. எனவே யாரையும் துணைக்கு அழைக்காமல் தானே வண்டி ஓட்டிக் கொண்டு மருத்துவமனைக்கு போய் இருக்கிறாள் என்று தெரிந்து மிரண்டு போனேன்.

பனிக் குடத்தை உடைத்து விட்டால் வலி உண்டாகும் என்று ஊசியால் குத்தி உடைத்து விட்டு அறையிலேயே உலாவச் சொனார்கள். என்னிடம் இதோ பார் தண்ணீர் போல் இருக்க வேண்டிய திரவம் பச்சை நிறம் ஏறி இருக்கிறது, அதனால்தான் காலம் தாழ்த்துவது ஆபத்து என்கிறோம் என்றார்கள். வாயில் மிட்டாய் சூப்பிக் கொண்டு அவள் சுற்றி வந்ததைப் பார்த்தால் திருவிழாக் கடைகளை வேடிக்கைப் பார்க்கும் சின்னப் பிள்ளை போலத் தெரிந்தாள்.

ஒருமணி நேரத்திற்குப் பின்னும் வலி இல்லை. பின்னர் செயற்கையாக வலிக்க செய்து சதையை நெகிழ்த்திக் கொடுக்க அரிசி அளவிலிருந்த மாத்திரையை வைத்தார்கள். படுத்த நிலையில் மயக்க மருந்தும் நரம்பில் ஏறிக் கொண்டிருந்தது. இப்போது வலி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. "எனக்கு வேணாங்க, எனக்கு வேணாங்க" என்று உளற ஆரம்பித்தாள். ஆனால் சதை இன்னும் நெகிழ்ந்து கொடுக்கவில்லை. அதற்கு பல மணி நேரம் ஆகும்.

சாதாரணமாக தலை வலியே பொருக்க மாட்டாள். பெரும்பாலும் யாரும் தலைவலி காய்ச்சல் என்றால் முடங்கி போவார்கள். ஆனால் இவள் அட்டகாசம் செய்ய ஆரம்பித்துவிடுவாள். சாப்பிட ஏதாவது செய்து கொடு என்று கத்துவாள். நானும் பாசிப்பயறு போட்டு கஞ்சிபோல குழைய சாதம் வைத்து, துவரம் பருப்பு துவையல் செய்து தருவேன். உடம்பு சுகமில்லாத சமயம் சாப்பிட இதமாக இருக்கும். "எனக்கு நாக்கு ருசிக்கவில்லை" என்று அழுவாள்.

மருத்துவருக்கு அவள் அனத்தலை வைத்து வலியின் அளவை எடை போட முடிய வில்லை. எனவே வலியின் தன்மை அறிய ஒரு மானியை பொருத்தினார்கள். அது நூறில் ஒரு பங்கு உயர்ந்தாலே அவள் அதீத வலியில் முனகினாள். இந்த நிலையில் மணிக்கணக்காக தாங்கமாட்டாள் என்று முடிவு செய்தோம்.

அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுக்க முடிவு செய்து என்னிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள். (ஆண் குழந்தையானால் முன்தோல் நீக்க வேண்டுமா? இல்லை. குழந்தையை சுத்தப்படுத்து முன் பார்க்க விரும்புகிறீர்களா? இல்லை. மயக்க மருந்தின் பின் விழைவுகள் பற்றி முன் எச்சரிக்கை, அனுமதி கையொப்பம், இன்ன பிற.)

ஒரு பெண் வந்து சவரம் செய்து விட்டாள். பின்னர் வேறு அறைக்கு மாற்றி கூட்டி சென்றார்கள். அரை மயக்கத்தில் உடை விலகுவது தெரியாமல் நடக்க ஆரம்பிக்க மற்றொரு செவிலியப் பெண் வேகமாக ஓடிப்போய் இன்னொரு அங்கியை பின்புறமாக கட்டிவிட்டாள்.

என்னை வெளியில் காத்திருக்க சொல்லிவிட்டு அறுவை சிகிச்சைக்கு அழைத்து போனார்கள். ஒரு கால் மணி நேரத்திற்கு பின் உள்ளே அழைத்தார்கள். இங்கே கணவனுக்குத்தான் மனைவியின் அருகில் இருக்க முன்னுரிமை. தாயாரானாலும் தேவையின்றி அனுமதிக்க மாட்டார்கள். எனக்கும் மருத்துவர்கள் போட்டிருந்தது போல மேலங்கியும் முகத்திரையும் கொடுத்தார்கள்.
என் கையில் camera வைத்திருந்தேன். என் மனைவி நினைவோடுதான் இருந்தாள். படுத்த நிலையில் தன் கழுத்துக்குக் கீழே பார்க்க முடியாதபடி திரை இருந்தது. திரைக்கு அந்தப் பக்கம் சுமார் பத்து பேர் இருந்தார்கள். நான் போன சில நொடியில் வயிற்றிலிருந்து குழந்தையை எடுத்தார்கள். "தொப்பூள் கொடியை வெட்டுகிறாயா?” என்று கேட்க இல்லை என்றேன். குழந்தையை சுத்தம்செய்து அழகாக துவாலையில் சுற்றி என் கையில் கொடுத்தார்கள். அதே உப்பிய கன்னம். எனக்கு குழந்தையின் உடம்பை வெறும் கையில் தொடவும், முத்தமிடலாமா கூடாதா என்றும் அச்சமாக இருந்தது. நல்ல வேளை வாங்கிக்கொண்டு போய்விட்டார்கள்.

இப்போது வயிற்றிலிருந்து எடுத்திருந்த ஒவ்வொரு பாகமாக நீரும் காற்றும் பீய்ச்சி அடித்து சுத்தம் செய்து வயிற்றில் திரும்பவும் திணித்தார்கள். சிலவற்றை படம் பிடித்தேன். என் மனைவி குமட்டல் எடுத்தாள். இது இயல்புதான் என்று சொல்லி அவளருகே வைத்திருந்த குவளையைக் கொடுத்தார்கள். நான் வாகாக பிடித்துக் கொண்டேன். சில நிமிடங்களில் தூங்கி விட்டாள். பின் என்னை போய் குழந்தையை பார்த்துக் கொள்ளச் சொன்னார்கள். அம்மா விழித்ததும் குழந்தையை கொண்டு போய் காட்டலாம் என்றார்கள். வெளியில் சித்தி நின்றிருந்தார்கள். என்ன குழந்தை என்று கேட்டார்கள். சொன்னேன். அவர்களுக்கு ஏமாற்றம்தான். தெரிந்ததுதானே. அதனாலேயே ஊரில் யாருக்கும் முன்பே சொல்லவில்லை.

என் மகள் இப்போது மற்ற குழந்தைகளோடு ஒரு தொட்டில் அறையில் இருந்தாள். அங்கே எடை, உயரம் அளவு பார்த்து குறித்துக் கொண்டார்கள். காலில் மை தடவி வாழ்த்து அட்டையில் கால் தடத்தை பதிவு செய்தார்கள். அதில் பிறந்த நேரம் ( எடை: 7 பவுன்டு 10 அவுன்சு. உயரம்/நீளம்: 21 அங்குலம்), எங்கள் பெயர் எல்லாம் எழுதி கொடுத்ததை பத்திரமாக வைத்திருக்கிறோம்.

அங்கிருந்த செவிலியரிடம் கேட்டு தொடலாம் பாதகமில்லை என்று உறுதிப் படுத்திக் கொண்டு தொட்டுப் பார்த்தேன். நகங்கள் பட்டுத் துணி போலவும், தலை முடி இலவம்பஞ்சு போலவும் அத்தனை மிருதுவாக இருந்தன.

மனைவி மயக்கம் தெளிந்து எழுந்த போது குழந்தையை எடுத்துக் கொண்டு போய் அறிமுகப் படுத்திவிட்டு, அசதியோடு இருந்ததால் திரும்பவும் தொட்டில் அறைக்கே எடுத்து வந்துவிட்டேன். அம்மா குழந்தைக்குப் பாலூட்டவில்லை என்று அசரீரிமாதிரி ஆளாளுக்கு பேசினார்கள்.

பின்னர் தனி அறையில் பாலூட்ட பயிற்சி கொடுத்தார்கள். இரவு உணவோடு தாய்க்கு குச்சி ஐஸ் கிடைத்தது. நான் மருத்துவமனை வளாகத்திலேயே சீன உணவு (முட்டை வறுத்த சாதம்) வாங்கி சாப்பிட்டேன். எவ்வளவு கேட்டும் ஒரு வாய் கூட தரவில்லை என்று அவளுக்கு கோபம். அந்த கோபம் சுமார் ஒராண்டு காலம் கடந்து அதே கடையில் அதே சாப்பாடு வாங்கித் தரும் வரை ஓயவில்லை.

அவர்களோடு இணை பிரியாதிருந்த காரணமோ என்னவோ, என் குழந்தைகளுக்கு அம்மாவை விட என்னிடம் ஒட்டுதல் அதிகம். அதில் அவர்கள் அம்மாவிற்கு வருத்தம்தான். அவர்களுக்கு காய்ச்சல் என்றால் அவர்களை தொட்டு பார்த்த வண்ணம் அருகிலேயே படுத்துக் கொள்வேன். அப்போதுதான் சூடு அதிகமானால் உடனே கவனிக்க முடியும். சில நண்பர்களின் குழந்தைகளுக்கு காய்ச்சல் அதிகமாகி வலிப்பு வந்ததை அடுத்து கவனமாக இருக்கத் தொடங்கினேன்.

அவர்களை சுத்தம் செய்வது, குளிப்பாட்டுவது, ஊட்டிவிடுவது, உடை மாற்றுவது, முடி வெட்டி விடுவது என்று இயன்ற வகைகளில் நன்றியோடு இருக்கிறேன். அவர்களும் என் மீது மாறா அன்புடன் இருந்து உதவுகிறார்கள். நான் இதற்குமேல் எதையும் எதிர் பார்க்கவில்லை.

என் இரண்டாம் பிரசவத்தைப் பற்றியும் எழுதினால்தான் செவிலியர்களுக்கும் மருத்துவர்களுக்கும் நான் செய்யக்கூடிய கடன் ஒரு துளியேனும் முழுமை பெறும்.

6 மறுமொழிகள்:

துளசி கோபால் said...

அருமை!

Anonymous said...

பதிவைப் படித்து முடித்ததும் என்னவென்று சொல்ல தெரியாத ஒரு உணர்வு. மிக மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

இந்திய சிறு நகரங்களின் பிரசவ அறைக்குள் யாரையும் அனுமதிக்க மாட்டார்கள்.

உங்கள் மனைவிக்கும்,குழந்தைக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

குலவுசனப்பிரியன் said...

துளசி, சிரீகாந்த்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Vetirmagal said...

superb!

Three decades back, my husband used to take care of my daughter so well,I gave him the title of "world's best father".

I was a proud mother announcing to the world how my daughter is more close to her father. Many of the family circle used to raise their eyebrows..

It helps the families to have such close ties. Wish more and more fathers will understand this and enjoy such friendship with their children.

Thanks for sharing your fine experience.

பாச மலர் / Paasa Malar said...

முன் ஒரு நாள் படித்த போது இணிப்பில் கோளாறு காரணமாக மறுமொழி கூற இயலவில்லை..அருமை..புல்லரிக்க வைக்கிறது ..

குலவுசனப்பிரியன் said...

வெற்றிமகள், பாசமலர்,
உங்கள் வருகைக்கும் ஆதரவான சொற்களுக்கும் நன்றி.

Post a Comment