வெள்ளை மலை ரகசியம் - உதவாக்கரைகள்

Sunday, January 13, 2008



சென்ற வருடம் சித்திரை மாதம் (April 2007) கோவைக்கு அருகில் உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல வாய்த்தது. புதுமணத் தம்பதிகள் (மாப்பிள்ளை என் மனைவியின் தம்பி) மற்றும் சொந்த பந்தங்களுடன் ஒரு வண்டி பிடித்து வெள்ளியங்கிரி கோவிலுக்கும் அதன் அருகில் உள்ள ஈசா யோகா மையத்தின் தியான லிங்கத்தையும் பார்த்து வரப் போனோம்.

அப்போது வெள்ளியங்கிரியில் திருவிழாக் கூட்டம். பக்தர்கள் மலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தனர். வனத்துறையினர் விரிவான அபாய அறிவிப்பு வைத்திருந்தார்கள். அறிவிப்பில் ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்கள், பெண்கள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாக நினைவு. ஒருபுறம் வித்தியாசமாக துறவிகள் அன்னதானம் வழங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களே சமைப்பதும் பரிமாறுவதுமாக இருபது முப்பது பேர் இருந்தார்கள். எனக்கு சுவையான மரக்கறி பிரியாணி கிடைத்தது. சாமி இது யார் உபயம் என்று கேட்ட போது அடியவர்கள்தான் என்றனர்.

எனக்கு இடம் புதிது ஆனால் இந்த சூழல் பழக்கமானதுதான். எங்கள் தந்தை, நாங்கள் சிறுவர்களாய் இருந்தபோது ஆண்டிபட்டி மாவூற்று வேலப்பர் கோவிலுக்கு மூன்றாண்டுகள் காவடி எடுத்தவர். அதன் பின்னும் தவறாமல் சித்திரை முதல் நாளன்று அங்கே போகிறவர். சில சமயங்களில் நானும் என் தம்பியும் போயிருக்கிறோம். திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழாவுக்கும் அவருடன் போயிருக்கிறேன்.

இத்தனை பக்தர்களின் ஆரவாரத்தால், எனக்கும் அப்போதே மலை ஏறிவிட்டு வர வேண்டுமென்று ஆசை எழுந்தது. இந்த வாய்ப்பை விட்டால் அடுத்து எப்போது கிடைக்கும் என்று தெரியாது. எனவே தியானலிங்கத்தைப் பார்த்துவிட்டு திரும்பும் வழியில் என்னை மறுபடியும் வெள்ளியங்கிரியில் இறக்கிவிடச் சொன்னேன்.

"ஏழுமலைகள் ஏற மிகவும் சிரமம், காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி இருக்கிறது. மழை பெய்தால் மேலே விடமாட்டார்கள்" என்று உறவினர்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கொண்ட கொள்கையில் உறுதியுடன் மனைவி குழந்தைகளிடமிருந்து விடைபெற்றேன்.

முதலில் பந்தலில் உட்கார்ந்து இருந்தவர்களிடம் அவர்களோடு நானும் சேர்ந்து போகலாம் என்று விசாரித்த போது, பலரும் ஏறி இறங்கி விட்டோம் என்றார்கள். மேலும் இப்போதே கிளம்பினால் இருட்டும் முன்னர் மலை ஏறிவிடலாம் என்று சொன்னார்கள். மாற்றுத் துணிகூட இல்லை. மஞ்சள் பையில் தண்ணீர் குடுவைகள், சட்டை பையில் கைபேசி, முழுக்கால் சிராய் (jeans) சகிதம், வெறும் காலுடன் பரவசத்துடன் மாலை 3:00 மணிக்கு கையில் தடியுடன் மலை ஏறத் துவங்கினேன்.

ஆரம்பத்தில்தான் ஒழுங்கான படிகள் தென்பட்டன. சில நிமிடங்களிலேயே வெடி வைத்து தகர்க்கப்பட்ட பாறைகளை அடுக்கிவைத்தால் போல உத்தேசமான படி அமைப்புகளைத் தான் பார்க்க முடிந்தது. பத்து நிமிட நடையிலேயே வேர்த்து சட்டை முவதுமாக நனைந்து விட்டது. மூச்சு வாங்கியது. எதிரில் வந்தவர்கள் ஏன் தனியாய் போகிறீர்கள் என்று விசாரித்தார்கள். சட்டையைக் களற்றிக் கொள்ள சொன்னார்கள். மலையில் வீசும் மூலிகைக் காற்று உடலில் பட்டால் நல்லது என்றார்கள். சட்டையைக் களற்றி பையில் திணித்துக் கொண்டே ன். ஒருவகை மரத்திலிருந்து இழை இழையாக கோந்து போல பொழிந்த திரவம் உடலில் பட குளுமையாக இருந்தது.

முதலில் இரண்டு பாட்டிமார்களையும், பின்னர் இரு இளைஞர்களையும் கடந்து மேலே சென்றேன். அதில் ஒருவருக்கு கால் விரலில் காயம் பட்டிருந்தது. இரவில் இறங்கும் போது துணைக்கு இருப்பார்கள் எண்று எண்ணிக் கொண்டு மேலே நடந்தேன்.

சில பக்தர்கள் என்னைத் தாண்டி மிக வேகமாக ஏறினார்கள். இன்னும் கொஞ்ச தூரம் தான். இதே வேகத்தில் ஏறினால் இன்னும் ஒரு மணி நேரத்தில் உச்சிக்கு போய்விடலாம் என்றார்கள். கடந்து போகும் நபர்கள் எல்லோரும் இதையே சொன்னார்கள். மஞ்சள் பையின் கைப்பிடி கையைக் கிழித்தது. கால் சிராய் முழங்கால் பகுதியில் இறுக்கியது. ஆனால் மலைவாசிகள் தலையில் மூட்டையுடன் இலகுவாக ஏறி சென்றார்கள். அவர்கள் காலில் செருப்பு இருந்தது காரணமாக இருக்கலாம்.

ஒரு வழுவழுப்பான கல்லில் ஊர்ந்து ஏறிய போது கையில் இருந்த தடி கிழே உருண்டது. ஏறும் போது கைத்தடிக்கு வேலை இல்லை. ஆனால் இறங்குகையில் அவசியம் என்று பட்டது. ஒரு இரண்டு மணி நேரம் செல்ல ஒரு மெல்லிய நீரோடை அருகில் என்னை தாண்டி சென்ற சிலர் இளைப்பாறிக் கொண்டு இருந்தனர். குடுவைகளில் உள்ள நீரைக் கொட்டி விட்டு அந்த ஓடையில் இருந்து பிடித்துக் கொள்ள சொன்னபடி செய்தேன். இன்னும் ஒரு மணி நேரம்தான். அடர்ந்த காடுகள் என்றால் பயமாய் இருந்திருக்கும். ஆனால் வழியில் புதர்கள் கூட இல்லை. இடதுபுறம் மலைச் சரிவின் கீழே உள்ள சமவெளியும் கண்ணைவிட்டு மறைவதில்லை.

ஒவ்வொரு மலையைத் தாண்டியதும் சின்ன பொட்டிக் கடை. உயரம் ஆக ஆக பொருளின் விலையும் ஏறும். ஒரு கடையில் இருந்த பெண்ணிடம் ரொட்டி வாங்கிக் கொண்டேன். மலைப்பாதையில் ஓரிடத்தில் மட்டும் சில குடியிருப்புகள் இருந்தன. மற்றபடி வேறு ஆள் அரவம் இல்லை. சில தூரம் ஏறியபிறகு எதிரில் வந்த இருவர் தண்ணீரை வாங்கி அருந்திவிட்டு அவர்களிடம் இருந்த திராட்சைகள் கொடுத்து உதவினார்கள். இன்னும் ஒரு மணி நேரம்தான்.

தொடர்ந்து தனி ஆளாகத்தான் நடந்தேன். ஓரிடத்தில் மட்டும் பாதை இரண்டாகப் பிரிந்து இடது பக்கவாட்டில் ஒன்றும் மேல் நோக்கி ஒன்றும் பிரிந்ததில், குப்பைக் காகித வழிகாட்டுதலோடு அதற்கு இணையாகச் சென்ற மேல் நோக்கி செல்லும் வழியே நடந்தேன்.

ஆறாம் மலையில் சுனை இருந்தது. அதில் நீராடிவிட்டு போகவேண்டும் என்று யாரோ சொன்னார்கள். அதன்படி குளித்து விட்டு அங்கே இருந்த சிறு சிலைகளை வணங்கிவிட்டு மேலே நடந்தேன். அந்த ஐந்தங்குல உயரச் சிலைகளின் மேல் தகரத் துண்டில் கூரை போல் நிறுவி இன்னார் உபயம் என்று மதுரைக்காரார் யாரோ எழுதி இருந்தார்.

கொஞ்சமாக இருள் சூழ்ந்து கொண்டிருந்தது. கடந்து சென்றவர்கள் எல்லாம் அப்போதே திரும்பி விட்டார்கள். சமவெளிகளின் விளக்குகள் ஒளிர்ந்தன. உச்சிக் கோவில் ஒருநிமிடத் தொலைவுக்கு அருகாமையில் வரும்வரை புலப்படவில்லை. ஓரடி உயர சிவலிங்கத்தின் முன்னே சூடன்கள் தீப்பந்தம் போல எரிந்து கொண்டிருந்தன. மனம் ஏனோ விம்மி வெடித்தது. நாலடி தள்ளி கல் குகையில் நிரைய பூக்கள் சாத்தப்பட்டு சில படங்களுடன் மற்றொரு லிங்கம் இருந்தது. பூசாரியும் இருந்தார். பக்கத்தில் பூசனைப் பொருட்கள் விற்க ஒரு சின்ன கடையும் இருந்தது. அந்த சாமியையும் கும்பிட்டுவிட்டு, படிகளில் கொஞ்சநேரம் கண் அயர்ந்தேன். யாரேனும் வந்தால் அவர்களுடன் சேர்ந்துதான் கீழே இறங்க வேண்டும். இருளில் தனியே போவது உசிதம் இல்லை. யாரும் வரவில்லை என்றால் காலையில் தான் போக வேண்டும்.

நல்ல வேளையாக சிறிது நேரத்திற்கு பிறகு திருச்சியில் இருந்து வந்த உழவர் பெருமக்களை சந்தித்தேன். சித்திரை மாத வாக்கில் மாலை போட்டுக்கொண்டு பல கோயில்களுக்கு போய் வருபவர்கள். கையில் பிரகாசமான மின்பந்தம் வைத்திருந்தார்கள். அவர்கள்தான் முதலில் பார்த்த சிலை மேல் இயற்கையாய் கூரை போல அமைந்த பாறையை விளக்கு வெளிச்சத்தில் காண்பித்தார்கள்.

அவர்களுடன் சேர்ந்து மளமளவென்று அரைமணி நேரத்தில் மூன்று மலைகள் இறங்கினேன். ஒவ்வொரு பாறையும் அவர்களுக்கு அத்துபடியாய் இருந்தது. இல்லையெனில் இருளில் என்னதான் கையில் விளக்கு இருந்தாலும் செங்குத்தான பாதையில் நடக்க முடியாது. எனக்கு முன்னே சென்று நான் அடுத்து கால் வைக்க வேண்டிய இடத்தில் ஒளிகாட்டி வழி காட்டினார்கள். வழியில் சில இடங்களில் விபூதி-மண், குங்கும-மண் என்று தோண்டி துண்டுகளில் கட்டி எடுத்துக் கொண்டார்கள். அம்மண்ணை தங்கள் வயல்களில் தூவி விடுவார்களாம்.

அவர்கள் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாததால், ஒருகடையில் அமர்ந்து இளைப்பாறியதும் தங்கள் வழியே போய்விட்டார்கள். இரண்டு மணி நேரத்தில் மலை உச்சிக்கு வந்திருக்கிறார்கள். எனக்கு நான்கு மணிநேரம் பிடித்தது. இப்போது இருட்டில் காலைத் துளாவி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து சமநிலையை பரிசோதித்து இறங்கினேன். எதிரே இப்போது மக்கள் சாரிசாரியாக வந்தார்கள். வெள்ளிக் கிழமை இரவு. சித்திரையில் முழு நிலவன்றும், வார இறுதியிலும் நிரைய கூட்டம் இருக்கும். ஒருவர் பின் ஒருவராகத்தான் செல்ல முடியும் என்று கேள்வி பட்டேன். கூரான கற்களின் ஓரங்கள் பாதங்களை பதம் பார்த்தன. இறங்கி வரும்போது இரவு 2:00 மணி. தனியாக இறங்க சுமார் ஆறு மணிநேரம் ஆயிற்று.


கீழே கோயிலுக்கு அருகில் தொட்டி நீரில் குளித்து விட்டு, தூங்க இடமில்லாமல் கோயில் சுற்றம்பலத்திலேயே படுத்து தூங்கிவிட்டேன். கொஞ்ச நேரத்தில் பெருங் கூக்குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன். கோவில் முன் இருந்த பந்தல் பகுதியில் இருந்துதான் அப்படிப்பட்ட ஓலம் கேட்டது. பெண்கள் தங்கள் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு தலை தெறிக்க ஓடி கோவிலுக்குள் வந்தார்கள். நான்கைந்து ஆட்களிடையே பெரிய மோதல் கைகலப்பு ஏற்பட்டுக் கொண்டிருந்தது. அந்தப் பெண்ணும், மற்றொரு ஆணும் ஒருவரை ஒருவர் ஏய், ஏய் என்று வெறி பிடித்தவர்கள் மாதிரி கத்திக்கொண்டிருந்தனர். எல்லோரும் திகைத்துபோய் நிற்கிறார்கள். காவலர்கள் ஒருத்தர் கூட இல்லை. சண்டையை விலக்கவும் ஆள் இல்லை. நான் ஒருவரிடம் காவல்துறையின் அவசர தேவை எண்ணைக் கேட்டு என் கைபேசியில் காவல்துறையினரை தொடர்புகொண்டேன். வெள்ளியங்கிரி கோவிலில் கைகலப்பு நடப்பதையும், வெட்டு குத்து ஆகும் போல் இருப்பதையும் சொன்னேன். மறுமுனையில் ஆட்களை அனுப்புகிறோம் என்று சொன்னார்கள்.

அவர்கள் வந்த பாடில்லை. கைகலப்பு முற்றி இப்போது ஒருவன் தடியைக்கொண்டு தாக்கியதில் ஒரு ஆள் மயங்கி விழுந்துவிட்டார். அப்போதுதான் ஒருவர் கைபேசியில் பேசிக்கொண்டே, அங்கிருந்த அப்பாவிகளை விரட்டிக் கொண்டிருந்தார். பேசுவது காவல்துறையிடம் என்பதாகப் பட்டது. அவரை அணுகி "பேசுவது காவல் துறையினரா? எப்போது வருகிறார்கள்?” என்று கேட்டேன். அவர்,

"நீங்கள்தான் அவர்களோடு பேசினீர்களா?”.
"முதலில் இந்த சாமியார்களை சோறு போடுவதை நிறுத்த சொல்ல வேண்டும். அதை சாப்பிட்டு கொழுத்துப் போய், பொழுது போகாமல் சீட்டாட வேண்டியது, சண்டை போடுவது என்று இருக்கிறார்கள். பாருங்கள், விழா முடிய இன்னும் ஐந்து நாட்கள் இருக்கின்றன. இவர்களை எப்படி நான் சமாளிப்பேன்?" என்றார். கோவில் தர்மகர்த்தா போலும்.

மயங்கி விழுந்த ஆளை யாரோ மருத்துவமனைக்கு தூக்கி போனார்கள். அனால். காவல்துறையினர் நான் காலையில் வண்டி பிடித்து வீடுக்கு கிளம்பும் நேரம்வரை வரவில்லை. அவர்கள் வந்தால் கோவிலின் மரியாதை என்னாவது?

இப்படி கண் முன் நடக்கும் அநியாயங்களை கேளாமல், துறவிகள் கண்மூடி முன்வினை தீர்க்க முனைவதில் என்ன பயன்?

அமெரிக்காவில் மத்தாப்பு கொளுத்தினால் கூட புகார் என்றால் காவல்துறையினர் ஐந்து நிமிடங்களில் சம்பவ இடத்துக்கு வந்துவிடுகிறார்கள். மன வளர்ச்சி குன்றியவர்களை தத்து எடுத்துக் கொள்ள விரும்பி பல பேர் காத்திருப்போர் பட்டியலில் இருக்கிறார்கள். இப்படி இருப்பது ஒரே வாழ்க்கை, அதை முடிந்த மட்டும் சிறப்போடு வாழுவோம் என்று பொறுப்புணர்வோடு வாழ்பவர்கள், ஏன் நல்லதுக்கும் கெட்டதுக்கும் வரட்டு தத்துவம் பேசி, விளம்பரம் தேடும் குருக்களின் பின்னால் அலைகிறார்கள் என்பது புதிர்தான்.

படம் உதவி: http://coimbatoremapley.blogspot.com/2006/04/2.html
direct source :www.Southkailash.com

5 மறுமொழிகள்:

துளசி கோபால் said...

அருமையான பதிவு.

பழையபடி ஃபார்ம்க்கு வந்துட்டீங்க.

வாழ்த்து(க்)கள்.

50+ மலை ஏறக்கூடாதா?

அப்படீன்னா எனக்கு கொடுப்பனை இல்லை.

ஆமாம். எதுக்காக வெறுங்காலுடன் ஏறினீங்க?

வடுவூர் குமார் said...

புதிர் தான் எனக்கும்.
மலையேறும் அனுபவம் நன்றாக இருந்தது.

குலவுசனப்பிரியன் said...

நன்றி துளசி,

//50+ மலை ஏறக்கூடாதா?//
தடை எதுவும் இல்லை. எச்சரிக்கை மட்டும்தான். செயலாய் இருந்தால் யாரும் போகலாம். நான் பல முதியவர்கள் மலை ஏறி இறங்குவதை பார்த்தேன்.

// அப்படீன்னா எனக்கு கொடுப்பனை இல்லை. //
நீங்கள் இமயமலை வென்ற நாட்டவர். இதெல்லாம் உங்களுக்கு சாதாரணம்.

கோவில் என்றால் வெறுங்காலோடு போவதென்பது மரபுதானே?. நெடுந்தூரம் பாதயாத்திரை போவோரும் செருப்பில்லாமல்தான் பெரும்பாலும் போகிறார்கள். பகலில் ஓய்வு எடுத்து வெயில்தாள இரவில் நடந்துபோவது முறையாக உள்ளது.

குலவுசனப்பிரியன் said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி வடுவூர்குமார்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.

Post a Comment