குடும்பமரம்

Tuesday, March 20, 2007

இந்த ஆண்டு இரண்டாவது வகுப்பு படிக்கும் என் மகளுக்கு சொல்லிக் கொள்ளும்படி நல்ல புறத்திட்டுக்கள் தரவில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தபோது முன்னோர்களை நினைவு கொள்ளும் விதமாக "குடும்ப மரம்" (family tree) என்ற புறத்திட்டு (project) கொடுத்திருந்தார்கள்.

அது பல பகுதிகளைக் கொண்டது.

1. குடும்ப மரம் தயார் செய்ய வேண்டும். படங்கள், பெயர், பிறந்தநாள், போன்ற விபரங்களை அடுக்கடுக்காக அமைக்கவேண்டும். கீழ் வரிசையில் மாணவரும் அவருடன் பிறந்தவர்களும். அதற்கு மேல்வரிசையில் பெற்றோர் அதற்குமேல் பெற்றோரின் பெற்றோரின் பெற்றோர், இப்படியாக.

2. காலக்கோடு (timeline) உருவாக்கம்.
அதில் பிறந்த நாளில் தொடங்கி நடந்த முக்கிய நிகழ்வுகளைப் பதியவேண்டும், புறத்திட்டு முடிக்க வேண்டிய நாளில் முடியவேண்டும். நடக்க தொடங்கியநாள், சகோதரசகோதரிகளின் பிறந்த நாட்கள் போன்ற குறைந்தது 10 முக்கிய நாட்களைக் குறிப்பிடவேண்டும்.

3. எதாவது ஒரு முன்னோரை நேர்காணவேண்டும்.

4. அவர்களுடைய பள்ளிப்பருவத்தோடு மாணவரின் அன்றாட செயல்பாடுகளை ஒப்பிடவேண்டும்.

5. மேல்கண்ட ஒப்பீட்டை வென் வரைபடமாக (venn diagram) வரையவேண்டும்.

6. குடும்பத்தின் அடையாளமாக உள்ள ஒருபொருளைக் கொண்டுவந்து அதன் முக்கியத்துவத்தை விளக்கவேண்டும். திருக்குறளைக் கொடுத்து, "இனிய உளவாக.." என்று தொடங்கும் குறளுக்கு பொருள் கூறச் செய்தேன்.

7. குடும்பத்தின் சிறப்புப் பண்டமொன்றின் செய்முறையை விளக்கவேண்டும். முடிந்தால் அதைக் கொண்டுவந்து மற்ற மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். என் மனையாள் பருப்பு வடை கொடுத்து அனுப்பினாள். ஆசிரியைக்குப் பிடித்துப்போய்விட்டது. தானே செய்து பார்ப்பதாக சொல்லியிருக்கிறாள்.

என் அப்பாவை தொலைபேசியில் பேட்டிகாண உதவியபோது நான் அறிந்திறாத செய்திகள் கிடைத்தன. அவர் சோழவந்தானில் இருந்த உயர்நிலைப் பள்ளிக்கு தன் கிராமத்திலிருந்து தினமும் ஐந்து கி.மீ நடந்து போனதையும், இடையில் ஆற்றை நீந்திக் கடந்து போய்வர வேண்டியிருந்தது என்றும் தெரிந்து கொண்டேன்.
மாணவர்களுக்கு விளங்கும் பொருட்டு துணைக்கோள் படங்களும் கொடுத்து அனுப்பினேன். அதில் குளிக்கப் போகும் கண்மாய், அவர்கள் வீட்டில் வளர்த்த மாட்டை அழைத்து செல்லும் பால்ப்பண்ணை, தோராயமாக பள்ளிக்கு செல்லும் வழி இருக்குமிடங்களையும் குறித்துக்கொண்டோம்.
(உதவி விக்கிமாப்பியா http://wikimapia.org)

இப்படிப்பட்ட பாடத்திட்டங்கள் இந்தியாவில் இல்லையே என்று வருத்தமாயிருக்கிறது.

3 மறுமொழிகள்:

துளசி கோபால் said...

நல்ல பாடத்திட்டம்தான்.
நாம்தான் இன்னும் அசோகர் மரங்களை நட்டதை மறக்கலையே?

ஆமாம். எங்கே ரொம்ப நாளா ஆளையே காணோம்?

நலமா இருக்கீங்கதானே?

'வடை'யின் புகழ் பரப்பினதுக்கு நன்றி:-))))

குலவுசனப்பிரியன் said...
This comment has been removed by the author.
குலவுசனப்பிரியன் said...

துளசி,

வாங்க வாங்க,
நீங்க நல்லாவா?, உஷாரா?.
நான் நலமே.

// நாம்தான் இன்னும் அசோகர் மரங்களை நட்டதை மறக்கலையே? //
இதாவது பரவாயில்லை. நான் ஏழாம் வகுப்பில் "அண்ணாவிற்கு இளமையிலேயே
மூக்குப்பொடி போடும் வழக்கம் இருந்தது", என்று படித்திருக்கிறேன். எவ்வளவு முக்கியம்.

சென்ற ஆண்டு விடுமுறையில் வீட்டில் எல்லோரும் ஊருக்கு போயிருந்த போது கிடைத்த நேரத்தில் தொடர்ந்து எழுத முடிந்தது.

இப்ப படிக்கறதோட சரி. இராம.கியின் பதிவுகளைப் படிக்கவே நேரம் போதவில்லை.

//'வடை'யின் புகழ் பரப்பினதுக்கு நன்றி:-))))//
இங்கே எந்த விழாவானாலும் பருப்புவடைக்கு எங்கள் வீட்டு உபயம்தான். நியூயார்க்கில் இருள்வாய் நிலையத்தில் நம்மூரைப் போலவே
சுடச்சுட வடை போட்டு விற்பதாக கேள்விப்பட்டேன். நல்ல விற்பனையாம். உடனே தீர்ந்துவிடுமாம்.

Post a Comment