நவீன யோகா: வேலையே செய்ய வேண்டாம், மூச்சு விட்டால் போதும்!

Thursday, October 04, 2012

அது 90களின் மத்தியில் கோவையில் வேலை பார்த்துக் கொண்டே படித்துக்கொண்டிருந்த காலம். ஒருநாள் என்னோடு முன்பு வேலை செய்த கிருத்துவ நண்பர் ஒருவர் வந்து தான் அண்மையில் பயின்ற யோகா பயிற்சிப்பற்றி வானளாவகப் புகழ்ந்து, என்னையும் சேரச்சொன்னார். என்னைவிட பல வயது சிறியவர், ஆறாம் வகுப்பு வரை அமெரிக்காவில் படித்தவர். இந்தியர்களைப் பற்றி அத்தனை ஒன்றும் நல்ல எண்ணம் இல்லாதவர். அவரே மனம் மாறி இருக்கிறாரே, என்ற இயல்பான ஆவலில் அறிமுக வகுப்பு நடந்த ஒரு நாளில் போய்ப் பார்த்தேன்.

காந்திபுரம் 100 அடி சாலையின் அருகே ஒரு அலுவலகத்தின் மாடியை வகுப்பு நடத்த யாரோ தனவான் ஒருவர் கொடுத்திருந்தார். அறையின் முன் காலணிகளெல்லாம் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன. செருப்புக்களை கழட்டி வைத்துவிட்டு உள்ளே நுழைந்தேன். வெறும் தரையில் சமக்காளம் விரித்திருந்தார்கள். இடம் நிரம்பி இருந்தது, சுமார் 100 பேர் இருந்திருப்பார்கள். நடுவயது வடநாட்டுப் பெண்தான் குரு. தமிழ் பேசத் தெரியவில்லை. ஆங்கிலத்தில்தான் உரையாடினார். கோவையில் தனியார் நிறுவனமொன்றில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்தாராம். பல பேர் காலில் விழுந்து வணங்கினார்கள். அவர்களெல்லாம் பழைய மாணவர்கள் போலத்தெரிந்தது.

”காலணிகள் ஒழுங்காக வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தீர்களா? அதெல்லாம் யாருடைய வேலை? இதோ இந்த தொண்டர்கள்தாம் அதற்கு காரணம்.” என்று ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தினார். அவர்கள் ஒவ்வொருவராக வந்து, ”நான் பயிற்சிக்கு முன்னால் அப்பிடி இருந்தேங்க, இப்ப இப்பிடி ஆயிட்டேன்” என்று உற்சாகமாக பேசிவிட்டுப் போனார்கள்.

எல்லோரையும் வெளியே போய்விட்டு மீண்டும் வந்து அமரச்சொன்னார்கள். அதுதான் முதல் பாடம். அதாகப்பட்டது சிறிது நேரமே உட்கார்ந்திருந்த இடமானாலும், அந்த இடத்தை சொந்தம் கொண்டாடி மக்கள் அதே இருக்கைக்கு திரும்புகிறார்கள் என்று எடுத்துக்காட்டப்பட்டது. இதேக் காட்சிக்கு ஒரு சாமியார் வேறுமாதிரி விளக்கம் கொடுத்ததை படித்திருந்தேன். அதில் அதே இடத்திற்கு வராதவர்களை கடித்திருந்தார். அடுத்த பனிரெண்டுநாட்களும் சில மணி நேரம் இப்படி எங்களுக்கு ஏதாவது ஒரு சோதனை.

குரு துவக்கத்திலிருந்தே நேரம் தவறாமையை மிகவும் கண்டிப்பாக கடைபிடித்தார். வண்டி வரவில்லை, என்றால், வண்டிக்காரன், சாலை பழுது என்பான். அதற்குப் பொருப்பானவர்களை கேட்டால் மழையைக் காரணம் சொல்வார்கள். எனவே, நமக்கு என்ன நடந்தாலும் அதற்கு நாமே பொருப்பேற்க வேண்டும் என்பது தத்துவம். முதலாளி சம்பளம் கொடுக்காவிட்டாலும் நாமே பொருப்பு. அப்படியிருக்க தாமதமாக வந்தால் நம் மானம் போகும். அதற்கு பயந்து எல்லோரும் சரியான நேரத்திற்கு வந்துவிடுவார்கள். வராமல் இருக்கவும் முடியாது. முதல்நாளில் தினமும் வருவேன் என்று நெஞ்சில் கைவைத்து ஒப்புக்கொண்டிருந்தோம்.

ஒரு நாள்:

”மசாலா மணம் இல்லை என்றால் கறி சாப்பிட முடியுமா? நீங்கள் சாப்பிடுவது சவம் தானே?”
”பால்தான் எல்லா வயிற்று கோளாறுகளுக்கும் காரணம். அமெரிக்காவில் அதற்காக
 எவ்வளவு செலவு செய்கிறார்கள் தெரியுமா?”
”ஏன் சாணி நாறுவதில்லை? மிருகங்கள் சமைக்காமல் சாப்பிடுவதால்..”

மறு நாள்:

”மனம் தான் எல்லாவற்றிக்கும் காரணம்.”
நண்பர் ஒருவரை அழைத்து, ஒரு கையை நீட்ட சொன்னார்.
”இப்போது பாருங்கள், இவருடையக் கையை என்னால் எளிதில் மடக்க முடிகிறது.. 
அடுத்து அவர் மனதில் இந்தக் கை இரும்பைப் போல உறுதியாகிவிட்டது
 என்று எண்ணத்தை விதைக்கிறேன்”, என்றுவிட்டு
மீண்டும் நீட்டிய கையின் முட்டிக்குக் கீழே சுட்டு விரலை வைத்து,
 “இப்போது நீ வலுவடைந்து விட்டாய், உன் கை இரும்பாகிவிட்டது”, 
என்று சில முறை சொல்லிவிட்டு கையை மடக்க அது திரும்பவும் இலகுவாக மடங்கியது.
“நான் உன் மனதுக்கு கட்டளை இட்டபோது, காதில் கேட்காமல் நீ சிரித்துக்கொண்டிருந்தாய்.
 நான் போன வகுப்பில் இதை செய்து காட்டினேனா, இல்லையா?”,என்று
 பழைய மாணவர்களைக் கேட்டார். சிசியக்கோடிகள் தலை ஆட்டினார்கள். அவர்களுடைய 
வகுப்பு முடிந்த பின்னும், ”நாம் இதுக்கா காசு கொடுத்து சேர்ந்தோம்”, என்று சந்தேகத்தை 
நிவர்த்தி செய்ய மீண்டும் வரும் அவர்களால் வேறென்ன சொல்ல முடியும்?

அடுத்த நாள்:

”ஓங்காரத்திற்கு விளக்கம். அது அ, உ, ம் என்னும் எழுத்துக்களின் கூட்டு.
தொடர்ந்து,
அ என்றால் வயிறு அதிருகிறது, - அது உயிரை உருவாக்கும் பிரம்மாவின் இடம் -
 அதற்குத் தேவையான கல்விக்கு உடனுரை சரஸ்வதி. 
உ என்றால் நெஞ்சம் - அது உயிரை காக்கும் இதயமாக விஷ்ணுவின் இடம் - 
காப்பாற்ற தேவையானப் பணத்திற்கு கூடவே லட்சுமி.
ம் என்றால் மண்டை - அது வேண்டாதனவற்றை அறிந்து அழிக்கும் சிவனின் இடம் - 
அழிக்கத் தேவையான சக்திதான் தேவி. 
ஆக ”ஓம்” இந்து மதம் சார்ந்த ஒலியல்ல. தத்துவம். அதை உச்சாடனம் செய்வதின் மூலம்
 உடல் முழுவதையும் வலுவடைய செய்கிறோம்.”

அதன்படி வகுப்பின் முடிவில் “பொய்யிலிருந்து வாய்மைக்கும், இருளிலிருந்து ஒளிக்கும், இறப்பிலிருந்து இறவாமைக்கும் இட்டு செல்வாயாக. ஓம் சாந்தி, சாந்தி, சாந்திகி”, என்று முதலில் இசுலாமியர்களும், கிருத்தவர்களும் கூட ஒப்பித்தார்கள். பின்னர் வீட்டில் திட்டுகிறார்கள் என்று நிறுத்திக்கொண்டார்கள்.

மற்றொரு நாள்:

”உணவுகளில் மூன்று வகை.
1 - பிராண சக்தி தருவது (pranic),
2 - பிராண சக்தியை கெடுப்பது (non-pranic),
3 - வெறுமே வயிற்றை நிரைப்பது (filler)”.
”எல்லாக் காய்கறிகளுமே பிராண சக்தி தருபவை. கத்தரிக்காய் மட்டும் அதைக் கெடுப்பது.
 உருளைக்கிழங்கு வயிற்றை நிரைப்பது."
”உருத்திராட்சமும், தங்கமும் பிராண சக்தியைக் கண்டறியும் சக்தி உள்ளவை.”
தங்க சங்கிலி ஒன்றை ஒரு பெண்ணிடமிருந்து வாங்கி பரிசோதித்துக் காட்டினார். நல்லவகைக் காய் ஒன்றை இடது கையில் வைத்து அதன் மேல் தொங்கும்படி சங்கிலியை வலது கையில் பிடித்தார். சங்கிலி மெதுவாக ஊசலாட ஆரம்பித்து காயை இடவலமாக சுற்றித்தொடங்கியது. கத்திரிக்காயை இடப்புறமாக சுற்றியது, உருளைக்கிழங்கின் மேல் பெண்டுலம் மாதிரி இடவலமாக நடுவில் ஆடியது. ஆகா.. ஆபாரம்.

”பிராண சக்தி அதிகமாக உள்ள காய், சாம்பல் பூசணி.” எல்லோரும் தினமும் காலையில் பூசணி சாறு குடிக்க பரிந்துரை செய்தார். சில பெண்கள் வகுப்பின்போது வாயிலெடுக்க வருகிறது என்றார்கள். எட்டாம் குறுக்குத்தெருவில், என் புறாக்கூண்டு வாழ்க்கையில் சமைக்கவெல்லாம் முடியாதாகையால் அந்த தண்டனையிலிருந்து நான் தப்பித்தேன். வசதியான அறையில் வசித்த நண்பர் ஒருவர், இதற்காகவே மின் கலப்பியெல்லாம் வாங்கினார். குறுக்கு வெட்டுத் தெருவிலிருந்த சந்தைக்கு காய் வாங்கப் போவோம். நான் தேங்காய் மண்டியில் ஒரே ஒரு தேங்காய் வாங்குவேன். வெள்ளரிக்காயை விட்டால், எனக்குத் தெரிந்து அதுதான் சமைக்காமல் சாப்பிடக்கூடிய காய். காரியாபட்டியில் பிஞ்சு வெள்ளரிக்காய் வாங்கி சாப்பிட்டு ருசி கண்டவனுக்கு, கோவையில் கிடைக்கும் முற்றியவகை பிடிக்கவில்லை. கடைப்பெண்ணின் கணவர் எங்களை சந்தேகமாகப் பார்க்கவே அதையும் நிறுத்திவிட்டேன். ”பழமுதிர்ச் சோலை”யில், முளைவிட்ட பயறுகளை சாப்பிட முயன்று தோற்றிறுக்கிறேன். பயறுகளில் இருந்த பூச்சிகள் நீரில் ஊறி கெட்ட வாடை அடித்தது.

முத்திரைகளைப்பற்றி ஒருநாள்:

முட்டிக்கால் போட்டு அமர்ந்து கைகளை விதம் விதமாக வைத்து மூச்சை இழுக்கச் சொல்லி இப்போது எங்கே பிடிக்கிறது என்று கேள்வி கேட்பார். ஒருத்தருக்கு, முதுகு பிடிக்கும், ஒருத்தருக்கு இடுப்பு பிடிக்கும், ஆளுக்கு ஒன்றாக சொல்வார்கள். வேண்டிய பதில் வரும் வரைக்கும் விடமாட்டார். தலையில் பிடிக்கிறது என்றால், ”தலையாம், திரும்ப முட்டி போடு” என்பார். வலி தாங்காமல், மற்றவர்கள் என்ன பதில் சொல்லி தபித்தார்களோ அதையே சொல்வார்கள்.

அதாகப்பட்டது (இரண்டாம் முறையாக சொல்கிறேன்.. மன்னிக்கவும்). தொழுகை செய்வது போல முட்டிக்கால் போட்டு கைகளை வெவ்வேறு முறையில் வைத்துக்கொண்டு மூச்சை உள்ளே இழுத்தால் பிராண சக்தியை குறிப்பிட்ட இடங்களுக்கு செலுத்தமுடியும். அதன் மூலம் அப்பகுதியில் உள்ள உறுப்புக்களை சீராக்க முடியுமாம்.

குடிக்கு எதிரான பிரச்சாரம் ஒரு நாள்:

அமெரிக்காவில், தன்னுடைய குருவிடம் பயிற்சிபெற்ற ஒருவன், குடித்துவிட்டு, நண்பர்களுக்கு யோக பயிற்சியை செய்துகாட்டப் போய் உடலெல்லாம் நீலம் பாரித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிவிட்டானாம். அப்புறம் குருதான் போய் காப்பாற்றினார் என்று பயமுறுத்தினார். எனவே, இந்த பயிற்சி செய்யும்போது குடிக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். குடிப்பவர்களைப்போல நல்லவர்களை பார்க்கமுடியாது அவர்கள் போதை தெளிந்து இருக்கும்போது”, என்று ஆசை காட்டவும் செய்தார். அதற்கு பயந்து சிலர் சில நாட்கள் குடிக்காமல் இருப்பார்கள்.

அவ்வப்போது சில புரட்சிகளும் கூட நடந்தன. ”வேதத்தில் பிராமணனுக்கு தினமும் பூசணிக்காய் தட்சிணை கொடுப்பவருக்கு சுவருகத்தில் இடம் கிடைக்கும் என்று எழுதப்பட்டிருக்கிறதாம். இங்கேயே சுகமாக வாழ பிராமணர்களின் தந்திரத்தைப் பாருங்கள்”, என்பார். சில சமயம் தமக்கு உதவி செய்பவர்களைக்கூட அவர்களின் சாதி பாகுபாட்டைக் குறை சொன்னார்.

பெண்கள் மாதவிடாய் காலங்களில் வீட்டார் செய்யும் கெடுபிடிகளை சொல்லி அழுதால், வேத காலத்தில் அப்படிபட்ட பிற்போக்குத்தனங்கள் இல்லை என்று எடுத்துக்காட்டுவது. கணவனை இழந்தவர்கள் ஆசைப்பட்டால் இட்டுக்கொள்ள குங்கும் தருவது என்பதான சில செயல்களும், ”பழைய மாணவர் ஒருவர் தன் மனைவியின் கையைப்பிடித்துக்கொண்டு நடக்க ஆசைபட்டார். ஆனால் அது மனைவிக்கு பிடிக்கவில்லை. அதனால் என்ன? என் கையைப் பிடித்துக்கொள் எனக்கு ஆட்சேபணை இல்லை என்றேன்”, என்று முற்போக்கு முகம் காட்டுவதும் புரட்சிகளில் அடக்கம்..

எடுத்துக்காட்டாக, ”சிரசாசனம் செய்யாதீர்கள். பிற யோக ஆசனங்களிலும் ஆபத்து உண்டு. அதனால் வரும் கோளாறுகளை சரிசெய்யவென்றே ஒருவர் இருக்கிறார்.”, ”பிடிக்காதப் பாடத்தைப் படிக்க சொன்னதால் பைத்தியமான மகன்”, என்பது போன்ற பெரிய சிக்கல் இல்லாத கதைகளும் உணர்ச்சி பொங்க சொல்லப்படும்,

பிரிதொரு நாள்:

”மேலை நாட்டு மருத்துவம் பிணங்களை வைத்து சோதனை செய்கிறது. ரிஷிகள் தம் 
உடலையே சோதனைக்கு உள்ளாக்கி நமக்கு ஆயுர்வேதம் அருளியுள்ளார்கள்”
”ஒரு பொருளின் ஒளி வடிவம் நம் கண்களுக்குத் தெரிகிறது. அப்பொருளுக்கு நிகரான 
ஒலிவடிவம்தான் சமசுக்கிருதம்.
உதாரணமாக நெருப்பின் ஒலி வடிவம் ”ரம்” ஆகும். அந்த ஒலியைக் கட்டுப்படுத்தினால் 
நெருப்பைக் கட்டுப்படுத்த முடியும்.”, என்பார்.
கோவையில் புகழ்பெற்ற மருத்துவமனை ஒன்றின் தலைமை மருத்துவர் வகுப்பை பார்வையிட வருகிறார் என்று எதிர்பாத்து இருந்தார். குருவுக்கு நல்லவேளை. அவர் வரவே இல்லை.

தினமும் நாம் பெற்ற ஞானத்தை வாழ்க்கையில் பயன்படுத்தி நமக்கு ஏற்பட்ட பட்டறிவை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள செய்வார். கையில் ஒலிவாங்கி கிடைத்த பெருமிதத்தில் மக்கள் கொஞ்சம் அதிகமாகவே கூவுவார்கள். “இப்படித்தாங்க நான் பெங்களூரு ஐஐஎஸ்சி-ல ஆராய்ச்சி பண்ணிட்டு இருந்தபோது..“, என்று ஒரு பெண் ஆரம்பிக்கும். மின் கலப்பி நண்பருக்கு அவர் சொந்தம். ”ஆராய்ச்சியெல்லாம் ஒண்ணும் பண்ணல, சுத்துறா..”, என்று காதைக் கடிப்பார். கூடவே குரு, ”இப்போது உங்கள் தூக்கம் குறைந்து இருக்குமே, சுறுசுறுப்பு கூடியிருக்குமே”, என்று எடுத்துக் கொடுப்பார்.

”இயலாதவர்களுக்கு முன்பின் தெரியாதவரானாலும் கூச்சப்படாமல் உதவவேண்டும்”, என்று ஒரு நாள் பாடம். நண்பர் ஒருவர் பேருந்துக்கு கையில் சுமையுடன் நின்றிருந்த முதியவருக்கு உதவப்போனதைப் பற்றி பகிர்ந்துகொண்டார். “ஐயா, எங்க போறீங்க உங்களுக்கு உதவி ஏதும் வேணுமா” என்று வலியப் போய் கேட்க பெரியவர் இவரை ”யாரு பெத்த பிள்ளையோ?” என்பது போல பார்த்து, ”தம்பி, நான் நல்லாத்தான் இருக்கேன். நீங்க உங்க வேலையப் பாருங்க.” என்று கேட்டு மண்டை காய்ந்ததை குருவுக்கு தெரியாமல், அரசியல்வாதி உட்பட்ட நண்பர் குழாமிடம் சொல்லி சிரித்தார். இதில் அன்றாடக் குடியர்கள் ஒருநாள் குடிக்காமல் வந்து நடந்த கதையைச் சொன்னால் கேட்க மிகவும் உருக்கமாக இருக்கும். அதுவும் அவர்களுக்கு ”ரொம்ப நல்லவர்கள்” பட்டம் வேறு கிடைத்திருக்கிறதே.

இடையில், வார விடுமுறை ஒன்றில் நாள் முழுதும் வகுப்பு. காலையில் நேரு மைதானத்தில் குடும்பத்தாருடன் போய் விளையாட்டு. திடலில், பழைய மாணவர்கள் எல்லோரையும் கூசிக்கொண்டிராமல் ஆட்டமும் பாட்டமுமாய் இருக்க உற்சாகப்படுத்தினார்கள். மாலை குறுக்கு வெட்டுத்தெருவுக்கு குறுக்காக ஓடும் இலக்கமிட்ட குறுக்குத்தெருக்கள் ஒன்றில் வகுப்பு. நான் தங்கி இருந்த விடுதி எட்டாம் குறுக்குத்தெரு. வகுப்பு மற்றொன்றில். அங்கே குரு வரத் தாமதமாகிவிட்டது. மண்டை காய்ந்த நண்பர், பிடித்துக்கொண்டார். குரு, ”வண்டி நின்று விட்டது, ஓடி வந்தேன்”, என்று எவ்வளவு மன்றாடினாலும், நண்பர் மன்னிக்க மறுத்துவிட்டார். அதுதானே தனக்கு வந்தால்தானே தெரியும் முதுகு வலியும் திருகு வலியும். ”நான் எல்லா உயிர்களுக்கும் தாயாக இருப்பேன்”, என்று எல்லோரிடமும் உறுதிமொழி வாங்கிக்கொண்டு, எனெக்கென பிரத்தியேகமாக ”சிரீம்” என்ற மந்திரத்தை கொடுத்து அருளினார். அதை தியானத்தின் போது உச்சரித்துக் கொள்ள வேண்டும். பயிற்சி முடிந்த சில காலத்திற்குப் பின், மின் கலப்பி நண்பர் ஏதோ புத்தகத்தைப் படித்து இதில் பிரத்தியேகம் புண்ணாக்கு எல்லாம் இல்லை என்றார்.

ஒருவழியாக வகுப்புகள் முடியும் தறுவாயில், பழைய மாணவர்கள், நான்கு நாட்கள் வெளி இடத்தில் தங்கி புதிதாக பெற்ற பயிற்சியைப்பற்றி அவர்களுக்குள் அளவு கடந்த மலர்ச்சியுடன் பேசிக்கொண்டார்கள். ஆசை யாரை விட்டது....


பாகம் 2

முதலில் பதிமூன்று நாட்கள் எடுத்துக்கொண்ட யோகப் பயிற்சியின் பெயர் ”சகஜ சமாதி யோகா”. ”சமாதி” என்றால் சுடுகாடு இல்லை. ரஜினி ஒரு படத்தில் சொல்வது போல, “அது தேவ நகரி, தெலிவா உச்சுரிக்கனும்”. ஆதியில், நாம் தாயின் கருவில் சுகமாக இருந்த நிலைக்கு சமமான யோக நிலை என்பது பொருள்.

புதிய வகுப்பிற்கு பேர் மறந்துவிட்டது. அதில் சேர வேண்டுமானால் இப்போது செய்யும் பயிற்சியை ஆறுமாதங்களாவது செய்திருக்கவேண்டும். ஆனால் எங்களுக்கு சலுகை கிடைத்தது. சில மாதங்களில் நடக்க இருக்கும் அந்த பயிற்சியில் எங்களை கலந்து கொள்ள அனுமதித்தனர். சும்மா இல்லை, காசுதான். அதற்கான ஆயத்த வேலைகள் ஆரம்பமாயின. அரசியல்வாதி, மண்டை காய்ந்தவர் இன்னும் சிலர் சூதானமாக கழன்று கொண்டார்கள். பொறியியல் கல்லூரி ஆசிரியர் முதலான, எங்களுக்கு அவ்வளவு மன முதிற்சி இல்லை.

நம் வாழ்வில் செய்த, செத்தாலும் யாருடனும் பகிர்ந்துகொள்ள விரும்பாத செயல்களை தினமும் ஒரு நோட்டு புத்தகத்தில் எழுதி இரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும். இது நம் ஆழ்மனதில் இருக்கும் சிக்கல்களை விடுவித்து தியானத்தின்மூலம் பேரமைதி பெற உதவும். வகுப்பில் கண்டிப்பாக அதை வெளியிட சொல்லமாட்டோம் என்று உறுதி செய்தார்கள்.

இடம் கோவையை ஒட்டிய கிராமப் பகுதியில் இருந்த பெரிய மண்டபம். ஊர் பெயர் நினைவில்லை. இரவு நேரத்தில் மண்டபத்திற்கு வழி தெரியாமல் கடைகளில் விசாரித்தால் எங்களை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள்.

போய் சேர்ந்ததும், தொண்டர்கள் முதலில் கைக்கடிகாரங்களை வாங்கி வைத்துக் கொண்டார்கள். தினமும், இருட்டோடி இருக்கும்போதே எழுப்பி விடுவார்கள்.

எதிர்பார்த்தபடியே ஒரு வகுப்பில், குரு “யார் உங்கள் இரகசியத்தை பகிர்ந்துகொள்கிறீர்கள்”, என்று கேட்டார். ஆசிரியர்தான் முதலில் போனார். அவர் செய்த கில்லாடி வேலைகளையெல்லாம் கேட்டு எனக்கு, ”சே.. இதுக்கா நாம இவ்வளவு விசனப்பட்டோம்” என்று உடனடியாக எனக்கு நானே புனிதனாகிவிட்டேன். திரும்பிப் பார்த்தால் தொண்டர் குழாமில் முன்பே இந்த பயிற்சிக்கு வந்திருந்த அவருடைய இளம் மனைவியும் இருந்தார். ஏனைய தொண்டர்கள் கண்களில் எதிர்பார்த்தது கிடைத்த திருப்தியில் இருந்தனர். ஆசிரியரைப்போலவே பெரும்பாலனவர்கள் மனதுக்குள் புழுங்கிக்கொண்டிருந்த விடயம், பாலியல் சம்பதப்பட்ட செயல்கள்தான். எங்கள் குழப்பத்திற்கு விடைகாண, குரு ஓஷோவின் புத்தகங்களைப் படிக்க பரிந்துரைத்தார்.

ஒருநாள் கண்களை மூடிக்கொண்டு சோடியுடன், சிருங்காரத் தொனியில் இந்தியில் இருந்த கிருஷ்ண லீலை மெல்லிசைப் பாடல்களுக்கு கைகளைப் பிணைந்து நடனம். (என் சோடி என்னைப்போல ஒரு கல்லூரி மாணவருங் கோவ்...). அப்புறம் கட்டிப்பிடி வைத்தியம் கொஞ்சம். இது கண்களைத் திறந்து கொண்டு என்பதால், நான் எதிர்பாலரை அணுகவில்லை. மாணவராக வந்திருந்த நடுத்தர வயதினர் ஒருவரின் மகள்தான் ஒரு தொண்டர் என்பது தெரியாமல் மற்றத் தொண்டர்கள் அப்பெண்ணிடம் நடந்துகொண்ட விதம் அவருக்கு மன உளைச்சலைக் கொடுத்தது. நல்ல வேளையாக வைத்தியத்தின் போது அவருடைய அம்மா பாதுகாப்பாக வீட்டிலிருந்து வந்துவிட்டார்.

ஒருநாள் மனம் போனபடி களேபரம் செய்யச் சொன்னார்கள். அதாவது மனதில் எதையும் அடக்கி வைக்காமல் கொஞ்ச நேரம் விட்டுப்பிடித்துப் பழகவாம். மாணவர்கள் எல்லோருமே கட்டுப்பெட்டிகளாக அமைதியாய் இருக்க, தொண்டர்கள்தாம் மடக்கு நாற்காலிகளைக் கீழேத்தள்ளி துவம்சம் செய்தார்கள்.

முத்தாய்ப்பாக, சுதர்சனக் கிரியா என்ற பயிற்சி. குருவின் குரு, சிரி, சிரி ரவிசங்கர் தம் தவ வலிமையால் கண்டுபிடித்து, உலகத்தினர் உய்ய தாம் அடைந்த இன்பம் இவ்வையகம் பெருகவென்ற, பெருந்தன்மையில் பரப்பி வருகிறார். ஒலி நாடாவை ஓடவிட்டு, அதில் அவர் “சோ--கம்” என்று தாளகதியில் திரும்பத்திரும்ப சொல்லும் போது,”சோ”வில் மூச்சை இழுத்து “கம்”இல் வெளிவிடவேண்டும். முதலில் மெதுவான நடைவேகத்தில் போய் வரும் மூச்சு, போகப்போக ஓட்டம் எடுக்கும், அவ்வப்போது கொஞ்சம் நடை அவகாசம், மீண்டும் ஓட்டம். எல்லாம் முடிந்தபின், இப்போதெல்லாம் செருப்புத்தேய, கால்கள் கெஞ்ச, சில மைல்கள் வேகமாக நடை பயிற்சி செய்துவிட்டு வரும்போது இருக்கும் அதே உணர்வு அன்று இருந்தது. அல்லது எதிர்க்காற்று முகத்தில் அறையப் பயணம் செய்துவிட்டு, வண்டி நிற்கும் போது ஏற்படுகிறதே அது போன்ற உணர்வு, தொடர்ந்து பத்து பதினைந்து நிமிடங்கள் நீடித்தன, ”உடம்பு நோகாமல், வெறுமே மூச்சை விட்டே இவ்வளவு சக்தி கிடைத்தால்,” சிசியக்கோடிகளின் பரவசத்திற்கு கேட்க வேண்டியதில்லை.

இயந்திரத்தனமான இப்பயிற்சிகள், ஓஷோ தம் சன்னியாசிகளின் தேவைக்கு ஏற்ப கொடுத்த தியானப் பயிற்சிகளின் நகலாகும் என்பது பின்னர் அவருடைய புத்தகங்களைப் படிக்கையில் தெளிவாகப் புரிந்தது. அசட்டு நாடகங்களை மேடைதோறும் நடத்துவதுபோல, அடுத்து நடந்த பயிற்சி வகுப்புகளுக்கு தொண்டாற்ற போனபொது, குரு அதே வசனங்களை ஒப்பித்துக் கொண்டிருந்தார். ”பெண்டாட்டி கை இல்லைனா என்ன? என் கையை பிடிச்சுக்கோ..” எல்லோரும் சிரித்தார்கள்.

அதுவரையில் ரவிசங்கர் இன்னார் என்று எனக்கு தெரியாது. அவர் கூட, இளைய சங்கராச்சாரி சுப்பிரமணிக்கு ஆதரவு, இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு போன்ற சாதீய பற்றிலும், ஈழத்தமிழர்கள் வைத்து நாடகமாடிய தமிழர் விரோதப்போக்கிலும் அடிபடாமல் போய் இருந்தால், அவர் நிறுவனமாக்கி இருக்கும் மூளைச்சலவைத் தொழில் விளங்காமலேயே இருந்திடுக்கக்கூடும்.

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், இதே நாடகத்தை, IIT-க்கெல்லாம் போய் காட்டுகிறார் பாருங்கள். அங்கேயும் கூட்டம் வருகிறது, காலில் விழுகிறது.

Pseudoscience unchallenged at IIT Kanpur

என் பங்கிற்கு நானும் தவறு செய்துள்ளேன். இன்றாவது ரவிசங்கருக்கு என் கண்டனங்களைப் பதிவு செய்கிறேன்.

3 மறுமொழிகள்:

Robin said...

Good Post!

ப.கந்தசாமி said...

பரவாயில்லை, இவ்வளவு நாட்கள் கழித்தாவது விழித்தீர்களே! என் நண்பர் ஒருவரின் மகள் பல வருடங்களாக அந்த சிரி சிரியின் கால்களிலேயே விழுந்து கிடக்கிறார்.

குலவுசனப்பிரியன் said...

நன்றி, ராபின், கந்தசாமி.
பதிவு உலகு மூலம், பெரியார் கருத்துக்கள், சமசுக்கிருதத்தை முன்னிறுத்தி தமிழுக்கு எதிரான பிராச்சரங்கள் போன்றவை பற்றி அறியக் கிடைத்தவுடனேயே விழித்துக்கொண்டேன். ரவிசங்கர் போன்றவர்களைப் பற்றி எச்சரிக்கை செய்து மற்றவர்கள் இடுக்கைக்கு பின்னூட்டம் இடுவதோடு சரி. நானே இடுகை இட முனையவில்லை.

அவர் ஐஐடியில் செய்த மோசடிதான் இதை எழுதத்தூண்டியது.

Post a Comment