Liferay : லைப்ரே - திறவூற்று ஜாவா போர்ட்டல்

Saturday, February 27, 2010

போர்ட்டல் என்பது பல வலைத்தளங்களை உள்ளடக்கிய சொவ்வறை எனலாம். உதாரணமாக எங்கள் நிறுவனம் கடன் அட்டைகள் போன்ற வரவு அட்டைகளை வழங்குகிறது. எங்கள் வாடிக்கையாளர்கள் தனி நபர்கள் அல்லர். நிறுவனங்கள், அரசு வாரியங்கள் போன்றவை தங்கள் ஊழியர்கள் மற்றும் பயனீட்டாளர்களுக்கு எங்கள் வரவு அட்டைகளை அவர்களுடைய நிறுவனத்தின் பெயரில் தருவார்கள்.

அட்டைதாரர்கள் மேலதிக சேவைகளை பெற, அந்தந்த நிறுவனங்களுடையதைப் போலவேத் தோன்றும் இணைய தளங்களையும் நாங்கள் தயாரித்து அளிக்கிறோம். அட்டைதாரர்களுக்கான தளங்கள் மட்டுமன்றி, அந்த அட்டைகளை நிர்வகிக்க வேண்டிய செயலிகள் அடங்கிய தளங்களும் தருகிறோம். அப்படியாக நூற்றுக்கும் மேலான தளங்களை உள்ளடக்கிய பெரிய சொவ்வறைதான் போர்ட்டல். அதை ஒவ்வொரு பயனர்களுக்கும் தனிப்பட்ட தளங்கள் போன்ற தோற்றம் தருமாறும் செய்யலாம்.

தளங்களில் நிறுவனங்களின் இலச்சினையைத் தவிற மற்ற பகுதிகள் பெரும்பாலும் ஒரேபோல் இருந்தாலும், சிறிய அளவில் ஏதேனும் மாற்றங்கள் தேவைப்படும். போர்ட்டல்களில் பக்கங்கள் (pages) பல சிறு பகுதிகளின் (portlets) தொகுதியாக அமையப் பெற்றிறுப்பதால், நம் வசதிக்கேற்ப போர்ட்லெட்டுகளை இடம் மாற்றி வைத்துக் கொள்ளலாம்.

இங்கே சில எடுத்துக்காட்டுக்களைக் காணலாம்.





மாநகரக்காவல் தளமும், மின்வாரியத் தளமும் ஒரே சொவ்வறையில் இயங்குகின்றன. போர்ட்லெட்டுக்கள் எப்படி இடம்மாறி அமைந்துள்ளன என்பதை கவனியுங்கள்.







நமக்குத் தேவையான, பயனர் மேம்பாடு, அச்சுக்கோர்த்தல், வடிவமைத்தல் போன்ற தளத்தை நிறுவ வேண்டிய எல்லா வசதிகளையும் உள்ளடக்கியுள்ளதை காணலாம்.

இந்த போர்ட்டல்களை உருவாக்குவதில் முன்னோடியாகத் திகழ்வது ஜாவா நிரல்மொழியில் தொகுக்கப்பட்ட அடிப்படை வடிவமைப்பாகும் (specification). ஜாவாவை அறிமுகப்படுத்திய சன் நிறுவனம் போர்ட்டலுக்கு 2001ல் JSR 168 - என்றும் 2008ல் இரண்டாம் கட்டமாக JSR-286 என்றும் செந்தரங்களை வரையறுத்தனர். அவற்றின் அடிப்படையில் பல நிறுவனங்கள் போர்ட்டல் சொவ்வறைகளை தயாரித்து விற்கின்றனர். IBM WebSphere Portal, WebLogic Portal போன்ற வணிக நிறுவனங்கள் அளிக்கும் மென்பொருள்களுடன், JBoss, Liferay போன்ற பல திறவூற்று (open source) தயாரிப்பிலான மென்பொருள்களும் கிடைக்கின்றன. அவற்றுள் லைப்ரே பேர்பெற்றதாகும்.

இது என்ன விலை என்று கேட்டீர்களா? ஏதும் இல்லை. பரியாக தரவிறக்கிக் கொள்ளலாம்.

http://www.liferay.com

1 மறுமொழிகள்:

TechShankar said...

பகிர்வுக்கு நன்றி.

Post a Comment