தமிழ் புதிர்

Sunday, October 25, 2009


என் நண்பர் வீட்டு வளைகாப்பு நிகழ்சியில் விருந்தினர்கள் விளையாட தமிழில் சொல் தேடல் புதிர் ஒன்று தயாரித்து கொடுத்தேன். தமிழ் தெரியாத குழந்தைகளும் கூட விரும்பி விளையாடினார்கள். உங்களுக்கு பிடித்திருக்கிறதா?



மடல் பெரிது தாழை; மகிழ் இனிது கந்தம்
உடல் சிறியர் என்று இருக்க வேண்டா – கடல் பெரிது
மண்ணீரும் ஆகாது அதனருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகி விடும்
ஔவையார் – மூதுரை – 12



செய்யுளில் கண்டுள்ள சொற்களை கண்டுபிடியுங்கள். அவை இட-வலமாகவோ, மேல்-கீழாகவோ குறுக்கு வசமாகவோ இருக்கலாம்.



றுதாவிடும்ல்
தாழைனிவேனில்ற்
ன்றுதுபெகாறூன்ந்
டுருகேற்ழை
பெரிதுவேசிகிதும்
ண்பெல்றிகாண்
டால்ல்தாதுண்ன்
ல்டுருக்ணீ
கேகிர்றிசிதிழ்ரு
ழ்றூல்ம்ருணீண்ம்து

சட்டி விரதமும் கந்தலான உடலும்

Sunday, October 18, 2009

என் தந்தையார் பெரும் முருக பக்தர். ஒவ்வொரு ஆண்டும் தன் கடவுளுக்காக ஏதேனுமொரு விரதமிருப்பார். துவக்கத்தில் பங்குனி மாதமானால் உருத்திராடம் அணிந்து கொள்வார். வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் காவி உடுத்திக் கொள்வார். வெறும் தரையில் துண்டை விரித்து தூங்கிக்கொள்வார். மற்றும் சிறப்பு பூசை, புலால் மறுத்தல், முக சவரம் இல்லை என்று ஒரு துறவி போல மாறிப்போவார். இந்த விரதம் சித்திரை முதல் நாள் மாவூற்று வேலப்பர் கோவிலுக்கு போய் வந்த பின்புதான் முடிப்பார்.

அவரோடு நானும், என் தம்பியும் சில ஆண்டுகள் அந்த கோவிலுக்கு போயிருக்கிறோம். மதுரையிலிருந்து ஆண்டிபட்டிக்கு இரவு பேருந்து பிடிப்போம். ஆண்டிபட்டியிலிருந்து கோவிலுக்கு போக அரசு சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்திருப்பார்கள். அதற்கு பெரிய கூட்டம் காத்திருக்கும். நாங்கள் கோவிலுக்கு ஐந்தாறு கல் முன்பாக தெப்பம்பட்டியிலேயே இறங்கிக் கொள்வோம். ஏதோ அலுவலகப் பணிக்கான காரைக் கட்டிடத்தை பக்தர்களுக்காக ஊர்க்காரர்கள் ஒதுக்கி இருப்பார்கள். பத்து பேர் கால் நீட்டி தூங்க முடியும் அளவே உள்ள சிறு அறையின் ஒரு மூலையில் இளந்தாரிகள் தாங்கள் விரும்பும் திரைப்படப் பாடலை ஒலிபரப்ப முனைந்திருக்க என் அப்பா ஏன் பக்திப்பாடல் போடுவதில்லை என்று அவர்களை கடிந்துகொள்வார்.

பின்னாட்களில் அந்தக்கட்டிடமும் லாந்தல் சரிந்து போய் தங்க பயனற்றுப் போய்விட்டது. நாங்கள் அருகே உள்ள வீடுகளில் திண்ணை இடம் கேட்டு, பெண்கள் “வீட்டு ஆம்பளைங்க கிட்ட கேளுங்க” என்று கைகாட்ட, அவர்களின் அனுமதியோடு இரவை அங்கே கழித்திருக்கிறோம். அடுத்த முறை அதே கட்டிட சுவரை ஒட்டியிருந்த தொழுவத்தில் ஆற்று மணல் பரப்பி இருந்தார்கள். அங்கே படுத்துக்கொண்டோம். ஆனால் தூங்க இயலாது. இரவு முழுதும் அங்காங்கே நடக்கும் கலை நிகழ்ச்சிகளின் ஒலி கேட்டுக்கொண்டே இருக்கும். இடையிடையே பாடல்களை நிறுத்தி, ஊர் வழியாகச் செல்லும் காவடிகளைப் பற்றி அறிவிப்பு செய்வார்கள். காவடி அலங்காரம், மேளக்காரர்கள், வேசக்காரர்கள் என்று கண்கொள்ளாக் காட்சியக இருக்கும். காவடிகளின் பெருமைக்கேற்ப அவற்றைக் காண மக்கள் முண்டியடிப்பார்கள்.

நாங்கள் காத்திருப்பது அதிகாலை வரும் குறவர் காவடிக்காக. தலைமுறை தலைமுறையாக இந்தக் கோவிலுக்கு காவடி எடுப்பவர்கள். செல்லும் வழியெங்கும் மக்கள் பாதம் கழுவி வணங்குவதால் காவடி மெதுவாகத்தான் நகரும். சிலருக்கு சாமி தூய தமிழில் அருள் வாக்கு சொல்வார். புரியாதவர்களுக்கு என் அப்பா பேச்சு மொழியில் விளக்கம் கொடுப்பார். என் அப்பா முன்பு இதே காவடி சாமியின் ஆசியோடு மூன்று ஆண்டுகள் காவடி எடுத்து, தன்னுடைய தந்தையார் விட்டுப்போன நேர்த்திக் கடனை அடைத்திருக்கிறார். அந்த பற்றுதலில்தான் காவடி எடுக்க முடியாவிட்டாலும் அதற்குறிய நடைமுறைகளை மட்டுமாவது ஒவ்வொரு ஆண்டும் பின்பற்றி வந்தார். எனக்கென்னவோ காவடி சாமி போலவே இவருக்கும் மரியாதை கிடைப்பதால்தான் இப்படி கடும் விரதம் இருக்கிறார் என்று தோன்றும்.

பின்பு வேலப்பர் கோவிலுக்கு செல்வதுடன், மறுநாள் வேறு ஏதாவது ஒரு முருகன் கோவிலுக்குப் போய் மொட்டை அடித்துக் கொள்வது என்று ஆரம்பித்தார். என்ன வேண்டுதல் என்று கேட்டால், பிடிக்கவில்லை என்றால் சொல்லுங்கள் விட்டு விடுகிறேன் என்றார். தூத்துக்குடிக்கு வேலை மாற்றலாகிப் போன பின், திருச்செந்தூருக்கு பாதயாத்திரை செல்லத் துவங்கினார். திருச்செந்தூர் கோவில் மண்டபத்தில் பக்தர்கள் தங்கி சட்டி விரதம் இருப்பதைப் பார்த்து அடுத்த ஆண்டுகளில் அவரும் சட்டி விரதம் இருக்கத் துவங்கினார். தீபாவளி மறுநாள் முதல் ஆறுநாட்கள் எதுவும் சாப்பிடுவதில்லை. குமட்டல் எடுக்கும் என்று நீர் கூட அதிகம் குடிப்பதில்லை. அப்படியும் ஐந்து நாட்களும் வேலைக்கு போய்வந்து, சட்டி நாள் காலை திருச்செந்தூர் கோவிலில் போய் உடல் வலம்சுற்றி, மாலை சூர சம்மாரம் பார்த்த பிறகுதான் சாப்பிடுவார்.

அப்படி விரதமிருக்கும்போது நானும் ஒருமுறை வீட்டில் விடுமுறையில் இருந்தேன். தீபாவளி அன்று சாப்பிடும் கறிதான் அடுத்த ஆறு நாட்களுக்கும் பலம் தரவேண்டும். நாள்பட உடல் தளர்ந்து போவார், நா வறண்டு பேசக்கூட முடியாமல் இருப்பார். அம்முறை நானும் அம்மா அப்பாவுடன் ஐந்தாம் நாள் இரவு திருச்செந்தூர் போய், கோவில் அருகே உள்ள சாதியார் சத்திரத்தில் தங்கினேன். மறுநாள் சட்டி அன்று காலை கோவிலில் உடல் வலம் சுற்ற ஆயிரக்கணக்கானவர் கூடியிருந்தனர். அப்பா பின்னால் வர நான் அவருக்கு முன்னதாக வலம் சுற்றினேன். கைலி கட்டி இருந்ததால், இடைவேட்டியை இருகக் கட்டிவிடுபவர் “சாரம் கட்டக் கூடாதல்லா” என்று தயங்கினார். பின்னர் மேலாக ஒரு துண்டையும் கட்டிக்கொள்ள என்னை அனுமதித்தார்கள். முன்னால் போனவர்கள் சிலர் சுற்றம்பலத்திலேயே ஆங்காங்கே வாந்தி எடுத்து வைத்திருந்தனர். உதவிக்கு வருபவர்கள் அதன் மீது திருநீறைக் கொட்டி மறைத்தனர். அவற்றின் மேல் படாமல் வளைந்து வளைந்து உருண்டு போனேன்.

கடலில் குளித்துவிட்டு மீண்டும் சத்திரத்துக்கு போகும் வழியெல்லாம் பக்தர்கள் தாங்கள் தரும் அன்ன தானம் சாப்பிட அழைத்தார்கள். எங்கள் சத்திரத்தில் என் சொந்த ஊரிலிருந்து வந்தவர்கள் பலபேர் இருந்தனர். ஒரு சிலர் வகை வகையாக பரியாக கிடைக்கும் உணவிற்காகவே வருபவர்கள் என்று அவர்கள் பேச்சிலிருந்து தெரிந்தது.நானும் அம்மாவும் மட்டும் எங்கள் ஊர்காரர் வழங்கிய எளிய மதிய உணவு உண்டோம். சில பெண்கள் அதை குறை சொல்லிக்கொண்டே கை கழுவினார்கள். மாலை ஒரு மணல்திட்டில் உட்கார்ந்து சம்மாரம் பார்த்து மீண்டும் குளித்துவிட்டு இரவில் கோவில் வளாகத்தில் விடுதியில் சிற்றுண்டி உண்டு விரதத்தை முடித்தார். எனக்கு அந்த உணவின் காரம் அவருடைய உடலுக்கு தீங்காகுமே என்று கவலையாயிருந்தது.

மறுநாளும் ஏதோ ஒரு முறைக்காக, அருகில் இருந்த கோவில் குளத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்ற சடங்கு இருந்தது. குளத்தின் பாசம் நிரைந்த சாக்கடை நீரை பார்த்த அருவறுப்பில் நான் அதில் கால் வைக்கவும் மறுத்துவிட்டேன். சத்திரத்திற்குத் திரும்பும்போது வீடுகளிடையே நடந்து வந்தோம். ஒரு வீட்டிவாசலில் அருச்சகர் ஒருவர், சிறிதாக திறந்திருந்த கதவின் பின்னே பெருக்கிக் கொண்டிருந்த விதவைப் பெண்ணுடன், அவருடைய மளித்த தலையை மூடியிருந்த சேலை மறைக்காத வெற்று மேலுடலை பார்த்தவண்ணம் பேசிக்கொண்டிருந்ததை பார்க்க நேரிட்டது. அது இந்த நிகழ்வுகளுடன் ஏதோ ஒருவகையில் தொடர்பு இருப்பதாக எனக்குப் படுகிறது.

அவரைப் பார்த்து நானும் ஒருமுறை இந்தோனேசியாவில் பிடிக்காத வேலைச் சூழலிருந்து மீண்டு அமெரிக்கா செல்ல வேண்டியும், மற்றொருமுறை என் மகனுக்குப் பேச்சு வர வேண்டியும் அதேபோல் விரதமிருந்திருக்கிறேன். நான் இப்போது அமெரிக்காவில் இருக்கிறேன் ஆனால் என் மகனுக்கு ஏழுவயதாகியும் பேச்சு வரவில்லை. நான் அவனுக்கு மரபணுக் கோளாறால் (டவுன் சின்ட்ரோம்) ஏற்படும் குறைகளை உணர்ந்து, சக அமெரிக்கர்கள் போல இருப்பதை நேசிக்கக் கற்றுக்கொண்டேன். சில அமெரிக்கர்கள் எந்நாட்டவர்க்கும் இலக்கணம் சொல்லும் வகையில் வாழ்கிறார்கள். நான் ஒரு ஆண் குழந்தை ஒன்றை தத்து எடுத்துக்கொண்டால் என் மகனுக்கு உதவியாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். கலிபோர்னியாவில் வசிக்கும் பெண்மணி ஒருவர், தன் ஒரு குழந்தைக்கு இந்தக்குறை இருப்பினும், அதேபோல் மேலும் ஒரு குழந்தையை தத்தெடுத்துக் கொண்டதை அறிந்து என் குறுகிய மனப்பான்மையை எண்ணி நாணிப்போனேன்.

எதற்காகவோ ஏறக்குறைய பத்து ஆண்டுகளாக தொடர்ந்த இந்த கடும் விரதத்தை அவர் வேலை ஓய்வு பெற்ற பின்னும் நிறுத்திக்கொள்ளவில்லை. அவருக்கு கிராமத்தில் வளர்ந்தவர்களுக்கு உரித்தான வலிமையான உடல், அதை விட உரத்தக் குரல். ஒருநாளும் காய்ச்சல் தலைவலி என்று படுத்ததில்லை. எங்கும் நடந்துதான் போவார். தன் உடல் நலம் குறித்து பெருமை பட்டுக்கொள்வார். அதற்கு தன்னுடைய விரதங்கள் காரணம் என்பது அவர் நம்பிக்கை. விரதங்களின் கடுமையைக் குறைக்கச்சொல்லி பலபேர் சொல்லியும் மறுத்துவிட்டார். சத்தத்திலேயே அடுத்தவரை அடக்கிவிடுவார்.

சில ஆண்டுகள் முன்பு மெல்லிய மாரடைப்பு வந்த பின்தான் சற்று இறங்கினார். அதுவும் சில மாதங்கள் ஓய்விற்குப்பின் வேறெந்த மருந்து மாத்திரைகளுக்கும் தேவை இல்லாமல் சரியாகிவிடவே இரத்தக்குழாய் அடைப்பு பரிசோதனை செய்ய மறுத்துவிட்டார். அடுத்த ஆண்டுகளில் சட்டி விரதத்தில் ஒரு வேளை உண்ண சம்மதித்தார். ஆனால் அண்மையில் திருவண்ணாமலை வலம் வரும் பழக்கமும் தொற்றிக் கொண்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் அங்கு போய்விட்டு வரும் வழியில் சிவப்பாக வாயிலெடுத்திருக்கிறார். ஊரிலிருந்து சென்ற கூட்டத்தினரில் மருத்துவர் இருந்ததால் இரவோடு இரவாக அருகிலிருந்த ஊரில் மருந்து வாங்கி ஊசி போட்டுத் தேவலையான பின் நேரே மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அங்கு பரிசோதனையில் ஈரலில் துளைகள் (cirrhosis - சிர்ரோசிஸ்) விழுந்திருப்பது கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை செய்து அடைத்தனர். இப்படிப்பட்ட பாதிப்பு கடுமையான குடிப்பழக்கம் உள்ளவர்களுக்குத்தான் ஏற்படும் என்று தெரிந்துகொண்டேன்.

இவரோ துறவிபோல வாழ்பவர் இவருக்கு எப்படி நேர்ந்தது. இறைவனுக்காக கடுமையான விரதங்கள் இருந்தவர் தனக்காக மருத்துவர் சொல்படி பத்திய உணவு, குறைந்த நடமாட்டம், வேளைக்கு மருந்து என்று கட்டுப்பாடாக இருக்க இயலவில்லை. சில மாதங்களில் இரத்தம் கட்டிப்போனதுபோல கருமையாக வெளிக்குப் போகிறது என்று மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கேயே தன் அறுபத்தொன்பதாம் வயதிலேயே இன்னுயிர் துறந்தார்.

எல்லா உயிர்களைப் போலவும் இயற்கைக்கு ஏற்ப நடந்திருப்பாரானால் இன்றும் எங்களுக்கு பேருதவியாய் இருந்திருப்பார். இயற்கைக்கு முரணாகவும் மனித நேயத்திற்கு எதிராயும் வாழ்வுக்குப் பொருத்தமற்றும், இருக்கும் இம்மையை விட்டு இல்லாத மறுமைக்கு வழி சொல்லும் மத தத்துவங்கள் மதிப்பிழந்துபோக வேண்டி இந்த இடுகையை சேர்க்கிறேன்.