ஆதலினால் ரோபாட் செய்வீர் 2

Wednesday, March 18, 2015

கடந்த ஆண்டு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ரோபாட் போட்டியில் கலந்துகொள்ள புதிய குழு அமைக்கும் முயற்சியில் இருப்பதாக எழுதியிருந்தேன். அந்த எண்ணம் கைகூடி, சென்ற வாரம் எங்கள் குழு மாணவர்கள் ஃப்ளோரிடா மாநிலம், ஒர்லான்டோவில் நடந்த போட்டியில் வெற்றிகரமாக கலந்துகொண்டார்கள்.

அறுபத்து நான்கு குழுக்கள் பங்கேற்றதில் வெளி மாநிலத்தவரும், துருக்கி, பிரேசில் முதலான வேறு நாட்டவர்களும் அடக்கம். எங்களையும் சேர்த்து ஐந்து குழுக்கள் முதன்முறையாகப் போட்டியிட்டன. குழுக்கள் பலவும் வேடிக்கையான பெயர்களை வைத்துக்கொள்கின்றன. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட எண்ணும் முக்கியமானதுதான். அவர்களின் தரவரிசை, பெற்ற புள்ளிகள்  போன்றவை குழுவின் எண்களை வைத்துத்தான் பட்டியலிடப்படுகின்றன. எங்கள் எண் 5628, பெயர் சைபோர்க்-சக்கரா (ம்).

போட்டிக்கான விதிமுறைகளை, ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடுகிறார்கள். அன்றிலிருந்து ஆறு வாரங்களுக்குள்  ரோபாட்டை செய்து முடித்து சீல் வைத்துவிடவேண்டும். இவ்வாண்டில் போட்டி 'ரீசைக்கிள் ரஷ்' என்ற பெயரில் மறுசுழற்சி சம்பந்தப்பட்டது. ரோபாட்கள் மறுசுழற்சிக்கு பொருள்களை சேகரிக்க பயன்படுத்தும் பெட்டிகளையும், தொட்டிகளையும் மேடையில் அடுக்கிவைக்க வேண்டும். ரோபாட்டுகள் எத்தனை பெட்டிகள், எத்தனை அடுக்குகள் மேடை ஏற்றுகின்றன என்பதைப் பொருத்து அவற்றுக்கு புள்ளிகள் தரப்படும்.



கூடைப்பந்து மைதானம் அளவுள்ள திடலில் இருபுறமும், பக்கத்திற்கு மூன்றாக ஒரே சமயத்தில் ஆறு குழுக்கள் விளையாடுகின்றன. ஒவ்வொரு ரோபாட்டையும் ரிமோட் மூலம் இயக்க இரண்டு மாணவர்களும் அவர்களுக்கு உதவ மற்றொரு நபரும் களம் இறங்குகிறார்கள். ஒவ்வொரு குழுவும் அவர்கள் திறமைக்கும் வசதிக்கும் தகுந்தவாறு ரோபாட்டை வடிவமைக்கிறார்கள். பல ரோபாட்டுகளின் செயற்பாடுகள் பிரமிப்பு ஊட்டுகின்றன. பள்ளிப் பருவத்திலேயே இப்படிபட்ட நுணுக்கமான மேம்பட்ட ரோபாட்டுகளை தயாரிக்க கற்றுக்கொள்ளும் மாணவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.

முன் அனுபவம் இல்லாத நாங்கள், எங்கள் ரோபாட்டை புதிய மாணவர்கள் எளிதாக புரிந்துகொள்ளக்கூடிய வகையில் மட்டும் வடிவமைத்தோம். டிரைவ்-டிரெய்ன் (drive-train) என்னும் ஓடுதளத்திற்கு ஆயத்த வடிவமைப்பை பயன்படுத்திக்கொண்டோம். சுமையை மேலும் கீழும் கொண்டுசெல்ல மோட்டோர் பொருத்திய திருகாணி அமைப்பு, பெட்டிகளைப்பிடித்துக்கொள்ள ஒரு மோட்டாரில் இயக்கும் நான்கு பல் சக்கரங்கள், கடைசி இரண்டில் கைகள்போன்ற இணைப்பு அவ்வளவே. இதற்கே சுமார் எட்டாயிரத்திலிருந்து பத்தாயிரம் வெள்ளிகள் செலவாயிற்று. முன்னணியில் உள்ள குழுக்கள் ஆண்டிற்கு நாற்பதாயிரம் வரைகூட செலவழிக்கின்றன. இதற்கான நிதி வசதி, சமூக அக்கறை உடைய தொழில் நிறுவனங்களிடமிருந்துதான் பெறவேண்டும்.

பணத்தை போலவே அனுபவமிக்க எந்திரவியல், மின்னியல், கணினி நுட்பியல் நிபுணர்களின் உதவியும் மிகவும் இன்றியமையாததாகும். பின் இரண்டை நான் கவனித்துக்கொள்ள, எனது நண்பர் எந்திரவியல் தேவைகளை அவருடைய சொந்தத் தொழிற்கூடத்தில் கவனித்துக்கொண்டார்.

மாணவர்களுக்கு அவர்களுடைய அன்றாட பாடங்களைப்படிப்பதற்கே நேரம் போதாமல், ரோபாட் சம்பந்தப்பட்ட வேலைகள் சுமையாக தெரிந்தன. ஆனால் போட்டியில் கலந்துகொண்ட மற்ற மாணவர்களின் திறமையை கண்கூடாகப்பார்த்ததாலும், எங்கள் எளிய ரோபாட்டைக்கொண்டே அவர்களின் மதியூகத்தால் நல்ல முறையில் விளையாடி முப்பத்தி எட்டாம் தரவரிசையைப்பிடித்ததாலும், நல்ல ஊக்கம் பெற்று அடுத்தமுறை இன்னமும் சிறப்பாக செயல்படவேண்டும் என்று உறுதிபூண்டு இருக்கிறார்கள். எங்கள் நோக்கம் நிரைவேறியதில் இந்த குழுவை அமைக்க நாங்கள் பட்ட கட்டமெல்லாம் மறந்து பெற்றோர்களாகிய எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சிதான்.

மேல் விவரங்களுக்கு
மேலும் படங்கள் இந்த மடல் குழுவில்