யாகல்லாராயினும் கற்க லீனியர் அல்ஜிப்ரா
Sunday, November 09, 2014Labels: Octave, Scilab, technology, கல்வி, நுட்பியல், லீனியர் அல்ஜிப்ரா
அறிவியல், நுட்பியல், பொறியியல், கணிதம் ஆகிய பாடங்களை ஆங்கிலத்தில் சுருக்கமாக ஸ்டெம் (Science, Technology, Engineering, Math - STEM) என்கிறார்கள். இந்தப்பாடங்களைப் படிக்க கணினியின் தேவை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதற்கு ஒரு காரணம் கல்லூரிப்புத்தகங்களின் புதிய பதிப்புகளில் பாடங்களை விளக்க லீனியர் அல்ஜிப்ரா (நேரியல் இயற்கணிதம்)பயன்படுத்துவதும், அந்தக்கணக்குகளை "மாட்லாப்" (MatLab) என்னும் கணினி மென்பொருளின் நிரல்மொழியில் எழுதுவதும் ஆகும்.
அதற்காக லீனியர் அல்ஜிப்ரா கடினம் என்று அருத்தம் இல்லை. கணினியின் அடிப்படை எளிய கணக்குகள் அல்லவா? லீனியர் என்பதற்கு நேர்கோடு என்று பொருளாகும். அதாவது, x2, x3
போன்று மதிப்புகள் வளையப்பெரும் வர்கமுறை இல்லாத 1x, 2x போன்று மதிப்புகள் நேர்கோடாய்ச் செல்லும் எளிய மடங்கு முறைகளைக் குறிக்கும். லீனியர் அல்ஜிப்ரா என்பது பல பரிமாணங்களில் மடங்கு எண்களின் கூட்டு சமன்பாடுகளைப்பற்றியதாகும்.
உ.ம்: 2x + y + z = 5 என்பது ஒரு லீனியர் அல்ஜிப்ரா முப்பரிமாண சமன்பாடாகும்.
இத்தகைய சமன்பாடுகள் அனைத்து அறிவியல் துறைகளிலும் காணப்பெறுகின்றன. இவைகளைக் கணக்கிட, திசையன் (வெக்டர் vector), அணி (மாட்ரிக்ஸ் matrix) முதலான கணிதமுறைகள் பயன்படுகின்றன. அடிப்படையில் இவை எளிய கூட்டல் பெருக்கல் கணக்குகளாவதால், கணினி நிரல்கள் மூலம் விடைகளைப்பெறுவதும் எளிதாகிறது. எனவே, வேறு குறியீட்டு முறை கணிதங்களும் கூட, லீனியர் அல்ஜிப்ராவிற்கு மாற்றப்பட்டு கணினிகளின் துணையால் சடுதியில் விடை காண்கிறார்கள்.
அமெரிக்காவில் மாணவர்களைக் கல்லூரிகளுக்கு ஆயத்தம் செய்வதாக சொல்லிக்கொள்ளும் பள்ளிகளில்கூட லீனியர் அல்ஜிப்ரா கற்பிப்பதில்லை. இதனால் கல்லூரிக்குள் நுழையும் மாணவர்கள் அல்லல்படுவது நடக்கிறது. முதலாம் ஆண்டில், ஒரே சமயத்தில் ஒருபுறம் அறிவியலும் மறுபுறம் அதற்குத்தேவையான கணிதமும் கற்பிக்கப்படுவதால், மாணவர்கள் பாடங்களைப் புரிந்துகொள்ள சிரமப்படுகிறார்கள். லீனியர் அல்ஜிப்ரா ஆசிரியர்களுள் சிறந்த கில்பர்ட் ஸ்டரங், தன்புத்தகத்தில் குறைபட்டுக்கொள்கிறார். மேலே உள்ள காணொளியில் அவர் மிகப்பொருமையாக பாடம் நடத்துவதைக் காணலாம்.
பள்ளிக்கூடங்களில் இந்தகணிதம் சொல்லித்தரப்படாததற்கு காரணம் அதற்குத்தேவைப்படும் "மாட்லாப்" போன்ற மென்பொருள்கள் கொள்ளைவிலை என்பதால் இருக்கலாம். ஆனால் அதற்கு இணையாக இப்போது கட்டற்ற மென்பொருள்கள் இருக்கின்றன. "ஆக்டேவ்" (Octave) என்னும் மென்பொருள் மாட்லாபின் நிரல்களை பெரும்பாலும் மாற்றம் எதுவும் இன்றி இயக்குகின்றன. மாட்லாபின் மற்றொரு அங்கமான சிமுலிங்க் (Simulink) கட்டுப்பாட்டு அமைப்புகளை (control systems - இதைப்பற்றி தனியே எழுதவேண்டும்) வடிவமைக்க உதவுகிறது. ஆக்டேவில் இந்த வசதி இல்லை. இந்த வசதியுடன் கூடிய சைலாப் (Scilab) என்னும் மென்பொருள் அதற்கு ஈடாகிறது. ஆனால் இதன் நிரல்மொழி மாட்லாபில் இருந்து சற்று மாறுபட்டது.
மும்பை - இந்தியத் தொழில்நுட்பக்கழகம் "சைலாப்"-இற்கென்று தனி இணையதளம் அமைத்து, நூற்றுக்கணக்கான பாடப்புத்தகங்களிலுள்ள மாட்லாப் நிரல்களை சைலாப்பிற்கு மாற்றி வெளியிட்டுள்ளது. மேலும் மற்ற கல்லூரிகளுக்கும் சைலாபில் பயிற்சி அளிக்கிறது. இதிலிருந்து அதன் சிறப்பை புரிந்துகொள்ளலாம்.
கல்லூரி செல்ல ஆயத்தப்படுத்திக்கொள்ள விரும்பும் மாணவர்களும், பெற்றோர்களும், "லீனியர் அல்ஜிப்ரா", வெக்டர், மாட்ரிக்ஸ் ஆகியவைப் பற்றி அறிந்துகொள்வது மிகவும் நல்லது.
சில சுட்டிகள்:
MITன் காணொளிகள்
IITன் Scilab இணையதளம்
ஆக்டேவ்
சைலாப்
ஆதலினால் ரோபாட் செய்வீர்
Friday, June 13, 2014Labels: கணினி, கல்வி, குழந்தைகள், நிரலி, நுட்பியல்
நடுநிலைப் பள்ளிக் குழந்தைகளிடையே (வயது 9 முதல் 14 வரை) நடத்தப்படும் ரோபாட் போட்டிகளில் முதன்மையானது
பர்ஸ்ட் லெகோ லீக் (FIRST Lego League) ஆகும். இப்போட்டிகளை
FIRST (For Inspiration and Recognition of Science and Technology - என்பதன் சுருக்கம்) நிறுவனத்தார் தயாரித்து அளிக்கின்றனர். இந்நிறுவனத்தை பல புகழ்பெற்ற கண்டுபிடிப்புகளை தந்த ”டீன் கமென்” என்பவர் 1989ல் ஆரம்பித்தார். இப்போட்டிகள் ஆண்டுதோறும் செப்டம்பர் வாக்கில்
அறிவிக்கப்பட்டு மார்ச் வரை நடக்கின்றன. ஏதேனும் ஒரு கருப்பொருளை மையமாக எடுத்துக்கொண்டு, அதற்கேற்ப 4 அடிக்கு 8 அடி அளவில் வரைபடமும் அதன் மேல் பொருத்தமான லெகோ துணுக்குகளால் செய்யப்பட்ட கொலு பொம்மைகளையும் வெளியிடுகிறார்கள்.
சென்ற ஆண்டில் எடுத்துக்கொள்ளப்பட்ட கருத்து ”இயற்கை சீற்றங்கள்” ஆகும். அதற்கு கொடுக்கப்பட்ட வரைபடத்தையும் அதன்மேல் உள்ள பொருட்களையும் கீழே காண்க.
தென்மேற்கு மூலையில் உள்ள வெள்ளை கட்டம், தேர்நிலை மாதிரி ரோபோ ஓடத்தொடங்கும் இடம். வடமேற்கில் செல்லப்பிராணிகள் நாயும், பூனையும் குடும்பத்தை விட்டு அனாதரவாக இருக்கின்றன.
அருகில் உள்ள மரத்தின் கிளை ஒன்று ஊசலடிக்கொண்டுள்ளது. அதன் கீழே உள்ள மின்கம்பிகளின் மேல் விழுந்தால் ஆபத்து. உங்கள் ரோபாட் அந்த பிராணிகளை மனிதர்களுடன் சிவப்பு கட்டமிட்ட தென்கிழக்கு மூலையான பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சேர்த்தால், தலா 15 புள்ளிகள், மரக்கிளையை பாதுகாப்பாக தரையில் விழச்செய்தால் 30 புள்ளிகள் கிடைக்கும். இதேபோல் முதலுதவி வண்டி, சரக்கு விமானம் & வண்டி, சுனாமி, நிலநடுக்கப் பகுதியில் அடுக்கு கட்டிடங்கள், வெள்ளப்பகுதியில் வீடு, மனிதர்கள், இடிபாடுகள் என்று ஒவ்வொரு பொருளையும் சார்ந்த பல செயல்களுக்கும் புள்ளிகள் வரையரை செய்யப்பட்டிருக்கின்றன. மொத்தமாக சுமார் 600 புள்ளிகள் எடுக்கமுடியும். என்ன இவை எல்லாவற்றையும் இரண்டரை நிமிடங்களுக்குள் ரோபாட் செய்து முடிக்கவேண்டும். ரோபாட்டிற்கு ஒவ்வொரு வேலைக்கும் வெவ்வேறுவகை இணைப்புகள் தேவைப்படும். ஒரு சுற்று போய்விட்டு நிலைக்கு வந்தப் பிறகுதான் போட்டியாளர்கள் இணைப்புகளை மாற்றவேண்டும். நடுவில் அதை தொட்டால் தண்டனையாக சில புள்ளிகள் கழிக்கப்படும், மேலும் இடைஞ்சலாக விமான ஓடுதளத்தில் தடுப்புக் கட்டைகள் வைக்கப்படும்.
இதில் எந்த வேலையை எப்போது செய்வது எப்படி செய்வது என்பது போட்டி குழுக்களின் தனிப்பட்ட யோசனை ஆகும். ஒவ்வொரு குழுவும் விதவிதமாக ரோபாட் வடிவமைக்கிறார்கள். அவர்கள் தேர்ந்தெடுக்கும்
வேலைகளுக்கு தகுந்தாவாறு ரோபாட் வடிவமும் அணுகுமுறையும் மாறுபடும். விதவிதமான சக்கரங்கள், இணைப்புகள், மற்றும் உணரிகளை பொருத்திக்கொள்ளவேண்டும். நாங்கள் இரண்டு வித அடித்தளங்களை (chassis) பயன்படுத்தினோம். தரையோடு அணுக்கமாக இரண்டு ஒளிஉணரிகள் கொண்டமாதிரி ஒன்றும் (கடைசியாக சேர்த்த இரு தொடு உண்ரிகள் படத்தில் இல்லை), இடிபாடுகளைக் கடந்து செல்ல பெரிய சக்கரங்களுடன் ஒரே மோட்டாரில் இயங்கும்படி ஒன்றும் (படங்கள் கீழே). இவையாவும் தானியங்கியாக செயல்பட ரோபாட்டில் நிரல்கள் எழுதவேண்டும்.


உதாரணமாக ஒரு சுற்றில் ரோபாட் வீட்டிற்கு அருகில் உள்ள மனிதனை மீட்டுக்கொண்டு, வீட்டை வெள்ளத்திலிருந்து பாதுகாக்க அதிலுள்ள பிடியை தட்டி தளத்தை உயர்த்திவிட்டு மீண்டும் நிலைக்கே திரும்பவேண்டும் என்று எடுத்துக்கொண்டால். ரோபாட் நிலையில் இருந்து வடக்கு நோக்கி 450 மில்லிமீட்டர் சென்று 90 பாகை வலப்புறம் திரும்பி, ஒளி உணரிமூலம் இரண்டு கருப்பு பட்டைகளைக்கடந்து போய் இடப்பக்கம் திரும்பி கருப்புப்படையில் நேர்க்கோட்டில் 3 வினாடிகள் பயணித்து (இல்லையானால் வீட்டின்மேல் இடித்துக்கொண்டு நின்றுவிடும்) இணைப்பை இயக்கி மனிதனை மீட்டுக்கொண்டு, மேலும் சில மில்லிமீட்டர் சென்று இடப்பக்கம் திரும்பி வேகமாக சென்று பிடியில் மோதி வீட்டை உயர்த்தியபின் வந்த வழியே திரும்பவேண்டும். ஒவ்வொரு கட்டளையும் ரோபாட்டின் நிரல்மொழியில் பதியவேண்டும் (கருப்புப்பட்டையின் வலது விழிம்பை தொடர்ந்து செல்லும் கட்டளைகள் படத்தில் ).
குழுக்களின் திறமையை மூன்றுவித தேர்வுகளுக்கு உட்படுத்தி முடிவு செய்கிறார்கள். இதில் நுட்பியலுக்கு 33.3 சதம் (போட்டியில் எடுத்த புள்ளிகளுக்கு 16.5% + நுட்பியல் நேர்காணலுக்கு 16.5%), கருத்துக்கு
ஏற்ற புறத்திட்டுக்கு 33.3 சதம் மற்றும் குழுவின் கூடிசெயல்வகைக்கு 33.3 சதம் என்று பிரித்துக் கொடுக்கிறார்கள். தேர்வில் போட்டி மனப்பான்மையைவிட மாணவர்களின் ஒழுங்கும் கல்வியுமே முக்கியத்துவம் பெருகின்றன. முதலில் உள்ளூர் போட்டிகள் இரண்டும், அதில் ஏதாவதொன்றில் தேர்வானால், வட்டார அளவிலும், அதிலிருந்து மாநில அளவிலும் அடுத்து
தேசிய அளவிலும் போட்டிகள் நடக்கின்றன.
எங்கள் குழுவில் ஐந்து நண்பர்களின் குடும்பகளிலிருந்து ஆறு குழந்தைகள் பங்கேற்றனர். எங்களுக்கு, முன்பின் பழக்கமோ போதிய அவகாசமோ இல்லாத போதிலும் முதல் போட்டியிலேயே தேர்வானோம். மேலும் எங்கள் புறத்திட்டிற்கு முதல் பரிசு கிடைத்தது. ஒவ்வொரு போட்டியிலும் கொஞ்சம் கொஞ்சமாக ரோபாட்டின் செயல்பாடுகளை துல்லியமாகியதால் அடுத்தடுத்த போட்டிகளில் பரிசுகள் குவிந்தன. இறுதியாக மாநில அளவில் சிறந்த ரோபாட் வடிவமைப்பு பரிசு கிடைத்தது.
எங்கள் குழுவிற்கு நாங்கள் இட்ட தமிழ் சார்ந்த பெயர் வீராபாட்ஸ்.
இந்தியாவில் சில இடங்களில் இப்போட்டிகள் நடைபெறுவதாகத்தெரிகிறது. பெங்களூருவில் எட்டாம் வகுப்பு மாணவர்களிடம் அவர்களின் தொழில் தேர்ந்தெடுத்தலைப்பற்றி பேச நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளை அழைத்து வருகிறார்கள். இதை செய்யமாட்டார்களா? இந்த வெற்றியின் காரணமாக, எனது நண்பர்கள் அடுத்து உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு நடக்கும் போட்டி (FIRST Robotic Championship) குழு அமைக்க முயற்சி செய்துகொண்டுள்ளார்கள். அதற்கு பொறியில் கல்லூரிப்படிப்பு போல கடின உழைப்பும், தொழிற்சாலைகளில் பயன்படும் அளவு உயர்தர விலை கூடிய பாகங்களும் தேவை. பின்னாட்களில் அதைப்பற்றி பகிர்ந்துகொள்கிறேன்.
நவீன யோகா: வேலையே செய்ய வேண்டாம், மூச்சு விட்டால் போதும்!
Thursday, October 04, 2012Labels: ஓஷோ, கல்வி, சிரி சிரி ரவிசங்கர், பக்தி
அது 90களின் மத்தியில் கோவையில் வேலை பார்த்துக் கொண்டே படித்துக்கொண்டிருந்த காலம். ஒருநாள் என்னோடு முன்பு வேலை செய்த கிருத்துவ நண்பர் ஒருவர் வந்து தான் அண்மையில் பயின்ற யோகா பயிற்சிப்பற்றி வானளாவகப் புகழ்ந்து, என்னையும் சேரச்சொன்னார். என்னைவிட பல வயது சிறியவர், ஆறாம் வகுப்பு வரை அமெரிக்காவில் படித்தவர். இந்தியர்களைப் பற்றி அத்தனை ஒன்றும் நல்ல எண்ணம் இல்லாதவர். அவரே மனம் மாறி இருக்கிறாரே, என்ற இயல்பான ஆவலில் அறிமுக வகுப்பு நடந்த ஒரு நாளில் போய்ப் பார்த்தேன்.
காந்திபுரம் 100 அடி சாலையின் அருகே ஒரு அலுவலகத்தின் மாடியை வகுப்பு நடத்த யாரோ தனவான் ஒருவர் கொடுத்திருந்தார். அறையின் முன் காலணிகளெல்லாம் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன. செருப்புக்களை கழட்டி வைத்துவிட்டு உள்ளே நுழைந்தேன். வெறும் தரையில் சமக்காளம் விரித்திருந்தார்கள். இடம் நிரம்பி இருந்தது, சுமார் 100 பேர் இருந்திருப்பார்கள். நடுவயது வடநாட்டுப் பெண்தான் குரு. தமிழ் பேசத் தெரியவில்லை. ஆங்கிலத்தில்தான் உரையாடினார். கோவையில் தனியார் நிறுவனமொன்றில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்தாராம். பல பேர் காலில் விழுந்து வணங்கினார்கள். அவர்களெல்லாம் பழைய மாணவர்கள் போலத்தெரிந்தது.
”காலணிகள் ஒழுங்காக வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தீர்களா? அதெல்லாம் யாருடைய வேலை? இதோ இந்த தொண்டர்கள்தாம் அதற்கு காரணம்.” என்று ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தினார். அவர்கள் ஒவ்வொருவராக வந்து, ”நான் பயிற்சிக்கு முன்னால் அப்பிடி இருந்தேங்க, இப்ப இப்பிடி ஆயிட்டேன்” என்று உற்சாகமாக பேசிவிட்டுப் போனார்கள்.
எல்லோரையும் வெளியே போய்விட்டு மீண்டும் வந்து அமரச்சொன்னார்கள். அதுதான் முதல் பாடம். அதாகப்பட்டது சிறிது நேரமே உட்கார்ந்திருந்த இடமானாலும், அந்த இடத்தை சொந்தம் கொண்டாடி மக்கள் அதே இருக்கைக்கு திரும்புகிறார்கள் என்று எடுத்துக்காட்டப்பட்டது. இதேக் காட்சிக்கு ஒரு சாமியார் வேறுமாதிரி விளக்கம் கொடுத்ததை படித்திருந்தேன். அதில் அதே இடத்திற்கு வராதவர்களை கடித்திருந்தார். அடுத்த பனிரெண்டுநாட்களும் சில மணி நேரம் இப்படி எங்களுக்கு ஏதாவது ஒரு சோதனை.
குரு துவக்கத்திலிருந்தே நேரம் தவறாமையை மிகவும் கண்டிப்பாக கடைபிடித்தார். வண்டி வரவில்லை, என்றால், வண்டிக்காரன், சாலை பழுது என்பான். அதற்குப் பொருப்பானவர்களை கேட்டால் மழையைக் காரணம் சொல்வார்கள். எனவே, நமக்கு என்ன நடந்தாலும் அதற்கு நாமே பொருப்பேற்க வேண்டும் என்பது தத்துவம். முதலாளி சம்பளம் கொடுக்காவிட்டாலும் நாமே பொருப்பு. அப்படியிருக்க தாமதமாக வந்தால் நம் மானம் போகும். அதற்கு பயந்து எல்லோரும் சரியான நேரத்திற்கு வந்துவிடுவார்கள். வராமல் இருக்கவும் முடியாது. முதல்நாளில் தினமும் வருவேன் என்று நெஞ்சில் கைவைத்து ஒப்புக்கொண்டிருந்தோம்.
ஒரு நாள்:
”மசாலா மணம் இல்லை என்றால் கறி சாப்பிட முடியுமா? நீங்கள் சாப்பிடுவது சவம் தானே?” ”பால்தான் எல்லா வயிற்று கோளாறுகளுக்கும் காரணம். அமெரிக்காவில் அதற்காக எவ்வளவு செலவு செய்கிறார்கள் தெரியுமா?” ”ஏன் சாணி நாறுவதில்லை? மிருகங்கள் சமைக்காமல் சாப்பிடுவதால்..”
மறு நாள்:
”மனம் தான் எல்லாவற்றிக்கும் காரணம்.” நண்பர் ஒருவரை அழைத்து, ஒரு கையை நீட்ட சொன்னார். ”இப்போது பாருங்கள், இவருடையக் கையை என்னால் எளிதில் மடக்க முடிகிறது.. அடுத்து அவர் மனதில் இந்தக் கை இரும்பைப் போல உறுதியாகிவிட்டது என்று எண்ணத்தை விதைக்கிறேன்”, என்றுவிட்டு மீண்டும் நீட்டிய கையின் முட்டிக்குக் கீழே சுட்டு விரலை வைத்து, “இப்போது நீ வலுவடைந்து விட்டாய், உன் கை இரும்பாகிவிட்டது”, என்று சில முறை சொல்லிவிட்டு கையை மடக்க அது திரும்பவும் இலகுவாக மடங்கியது. “நான் உன் மனதுக்கு கட்டளை இட்டபோது, காதில் கேட்காமல் நீ சிரித்துக்கொண்டிருந்தாய். நான் போன வகுப்பில் இதை செய்து காட்டினேனா, இல்லையா?”,என்று பழைய மாணவர்களைக் கேட்டார். சிசியக்கோடிகள் தலை ஆட்டினார்கள். அவர்களுடைய வகுப்பு முடிந்த பின்னும், ”நாம் இதுக்கா காசு கொடுத்து சேர்ந்தோம்”, என்று சந்தேகத்தை நிவர்த்தி செய்ய மீண்டும் வரும் அவர்களால் வேறென்ன சொல்ல முடியும்?
அடுத்த நாள்:
”ஓங்காரத்திற்கு விளக்கம். அது அ, உ, ம் என்னும் எழுத்துக்களின் கூட்டு. தொடர்ந்து, அ என்றால் வயிறு அதிருகிறது, - அது உயிரை உருவாக்கும் பிரம்மாவின் இடம் - அதற்குத் தேவையான கல்விக்கு உடனுரை சரஸ்வதி. உ என்றால் நெஞ்சம் - அது உயிரை காக்கும் இதயமாக விஷ்ணுவின் இடம் - காப்பாற்ற தேவையானப் பணத்திற்கு கூடவே லட்சுமி. ம் என்றால் மண்டை - அது வேண்டாதனவற்றை அறிந்து அழிக்கும் சிவனின் இடம் - அழிக்கத் தேவையான சக்திதான் தேவி. ஆக ”ஓம்” இந்து மதம் சார்ந்த ஒலியல்ல. தத்துவம். அதை உச்சாடனம் செய்வதின் மூலம் உடல் முழுவதையும் வலுவடைய செய்கிறோம்.”
அதன்படி வகுப்பின் முடிவில் “பொய்யிலிருந்து வாய்மைக்கும், இருளிலிருந்து ஒளிக்கும், இறப்பிலிருந்து இறவாமைக்கும் இட்டு செல்வாயாக. ஓம் சாந்தி, சாந்தி, சாந்திகி”, என்று முதலில் இசுலாமியர்களும், கிருத்தவர்களும் கூட ஒப்பித்தார்கள். பின்னர் வீட்டில் திட்டுகிறார்கள் என்று நிறுத்திக்கொண்டார்கள்.
மற்றொரு நாள்:
”உணவுகளில் மூன்று வகை. 1 - பிராண சக்தி தருவது (pranic), 2 - பிராண சக்தியை கெடுப்பது (non-pranic), 3 - வெறுமே வயிற்றை நிரைப்பது (filler)”. ”எல்லாக் காய்கறிகளுமே பிராண சக்தி தருபவை. கத்தரிக்காய் மட்டும் அதைக் கெடுப்பது. உருளைக்கிழங்கு வயிற்றை நிரைப்பது." ”உருத்திராட்சமும், தங்கமும் பிராண சக்தியைக் கண்டறியும் சக்தி உள்ளவை.”தங்க சங்கிலி ஒன்றை ஒரு பெண்ணிடமிருந்து வாங்கி பரிசோதித்துக் காட்டினார். நல்லவகைக் காய் ஒன்றை இடது கையில் வைத்து அதன் மேல் தொங்கும்படி சங்கிலியை வலது கையில் பிடித்தார். சங்கிலி மெதுவாக ஊசலாட ஆரம்பித்து காயை இடவலமாக சுற்றித்தொடங்கியது. கத்திரிக்காயை இடப்புறமாக சுற்றியது, உருளைக்கிழங்கின் மேல் பெண்டுலம் மாதிரி இடவலமாக நடுவில் ஆடியது. ஆகா.. ஆபாரம்.
”பிராண சக்தி அதிகமாக உள்ள காய், சாம்பல் பூசணி.” எல்லோரும் தினமும் காலையில் பூசணி சாறு குடிக்க பரிந்துரை செய்தார். சில பெண்கள் வகுப்பின்போது வாயிலெடுக்க வருகிறது என்றார்கள். எட்டாம் குறுக்குத்தெருவில், என் புறாக்கூண்டு வாழ்க்கையில் சமைக்கவெல்லாம் முடியாதாகையால் அந்த தண்டனையிலிருந்து நான் தப்பித்தேன். வசதியான அறையில் வசித்த நண்பர் ஒருவர், இதற்காகவே மின் கலப்பியெல்லாம் வாங்கினார். குறுக்கு வெட்டுத் தெருவிலிருந்த சந்தைக்கு காய் வாங்கப் போவோம். நான் தேங்காய் மண்டியில் ஒரே ஒரு தேங்காய் வாங்குவேன். வெள்ளரிக்காயை விட்டால், எனக்குத் தெரிந்து அதுதான் சமைக்காமல் சாப்பிடக்கூடிய காய். காரியாபட்டியில் பிஞ்சு வெள்ளரிக்காய் வாங்கி சாப்பிட்டு ருசி கண்டவனுக்கு, கோவையில் கிடைக்கும் முற்றியவகை பிடிக்கவில்லை. கடைப்பெண்ணின் கணவர் எங்களை சந்தேகமாகப் பார்க்கவே அதையும் நிறுத்திவிட்டேன். ”பழமுதிர்ச் சோலை”யில், முளைவிட்ட பயறுகளை சாப்பிட முயன்று தோற்றிறுக்கிறேன். பயறுகளில் இருந்த பூச்சிகள் நீரில் ஊறி கெட்ட வாடை அடித்தது.
முத்திரைகளைப்பற்றி ஒருநாள்:
முட்டிக்கால் போட்டு அமர்ந்து கைகளை விதம் விதமாக வைத்து மூச்சை இழுக்கச் சொல்லி இப்போது எங்கே பிடிக்கிறது என்று கேள்வி கேட்பார். ஒருத்தருக்கு, முதுகு பிடிக்கும், ஒருத்தருக்கு இடுப்பு பிடிக்கும், ஆளுக்கு ஒன்றாக சொல்வார்கள். வேண்டிய பதில் வரும் வரைக்கும் விடமாட்டார். தலையில் பிடிக்கிறது என்றால், ”தலையாம், திரும்ப முட்டி போடு” என்பார். வலி தாங்காமல், மற்றவர்கள் என்ன பதில் சொல்லி தபித்தார்களோ அதையே சொல்வார்கள்.
அதாகப்பட்டது (இரண்டாம் முறையாக சொல்கிறேன்.. மன்னிக்கவும்). தொழுகை செய்வது போல முட்டிக்கால் போட்டு கைகளை வெவ்வேறு முறையில் வைத்துக்கொண்டு மூச்சை உள்ளே இழுத்தால் பிராண சக்தியை குறிப்பிட்ட இடங்களுக்கு செலுத்தமுடியும். அதன் மூலம் அப்பகுதியில் உள்ள உறுப்புக்களை சீராக்க முடியுமாம்.
குடிக்கு எதிரான பிரச்சாரம் ஒரு நாள்:
அமெரிக்காவில், தன்னுடைய குருவிடம் பயிற்சிபெற்ற ஒருவன், குடித்துவிட்டு, நண்பர்களுக்கு யோக பயிற்சியை செய்துகாட்டப் போய் உடலெல்லாம் நீலம் பாரித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிவிட்டானாம். அப்புறம் குருதான் போய் காப்பாற்றினார் என்று பயமுறுத்தினார். எனவே, இந்த பயிற்சி செய்யும்போது குடிக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். குடிப்பவர்களைப்போல நல்லவர்களை பார்க்கமுடியாது அவர்கள் போதை தெளிந்து இருக்கும்போது”, என்று ஆசை காட்டவும் செய்தார். அதற்கு பயந்து சிலர் சில நாட்கள் குடிக்காமல் இருப்பார்கள்.
அவ்வப்போது சில புரட்சிகளும் கூட நடந்தன. ”வேதத்தில் பிராமணனுக்கு தினமும் பூசணிக்காய் தட்சிணை கொடுப்பவருக்கு சுவருகத்தில் இடம் கிடைக்கும் என்று எழுதப்பட்டிருக்கிறதாம். இங்கேயே சுகமாக வாழ பிராமணர்களின் தந்திரத்தைப் பாருங்கள்”, என்பார். சில சமயம் தமக்கு உதவி செய்பவர்களைக்கூட அவர்களின் சாதி பாகுபாட்டைக் குறை சொன்னார்.
பெண்கள் மாதவிடாய் காலங்களில் வீட்டார் செய்யும் கெடுபிடிகளை சொல்லி அழுதால், வேத காலத்தில் அப்படிபட்ட பிற்போக்குத்தனங்கள் இல்லை என்று எடுத்துக்காட்டுவது. கணவனை இழந்தவர்கள் ஆசைப்பட்டால் இட்டுக்கொள்ள குங்கும் தருவது என்பதான சில செயல்களும், ”பழைய மாணவர் ஒருவர் தன் மனைவியின் கையைப்பிடித்துக்கொண்டு நடக்க ஆசைபட்டார். ஆனால் அது மனைவிக்கு பிடிக்கவில்லை. அதனால் என்ன? என் கையைப் பிடித்துக்கொள் எனக்கு ஆட்சேபணை இல்லை என்றேன்”, என்று முற்போக்கு முகம் காட்டுவதும் புரட்சிகளில் அடக்கம்..
எடுத்துக்காட்டாக, ”சிரசாசனம் செய்யாதீர்கள். பிற யோக ஆசனங்களிலும் ஆபத்து உண்டு. அதனால் வரும் கோளாறுகளை சரிசெய்யவென்றே ஒருவர் இருக்கிறார்.”, ”பிடிக்காதப் பாடத்தைப் படிக்க சொன்னதால் பைத்தியமான மகன்”, என்பது போன்ற பெரிய சிக்கல் இல்லாத கதைகளும் உணர்ச்சி பொங்க சொல்லப்படும்,
பிரிதொரு நாள்:
”மேலை நாட்டு மருத்துவம் பிணங்களை வைத்து சோதனை செய்கிறது. ரிஷிகள் தம் உடலையே சோதனைக்கு உள்ளாக்கி நமக்கு ஆயுர்வேதம் அருளியுள்ளார்கள்” ”ஒரு பொருளின் ஒளி வடிவம் நம் கண்களுக்குத் தெரிகிறது. அப்பொருளுக்கு நிகரான ஒலிவடிவம்தான் சமசுக்கிருதம். உதாரணமாக நெருப்பின் ஒலி வடிவம் ”ரம்” ஆகும். அந்த ஒலியைக் கட்டுப்படுத்தினால் நெருப்பைக் கட்டுப்படுத்த முடியும்.”, என்பார்.கோவையில் புகழ்பெற்ற மருத்துவமனை ஒன்றின் தலைமை மருத்துவர் வகுப்பை பார்வையிட வருகிறார் என்று எதிர்பாத்து இருந்தார். குருவுக்கு நல்லவேளை. அவர் வரவே இல்லை.
தினமும் நாம் பெற்ற ஞானத்தை வாழ்க்கையில் பயன்படுத்தி நமக்கு ஏற்பட்ட பட்டறிவை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள செய்வார். கையில் ஒலிவாங்கி கிடைத்த பெருமிதத்தில் மக்கள் கொஞ்சம் அதிகமாகவே கூவுவார்கள். “இப்படித்தாங்க நான் பெங்களூரு ஐஐஎஸ்சி-ல ஆராய்ச்சி பண்ணிட்டு இருந்தபோது..“, என்று ஒரு பெண் ஆரம்பிக்கும். மின் கலப்பி நண்பருக்கு அவர் சொந்தம். ”ஆராய்ச்சியெல்லாம் ஒண்ணும் பண்ணல, சுத்துறா..”, என்று காதைக் கடிப்பார். கூடவே குரு, ”இப்போது உங்கள் தூக்கம் குறைந்து இருக்குமே, சுறுசுறுப்பு கூடியிருக்குமே”, என்று எடுத்துக் கொடுப்பார்.
”இயலாதவர்களுக்கு முன்பின் தெரியாதவரானாலும் கூச்சப்படாமல் உதவவேண்டும்”, என்று ஒரு நாள் பாடம். நண்பர் ஒருவர் பேருந்துக்கு கையில் சுமையுடன் நின்றிருந்த முதியவருக்கு உதவப்போனதைப் பற்றி பகிர்ந்துகொண்டார். “ஐயா, எங்க போறீங்க உங்களுக்கு உதவி ஏதும் வேணுமா” என்று வலியப் போய் கேட்க பெரியவர் இவரை ”யாரு பெத்த பிள்ளையோ?” என்பது போல பார்த்து, ”தம்பி, நான் நல்லாத்தான் இருக்கேன். நீங்க உங்க வேலையப் பாருங்க.” என்று கேட்டு மண்டை காய்ந்ததை குருவுக்கு தெரியாமல், அரசியல்வாதி உட்பட்ட நண்பர் குழாமிடம் சொல்லி சிரித்தார். இதில் அன்றாடக் குடியர்கள் ஒருநாள் குடிக்காமல் வந்து நடந்த கதையைச் சொன்னால் கேட்க மிகவும் உருக்கமாக இருக்கும். அதுவும் அவர்களுக்கு ”ரொம்ப நல்லவர்கள்” பட்டம் வேறு கிடைத்திருக்கிறதே.
இடையில், வார விடுமுறை ஒன்றில் நாள் முழுதும் வகுப்பு. காலையில் நேரு மைதானத்தில் குடும்பத்தாருடன் போய் விளையாட்டு. திடலில், பழைய மாணவர்கள் எல்லோரையும் கூசிக்கொண்டிராமல் ஆட்டமும் பாட்டமுமாய் இருக்க உற்சாகப்படுத்தினார்கள். மாலை குறுக்கு வெட்டுத்தெருவுக்கு குறுக்காக ஓடும் இலக்கமிட்ட குறுக்குத்தெருக்கள் ஒன்றில் வகுப்பு. நான் தங்கி இருந்த விடுதி எட்டாம் குறுக்குத்தெரு. வகுப்பு மற்றொன்றில். அங்கே குரு வரத் தாமதமாகிவிட்டது. மண்டை காய்ந்த நண்பர், பிடித்துக்கொண்டார். குரு, ”வண்டி நின்று விட்டது, ஓடி வந்தேன்”, என்று எவ்வளவு மன்றாடினாலும், நண்பர் மன்னிக்க மறுத்துவிட்டார். அதுதானே தனக்கு வந்தால்தானே தெரியும் முதுகு வலியும் திருகு வலியும். ”நான் எல்லா உயிர்களுக்கும் தாயாக இருப்பேன்”, என்று எல்லோரிடமும் உறுதிமொழி வாங்கிக்கொண்டு, எனெக்கென பிரத்தியேகமாக ”சிரீம்” என்ற மந்திரத்தை கொடுத்து அருளினார். அதை தியானத்தின் போது உச்சரித்துக் கொள்ள வேண்டும். பயிற்சி முடிந்த சில காலத்திற்குப் பின், மின் கலப்பி நண்பர் ஏதோ புத்தகத்தைப் படித்து இதில் பிரத்தியேகம் புண்ணாக்கு எல்லாம் இல்லை என்றார்.
ஒருவழியாக வகுப்புகள் முடியும் தறுவாயில், பழைய மாணவர்கள், நான்கு நாட்கள் வெளி இடத்தில் தங்கி புதிதாக பெற்ற பயிற்சியைப்பற்றி அவர்களுக்குள் அளவு கடந்த மலர்ச்சியுடன் பேசிக்கொண்டார்கள். ஆசை யாரை விட்டது....
பாகம் 2
முதலில் பதிமூன்று நாட்கள் எடுத்துக்கொண்ட யோகப் பயிற்சியின் பெயர் ”சகஜ சமாதி யோகா”. ”சமாதி” என்றால் சுடுகாடு இல்லை. ரஜினி ஒரு படத்தில் சொல்வது போல, “அது தேவ நகரி, தெலிவா உச்சுரிக்கனும்”. ஆதியில், நாம் தாயின் கருவில் சுகமாக இருந்த நிலைக்கு சமமான யோக நிலை என்பது பொருள்.
புதிய வகுப்பிற்கு பேர் மறந்துவிட்டது. அதில் சேர வேண்டுமானால் இப்போது செய்யும் பயிற்சியை ஆறுமாதங்களாவது செய்திருக்கவேண்டும். ஆனால் எங்களுக்கு சலுகை கிடைத்தது. சில மாதங்களில் நடக்க இருக்கும் அந்த பயிற்சியில் எங்களை கலந்து கொள்ள அனுமதித்தனர். சும்மா இல்லை, காசுதான். அதற்கான ஆயத்த வேலைகள் ஆரம்பமாயின. அரசியல்வாதி, மண்டை காய்ந்தவர் இன்னும் சிலர் சூதானமாக கழன்று கொண்டார்கள். பொறியியல் கல்லூரி ஆசிரியர் முதலான, எங்களுக்கு அவ்வளவு மன முதிற்சி இல்லை.
நம் வாழ்வில் செய்த, செத்தாலும் யாருடனும் பகிர்ந்துகொள்ள விரும்பாத செயல்களை தினமும் ஒரு நோட்டு புத்தகத்தில் எழுதி இரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும். இது நம் ஆழ்மனதில் இருக்கும் சிக்கல்களை விடுவித்து தியானத்தின்மூலம் பேரமைதி பெற உதவும். வகுப்பில் கண்டிப்பாக அதை வெளியிட சொல்லமாட்டோம் என்று உறுதி செய்தார்கள்.
இடம் கோவையை ஒட்டிய கிராமப் பகுதியில் இருந்த பெரிய மண்டபம். ஊர் பெயர் நினைவில்லை. இரவு நேரத்தில் மண்டபத்திற்கு வழி தெரியாமல் கடைகளில் விசாரித்தால் எங்களை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள்.
போய் சேர்ந்ததும், தொண்டர்கள் முதலில் கைக்கடிகாரங்களை வாங்கி வைத்துக் கொண்டார்கள். தினமும், இருட்டோடி இருக்கும்போதே எழுப்பி விடுவார்கள்.
எதிர்பார்த்தபடியே ஒரு வகுப்பில், குரு “யார் உங்கள் இரகசியத்தை பகிர்ந்துகொள்கிறீர்கள்”, என்று கேட்டார். ஆசிரியர்தான் முதலில் போனார். அவர் செய்த கில்லாடி வேலைகளையெல்லாம் கேட்டு எனக்கு, ”சே.. இதுக்கா நாம இவ்வளவு விசனப்பட்டோம்” என்று உடனடியாக எனக்கு நானே புனிதனாகிவிட்டேன். திரும்பிப் பார்த்தால் தொண்டர் குழாமில் முன்பே இந்த பயிற்சிக்கு வந்திருந்த அவருடைய இளம் மனைவியும் இருந்தார். ஏனைய தொண்டர்கள் கண்களில் எதிர்பார்த்தது கிடைத்த திருப்தியில் இருந்தனர். ஆசிரியரைப்போலவே பெரும்பாலனவர்கள் மனதுக்குள் புழுங்கிக்கொண்டிருந்த விடயம், பாலியல் சம்பதப்பட்ட செயல்கள்தான். எங்கள் குழப்பத்திற்கு விடைகாண, குரு ஓஷோவின் புத்தகங்களைப் படிக்க பரிந்துரைத்தார்.
ஒருநாள் கண்களை மூடிக்கொண்டு சோடியுடன், சிருங்காரத் தொனியில் இந்தியில் இருந்த கிருஷ்ண லீலை மெல்லிசைப் பாடல்களுக்கு கைகளைப் பிணைந்து நடனம். (என் சோடி என்னைப்போல ஒரு கல்லூரி மாணவருங் கோவ்...). அப்புறம் கட்டிப்பிடி வைத்தியம் கொஞ்சம். இது கண்களைத் திறந்து கொண்டு என்பதால், நான் எதிர்பாலரை அணுகவில்லை. மாணவராக வந்திருந்த நடுத்தர வயதினர் ஒருவரின் மகள்தான் ஒரு தொண்டர் என்பது தெரியாமல் மற்றத் தொண்டர்கள் அப்பெண்ணிடம் நடந்துகொண்ட விதம் அவருக்கு மன உளைச்சலைக் கொடுத்தது. நல்ல வேளையாக வைத்தியத்தின் போது அவருடைய அம்மா பாதுகாப்பாக வீட்டிலிருந்து வந்துவிட்டார்.
ஒருநாள் மனம் போனபடி களேபரம் செய்யச் சொன்னார்கள். அதாவது மனதில் எதையும் அடக்கி வைக்காமல் கொஞ்ச நேரம் விட்டுப்பிடித்துப் பழகவாம். மாணவர்கள் எல்லோருமே கட்டுப்பெட்டிகளாக அமைதியாய் இருக்க, தொண்டர்கள்தாம் மடக்கு நாற்காலிகளைக் கீழேத்தள்ளி துவம்சம் செய்தார்கள்.
முத்தாய்ப்பாக, சுதர்சனக் கிரியா என்ற பயிற்சி. குருவின் குரு, சிரி, சிரி ரவிசங்கர் தம் தவ வலிமையால் கண்டுபிடித்து, உலகத்தினர் உய்ய தாம் அடைந்த இன்பம் இவ்வையகம் பெருகவென்ற, பெருந்தன்மையில் பரப்பி வருகிறார். ஒலி நாடாவை ஓடவிட்டு, அதில் அவர் “சோ--கம்” என்று தாளகதியில் திரும்பத்திரும்ப சொல்லும் போது,”சோ”வில் மூச்சை இழுத்து “கம்”இல் வெளிவிடவேண்டும். முதலில் மெதுவான நடைவேகத்தில் போய் வரும் மூச்சு, போகப்போக ஓட்டம் எடுக்கும், அவ்வப்போது கொஞ்சம் நடை அவகாசம், மீண்டும் ஓட்டம். எல்லாம் முடிந்தபின், இப்போதெல்லாம் செருப்புத்தேய, கால்கள் கெஞ்ச, சில மைல்கள் வேகமாக நடை பயிற்சி செய்துவிட்டு வரும்போது இருக்கும் அதே உணர்வு அன்று இருந்தது. அல்லது எதிர்க்காற்று முகத்தில் அறையப் பயணம் செய்துவிட்டு, வண்டி நிற்கும் போது ஏற்படுகிறதே அது போன்ற உணர்வு, தொடர்ந்து பத்து பதினைந்து நிமிடங்கள் நீடித்தன, ”உடம்பு நோகாமல், வெறுமே மூச்சை விட்டே இவ்வளவு சக்தி கிடைத்தால்,” சிசியக்கோடிகளின் பரவசத்திற்கு கேட்க வேண்டியதில்லை.
இயந்திரத்தனமான இப்பயிற்சிகள், ஓஷோ தம் சன்னியாசிகளின் தேவைக்கு ஏற்ப கொடுத்த தியானப் பயிற்சிகளின் நகலாகும் என்பது பின்னர் அவருடைய புத்தகங்களைப் படிக்கையில் தெளிவாகப் புரிந்தது. அசட்டு நாடகங்களை மேடைதோறும் நடத்துவதுபோல, அடுத்து நடந்த பயிற்சி வகுப்புகளுக்கு தொண்டாற்ற போனபொது, குரு அதே வசனங்களை ஒப்பித்துக் கொண்டிருந்தார். ”பெண்டாட்டி கை இல்லைனா என்ன? என் கையை பிடிச்சுக்கோ..” எல்லோரும் சிரித்தார்கள்.
அதுவரையில் ரவிசங்கர் இன்னார் என்று எனக்கு தெரியாது. அவர் கூட, இளைய சங்கராச்சாரி சுப்பிரமணிக்கு ஆதரவு, இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு போன்ற சாதீய பற்றிலும், ஈழத்தமிழர்கள் வைத்து நாடகமாடிய தமிழர் விரோதப்போக்கிலும் அடிபடாமல் போய் இருந்தால், அவர் நிறுவனமாக்கி இருக்கும் மூளைச்சலவைத் தொழில் விளங்காமலேயே இருந்திடுக்கக்கூடும்.
இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், இதே நாடகத்தை, IIT-க்கெல்லாம் போய் காட்டுகிறார் பாருங்கள். அங்கேயும் கூட்டம் வருகிறது, காலில் விழுகிறது.
Pseudoscience unchallenged at IIT Kanpurஎன் பங்கிற்கு நானும் தவறு செய்துள்ளேன். இன்றாவது ரவிசங்கருக்கு என் கண்டனங்களைப் பதிவு செய்கிறேன்.
சாடிஸ் - செலவில்லாமல் நீர் சுத்திகரிக்கும் முறை
Monday, January 30, 2012Labels: கல்வி, நுட்பியல்
SODIS - Solar Disinfection (சூரியஒளி சுத்திகரிப்பு) என்பதின் சுருக்கம். சுவிட்சர்லாந்து நாட்டு ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய எளிய நீர் சுத்திகரிக்கும் முறை. அவர்கள் வளரும் நாடுகளில் உள்ள மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீர் கிடைக்க 10 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்து வருகிறார்கள். நம்நாட்டு மக்களுக்கும் இம்முறை பெரிதும் உதவும்.

தேவையானது தண்ணீர் புட்டிகளும் சூரிய ஒளியும்தாம். நிறமற்ற PET (Polyethylene terephthalate) வகை பிளாஸ்டிக் பாட்டில்களை உபயோகிப்பது நல்லது. பயப்பட வேண்டாம், நம்மூரில் இப்போது சர்வசாதாரணமாக கிடைக்கும் 1 அல்லது 2 லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் அந்த வகைதாம். அந்த புட்டிகளில் குடிநீரை பிடித்து சூரிய வெளிச்சத்தில் 6 மணிநேரம் வைத்து எடுத்தால் போதும். வெயில் அதிகம் இருக்கவேண்டுமென்பதில்லை. வெளிச்சம் இருந்தால் போதும். சூரிய ஒளியிலுள்ள புறஊதாக்கதிர்கள் நீரில் இருக்கும் பாக்டீரியா, வைரஸ் மற்றும் ஒட்டுண்ணிகளை அழித்துவிடுகின்றன. உடனே உட்கொள்ள ஆரம்பிக்கலாம்.
இம்முறையின் எந்த அளவு செயல்படுகிறது என்று அறிவதுதான் இந்த ஆண்டு பள்ளியில் மகள் எடுத்துக்கொண்ட அறிவியல் புறத்திட்டு. கொதித்து ஆறிய, சுத்திகரிக்கப்பட்ட, மற்றும் சுத்திகரிக்காத நீரின் மாதிரிகளை - பெத்திரிகிண்ணங்களில் சோதனை செய்தோம்.
எதிர்பார்த்தது போல கொதிக்கவைக்கப்பட்ட நீரில் எந்த கிருமிகளும் இல்லை. சுத்திகரிக்கப்பட்ட நீரில், வெறும் தண்ணீரைவிட பாக்ட்டீரியா எண்ணிக்கை குறைவாக இருந்தது. நாங்கள் சோதித்தது குடிநீருக்கு பதில் வீட்டின் பின் இருக்கும் நீர்குட்டையிலிருந்து மாதிரிகளை சேகரித்ததால், சுத்திகரிப்பு அவ்வளவாக செயல்படவில்லை. பாதுகாக்கப்பட்ட நீர் கிடைக்காத தருணங்களில், நீரை கொதிக்கவைக்கவும் இயலவில்லை எனில் குறைந்தபட்சம் சாடிஸ் முறையை பயன்படுத்தி நீரை சுத்திகரித்து உட்கொள்ளல் நலம்.
காகிதப் பாலம்
Monday, December 06, 2010Labels: கல்வி
5ம் வகுப்பில் சென்ற ஆண்டு துவக்கப் பள்ளியில் (Susie E. Tolbert) அறிவியல் கண்காட்சிக்கு (science-fair) ”சிவப்பு, பச்சை, மஞ்சள்” நிறங்களில், எந்த வண்ணம் அதிக தூரம் தெரிகிறது என்ற ஆராய்ச்சி முடிவை சமர்பித்தோம். இந்த ஆண்டு ஆறாம் வகுப்பு நடுநிலைப் பள்ளி (James Weldon Johnson) ஆரம்பித்ததுமே ஆராய்ச்சி வேலையைத் தொடங்க சொன்னார்கள்.
பல துறைகளின் புறத்திட்டுகளைப் பார்த்துவிட்டு, பாலம் கட்டுமானத்தைப் பற்றி ஆராயலாம் என்று முடிவு செய்தோம். சமதளப் பாலத்தை விட வில் போன்று வளைந்த (Arch) கட்டுமானம் அதிக உறுதி உள்ளது என்று எங்கோ படித்த விடயத்தை மையமாக வைத்து ஆய்வை ஆரம்பித்தோம். தேடலில் உறுதியான செய்தி எதுவும் கிடைக்கவில்லை. பல இடங்களில் பனிமிட்டாய் மரக்குச்சிகளை (popsicle sticks) உருக்கு கோந்தை (hot glue) வைத்து ஒட்டி எப்படி பாலம் செய்வது எப்படி என்று விவரங்கள் கிடைத்தன (Popsicle Stick Bridge). பாலங்கள் செய்தபின் அது எவ்வளவு எடை தாங்குகிறது என்று பார்க்க அது உடையும் மட்டும் சுமை ஏற்றுகிறார்கள். பின் உடையும்முன் தாங்கிய எடைக்கும் பாலத்தின் எடைக்குமான விகிதாச்சாரம் என்ன என்று பார்த்து அதிகமான விகிதாச்சாரம் கொண்ட பாலம் நல்ல வடிவமைப்பு என்று கணிக்கிறார்கள்.
எங்கள் ஆராய்ச்சி அறிக்கை, ஏதேனும் ஒரு கேள்வி (problem), நம் கருதுகோள் (hypothesis), ஆய்வு (research), ஆய்வு முடிவு (conclusion) என்ற வடிவமைப்பில் இருக்க வேண்டும். அதன்படி எங்கள் கேள்வி:”எந்த வகை பாலம் உறுதியானது?”, கருதுகோள்: ”வளைவுப் பாலம் சமக்கிடக்கைப் பாலத்தை விட உறுதியாக இருக்கலாம்”. மூன்று வகைப் பாலங்கள் செய்வது, அதில் எது உறுதியானது என்று பார்க்கலாம் என்று முடிவு செய்தோம்.
ஆய்வு முடிவு நம்பகமாக இருக்க வேண்டுமெனில் மூன்றுக்கும் ஒரே அளவு பொருண்மை இருக்கவேண்டும். கட்டுமானக் கோளாறினாலும் பாலத்தின் பலம் குறையலாம். இந்தப் பிரச்சினைகளோடு, மூன்று பாலங்கள் செய்வது என்பது ஆறாம் வகுப்பு மாணவருக்கு மிகவும் அதிகப்படியான சுமையாகும். நானும் நிரைய உதவி செய்ய வேண்டி இருக்கும்.
எனவே கேள்வியை சிறிது மாற்றி அமைக்க வேண்டி பாலங்கள் எப்படி வடிவமைக்கிறார்கள் என்று ஆராய்ந்தோம்.
அப்போதுதான் அட்டை காகிதத்தில் பாலம் செய்யும் முறையைப் படித்தோம் (Designing and Building File-Folder Bridges). இது அமெரிக்க ராணுவ பள்ளியை சேர்ந்த ஸ்டீபன் ஜெ. ரெஸ்லர் எழுதியது. பரியாகத் தரவிறக்கிக் கொள்ளலாம்.
- A Problem-Based Introduction to Engineering - Stephen J. Ressler, P.E., Ph.D. - United States Military Academy - Product of the U.S. Government
Graphic Design -
ஒரு சுமை, பாலத்தின் ஒவ்வொரு அங்கத்திலும் எத்தகைய, எவ்வளவு விசை உருவாக்குகிறது, அதற்குத் தகுந்தார்போல் எத்தகையப் பொருளைக் கொண்டு வடிவமைக்க வேண்டும் என்று பற்றி பள்ளி மாணாக்கர்கள் புரிந்துகொள்ளும் படி விளக்கமாக சொல்கிறார். அழுந்துவிசை ஏற்படும் இடங்களில் குழய்களும், இழுவை விசை ஏற்படும் இடங்களில் கம்பிகளும் பாவிக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டோம். இங்கே 7ம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கணினியில் பாலம் வடிவமைக்கும் போட்டியும் நடத்துகிறார்கள். விருப்பம் உள்ளவர்களைக் கலந்துகொள்ளச் சொல்லுங்கள்.
இந்த புத்தகத்தைப் படித்துவிட்டு, கேள்வியை “வடிவமைப்பு எப்படி கட்டுமானத்தின் உறுதியை பாதிக்கிறது?” என்றும் கருதுகோளை, “சரியாக வடிவமைக்கப்பட்டக் கட்டுமானம் அதன் எடையைப் போல நூறு மடங்கு எடையைத் தாங்கக் கூடும்.” என்று மாற்றிக் கொண்டோம். இதனால் ஒரே ஒரு பாலம் செய்தால் போதுமாயிற்று.
புறத்திட்டு அறிக்கையில், திரவு திரட்டுதலும், வரைபடங்களும் இன்றியமையாதன. எனவே உபரியாக புத்தகத்தில் சொன்னபடி பாலத்தின் பாகங்களின் திறனை சோதனை செய்யும் நெம்புகோல் இயந்திரமும் செய்தோம். அதை வைத்து எப்படி குழாய் வடிவம் அதிக அழுந்துதிறன் கொண்டதாகவும், 8 மில்லிமீட்டர் அகலமுடைய அட்டை ~3,600 கிராம் இழுவைத்திறன் கொண்டதாகவும் உள்ளது என்று அட்டவணைப் படுத்தினோம்.
பாலத்தை செய்து முடித்துவிட்டு சந்தேகத்தோடுதான் அதைப் பரிசோதித்தோம். எங்கள் கருதுகோள் உண்மை ஆயிற்று. ஆச்சரியகரமாக 50 கிராம் எடை இருக்கும் பாலம் 5 கிலோவிற்கு மேல் எடையை தாங்கிற்று. மேலும் இரண்டுமுறை இன்னும் அதிகமான சுமையை ஏற்றினோம். இது பள்ளியில் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டால் இன்னும் பலரை அதிசயிக்கச் செய்யக்கூடும்.
சுமை 5,595 கிராம்
மேலும் சில படங்கள்.
நெம்புகோல் எந்திரம் (lever based testing machine)
ஒரு அடுக்கு புத்தகங்கள் - 4,994 கிராம். (எடை எந்திரத்தின் அதிகபட்ச நிறுவை 5000 கிராம்)
அடுத்த அடுக்கு புத்தகங்கள் - 601 கிராம்.
இறுதி தேர்வு; ஒரு விளையாட்டு
Monday, March 08, 2010Labels: கல்வி, குழந்தைகள்
நாளையிலிருந்து என் மகளுக்கு ஐந்தாம் வகுப்பு இறுதித் தேர்வுகள் ஆரம்பம் ஆகின்றன. Florida Comprehensive Assessment Test (FCAT) என்று பெயர். இறுதி தேர்வுதான் என்றாலும், தேர்வுகள் முடிந்த பின்னும் பள்ளிக்கூடம் மேலும் சில மாதங்கள் நடக்கும். பொதுவில் இங்கே மாணவர்களுக்கு தேர்வுகள் என்பது பெரிய மன அழுத்தம் கொடுக்க கூடிய விடயம் அல்ல. படிப்பதே தேர்வு எழுதத்தான் என்பது போன்ற பாடத் திட்டங்கள் இல்லாதது போக, ஆசிரியர்களின் அணுகுமுறையும் அதற்கு ஒரு காரணம் எனலாம். இன்று பள்ளியிலிருந்து திரும்பிய என் மகளின் ஒரு கன்னத்தில் ராக்கெட் படமும் மற்றொன்றில் "FCAT Blast!" என்றும் வரைந்து இருந்தது.
மேற்படிப்பிற்கு ஆயத்தப் படுத்திக் கொள்வது என்பதே முகன்மையான நோக்கமாக இருக்கும் போது, தேர்வுகளை இவர்களால் விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடிகிறது போலும்.
நான் இரண்டு ஆண்டுகள் விடுப்பே எடுத்துக் கொள்ளாமல் வார இறுதி நாட்களும் சேர்த்து இரவு பகல் பாராமல் வேலை செய்து வந்த நிலை இப்போதுதான் மாறி, விடுமுறை எடுத்துக்கொள்ள (அல்லது நிறுவனம் கொடுக்க) வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. குழந்தைகளுக்கும் பயன்படும் என்று இப்போது எடுத்துக் கொண்டேன்.
கணக்கு பாடத்திற்கு மாதிரி வினாக்களுக்கு தேடிய போது இந்த தளம் கிடைத்தது. மழலையர் பள்ளியிலிருந்து ஆறாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு உதவும் வண்ணம் சிறப்பாக வடிவமைத்துள்ளார்கள். உங்களுக்கும் பயன்படலாம்.
![[math.png]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLT-kwYs3K4EvH0pRnWuVQVnYzEkgQq7-PBzt3EufZIQLnhCR2PGVrQvMaVx-Mh0ZhSyonLwnx4Fi-DPLUgKYW4oYOxR7PnAjoouZXIdP2qJ4LryekhhPADGjTIC86us1Qzx8A/s1600/math.png)
எல்லா எழுத்துக்களையும் அடிக்க - 20 வரியில் தமிழ் நிரல்
Saturday, February 20, 2010Labels: python, tamil, கல்வி, தமிழ், நுட்பியல்
வாக்கியத் தொகுப்பு(text processing) போன்ற அவக்கர வேலைகளுக்கு எளிய நிரல்மொழியான பைத்தான்-ஐ பாவித்துக்கொள்வேன். அதை தமிழ் மொழியிலும் பயன்
படுத்தவேண்டுமென்று ஆவல் இருந்தது. என் நீண்ட நாள் விருப்பம் இன்று நிரைவேறியது.
முதல் கட்டமாக எல்லா தமிழ் எழுத்துக்களையும் பதிக்க இந்த நிரலியை எழுதி உள்ளேன். புதிர் தயாரித்தல், வரிசைப் படுத்துதல் போன்ற தேவைகளுக்கு இந்த ஏற்பாடு உதவியாய் இருக்கும்.
இந்த நிரலின் அமைப்பையும், அதன் கட்டளைகளையும் வரிசை எண் கிரமமாக கீழே விவரித்துள்ளேன்:
1: # coding: utf-8
2: import sys
4: uyir = ("அ", "ஆ", "இ", "ஈ", "உ", "ஊ", "எ", "ஏ", "ஐ", "ஒ", "ஓ", "ஔ", "ஃ")
5: mey = ("க", "ங", "ச", "ஞ", "ட", "ண", "த", "ந", "ப", "ம", "ய", "ர", "ல", "வ", "ழ", "ள", "ற", "ன")
6: # கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ ஃ
7: thunai = ('\u0bbe', '\u0bbf', '\u0bc0', '\u0bc1', '\u0bc2', '\u0bc6', '\u0bc7', '\u0bc8', '\u0bca', '\u0bcb', '\u0bcc', '\u0bcd')
9: # உயிர் எழுத்துக்களைப் பதி
10: for u in uyir :
11: sys.stdout.write(u)
12: sys.stdout.write(" ")
14: # மெய் எழுத்துக்களைப் பதி
15: for m in mey :
16: sys.stdout.write("\n" + m)
17: for t in thunai:
18: sys.stdout.write(" ")
19: sys.stdout.write(m + t)
1. இந்த இழை UTF-8 ஒருங்குறி வகை சார்ந்ததுவிண்டோசில், பைத்தான் நிறுவியது போக, எக்ளிப்ஸ் (கிரகணம் என்றால் தப்பாக எடுத்துக்கொள்வீர்களா?)-உடன் பைடெவும் (pydev) நிறுவிக்கொண்டேன்.
2. பதிப்பு பந்தம் (print function) உள்ளடக்கிய கட்டகத்தை நிறுவு
4. உயிர் எழுத்துக்களின் பட்டியல்
5. மெய்யெழுத்துக்கள்
7. துணை எழுத்து ஒருங்குறி குறியீடுகள்
10 பட்டியலில் உள்ள உயிர் எழுத்துக்கள் ஒவ்வொன்றையும்
11 பதி
12 இடைவெளி விடு
15 பட்டியலில் உள்ள மெய்யெழுத்து ஒவ்வொன்றையும் (--- உண்மையில் அகர வரிசை)
16 அடுத்த வரியில் பதி
17 பட்டியலில் உள்ள துணை எழுத்து ஒவ்வொன்றுக்கும்
18 இடைவெளி விடு
19 மெய் + துணை எழுத்தை பதி
யுனிக்ஸ்/லினக்ஸ் இயங்குதளத்தில் முனையத்திலேயே தமிழ் வரும் என்பதால் இவற்றைபயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
பைத்தான் கற்றுக்கொள்ள மிகவும் எளிய நிரல் மொழியாகும். அடுத்ததாக எதும் பயனுள்ள நிரல்கள் எழுதினால் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
தொடர்புடைய சுட்டிகள்:
பைத்தான்: http://www.python.orgதமிழ் ஒருங்குறி UTF-8 பட்டியல்: http://www.utf8-chartable.de/unicode-utf8-table.pl?start=2944&number=128&unicodeinhtml=dec
http://www.eclipse.org/
http://pydev.org/
இது கருப்பினத்தவர் வரலாற்று மாதம்
Wednesday, February 13, 2008Labels: கல்வி, மானுடம்
ஆப்ரிக்கர்கள் தங்கள் நாட்டை விட்டு குடிபெயர்ந்து எதிர்கொண்ட வாழ்க்கைப் போராட்டங்களையும், அவர்களில் சிறப்பு வாய்ந்த மனிதர்களையும் நினைவு கூறும் வண்ணம் பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் கருப்பினத்தவரின் வரலாற்று சிறப்பு மாதமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
இம்மாதத்தில் என் மகளுக்கு புறத்திட்டாக, ஏதேனும் ஒரு கருப்பினத்தவரைத் தெரிவு செய்து அவரைப்பற்றி சேகரித்த விபரங்களுடன் கூடிய உருவபொம்மை செய்துவரச் சொல்வார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன், முதல் வகுப்பில் அகஸ்தா சாவேஜ் என்ற பெண் சிற்பியைப் பற்றி எழுதினோம். அவர் செய்த சிறிய களிமண் சிற்பத்தின் படத்தை இணைத்திருந்தோம். ஒருநாள் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் (PBSன் Antique roadshow) அதே சிற்பத்தை பார்த்தோம். அது 30,000 வெள்ளிகளுக்கு மதிப்பிடப்பட்டதில் உரிமையாளர்கள் போல நாங்களும் மகிழ்ந்தோம்.

இம்முறை பெட்ரீசியா பாத் என்ற கண் மருத்துவ வல்லுனரும் லேசர் விஞ்ஞானியுமான பெண்மணியைப் பற்றி எழுதியிருக்கிறோம். இவர் லேசர்பேக்கோ என்னும் கண்டுபிடிப்பிற்கு காப்புரிமை பெற்றுள்ளார். பூ விழுந்த விழி ஆடியை லேசர்மூலம் எளிதாக நீக்க உதவும் என்று தெரிகிறது. இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.


தெரிவு செய்ய வேண்டி மேலும் பல சிறந்த மனிதர்களைப்பற்றி படித்து தெரிந்து கொள்ள முடிந்தது. PBSலும் சென்ற வாரம், நாகரீகமாக வாழ்ந்த அப்துல் ரஹ்மான் என்ற ஆப்ரிக்க இளவரசன் அடிமையாக பிடிபட்டு அன்றைய (1788-1828) அமெரிக்காவின் கேவலமான சூழலில் இருந்து 40 ஆண்டுகளுக்குப் பின் தன் நாட்டிற்கு திரும்பிய உண்மைக் கதையை (Prince Among Slaves) மிகவும் சிறப்பான முறையில் ஆவணப் படமாக வெளியிட்டார்கள்.
அடிமைகளாக அழைத்து வரப்பட்டவர்கள் இன்று மீண்டு வந்துவிட்டார்கள். எல்லாரும் சமம் என்று உணர்ந்ததால், ஏதாவது ஒருவகையில் (பள்ளி தேர்ச்சி, வருமானம்) ஒரு சமூகத்தின் பங்கீடு சரியான விகிதத்தில் இல்லை என்றால் திட்டத்தில் என்ன கோளாறு என்றுதான் அலசுகிறார்கள். எல்லா குடியிருப்புகளிலும், பணிஇடங்களிலும் யாரையும் நாடு, மொழி, நிற பேதம்பார்க்ககூடாது என்று சட்டம் இருக்கிறது.
ஆனாலும் சமயவழிபாட்டில் அரசு குறுக்கிடக்கூடாது என்றக் கட்டுப்பாட்டினால், இந்துக் கோவில்கள் பலவற்றில் தமிழ் தெய்வம் முருகனுக்கும்,தென்னிந்தியர்களுக்கும் எதிராக மறைமுகத் தீண்டாமை நிலவுகிறது. சில சமயங்களில் வாடகை வண்டிஓட்டும், உணவு விடுதி நடத்தும் இந்தியர்கள் வாடிக்கையாளர்களிடம் பாரபட்சம் காட்டி பிடிபட்டு கடுமையான கண்டனத்திற்கும் தண்டனைக்கும் உள்ளாகிறார்கள். ஆனால் கோவில் கூடாரங்கள் இன்னும் மாட்டவில்லை.
இலா பவானா விந்தி நோத்தே!
Friday, January 11, 2008Labels: கல்வி, குழந்தைகள்

அமெரிக்காவில் பள்ளிகளுக்கு பனிக்காலத்தின் போது மூன்று வார தொடர் விடுமுறை விடுகிறார்கள்.
கிறித்துமசுக்கு முந்தைய வாரத்திலிருந்து ஆங்கிலப் புத்தாண்டுவரையும் குழந்தைகளுக்கு கொண்டாட்டம்தான்.
என் மகளுக்கு சென்ற ஆண்டு இறுதியில் விடுமுறைக்கு சற்று முன்னதாக ஒரு புறத்திட்டு கொடுத்தார்கள். மாணவர்கள் அவர்கள் சார்ந்திராத ஏதேனும் ஒரு நாட்டைப் பற்றி படித்து அந்த நாடுகளில் விடுமுறை விழாக்கள் (Holiday Celebrations) எப்படி கொண்டாடுகிறார்கள் என்று விபரங்களை சேகரித்து வகுப்பில் உரையாற்ற வேண்டும். (Christmas celebrations என்று சொல்வதில்லை. அரசுப் பள்ளிகளில் மதம்சார்ந்த விடயங்கள் புகுந்து விடாமலிருக்க மிகவும் மெனக் கெடுகிறார்கள் என்பது நம் கவனத்தில் கொள்ளத் தக்கது.)
பல நாடுகளைப் பற்றி தேடி கடைசியில் நாங்கள் இத்தாலியை தெரிவு செய்தோம். ஏனெனில் இத்தாலியின் விழாக்கள் பற்றி சொல்ல நிரைய விடையங்கள் கிடைத்தன.
எழுதிய படிமத்தின் தமிழாக்கம் இதோ.
இத்தாலியில் விடுமுறை நாட்களில் கடைத்தெருக்களை அலங்கரித்தும், விழாக்கோலம் பூண்டும், தீப்பந்தம் ஏந்தி ஊர்வலம் சென்றும் கொண்டாடுகிறார்கள். இவை வெறும் மத சம்பிரதாயங்கள் அல்ல, வாகைகொள்ள முடியாத சூரியனுக்கு மரியாதை செலத்தும் முறையுமாகும். பண்டைய உரோமானிய பேரரசு பனி முடங்கல் (winter solstice) நாள் விருந்து கொடாடியதும் இதே காலக்கட்டங்களில்தான். இந்நாட்களில் இத்தாலியர்கள் விரிவான கலை அம்சத்துடன் தூளிகை காட்சிகளை வடிவமைக்கின்றனர். ஊரில் மிகச்சிறந்த காட்சியமைப்புக்கு போட்டிகளும் நடப்பது உண்டு. மக்கள் இவற்றை ஒப்பு நோக்கும் முகமாக ஒவ்வொரு இடத்திற்கும் செல்வர்.
மரத்துண்டை எரிப்பது மற்றொரு வழமையாகும். புத்தாண்டு தினம் வரை அணையாமல் இருக்க வேண்டும். இது முந்தைய ஆண்டின் பிரச்சினைகள் அழிந்து போவதை குறிக்கும். இவ்விடுமுறை நாட்களில்
பல இனிப்பு வகைகளை செய்வார்கள். பானத்தோனே-யும் (கட்டிப் பழங்கள் நிரைந்த இனியப்பம்)
பானவோர்தே-யும் (தேன், பாதாம், காசில் பருப்பு கொண்டு செய்த இஞ்சி ரொட்டி) முதன்மையானவை.
சனவரி 6ம் நாள் விசுவரூபம் (The Epiphany) என்னும் விழாவைக் கொண்டாடுகிறார்கள். அன்று குழந்தைகள் தங்கள் காலணிகளை வீட்டிற்கு வெளியே வைக்கின்றனர். பெண் சான்டா கிளாசு-வான "இலா பவானா" அவற்றினுள் பரிசுப் பொருட்களை இடுவதா அவர்கள் நம்பிக்கை. இலா பவானா கையில் பரிசு மூட்டையுடன் துடைப்பத்தை வாகனமாகக் கொண்டு வானத்தினூடே பறந்து வருபவராம். நல்ல குழந்தைகளுக்கு பரிசும் மிட்டாயும் கிடைக்கும். சேட்டை செய்பவர்களாக இருந்தால், தங்கள் காலணியில் கரித்துண்டு (charcoal) இருக்க காண்பர்.
குழந்தைகள் இலா பவானாவை வாழ்த்திப் பாடும் பாடல்:
இலா பவானா வருவார் இரவோடு .
நைந்து உடைந்த காலணிகளோடு
உரோமேனிய ஆடை அணியோடு
வாழ்க வாழ்க இலா பவானா.

Holiday Celebrations in Italy
The holidays in Italy are celebrated with fairs, joyful festivities and torch processions. These are not only religious activities but they also honor the birth of the "Unconquered Sun". This is also the period of the greatest feast of the Ancient Roman Empire, "saturnlia", (a winter solstice celebration). Italians create artistic and elaborate manger displays during this time. Often, there is a competition for the best display in the same town. People go from place to place to view and compare the displays.
Another tradition is the burning of the Yule Log, which must stay lit until the New Year's Day. This symbolizes that the old year and its problems are destroyed. In the holidays, they make a lot of sweets. The sweets include panatone, (cake filled with candied fruits) and panforte (gingerbread made with hazel nuts, honey and almonds).
On January 6th there is also a festival called "The Epiphany" celebrated. That day, children put their shoes outside for the lady Santa Claus called La Befana to put presents in. She is an old lady who rides broomstick through the air. She carries bag of candies and gifts. If the children are good, they will get presents and candies. If they are bad they will find "coal" in those shoes.
Childrens sing a poem to praise La Befana:
La Befana vein di notte
Con le scarpe tutte rotte
Col vestito alla romana
Viva,Viva La Befana!
The English translations:
La Befana comes by night
With her shoes old and broken
She comes dressed in the Roman Way
Long life to the La Befana!
![]() | ![]() | |
![]() | ||
குடும்பமரம்
Tuesday, March 20, 2007Labels: கல்வி
இந்த ஆண்டு இரண்டாவது வகுப்பு படிக்கும் என் மகளுக்கு சொல்லிக் கொள்ளும்படி நல்ல புறத்திட்டுக்கள் தரவில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தபோது முன்னோர்களை நினைவு கொள்ளும் விதமாக "குடும்ப மரம்" (family tree) என்ற புறத்திட்டு (project) கொடுத்திருந்தார்கள்.
அது பல பகுதிகளைக் கொண்டது.
1. குடும்ப மரம் தயார் செய்ய வேண்டும். படங்கள், பெயர், பிறந்தநாள், போன்ற விபரங்களை அடுக்கடுக்காக அமைக்கவேண்டும். கீழ் வரிசையில் மாணவரும் அவருடன் பிறந்தவர்களும். அதற்கு மேல்வரிசையில் பெற்றோர் அதற்குமேல் பெற்றோரின் பெற்றோரின் பெற்றோர், இப்படியாக.
2. காலக்கோடு (timeline) உருவாக்கம்.
அதில் பிறந்த நாளில் தொடங்கி நடந்த முக்கிய நிகழ்வுகளைப் பதியவேண்டும், புறத்திட்டு முடிக்க வேண்டிய நாளில் முடியவேண்டும். நடக்க தொடங்கியநாள், சகோதரசகோதரிகளின் பிறந்த நாட்கள் போன்ற குறைந்தது 10 முக்கிய நாட்களைக் குறிப்பிடவேண்டும்.
3. எதாவது ஒரு முன்னோரை நேர்காணவேண்டும்.
4. அவர்களுடைய பள்ளிப்பருவத்தோடு மாணவரின் அன்றாட செயல்பாடுகளை ஒப்பிடவேண்டும்.
5. மேல்கண்ட ஒப்பீட்டை வென் வரைபடமாக (venn diagram) வரையவேண்டும்.
6. குடும்பத்தின் அடையாளமாக உள்ள ஒருபொருளைக் கொண்டுவந்து அதன் முக்கியத்துவத்தை விளக்கவேண்டும். திருக்குறளைக் கொடுத்து, "இனிய உளவாக.." என்று தொடங்கும் குறளுக்கு பொருள் கூறச் செய்தேன்.
7. குடும்பத்தின் சிறப்புப் பண்டமொன்றின் செய்முறையை விளக்கவேண்டும். முடிந்தால் அதைக் கொண்டுவந்து மற்ற மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். என் மனையாள் பருப்பு வடை கொடுத்து அனுப்பினாள். ஆசிரியைக்குப் பிடித்துப்போய்விட்டது. தானே செய்து பார்ப்பதாக சொல்லியிருக்கிறாள்.
என் அப்பாவை தொலைபேசியில் பேட்டிகாண உதவியபோது நான் அறிந்திறாத செய்திகள் கிடைத்தன. அவர் சோழவந்தானில் இருந்த உயர்நிலைப் பள்ளிக்கு தன் கிராமத்திலிருந்து தினமும் ஐந்து கி.மீ நடந்து போனதையும், இடையில் ஆற்றை நீந்திக் கடந்து போய்வர வேண்டியிருந்தது என்றும் தெரிந்து கொண்டேன்.
மாணவர்களுக்கு விளங்கும் பொருட்டு துணைக்கோள் படங்களும் கொடுத்து அனுப்பினேன். அதில் குளிக்கப் போகும் கண்மாய், அவர்கள் வீட்டில் வளர்த்த மாட்டை அழைத்து செல்லும் பால்ப்பண்ணை, தோராயமாக பள்ளிக்கு செல்லும் வழி இருக்குமிடங்களையும் குறித்துக்கொண்டோம்.
(உதவி விக்கிமாப்பியா http://wikimapia.org)
இப்படிப்பட்ட பாடத்திட்டங்கள் இந்தியாவில் இல்லையே என்று வருத்தமாயிருக்கிறது.
ஜப்பானின் தாழ்த்தப்பட்ட மக்கள்
Sunday, June 04, 2006Labels: கல்வி, மானுடம்
ஜப்பானிய இனமான புரக்கு (Buraku) என்ற தாழ்த்தப்பட்ட மக்களைப்பற்றி நோபல் பரிசு பெற்ற மூலக்கருவியல் விஞ்ஞானி ஜேம்ஸ் டி. வாட்சன்-இன் டி-என்-ஏ (James D. Watson - D N A the Secret of Life) புத்தகத்தில் படித்தேன். அவர் எப்படி புத்திகூர்மைக்கு மரபணுக்கள் சிறிதளவே காரணமாகின்றன, சமூகச்சூழல்தான் ஒருவரின் உயர்வுக்கு பெரும்காரணமாகிறது என்பதை விளக்க புரக்கு இனத்தவரை உதாரணம் காட்டுகிறார்.
என்னால் இயன்ற மொழிபெயர்ப்பில் புத்தகத்தின் 380ம் பக்கத்திலிருந்து தொகுக்கப்பட்ட விபரங்களை கீழே காண்க.
இச்சந்ததியினர் சமூகத்தின் "அசுத்தமான", மிருகங்களை வெட்டுதல் போன்ற வேலைகளை செய்ய விதிக்கப்பட்டனர். ஜப்பானியர்கள் நவீனமடைந்தாலும்கூட, இப்போதும் புரக்கு இனத்தவர் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுவதாலும் முன்னேரவிடாததாலும், அறிவுத்திறன் அளவீடுகளில் சராசரியாக 10லிருந்து 15ந்து புள்ளிகள் நாட்டின் சராசரி அளவீட்டைக்காட்டிலும் குறைவாகவே பெறுகின்றனர்.
அவர்கள் மரபணுரீதியில் குறைபாடுடையவர்களா அல்லது அவர்களின் அறிவுத்திறன் அளவீடு என்பது வெறும் தாழ்த்தப்பட்ட நிலையின் பிரதிபலிப்பா என்ற கேள்விக்கு பிந்தையதுதான் காரணம் என்று புலப்படுகிறது: அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த புராக்கு இனத்தவர், எனைய ஜப்பானிய அமெரிக்கர்கள் போலவே பாகுபாடின்றி நடத்தப்படுவதால் தாய்நாட்டில் இருக்கும் அவர்களின் அறிவுத்திறன் குறைபடு அமெரிக்காவில் காணப்படுவதில்லை என்கிறார்.
ஈசாப் நீதிக்கதைகள்.
Friday, June 02, 2006Labels: கல்வி, குழந்தைகள்
என் மகள் பாலர் வகுப்பில்(kindergarten)படித்தபோது அவளுக்கு தினமும் வீட்டுப்பாடங்கள் தரப்பட்டன. வியாழன்தோறும் ஒரு புத்தகத்தைப் படித்து அதில் முதலில், நடுவில் இறுதியில் என்ன நடந்தது என்று எழுதிக்கொண்டு போகவேண்டும். கதையிலிருந்து ஒரு படமும் வரையவேண்டும்.
இதற்கு நூலகத்தில் புத்தகங்களைத்தேடுவது பெரிய வேலையாக இருந்தது. புத்தகங்கள் ஐந்து வயதினர் படிக்கும்படி இருக்கவேண்டும், கைச்சித்திரங்கள் இருக்கவேண்டும், புகைப்படங்கள் உதவாது. பத்துப்பதினைந்து புத்தகங்களில் ஒன்றுதான் வேண்டியபடி அமையும். சிலமாதங்களிலேயே நூலகத்தில் தேடுவது வீண் என்றாகிவிட்டது.
நான் தமிழ்ப்பாடநூல்களில் படித்த கதைகளை இணையதளங்களில் தேடியபோதுதான், ஈசாப் நீதிக்கதைகளப் பற்றி தெரிந்துகொண்டேன் (Aesop's Fables). எனக்குத்தெரிந்த அத்தனை குட்டிக்கதைகளும் கி.மு 700ம் நூற்றாண்டு காலத்தைய இப்புத்தகத்தில் இருக்கின்றன. பொன் முட்டையிடும் வாத்து, காக்கையை ஏமாற்றும் நரி, குடுவை நீர் அருந்தும் காக்கை என்று பல கதைகள் படங்களுடன் ஒரே புத்தகத்திலிருந்து கிடைத்தன. காலம், இடம், மொழிகளுக்கு அப்பாற்பட்ட என்ன அருமையான கதைகள். வீட்டுப்பாடத்தில் உதவியதற்கு நன்றி ஈசாப்.

















Comments
1. ்ஜ்ஜ்Jeeva - June 4, 2006
ரொம்ப நல்லா இருக்கு எல்லா படங்களும், உங்கள் மகளுக்கு வாழ்த்துக்கள் பலப்பல.
2. padhu - June 4, 2006
//ரொம்ப நல்லா இருக்கு எல்லா படங்களும், உங்கள் மகளுக்கு வாழ்த்துக்கள் பலப்பல.//
மிக்க நன்றி ஜீவா,
மகளுடன் அடுத்து பேசும்போதுதான் இந்த புதிய பதிவுகளைப்பற்றி சொல்ல வேண்டும். சந்தோசப்படுவாள்.
3. ஜீவ்ஸ் - June 5, 2006
படங்கள் நன்று
உங்கள் மகளுக்கு என் வாழ்த்துகளைத் தெரியப்படுத்துங்கள்.
உங்கள் வெண்பாவிற்கான பதில் என் பதிவில் இடுகிறேன்.
அன்புடன்
ஜீவ்ஸ்
4. padhu - June 5, 2006
வருகைக்கு நன்றி ஜீவ்ஸ்,
அடுத்த முறை உங்கள் பதிவில் பின்னூட்டம் இடும்போது நீங்கள் PG Woodhouse பிரியரா? என்று கேட்க்கவெண்டும்.
5. மதி கந்தசாமி - June 9, 2006
அழகான படங்கள்! உங்கள் மகளிடம் சொல்லுங்கள்.
6. padhu - June 9, 2006
பாராட்டுக்களுக்கு நன்றி மதி கந்தசாமி.