ஆதலினால் ரோபாட் செய்வீர்

Friday, June 13, 2014

நடுநிலைப் பள்ளிக் குழந்தைகளிடையே (வயது 9 முதல் 14 வரை) நடத்தப்படும் ரோபாட் போட்டிகளில் முதன்மையானது
பர்ஸ்ட் லெகோ லீக் (FIRST Lego League) ஆகும்.  இப்போட்டிகளை
 FIRST (For Inspiration and Recognition of Science and Technology - என்பதன் சுருக்கம்) நிறுவனத்தார் தயாரித்து அளிக்கின்றனர். இந்நிறுவனத்தை பல புகழ்பெற்ற கண்டுபிடிப்புகளை தந்த ”டீன் கமென்” என்பவர் 1989ல் ஆரம்பித்தார். இப்போட்டிகள் ஆண்டுதோறும் செப்டம்பர் வாக்கில்
அறிவிக்கப்பட்டு மார்ச் வரை நடக்கின்றன. ஏதேனும் ஒரு கருப்பொருளை மையமாக எடுத்துக்கொண்டு, அதற்கேற்ப  4 அடிக்கு 8 அடி அளவில் வரைபடமும் அதன் மேல் பொருத்தமான லெகோ துணுக்குகளால் செய்யப்பட்ட கொலு பொம்மைகளையும் வெளியிடுகிறார்கள்.

சென்ற ஆண்டில் எடுத்துக்கொள்ளப்பட்ட கருத்து ”இயற்கை சீற்றங்கள்” ஆகும். அதற்கு கொடுக்கப்பட்ட வரைபடத்தையும் அதன்மேல் உள்ள பொருட்களையும் கீழே காண்க.

தென்மேற்கு மூலையில் உள்ள வெள்ளை கட்டம், தேர்நிலை மாதிரி ரோபோ ஓடத்தொடங்கும் இடம்.  வடமேற்கில் செல்லப்பிராணிகள் நாயும், பூனையும் குடும்பத்தை விட்டு அனாதரவாக இருக்கின்றன.
அருகில் உள்ள மரத்தின் கிளை ஒன்று ஊசலடிக்கொண்டுள்ளது. அதன் கீழே உள்ள மின்கம்பிகளின் மேல் விழுந்தால் ஆபத்து. உங்கள் ரோபாட் அந்த பிராணிகளை மனிதர்களுடன் சிவப்பு கட்டமிட்ட தென்கிழக்கு மூலையான பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சேர்த்தால், தலா 15 புள்ளிகள், மரக்கிளையை பாதுகாப்பாக தரையில் விழச்செய்தால் 30 புள்ளிகள் கிடைக்கும். இதேபோல் முதலுதவி வண்டி, சரக்கு விமானம் & வண்டி, சுனாமி, நிலநடுக்கப் பகுதியில் அடுக்கு கட்டிடங்கள், வெள்ளப்பகுதியில் வீடு, மனிதர்கள், இடிபாடுகள் என்று ஒவ்வொரு பொருளையும் சார்ந்த பல செயல்களுக்கும் புள்ளிகள் வரையரை செய்யப்பட்டிருக்கின்றன. மொத்தமாக சுமார் 600 புள்ளிகள் எடுக்கமுடியும். என்ன இவை எல்லாவற்றையும் இரண்டரை நிமிடங்களுக்குள் ரோபாட் செய்து முடிக்கவேண்டும். ரோபாட்டிற்கு ஒவ்வொரு வேலைக்கும் வெவ்வேறுவகை இணைப்புகள் தேவைப்படும். ஒரு சுற்று போய்விட்டு நிலைக்கு வந்தப் பிறகுதான் போட்டியாளர்கள் இணைப்புகளை மாற்றவேண்டும். நடுவில் அதை தொட்டால் தண்டனையாக சில புள்ளிகள் கழிக்கப்படும், மேலும் இடைஞ்சலாக விமான ஓடுதளத்தில் தடுப்புக் கட்டைகள் வைக்கப்படும்.

இதில் எந்த வேலையை எப்போது செய்வது எப்படி செய்வது என்பது போட்டி குழுக்களின் தனிப்பட்ட யோசனை ஆகும். ஒவ்வொரு குழுவும் விதவிதமாக ரோபாட் வடிவமைக்கிறார்கள். அவர்கள் தேர்ந்தெடுக்கும்
வேலைகளுக்கு தகுந்தாவாறு ரோபாட் வடிவமும் அணுகுமுறையும் மாறுபடும். விதவிதமான சக்கரங்கள்,  இணைப்புகள், மற்றும் உணரிகளை பொருத்திக்கொள்ளவேண்டும். நாங்கள் இரண்டு வித அடித்தளங்களை (chassis) பயன்படுத்தினோம். தரையோடு அணுக்கமாக இரண்டு ஒளிஉணரிகள் கொண்டமாதிரி ஒன்றும் (கடைசியாக சேர்த்த இரு தொடு உண்ரிகள் படத்தில் இல்லை), இடிபாடுகளைக் கடந்து செல்ல பெரிய சக்கரங்களுடன் ஒரே மோட்டாரில் இயங்கும்படி ஒன்றும் (படங்கள் கீழே). இவையாவும் தானியங்கியாக செயல்பட ரோபாட்டில் நிரல்கள் எழுதவேண்டும். 
உதாரணமாக ஒரு சுற்றில் ரோபாட் வீட்டிற்கு அருகில் உள்ள மனிதனை மீட்டுக்கொண்டு, வீட்டை வெள்ளத்திலிருந்து பாதுகாக்க அதிலுள்ள பிடியை தட்டி தளத்தை உயர்த்திவிட்டு மீண்டும் நிலைக்கே திரும்பவேண்டும் என்று எடுத்துக்கொண்டால். ரோபாட் நிலையில் இருந்து வடக்கு நோக்கி 450 மில்லிமீட்டர் சென்று 90 பாகை வலப்புறம் திரும்பி, ஒளி உணரிமூலம் இரண்டு கருப்பு பட்டைகளைக்கடந்து போய் இடப்பக்கம் திரும்பி கருப்புப்படையில் நேர்க்கோட்டில் 3 வினாடிகள் பயணித்து (இல்லையானால் வீட்டின்மேல் இடித்துக்கொண்டு நின்றுவிடும்) இணைப்பை இயக்கி மனிதனை மீட்டுக்கொண்டு, மேலும்  சில மில்லிமீட்டர் சென்று இடப்பக்கம் திரும்பி வேகமாக சென்று பிடியில் மோதி வீட்டை உயர்த்தியபின் வந்த வழியே திரும்பவேண்டும். ஒவ்வொரு கட்டளையும் ரோபாட்டின் நிரல்மொழியில் பதியவேண்டும் (கருப்புப்பட்டையின் வலது விழிம்பை தொடர்ந்து செல்லும் கட்டளைகள் படத்தில் ).




குழுக்களின் திறமையை மூன்றுவித தேர்வுகளுக்கு உட்படுத்தி முடிவு செய்கிறார்கள். இதில் நுட்பியலுக்கு 33.3 சதம் (போட்டியில் எடுத்த புள்ளிகளுக்கு 16.5% + நுட்பியல் நேர்காணலுக்கு 16.5%), கருத்துக்கு
ஏற்ற புறத்திட்டுக்கு 33.3 சதம்  மற்றும் குழுவின் கூடிசெயல்வகைக்கு 33.3 சதம்   என்று பிரித்துக் கொடுக்கிறார்கள். தேர்வில் போட்டி மனப்பான்மையைவிட மாணவர்களின் ஒழுங்கும் கல்வியுமே முக்கியத்துவம்  பெருகின்றன. முதலில் உள்ளூர் போட்டிகள் இரண்டும், அதில் ஏதாவதொன்றில் தேர்வானால், வட்டார அளவிலும், அதிலிருந்து மாநில அளவிலும் அடுத்து
தேசிய அளவிலும் போட்டிகள் நடக்கின்றன.

எங்கள் குழுவில் ஐந்து நண்பர்களின் குடும்பகளிலிருந்து ஆறு குழந்தைகள் பங்கேற்றனர். எங்களுக்கு, முன்பின் பழக்கமோ போதிய அவகாசமோ இல்லாத போதிலும் முதல் போட்டியிலேயே தேர்வானோம். மேலும் எங்கள் புறத்திட்டிற்கு முதல் பரிசு கிடைத்தது. ஒவ்வொரு போட்டியிலும் கொஞ்சம் கொஞ்சமாக ரோபாட்டின் செயல்பாடுகளை துல்லியமாகியதால் அடுத்தடுத்த போட்டிகளில் பரிசுகள் குவிந்தன. இறுதியாக மாநில அளவில் சிறந்த ரோபாட் வடிவமைப்பு பரிசு கிடைத்தது.

எங்கள் குழுவிற்கு நாங்கள் இட்ட தமிழ் சார்ந்த பெயர் வீராபாட்ஸ்.


இந்தியாவில் சில இடங்களில் இப்போட்டிகள் நடைபெறுவதாகத்தெரிகிறது. பெங்களூருவில் எட்டாம் வகுப்பு மாணவர்களிடம் அவர்களின் தொழில் தேர்ந்தெடுத்தலைப்பற்றி பேச நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளை அழைத்து வருகிறார்கள். இதை செய்யமாட்டார்களா? இந்த வெற்றியின் காரணமாக, எனது நண்பர்கள் அடுத்து உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு நடக்கும் போட்டி (FIRST Robotic Championship) குழு அமைக்க முயற்சி செய்துகொண்டுள்ளார்கள். அதற்கு பொறியில் கல்லூரிப்படிப்பு போல கடின உழைப்பும், தொழிற்சாலைகளில் பயன்படும் அளவு உயர்தர விலை கூடிய பாகங்களும் தேவை. பின்னாட்களில் அதைப்பற்றி பகிர்ந்துகொள்கிறேன்.