Liferay : லைப்ரே - திறவூற்று ஜாவா போர்ட்டல்

Saturday, February 27, 2010

போர்ட்டல் என்பது பல வலைத்தளங்களை உள்ளடக்கிய சொவ்வறை எனலாம். உதாரணமாக எங்கள் நிறுவனம் கடன் அட்டைகள் போன்ற வரவு அட்டைகளை வழங்குகிறது. எங்கள் வாடிக்கையாளர்கள் தனி நபர்கள் அல்லர். நிறுவனங்கள், அரசு வாரியங்கள் போன்றவை தங்கள் ஊழியர்கள் மற்றும் பயனீட்டாளர்களுக்கு எங்கள் வரவு அட்டைகளை அவர்களுடைய நிறுவனத்தின் பெயரில் தருவார்கள்.

அட்டைதாரர்கள் மேலதிக சேவைகளை பெற, அந்தந்த நிறுவனங்களுடையதைப் போலவேத் தோன்றும் இணைய தளங்களையும் நாங்கள் தயாரித்து அளிக்கிறோம். அட்டைதாரர்களுக்கான தளங்கள் மட்டுமன்றி, அந்த அட்டைகளை நிர்வகிக்க வேண்டிய செயலிகள் அடங்கிய தளங்களும் தருகிறோம். அப்படியாக நூற்றுக்கும் மேலான தளங்களை உள்ளடக்கிய பெரிய சொவ்வறைதான் போர்ட்டல். அதை ஒவ்வொரு பயனர்களுக்கும் தனிப்பட்ட தளங்கள் போன்ற தோற்றம் தருமாறும் செய்யலாம்.

தளங்களில் நிறுவனங்களின் இலச்சினையைத் தவிற மற்ற பகுதிகள் பெரும்பாலும் ஒரேபோல் இருந்தாலும், சிறிய அளவில் ஏதேனும் மாற்றங்கள் தேவைப்படும். போர்ட்டல்களில் பக்கங்கள் (pages) பல சிறு பகுதிகளின் (portlets) தொகுதியாக அமையப் பெற்றிறுப்பதால், நம் வசதிக்கேற்ப போர்ட்லெட்டுகளை இடம் மாற்றி வைத்துக் கொள்ளலாம்.

இங்கே சில எடுத்துக்காட்டுக்களைக் காணலாம்.





மாநகரக்காவல் தளமும், மின்வாரியத் தளமும் ஒரே சொவ்வறையில் இயங்குகின்றன. போர்ட்லெட்டுக்கள் எப்படி இடம்மாறி அமைந்துள்ளன என்பதை கவனியுங்கள்.







நமக்குத் தேவையான, பயனர் மேம்பாடு, அச்சுக்கோர்த்தல், வடிவமைத்தல் போன்ற தளத்தை நிறுவ வேண்டிய எல்லா வசதிகளையும் உள்ளடக்கியுள்ளதை காணலாம்.

இந்த போர்ட்டல்களை உருவாக்குவதில் முன்னோடியாகத் திகழ்வது ஜாவா நிரல்மொழியில் தொகுக்கப்பட்ட அடிப்படை வடிவமைப்பாகும் (specification). ஜாவாவை அறிமுகப்படுத்திய சன் நிறுவனம் போர்ட்டலுக்கு 2001ல் JSR 168 - என்றும் 2008ல் இரண்டாம் கட்டமாக JSR-286 என்றும் செந்தரங்களை வரையறுத்தனர். அவற்றின் அடிப்படையில் பல நிறுவனங்கள் போர்ட்டல் சொவ்வறைகளை தயாரித்து விற்கின்றனர். IBM WebSphere Portal, WebLogic Portal போன்ற வணிக நிறுவனங்கள் அளிக்கும் மென்பொருள்களுடன், JBoss, Liferay போன்ற பல திறவூற்று (open source) தயாரிப்பிலான மென்பொருள்களும் கிடைக்கின்றன. அவற்றுள் லைப்ரே பேர்பெற்றதாகும்.

இது என்ன விலை என்று கேட்டீர்களா? ஏதும் இல்லை. பரியாக தரவிறக்கிக் கொள்ளலாம்.

http://www.liferay.com

எல்லா எழுத்துக்களையும் அடிக்க - 20 வரியில் தமிழ் நிரல்

Saturday, February 20, 2010


வாக்கியத் தொகுப்பு(text processing) போன்ற அவக்கர வேலைகளுக்கு எளிய நிரல்மொழியான பைத்தான்-ஐ பாவித்துக்கொள்வேன். அதை தமிழ் மொழியிலும் பயன்
படுத்தவேண்டுமென்று ஆவல் இருந்தது. என் நீண்ட நாள் விருப்பம் இன்று நிரைவேறியது.
முதல் கட்டமாக எல்லா தமிழ் எழுத்துக்களையும் பதிக்க இந்த நிரலியை எழுதி உள்ளேன். புதிர் தயாரித்தல், வரிசைப் படுத்துதல் போன்ற தேவைகளுக்கு இந்த ஏற்பாடு உதவியாய் இருக்கும்.


1: # coding: utf-8
2: import sys

4: uyir = ("அ", "ஆ", "இ", "ஈ", "உ", "ஊ", "எ", "ஏ", "ஐ", "ஒ", "ஓ", "ஔ", "ஃ")
5: mey = ("க", "ங", "ச", "ஞ", "ட", "ண", "த", "ந", "ப", "ம", "ய", "ர", "ல", "வ", "ழ", "ள", "ற", "ன")
6: # கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ ஃ
7: thunai = ('\u0bbe', '\u0bbf', '\u0bc0', '\u0bc1', '\u0bc2', '\u0bc6', '\u0bc7', '\u0bc8', '\u0bca', '\u0bcb', '\u0bcc', '\u0bcd')

9: # உயிர் எழுத்துக்களைப் பதி
10: for u in uyir :
11: sys.stdout.write(u)
12: sys.stdout.write(" ")

14: # மெய் எழுத்துக்களைப் பதி
15: for m in mey :
16: sys.stdout.write("\n" + m)
17: for t in thunai:
18: sys.stdout.write(" ")
19: sys.stdout.write(m + t)

இந்த நிரலின் அமைப்பையும், அதன் கட்டளைகளையும் வரிசை எண் கிரமமாக கீழே விவரித்துள்ளேன்:
1. இந்த இழை UTF-8 ஒருங்குறி வகை சார்ந்தது
2. பதிப்பு பந்தம் (print function) உள்ளடக்கிய கட்டகத்தை நிறுவு
4. உயிர் எழுத்துக்களின் பட்டியல்
5. மெய்யெழுத்துக்கள்
7. துணை எழுத்து ஒருங்குறி குறியீடுகள்
10 பட்டியலில் உள்ள உயிர் எழுத்துக்கள் ஒவ்வொன்றையும்
11 பதி
12 இடைவெளி விடு
15 பட்டியலில் உள்ள மெய்யெழுத்து ஒவ்வொன்றையும் (--- உண்மையில் அகர வரிசை)
16 அடுத்த வரியில் பதி
17 பட்டியலில் உள்ள துணை எழுத்து ஒவ்வொன்றுக்கும்
18 இடைவெளி விடு
19 மெய் + துணை எழுத்தை பதி
விண்டோசில், பைத்தான் நிறுவியது போக, எக்ளிப்ஸ் (கிரகணம் என்றால் தப்பாக எடுத்துக்கொள்வீர்களா?)-உடன் பைடெவும் (pydev) நிறுவிக்கொண்டேன்.

யுனிக்ஸ்/லினக்ஸ் இயங்குதளத்தில் முனையத்திலேயே தமிழ் வரும் என்பதால் இவற்றைபயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
பைத்தான் கற்றுக்கொள்ள மிகவும் எளிய நிரல் மொழியாகும். அடுத்ததாக எதும் பயனுள்ள நிரல்கள் எழுதினால் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

தொடர்புடைய சுட்டிகள்:

பைத்தான்: http://www.python.org
தமிழ் ஒருங்குறி UTF-8 பட்டியல்: http://www.utf8-chartable.de/unicode-utf8-table.pl?start=2944&number=128&unicodeinhtml=dec
http://www.eclipse.org/
http://pydev.org/