பொட்டி மன்றம்

Thursday, December 27, 2007

எங்கள் ஊரில் நடக்க இருக்கும் பொங்கல் விழாவில் நடிக்க என்று நான் எழுதிக் கொடுத்த முதல் படிவம். நாடகமாக எப்படி வடிவம் பெறும் என்று தெரியவில்லை. பார்க்கலாம்.


தலைப்பு: வடையில் சிறந்தது எது?
நடுவர்: பாப்பு

வழக்காடுவோர்:
பருப்புவடை கட்சி
மணி
வேலு
விக்கி

மெதுவடை கட்சி:
ராசு
பார்த்தி
செந்தில்


அரங்கு:
பாப்பு பொட்டிக் கடை வைத்திருக்கிறார்
வழக்காடுவோர் இருபுறமும் அமர்ந்திருக்கிறார்கள்.

ராசு: பாப்பு, என்ன கடை பக்கம் ஒருத்தரையும் காணோம்.

விக்கி: அதான் நீங்க இருக்கிறீங்களே. எப்பிடி வருவாங்க. உங்க குசும்புக்கு பயந்துதான் பாப்புக் கடையில அல்வாவே விக்கிறது இல்ல.

ராசு: என்ன பாப்பு இது. கடையில வியாபாரம் நடந்தாத் தானே உனக்கும் நல்லது எங்களுக்கும் நல்லது.

வேலு: ஏதாவது போட்டி ஈட்டின்னு வைப்பூ. கூட்டம் கூடும். நாங்க களம் இறங்க தயாரா இருக்கோம். (வேட்டியை வரிந்து கட்டுகிறார்).

பாப்பு: போட்டி தான. வச்சிட்டா போவுது. ஏங்கிட்ட ரெண்டு வடை இருக்கு. ஒண்ணு மெது வடை. ஒண்ணு பருப்பு வடை. வாங்க பேசுங்க.

செந்தில் (குதிக்கிறார்): நான் மெதுவடை கட்சி, மெதுவடை கட்சி.
மணி: ஹி...ஹி...ஹி...ஹி...ஹி (மலர்ச்சி காட்டுகிறார்)

வேலு: அப்ப சரி, நான் மசால்வடை கட்சி.

பார்த்தா: வேலு, போட்டி சரி அது என்னய்யா ஈட்டி. பருப்புவடை சரி. அது என்ன மசால்வடை. மசால்னா கறி மசாலா? அப்ப ஈட்டி வேட்டை ஆடுறதுக்கா?

வேலு: ஆரம்பிச்சிட்டான்யா. ஆரம்பிச்சிட்டான்யா? இனி நம்ம கதை கந்தல்தான்.

மணி: ஹி...ஹி...ஹி...ஹி...ஹி

செந்தில்: ஏண்ணே, இவ்வளவு சந்தோசமா இருக்கீங்க?

மணி: உனக்கு என்ன வடை பிடிக்கும்னு சொன்ன?

செந்தில்: மெது வடை தான்ணே.. நல்லா மெத்து மெத்துன்னு இருக்கும்ணே.

மணி (அடிக்கப் போகிறார்): உன்னை மொத்து மொத்துன்னு மொத்துறதுக்கு எனக்கு அதுதான சரி.

ராசு (அவர்களை பிரித்து): புலவர்களே, சற்று சாந்தமாக உரையாடுங்கள்.

மணி (புலவர் தோரணையில் தாடியை நீவியவாறு): ராசு, இது மரியாதை இது மரியாதை.

(வேலுவை எதிர்த்து பார்த்தி, மணியை எதிர்த்து செந்தில். செந்திலோடு சேர்ந்து ராசு என்று தானாகவே இரண்டு அணிகள் உருவாகின்றன.)

(செந்தில் கையில் வடையை எடுத்து ஆராய்ச்சியில் மூழ்கி விடுகிறார்).

விக்கி: ஆளாளுக்குப் பேசாதீங்கய்யா. அமெரிக்கால பாம்பை அடிக்கணும்னா கூட ஒவ்வொருத்தரா தான் போரான்.

பாப்பு: சரிய்யா. ஆரம்பிச்சுறலாமாய்யா? ஏங்கிட்ட ரெண்டு வடை இருக்கு. ஒண்ணு பருப்பு வடை, ஒண்ணு மெதுவடை. வாங்க பேசுங்க.
இந்தப் பக்கம் ...

மணி: ஏய் பெருசு. நிறுத்து. இனிமே நாங்க பாத்துக்கறோம். ஏம்பா ராசு. நீ கொடுக்கறது மெதுவடைனாலும், சாப்புடறது பருப்பு வடைதானப்பா. உன்னையும் என்னையும் பாரு. பருப்போட பலம்தானப்பா இதெல்லாம். கொண்ட கொள்கையில உறுதி வேணுமப்பா.
அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவை போல் சந்தடி சாக்குல கட்சி மாறிட்டியே. உன் லொள்ளுக்கு அளவே இல்லையா? பாப்பு, நமக்கு பலம் தரும் பருப்பே காப்பு. (அபய முத்திரை காண்பித்து அமர்கிறார்)

ராசு (எழுந்து): நம்ம மணி கொள்கை, துரோகம்ன்னு பெரிய பேச்செல்லாம் பேசறாரு. அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லைங்க.

பாப்பு: உங்களுக்கு கொள்கையே இல்லைன்னு சொல்றீயளா?

ராசு (நம்பியார் பாணியில்): நம்ம பண்பையே (character) புரிஞ்சிக்க மாட்டேங் கறாங்களே? (மித மிஞ்சிய அடக்கத்துடன்) ஏனுங்கண்ணா மணியண்ணாங்? உங்க பையன என்னங் படிக்க வைக்கிறீங்?

மணி (பெருமையுடன்): ஹ.. பொறியியல்.
ராசு: அவருக்கு புடிச்ச படிப்பு என்னதுங் அண்ணா?
மணி: ஹ.. ஹ.. புவியியல்.

ராசு: (நிமிர்ந்து சத்தமாக) அதைப் படிச்சா பைசா தேறாதுன்னுதான அப்படி செய்தீங்க. உங்களுக்கு ஒரு நியாயம், எனக்கொரு நியாயமா? நம்ம வேலைக்கு ஆவறது அல்வாவுக்கு அடுத்து மெது வடை தானுங்க அண்ணோவ். குடுத்தமா, சாப்பிட்டாங்களா, கை கழுவுனாங்களான்னு இருக்கும். வீட்டுல நின்னு நிதானமா சாப்பிடத்தானுங் பருப்புங். ஏனுங் புரிஞ்சுதாங்கங்.

பாப்பு: ராசுன்னுன்னா ராசுதான்யா? அசுர புடி புடிச்சாருய்யா?
வேலைக்கு உகந்த வடை மெது வடை.
வீட்டுக்கு தகுந்த வடை பருப்பு வடை.
அடுத்து வாங்க வேலு, உங்க வாதத்தை எடுத்து வையுங்க.

வேலு: வாதமா ஏங்க, நல்லாத் தானங்க நடந்து வற்றேன். அமெரிக்கா ஏங்க இப்பிடி கெடக்கு. பொரியலுக்கும், புதயலுக்கும் கூடவாய்ங்க படிப்பாய்ங்க. அதான் நம்மூருகாரய்ங்களுக்கு இங்க இம்புட்டு மவுசா? எல்லாரும் எங்க ஊரு பய புள்ளக மாறி மசால் வடை ...

பார்த்தி (மிரட்டல் தொனியில்): ஏய்... ஈட்டி.

வேலு: படுத்தரான்யா. பேச உடுய்யா, சரி பருப்பு வடை சாப்புடுங்கைய்யா. மண்டையில மசால் ...

பார்த்தி: ஏய். ஈட்டி

வேலு: அவ்வ்வ்வ்... இது வேற மசாலுய்யா. மசாலு. நல்லா மண்டையில ஏறும். நான் வர்றேன்.

பாப்பு: தமிழுக்கு வந்த கதிய பாத்தீயளா. பொறிகளின் இயல்பைப் பற்றி படிப்பது பொறியியல். எலிப்பொறி தெரியும் இல்லையா? அந்தப் பொறி ஒரு engine தானங்க, பார்த்தி வாங்க, கொஞ்சம் புத்தி சொல்லுங்க.


பார்த்தி:
உங்க ஆச்சி தண்ணி ஊத்தி கடலப்பருப்பு ஊறவச்சு, வத்தல வதக்கிப் போட்டு, சீரகம் தூவிவிட்டு, மாவா அரைச் செடுத்து, கருவேப்பிலை கிள்ளிப் போட்டு, வெங்காயம் நறுக்கிப் போட்டு,, அடுப்பு மூட்டி, எண்ணெய் காய வைச்சு, வட்ட வட்டமா தட்டிப் போட்டு, திருப்பி போட்டு சுட்டெடுத்தா நல்லாத்தான் இருக்கும்.

மணி: ஏய்.. உப்பு போட மறந்துட்டப்பா.

பார்த்தி: ஓ. மன்னிச்சுக்கப்பா. சுட்ட வடயில உப்பு போட முடியாதே. நான் முதல்ல இருந்து வற்றேன். உங்க ஆச்சி தண்ணி ஊத்தி, கடலப்பருப்பு ஊரவச்சு ...

எல்லோரும்: அப்பா வேண்டாம்பா. நாங்க உப்பு இல்லாமலேயே சாப்பிடுக்கறோம். நீ அடுத்து சொல்ல வந்தத சொல்லுப்பா?

பாத்தி: பருப்பு வடை நீ சாப்பிடுவ. சிரமப் பட்டு சுட்ட பாட்டி சாப்பிட முடியுமாய்யா? சுடச் சுலபமான மெது வடைதான் சிறந்தது.

பாப்பு: சுலபமாச் சுட மெது வட. அருமை அருமை.

விக்கி: ஏன் பாட்டிக்கு கோல் ஊணித்தான் நடக்க முடியும். அதுக்காக, எல்லோரும் கோல் ஊணித்தான் நடக்கணுமா? ஏன் இளைஞர்கள் நெஞ்செல்லாம் கல்லா போச்சு. அந்தப் பாட்டிக்கு அதாவது உங்கப் பாட்டிக்கு செயற்கைப் பல் கட்டி விட்டா, பருப்புவடை சாப்பிட மாட்டாங்களா? பல் இல்லையின்னா தான்டா பாட்டி. பல் இருந்தா ஆண்ட்டிடா. இளமையின் அடையாளம் பருப்பு வடை தான்டா.

பாப்பு: மெது வட மொது மொதுன்னு இருக்கும்யா. கிழடு தட்டுனாப்புல. பருப்பு வடைதான் சாப்பிடரவங்களுக்கு கம்பீரம்யா. வாங்க செந்தில் ரொம்ப நேரமா ஏதோ ஆராய்ச்சிப் பண்ணிக்கிட்டு இருக்கீங்க. உங்க பங்க சொல்லுங்க.

செந்தில்: நடுவரே, பாட்டி கதையில காக்கா தூக்கிட்டு போனது எந்த வடையின்னு ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருந்தேன்.

மணி: டேய் நாதாரி. இந்த வடைய வச்சு சங்க காலத்து வடை எதுன்னு எப்படிடா சொல்லுவ?
ராசு: அவசரப் படாதீங்க மணி. சேது சமுத்திர பிரச்சனை மாரி ஆயிடப் போவுது.
விக்கி: உன் லொள்ள கொஞ்சம் அடக்குப்பா. நீயே ஊதி விடுவ போல இருக்கே.

செந்தில்: அண்ணே, காக்கா வடைய திருடிச்சி. ஆனா சாப்பிட்டுச்சா?
எல்லோரும்: இல்ல.

செந்தில்: சாப்பிடாமயே ஏன் அதுக்கு தண்ணி தவிச்சிச்சி.

பாப்பு (குழப்பத்துடன்): அது வேற கதையில்ல.

செந்தில்: ஆனா காக்கா அதேதான அண்ணே.

மணி (வெறியுடன்): ஆ.ஆ.ஆ (ராசு பிடித்து கொள்கிறார்)

செந்தில்: ஏன்னா, மெது வடையிலதான் பச்சை மிளகாய் இருக்கு. காரம் அதிகம். அதான் சும்மா கவ்வுனதுக்கே தண்ணி தவிச்சிருச்சி.

பார்த்தி: ஆ என் கண்ணக் கட்டுதே. (மயங்கி சாய்கிறார்).

மணி: ஆ.ஆ.ஆ. என்னை யாரும் தடுக்காதீங்க.

செந்தில்: அண்ணே, சும்மா இருங்க. இது உங்க வீடு இல்ல. பொது இடம். சங்க காலப் பாட்டி சுட்டது மெது வடை தான். அதுதான் சிறந்த தமிழர் உணவு.

வேலு: பாப்பு சீக்கிரம் தீர்ப்பு சொல்லுங்க பாப்பு, எல்லாரும் முட்டிக்கிட்டு நிக்கிறாங்க. ஏதாவது ஏடா கூடமா ஆகிடப் போவுது.

பார்த்தி (முழித்துக் கொண்டு): அது என்னது ஏடா கூடம்.

வேலு: இதுக்கு மட்டும் மயக்கம் தெளிஞ்சிருமாய்யா? ஏன்யா என் உயிர எடுக்கற.

பாப்பு: ரொம்ப சிக்கலான வழக்காயிருக்கே. நான் தீர்ப்ப மின்-அஞ்சல் செய்யட்டுமா?

எல்லோரும்: அந்த வேலையே வேணாம். தீர்ப்ப சொல்லுங்க.

பாப்பு: நம்ம ராசு சொன்னாருல்ல. மெதுவடை பஞ்சு மாதிரி அதான் நாளான வடைய பிச்சா நூல் விடும். ஆனா விக்கி சொன்னாப்புல பருப்பு வடைக்கின்னு ஒரு மிடுக்கு இருக்குல்ல. ஒண்ணு சதையாட்டம். ஒண்ணு எலும்பாட்டம். உடம்புக்கு தேவை சதையா எலும்பா? வடையில் சிறந்தது மெது வடையா? பருப்பு வடையா? ரெண்டும் தான். அதான் நம்ம தீர்ப்பு. வாங்க எல்லாரும் சாப்பிடுங்க.

கட்டிலிலே ஆறு பேர் படுத்திருந்தாங்க

Saturday, December 08, 2007

கட்டிலிலே ஆறு பேர் படுத்திருந்தார்கள்
குட்டி பெண் சொன்னாள்,
"தள்ளி படுங்கள்! தள்ளி படுங்கள்!".
எல்லோரும் தள்ளிப் படுக்க
ஒருத்தர் உருண்டு விழுக.

இப்போ கட்டிலிலே ஐந்து பேர் படுத்திருந்தார்கள்
குட்டி பெண் சொன்னாள்,
"தள்ளி படுங்கள்! தள்ளி படுங்கள்!".
எல்லோரும் தள்ளிப் படுக்க
ஒருத்தர் உருண்டு விழுக.

இப்போ கட்டிலிலே நான்கு பேர் படுத்திருந்தார்கள்
குட்டி பெண் சொன்னாள்,
"தள்ளி படுங்கள்! தள்ளி படுங்கள்!".
எல்லோரும் தள்ளிப் படுக்க
ஒருத்தர் உருண்டு விழுக.

இப்போ கட்டிலிலே மூன்று பேர் படுத்திருந்தார்கள்
குட்டி பெண் சொன்னாள்,
"தள்ளி படுங்கள்! தள்ளி படுங்கள்!".
எல்லோரும் தள்ளிப் படுக்க
ஒருத்தர் உருண்டு விழுக.

இப்போ கட்டிலிலே இரண்டு பேர் படுத்திருந்தார்கள்
குட்டி பெண் சொன்னாள்,
"தள்ளி படுங்கள்! தள்ளி படுங்கள்!".
எல்லோரும் தள்ளிப் படுக்க
ஒருத்தர் உருண்டு விழுக.

குட்டி பெண் சொன்னாள்,
"இப்ப எல்லா இடமும் எனக்குத்தான்!".

ஆங்கில மூலம்
There were six in a bed
And the little one said
'Roll over, roll over'
So they all rolled over
And one fell out

சின்னச் சின்ன சிலந்தி பூச்சி



சின்னச் சின்ன சிலந்தி பூச்சி
ஏறி போச்சு தண்ணிக் குழாயிலே.
பெரிய மழை பெஞ்சு வழுக்கி விழுந்துச்சு வெளியிலே.
வெயில் அடிச்சு ஈரம் காஞ்சு போன பின்னாலே.
சின்னச் சின்ன சிலந்தி பூச்சி
திரும்ப ஏறி போச்சு தண்ணிக் குழாயிலே.

ஆங்கில மூலம்:
The itsy bitsy spider climbed up the water spout.
Down came the rain, and washed the spider out.
Out came the sun, and dried up all the rain
So the itsy bitsy spider climbed up the spout again.

மழலையர் பாடல்கள் - 1,2,3



ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து
நான் பிடித்தேன் மீன் குஞ்சு.

ஆறு ஏழு எட்டு ஒன்பது பத்து
அதை ஓடவிட்டேன் நீந்த விட்டு

ஓடவிட்டது எதனாலே?
என் விரலைக் கடித்ததாலே.

அது கடித்தது எந்த விரல்?
இதோ இந்த சுண்டு விரல்.

ஆங்கிலப் பாடல்:

One two three four five.
Once I got a fish alive.
Six seven eight nine ten
Then I let it go again.
Why did you let is go?
Because it bit my finger so.
Which finger did he bite?
This little finger on the right.