ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு மடிக்கணினி (OLPC-One Laptop Per Child)

Wednesday, May 31, 2006

olpc ebook
OLPC என்ற லாபநோக்கில்லாத நிறுவனம் 100 வெள்ளி (US$100) விலைக்கு சிறிய கணினி தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த முயற்சி வெற்றி பெற்றால், உலகம் முழுதும் குழந்தைகளின் கல்விப்புரட்ச்சிக்கு வழிவகுக்கும்.

இக்கணினிகள் பின்தங்கிய மற்றும் வளரும் நாடுகளின் அரசாங்க கல்வித்துறை அமைப்புகளுக்கு விற்கப்பட்டு, அவர்கள் மூலம் பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு (இலவசமாக?) விநியோகிக்கப்படும். இந்தியாவும் சீனாவும் இத்திட்டதில் முதன்மையாக இடம்பெற்றுள்ளன.

ஆராய்ச்சி இன்னும் முடிவுபெறவில்லையென்றாலும், முழுமையாக இயங்கும் மாதிரி வடிவங்கள் இம்மாதம் காட்சிக்கு வைக்கப்பட்டன. உலகின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான மாஸாச்சூஸட் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியின் ஆசிரியர்களால் வடிவமைக்கப்படும் இதன் சிறப்பு அம்சங்கள் வருமாறு:

  • சிறிய, கனம் குறைந்த (1.5 கிலோவுக்கு கீழ் கொண்டுவரும் லட்சியம்) குழந்தைகளுக்கென்று பிரத்யேகமான வடிவமைப்பு.

  • பிஞ்சுக்கைகள் நோகாதவண்ணம் தட்டச்சு செய்ய மென்மையான விசைப்பலகை.

  • திரையை வளக்கமான வகையிலும், புத்தகம் போல் பிடித்துக்கொள்ளும் வகையிலும் மடக்கிக்கொள்ளலாம். olpc ebook

  • நகரும் பாகங்கள் இல்லாததால் நீடித்து உழைக்கக்கூடியது.

  • கம்பியில்லாத தொடர்புகொள்ளும் (wireless) வசதியால் அருகருகில்் உள்ள இதே கணனிகளுடன் சேர்ந்து பெரிய கூட்டமைப்பு (network) ஏற்படுத்த முடியும்.

  • புதுமையான அகன்ற தொடுஅட்டைமூலம் சுட்டி காட்ட, எழுத மற்றும் வரையும் வசதி.

  • உள்ளடங்கிய ஒலி வாங்கி கூடவே தனி ஒலிவாங்கியை இணைக்கும் வசதி. ஒலிஅலைகளை பண்படுத்தும் பாகங்களே, அறிவியல் ஆய்விற்கு வெப்பம், மின்னழுத்தம் போல் இன்னும் பலவற்றை அளவிடும் மானியாகவும் வேலை செய்யும்.

  • உள்ளடங்கிய ஒலிபெருக்கி, வெளி இணைப்பு வசதி.

  • மூன்று USB2 இணைப்புக்கள், வெளி உபகரணங்களை பயன்படுத்த.

  • குறைவான மின்சக்தி தேவை. முழுவதும் சக்தியூட்டப்பட்ட பேட்டரியில், பள்ளிக்கூட நேரம் முழுவதும் தடையில்லாமல் இயங்கும். மின்சார இணைப்பு, வாகனங்களில் உள்ள பேட்டரி அல்லது மனித சக்தியால் கைகால்களால் டைனமோக்களை சுழலச்செய்து பேட்டரிகளுக்கு மறுபடியும் சக்தியூட்டலாம்.

  • மென்பொருட்கள் லினக்ஸை சார்ந்து வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

  • . இன்னும் பல.

வேகமாக இறுதி வடிவம் பெறும் இந்த கணினி விரைவில் மாணவர்களுக்கு சென்றடைய வாழ்த்துவோம்.

நன்றி

மேலும் விபரங்களுக்கு (wikipedia)

யாத்திரீகன் பொம்மை.



pilgrimchildயாத்திரீக சிறுமி பொம்மை (pilgrim child puppet) - என் மகள் ஒன்றாம் வகுப்பில் செய்த சில செய்முறை வீட்டுப்பாடங்களில் (projects) ஒன்று. அமெரிக்காவிற்கு 1960ல்் குடிபெயர்ந்த ஆங்கிலேயக் கிறிஸ்த்தவ குடும்பங்கள் யாத்திரீகர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு உதவி செய்த செவ்விந்தியர்கள் நினைவாக நவம்பர் மாதம் நான்காம் வியாழக்கிழமையை, நன்றி அளிக்கும் நாளாக (thanks giving day) கொண்டாடுகின்றனர். அதைப்பற்றி மாணவர்கள் ஆராய்ந்து அறிந்து கொள்ள வகுப்பு ஆசிரியைக் கொடுத்த வீட்டுப்பாடம்தான் இது.

நீ யாத்திரீக குழந்தையானால் (pilgrim child), எப்படி வாழ்ந்திருப்பாய், என்ன வேலை செய்வாய் என்றெல்லாம் எழுதிக்கொண்டு போக வேண்டும். மேலும், அட்டை குழாயையும்(tissue paper roll), துணிகளையும் பயன்படுத்தி பொம்மையும் செய்து கொண்டு போகவேண்டும். அப்படி செய்ததுதான் இந்த பொம்மை.

இதுபோல் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட மற்ற பாடங்கள்;

  • வண்டினங்கள் (bugs project)- காய், கனிகளைக் கொண்டு ஏதாவது ஒரு பூச்சியும் அதைப்பற்றிய கட்டுரையும், - எங்கள் தேர்வு எறும்பு

  • bug_ant
  • சர்கஸ் மிருகங்கள் (circus animal mobile) - எங்கள் தேர்வு குரங்கு

  • கடல்வாழ் உயிரினங்கள்(sea animal diorama) - எங்கள் தேர்வு ஆக்டபஸ்.

  • ocean diorama
  • மாற்றமும், வள்ர்ச்சியும் (things that change and grow) - மாணவர்களின் புகைப்பட தொகுப்பு. சிறந்த ஆப்ரிக்க அமெரிக்கர் (african american) - எங்கள் தேர்வு அகஸ்டா சாவேஜ் (Agusta Savage). அவர் எங்கள் ஊரில் பிறந்த பெண் சிற்பி என்பதால்.

  • நன்றி

யெஸ்-பி-யீ-ஸி-ஐ-யே-யெல் ஸ்பீஸியல்

Friday, May 26, 2006

-இது நான் ஏழாம் வகுப்பில் specialஐ வாசித்த லட்சணம்.
பத்தாம் வகுப்பில் கூட ஆங்கில புத்தகங்களில், ofக்கு மேல் -உடைய- என்றும், toக்கு மேல் -க்கு-என்றும் எழுதி வைத்துக்கொண்டுதான் புரிந்துகொள்ள முயர்ச்சித்தேன். எனக்கு படிப்பு வராது என்றில்லை. S.S.L.C 1981ம் ஆண்டுத்தேர்வில் கணக்கில் 96 வாங்கினேன். ஆங்கிலத்தில் மட்டம் என்பதாலேயே +1 படிக்க போகமாட்டேன் என்று அடம் பிடித்து polytechnicல் சேர்ந்தேன்.
பாலிடெக்னிக் டிப்பளமா (diploma) வகுப்பில் ஆங்கில வழி கல்விதான் என்றாலும்,
செயல்முறை பாடங்களும் அதிகமென்பதால் ஆர்வத்துடன் படித்தேன். 1984ம் ஆண்டு கோயம்பத்தூர் அரசினர் பாலிடெக்னிக்கில் மின்னணுவியல் (electronics) முடித்த என் நண்பர்கள் பலரும் இன்று நல்ல வேலையில் இருக்கிறார்கள்.
அதே வருடத்தில் நாங்கள் ஐந்துபேர் பெரிய வேலைகிடைத்து மைசூருக்கு வேலைக்குப்போனோம். வேலையில் நல்லபேர் எடுத்தாலும், ஆங்கிலத்தில் கதைப்புத்தகங்கள் படிப்பதும், சரளமாக பேசுவதும் இயலாத காரியமாகவே இருந்தது.
அப்போதுதான், ஜூனியர் விகடனில் James Hardley Chase ன் Hit and Run புதினத்தை தமிழில் தொடராக வெளியிட்டார்கள். அதில் சில வாரங்கள் மட்டுமே படித்திருந்தபோது, அந்த ஆங்கில புத்தகமே கையில் கிடைத்தது. பாதி கதை தெரியுமானதால்,தைரியமாக ஆங்கில அகராதியை கையில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு வரியாக படித்து புரிந்துகொண்டேன். இந்த வெற்றி தந்த உற்சாகத்தில் மீதி கதை முழுவதையும் தொடர் முடியும் முன்பே படித்துவிட்டேன். மேலும் சில Chase ன் புத்தகங்களை இப்படி படித்து, அகராதி துணையில்லாமலேயே Sidney Sheldon புத்தகங்களை படிக்கத்தொடங்கினேன். பல நண்பர்களுக்கு இந்த முறையில், பாதிக்கதை சொல்லி பின் அவர்களையும் நன்றாக படிக்க உதவியிருக்கிறேன்.
என்னதான் படித்தாலும் சரியாக உச்சரிக்க முடிவதில்லை. உ.ம் sஐ எஸ் என்று சொல்லாமல்-யெஸ் - என்பது. இதற்கு வழியிருந்தால் சொல்லுங்கள்.